எங்கே வணங்குவது?

மடிசார் புடவை என்கிறோம். ‘மடிசார்’ என்ற சொல் எந்த மொழியிலிருந்து வந்தது?
தமிழ்நாட்டு அந்தணர்களில் திருமணமான பெண்கள் புடவை அணியும் பாணி ‘மடிசார்’ எனப்படுகிறது. முன்காலத்துப் பழக்கங்களின்படி திருமணமானதும் பிராம்மணப் பெண்கள் தினமும் இந்தப் பாணியில்தான் புடவை அணிய வேண்டும்.

சமையலையும், குளித்துவிட்டு மடியாக சுத்தமாக இந்த பாணி புடவை கட்டிக்கொண்டுதான் செய்ய வேண்டும்.

‘மடியைச் சார்ந்த பாணி’ என்பதால், ‘மடிசார் கட்டு’ என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம். இந்த பாணியில் புடவை கட்டிக் கொள்வதில் இருவகை உண்டு. வைஷ்ணவ சம்பிரதாயப் பெண்கள், புடவையின் மேல்தலைப்பை இடது பக்கமாகவும், சைவ மதத்தைச் சேர்ந்த பெண்கள் தலைப்பை வலது பக்கமாகவும் மடித்து கட்டிக் கொள்வார்கள். மடிசார் பாணியில் கட்டிய புடவை எந்தச் சூழ்நிலையிலும் பெண்களின் உடலிலிருந்து நழுவாது, வழுவாது, அவிழாது, பறக்காது என்பதே இதன் சிறப்பாகும். மடிசார் கட்டுவதற்குப் புடவையின் நீளம் அதிகமாகத் தேவைப்படுமென்பதால், ஒன்பது கெஜம் நீளமுள்ள புடவையே மடிசார் கட்டுக்குப் பயன்படுத்தப்படுகிறது.


கால் இல்லாத, உடல் இல்லாத, தலை இல்லாத நட்சத்திர நாட்கள் என்கிறார்களே! இவை என்ன?


நமது முன்னோர்களுக்குத் தனிப்பெரும் சக்தி இருந்தது. கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகிய ஐம்புலன்களுக்குப் புலப்படாத பல அரிய விஷயங்களை தனது தியானம் மற்றும் தவ வலிமையால் உணர்ந்து கொண்டார்கள். பிரதி பிரயோஜனம் எதிர்பார்க்காமல் அவற்றை உலகுக்கும் வழங்கினார்கள். அவற்றில் நட்சத்திரங்களும் உண்டு.

நட்சத்திரங்களின் கதிர்வீச்சு அளவு எவ்வளவு? அந்தக் கதிர்வீச்சுகள் பாய்வது கீழ்நோக்கியா அல்லது மேல்நோக்கியா என்பதையும் ஆராய்ந்தனர். இவ்வகையில் நட்சத்திரங்களை மூன்று வகையாகப் பிரித்தனர். அவை முறையே ஊர்த்துவமுக (மேல்நோக்கு) நட்சத்திரங்கள், அதோமுக (கீழ்நோக்கு) நட்சத்திரங்கள், திர்யங்முக (சமநோக்கு) நட்சத்திரங்கள் என அறியப்பட்டன.

ரோஹிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகியவை மேல்நோக்கு நட்சத்திரங்களாகும். இந்த நட்சத்திரங்கள் நிகழும் நாட்கள் - வீட்டில் மேல்மாடி கட்டுதல், கம்பம் தூண் நடுதல், பந்தக்கால் நடுதல், நெல், வாழை, கரும்பு போன்ற பயிர்களும், தேக்கு, மா, பலா மரங்களும் வைக்கச் சிறந்தவை.

பரணி, கிருத்திகை, ஆயில்யம், மகம், பூரம்,விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகியவை கீழ் நோக்கு நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்கள் நிகழும் நாட்களில் - குளம் மற்றும் கிணறு தோண்டுதல், வேலி கட்டுதல், மஞ்சள் மணிலா மற்றும் பூமிக்கடியில் விளையும் கிழங்கு வகைகள் ஆகியவற்றைப் பயிர் செய்தல் மற்றும் பூமியைத் தோண்டுதல் போன்றவை செய்யலாம்.

