சாப்பிடும் முன் ஒருபிடி எடுத்து வைப்பது ஏன்?




புது ஃபிளாட் வாங்கிய நாங்கள், அக்னி நட்சத்திர காலத்தில் கிரஹப்பிரவேசம் செய்தோம். சில நாட்களிலேயே என் தந்தை காலமானார். அடுத்து, எனது வேலை பறிபோனது. நாங்கள் செய்து வந்த தொழிலும் சரிவடைய, நிறைய கடன்! அக்னி நட்சத்திரத்தில் கிரஹப்பிரவேசம் செய்ததால்தான் இத்தனை துன்பமும் என்கின்றனர் சிலர். அப்படியா? - அக்னி நட்சத்திர வேளையில் கிரஹப்பிரவேசம் செய்ததே, தங்களின் துன்பத்துக்குக் காரணம் என்பது சரியல்ல. தங்களின் மனமே அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறது.

ஒரு விஷயத்துக்கு உண்மையான காரணம் தெரியாத வரையிலும், தெரிந்த ஏதோ ஒன்றை காரணமாக்கிக் கொள்வது மனித இயல்பு. இப்படியே தொடர்ந்தால், உண்மையான காரணத்தைத் தெரிந்துகொள்ள முடியாமலேயே போய் விடும்!

தொடரும் துன்பங்களுக்குக் காரணம் தங்களின் கர்ம வினையே! இந்த வினைகள், நம்மை முயற்சி செய்ய விடாமல் தடுத்து, தன் போக்கில் இழுத்துச் செல்லும். நாமும் அதற்குக் கட்டுப்படுவோம்.

கிரகங்களின் ஓடுபாதை நட்சத்திரங்கள். கிருத்திகை நட்சத்திரத்தில் சூரியன் பயணிக்கும் காலத்தை அக்னி நட்சத்திர காலம் என்கிறோம். கிருத்திகையை அக்னி நட்சத்திரம் என்கிறது வேதம். எனவே, அக்னி வழிபாட்டை கிருத்திகையில் துவங்குவது சிறப்பு. இந்த நட்சத்திரத்தின் தேவதை அக்னி. எனவே, வெப்பம் அதிகமாக இருக்கும். இதனுடன் ஆதவனின் வெப்பமும் சேர்ந்து கொள்ள... இந்த காலத்தில் வெப்பம் கடுமையாக இருக்கும்!

பொதுவாகவே முகூர்த்தத்துக்கு கிருத்திகை நட்சத்திரத்தை விலக்கச் சொல்கிறது முகூர்த்த சாஸ்திரம். எனவே, இந்த நட்சத்திரத்தில் கிரஹப் பிரவேசத்தையும் தவிர்க்க வேண்டும். ஆனால் ஒன்று, கத்திரியில் (கோடை காலத்தில்)... மற்ற நட்சத்திரங்களில் நல்ல காரியங்கள் செய்யலாம். இவை சாஸ்திரம் இல்லை; சம்பிரதாயம்!

ஆகவே, மனதை திடப்படுத்திக் கொண்டு முயற்சியில் ஈடுபடுங்கள். இன்னல்களைத் தவிர்க்கலாம்.


--------------------------------------------------------------------------------

சிலர் சாப்பிட்டு முடிந்ததும் ஒரு பிடி சாதத்தை இலையின் மூலையில் வைக்கின்றனர். இன்னும் சிலரோ, சாப்பிட ஆரம்பிக்கும்போதே எடுத்து வைக்கின்றனர். இது ஏன்? எது சரியானது?
-

உயிரினங்களுக்கு உணவளித்து விட்டு, மீதம் உள்ள உணவைச் சாப்பிட வேண்டும் என்கிறது சாஸ்திரம். இதை 'வைச்வதேவம்' என்பர். இந்த முறையை முழுமையாக நடைமுறைப்படுத்த இயலாத நிலையில், சிறிதளவேனும் உணவளியுங்கள் என்று அறிவுறுத்துகிறது சாஸ்திரம். இதனை 'பஞ்சக்ராசீ' என்பர்.

மிகப் பழங்காலத்தில், நாம் உயிர்வாழ்வதற்குக் காரணமான உணவினை நமக்குக் கிடைக்கச் செய்யும் தெய்வத்துக்கும் தேவதைகளுக்கும் நன்றி காட்டும் வகையில், அவர்களுக்கே அர்ப்பணம் செய்வது என்பது சாஸ்திர நடைமுறை. அந்த நடைமுறையின்படி, எப்படி ஹோமம் வளர்த்து அந்த அக்னியில் அந்த அந்த தேவதைகளுக்கான ஹவிர்பாகத்தை அளிப்போமோ அதுபோல், நம் வயிற்றில் உள்ள அக்னியில் உணவை இடுகிறோம். அதற்கு முன் தேவதைகளுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும்.

அந்த வகையில், சதுர வடிவ மண்டலத்தின் எட்டுத் திசையிலும் தேவதைகளுக்கு ஐந்தைந்து கவளங்களாக அன்னத்தை அளிக்க வேண்டும்.

தேவர்கள், ரிஷிகள், பித்ருக்கள், மனிதர்கள், கந்தர்வர்கள் ஆகிய ஐவருக்கும் ஐந்து கவளம்! வேதம் ஓதுவோர், அரசர்கள், வியாபாரிகள், உழைப்பாளிகள், வேடர்கள் ஆகிய ஐவருக்கும் ஐந்து கவளம்! அடுத்து, பூமியைப் பிளந்து வெளிவரும் செடி - கொடிகள், வியர்வையில் தோன்றும் உயிரினங்கள், முட்டையில் இருந்து தோன்றும் உயிரினங்கள், கர்ப்பப்பையில் இருந்து வெளிவருபவை, மனதில் இருந்து தோன்றுபவை... இவற்றுக்கு என ஐந்து கவளம்!