அசுவினி, மிருகசீரிஷம், புனர்பூசம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், ரேவதி ஆகிய சமநோக்கு நட்சத்திரங்கள் நிகழும் நாட்களில் - புதிய வாகனங்கள் வாங்குதல், யானை, குதிரை, ஒட்டகம், எருமை, காளை மாடு போன்ற மிருகங்களை விலைக்கு வாங்குதல், வீட்டில் வாசக்கால் வைத்தல், தூண் வைத்தல், ஆடு மாடுகள் விலைக்கு வாங்குதல் போன்றவற்றைச் செய்யலாம்.


கோயிலில், கொடிமரம் அருகில் வணங்கினாலே எல்லா தெய்வங்களையும் வணங்கியது போல என்கிறார்கள். ஒருசிலர் ‘இந்த திசையில் வணங்கக் கூடாது’ என்கின்றனர். எது சரி?


நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும், திசை முக்கியப் பங்கு வகிக்கிறது. பொதுவாக - கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு என்னும் நான்கு திசைகளில் கிழக்கு மற்றும் வடக்கு மிகவும் சுத்தமான திசையாகும். ஆகவேதான், ஆன்மிக சம்பந்தமான எந்த ஒரு செயலையும் கிழக்கு அல்லது வடக்கு திசைக்கு முக்கியத்துவம் தந்து செய்வது நல்லது என்று கூறப்பட்டுள்ளது, ஆலயங்களில் ஒவ்வொரு சன்னிதியிலும் தனித்தனியாக நமஸ்கரிக்கக் கூடாது. துவஜஸ்தம்பம் (கொடிமரம்) இருக்குமிடத்தில் மட்டும்தான் நமஸ்கரிக்க (வணங்க) வேண்டும்.

ஏனென்றால், கொடிமரத்தில், ஆலயத்திலுள்ள அனைத்து தெய்வங்களின் சான்னித்யமும் உள்ளது. ஆலயத்தில் புகுந்தவுடன் தெய்வங்களைத் தரிசனம் செய்ய ஆரம்பிக்கும் இடம் இந்தக் கொடிமரம்தான். இங்கிருந்துதான் பிரதட்சணம் மற்றும் தரிசனத்தை ஆரம்பிக்க வேண்டும்.

ஆலயத்துக்குள் நான்கு புறங்களிலும் அமைந்துள்ள கோபுர வாயில்களில் எந்த ஒரு கோபுரம் வழியாகவும் நாம் ஆலயத்துக்குள் நுழையலாம், தவறில்லை. ஆனால், அவ்வாறு நுழைந்த பின்னர் துவஜஸ்தம்பத்தின் (கீழ் கோபுரத்தின்) அருகில் சென்று நமஸ்கரித்துவிட்டு அதன்பின்னர் கர்ப்பக்கிரகத்துக்குச் சென்று மூலவரைத் தரிசித்து, அதன்பின்னர் ஒவ்வொரு தெய்வமாக தரிசனம் செய்ய வேண்டும். துவஜஸ்தம்பம் அருகே நமஸ்கரிக்கும்போது வடக்கு அல்லது கிழக்கு திசையை நோக்கி நமஸ்கரிக்க வேண்டும். மேற்கு மற்றும் தெற்கு திசையை நோக்கி நமஸ்கரிக்கக் கூடாது. பொதுவாக, ஆலயக் கருவறையில் கிழக்கு திசை நோக்கியே மூர்த்தி ப்ரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் என்பதால், துவஜஸ்தம்பம் அருகே வடக்கு திசையைப் பார்த்து நமஸ்கரிக்க வேண்டும்.

பக்தர்களின் வசதிக்காக ஒரு சில ஆலயங்களில் நமஸ்கரிக்கும் (கொடிமரத்தின் அருகில்) இடத்தில் திசையைக் காட்டும் சொற்களை எழுதி வைத்திருப்பார்கள். நமக்கு திசை எது என்று தெரியவில்லை என்றால், கொடிமரத்தின் அருகில் சில நிமிடங்கள் காத்திருந்தால் வழக்கமாக அந்த ஆலயத்துக்கு வரும் சில பக்தர்கள் அங்கே நமஸ்கரிப்பார்கள். அதைப்பார்த்து நாமும் எந்த திசையை நோக்கி நமஸ்கரிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம். பெரியோர் எவ்வழியோ அந்த வழியையே நாமும் கடைபிடிப்பது சிறந்தது.



Comments