இப்படியாக... சம சதுர மண்டலத்தில் கவளங்களை வைத்து வணங்கி சாப்பிட வேண்டும் என்கிறது சாஸ்திரம்.இதைத் தவிர சாஸ்திரம் வேறேதுவும் குறிப்பிடவில்லை.

ஆகவே, சாப்பிடுவதற்கு முன்பு அல்லது சாப்பிட்ட பிறகு ஒரு பிடி உணவை இலையில் எடுத்து வைப்பதெல்லாம் அவரவரின் தனிப்பட்ட சிந்தனை. இது, அடுத்த உயிர்களுக்கு உணவு இட வேண்டும் என்ற தர்மசிந்தனையை வெளிப்படுத்துவதால், அவரவர் இஷ்டப்படி செய்யலாம். நல்லதுதான்!


--------------------------------------------------------------------------------

தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் பணியில் உள்ளவருக்கு 'உயிர்க் கொலை' செய்த பாவம் உண்டா?
தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவது அவனுடைய வேலை; அவனது கடமை. எனவே, அது பாவம் ஆகாது.

போரில் எதிரிகளை வீழ்த்துகிறான் அரசன். தற்காப்பு கருதி... தன்னைக் கொல்ல வந்தவனை ஒருவன் அழிக்கிறான். மனநலம் குன்றியவன், தன்னையும் அறியாமல் ஒருவனைக் கொலை செய்து விடுகிறான். இதுபோன்றவர்களில்... மனதுடன் கொலைக்குத் தொடர்பு இல்லாததால், அவர்கள் செய்தது பாவம் ஆகாது.

ஆசை, கோபம், தாபம், வெறுப்பு, பொறாமை முதலான எண்ணங்களின் உந்துதலால் கொலை புரியும்போது பாவம் பற்றிக் கொள்கிறது.

பொதுநன்மை, மக்கள் பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக செய்யப்படும் கொலைகளிலும் பாவம் ஒட்டாது.

கொசு கடிக்கிறது எனில் சும்மாவா விடுகிறோம்?! தேள் முதலான விஷ ஜந்துக்கள் கடிக்க வருகின்றன. சும்மா விட்டுவிடுகிறோமா? கண்டதும் அடித்துக் கொல்கிறோமா, இல்லையா?! இவையெல்லாம் பாவம் ஆகாது.

இதைப் போன்றே தூக்குத் தண்டனை நிறைவேற்றும் பணியில் இருப்பவரையும் பாவம் சேராது.


--------------------------------------------------------------------------------

அமாவாசை தினங்களில், என் தந்தைக்கு படையலிட்டு வழிபட்ட பிறகு, காகத்துக்கு அன்னம் இடுவது வழக்கம். ஒருமுறை, என் தந்தையின் படத்துக்கு அருகிலேயே என் மாமனாரின் படத்தையும் வைத்து படையலிட்டாள் என் மனைவி. அவளின் சகோதரன், தன் தந்தைக்கு திதியோ பூஜையோ செய்வது கிடையாதாம்! எனில், எனது வீட்டில் வைத்து இப்படிச் செய்யலாமா?-

இறந்தவர்களுக்கு படையல் இடுவதில் தவறில்லை. உங்களின் மாமனாருக்கு, மைத்துனர் காரியங்களைச் செய்வதற்கும் நீங்கள் படையல் போடுவதற்கும் சம்பந்தமே இல்லை.

படையல் இடுவதும் வழிபடுவது என்பதும் உங்களின் மனம் சார்ந்த விஷயம். இந்தப் படையலால் உங்களுக்கும் உங்களின் மனைவிக்கும் நிம்மதி கிடைக்கிறது எனில், இதுபோன்ற வழிபாடுகளை தாராளமாகத் தொடரலாம்.

முன்னோர்களை நினைவில் வைத்திருப்பதும், காகத்துக்கு அன்னம் இடுவதும் பொது அறம்.

சாஸ்திர நியதிகளுக்கு இடையூறு இல்லாதவாறு, மனம் சார்ந்த விஷயங்களை செயல்படுத்தலாம்; தப்பே இல்லை!



ஸ்ரீஆஞ்சநேயரை வழிபடுவதற்கான... அவரது மூல மந்திரம் மற்றும் வழிபாட்டு முறைகள் குறித்து சொல்லுங்களேன்?
வேறு சிந்தனைகளில் இருந்து முற்றிலுமாக விடுபட்டு, ஸ்ரீஅனுமனை மனதில் பற்றிக் கொள்ள வேண்டும். புலன்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல், அனுமனுடன் மட்டுமே மனம் ஒன்ற வேண்டும்.

'ஹனுமதே நம ஆஞ்சநேயாய நம 'என்று அவரது நாமத்தை மனமுருக உச்சரிக்க வேண்டும். இதுவே உபாஸனை.

வழிபாட்டின்போது, நம்மிடம் என்ன உள்ளதோ அதை பக்தியுடன் ஸ்வாமிக்கு அர்ப்பணிப்பது முக்கியம்.

விஸ்தாரமான பூஜை முறைகளை ஏற்று, ஆடம்பரமும் படாடோபமுமாக பூஜை செய்யும் போது, நாம் இலக்கில் இருந்து விலக நேரிடும். வாக்கு, செயல் ஆகியவை உபாஸனையில் ஒடுங்க வேண்டும். ஆடம்பர பூஜைகள் இதற்கு உதவும் என்று சொல்ல முடியாது.

ஸ்ரீஅனுமனை கெட்டியாகப் பற்றிக் கொள்ளுங்கள்; பலன் உண்டு; மனதுள் பலமும் சேரும்!


Comments