சைவமும் தமிழும் வளர்த்த நமசிவாய மூர்த்திகள்

சித்தர்களின் பூமி என்று மலைப் பகுதிகள், காடுகள் இருக்கும் இடங்களைக் காட்டுவார்கள். ஆனால், காவிரி பாயும் சோழ வள நாட்டில், சித்தர்களின் பேரைத் தாங்கியே உள்ளது ஓர் ஊர். அங்கே, மாபெரும் சித்தரான திருமாளிகைத்தேவர் சமாதி கொண்டுள்ளார். இன்னொரு மகாசித்தரான திருமூலர், மூவாயிரம் வருடங்கள் தவமிருந்து, ஆண்டுக்கு ஒரு பாடலை அருளிச் செய்தாராம். இவர்கள் மட்டுமா..? இவர்களின் வழியில் சைவமும் தமிழும் வளர்த்த நமசிவாய மூர்த்திகள் கோலோற்றிய தலமும் இதுதான். சித்த மகான்கள் வாழ்ந்த பூமி என்பதால், இந்த ஊருக்கு நவகோடி சித்தர்புரம் என்றே பெயர் ஏற்பட்டது. இந்த ஊரின் தற்போதைய பெயர்..?

திருவாவடுதுறை!

மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில், சுமார் 16 கி.மீ. தொலைவு சென்றால், திருவாலங்காடு எனும் ஊர் வரும். அங்கிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது திருவாவடுதுறை.

சைவ சித்தாந்தத்தை போதிக்கத் தோன்றிய மடங்களுள் முதன்மையானது என்ற பெருமையைக் கொண்டது திருவாவடுதுறை ஆதின மடாலயம். தமிழ், சைவம் இரண்டையும் போட்டிபோட்டு வளர்த்த பெருமைக்குரிய ஆதினம். இன்றளவும் நிலைபெற்றுச் சிறப்பாக இயங்கி வரும் இந்த மடாலயத்தைத் தோற்றுவித்தவரே ஸ்ரீநமசிவாய மூர்த்திகள்.

மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருமூவலூரில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து வந்தனர் ஒரு சைவ வேளாளத் தம்பதி. மிகச் சிறந்த சிவ பக்தர்கள். சிவபெருமான் திருவடியையே சிந்தித்து வாழ்ந்த அவர்களுக்கு, குலம் தழைக்க மகவு இல்லையே என்ற ஏக்கம் இருந்தது. எப்படியும் சிவபெருமானின் திருவருளால் தங்கள் வேண்டுதல் பலிக்கும் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்தனர்.



வைத்தீஸ்வரன்கோவில்... இவர்களின் நம்பிக்கையை வளர்த்தெடுத்த தலம். இங்கே அருள்பாலிக்கும் தையல் நாயகி உடனுறை வைத்தியநாத பெருமானை மனமுருக வேண்டினர். அதற்கு பலனும் கிடைத்தது. சைவ நெறி ஓங்கவும், செந்தமிழ் தழைக்கவும் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். வைத்தியநாதப் பெருமானின் அருளால் பிறந்த குழந்தைக்கு, வைத்தியநாதன் என்றே பெயர் சூட்டினர்.

இளமை முதலே, வைத்தியநாதனுக்கு சித்தம் சிவன்பால் சென்றது. பெற்றோருடன் அடிக்கடி வைத்தீஸ்வரன் கோயில் செல்வான். சிவனாரின் சந்நிதியில் நீண்டநேரம் மெய்யுருக நிற்பான். அவனுக்கு வயது ஏழு ஆயிற்று. ஒருநாள்... வைத்தியநாதனை ஆட்கொள்ள எண்ணினார் வைத்தியநாத பெருமான். அர்ச்சகர் வடிவம் கொண்டார். அவன் அருகில் வந்து, அவனையே சற்று நேரம் உற்று நோக்கினார். இப்படி, 'நயன தீட்சை' ஆனது வைத்தியநாதனுக்கு. பிறகு அவனிடம் ஒரு சிவலிங்கத் திருமேனியைக் கொடுத்து, அதை வழிபடும் முறையையும் விளக்கினார். ஏழு வயது பாலகன் அதை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டான். அப்போது அங்கே வந்த பெற்றோர், நடந்ததை அறிந்து வியந்தனர். வந்தவர் சிவபெருமானே என்பதை அறிந்து மனம் நெகிழ்ந்தனர். அன்று முதல்... மூவலூர் வைத்தியநாதர், சிவபெருமானே தனக்கு அளித்த சிவலிங்க வழிபாட்டில் லயிக்கத் தொடங்கினார்.

நவகோடி சித்தர்புரமான திருவாவடுதுறை... திருமறைக் காடு எனப்பட்ட வேதாரண் யம்... இந்த இரு ஊர்களிலும் மாறி மாறி இருந்தவர் சித்தர் சிவப்பிரகாசர். சைவ சித்தாந்த சந்தான மரபில் வந்த திருஅருள் நமசிவாயரின் சீடர்.

திருஅருள் நமசிவாயருக்கு, அவரின் குரு உமாபதி சிவாச் சார்யரிடம் இருந்து சிற்றம்பல உடையார்(நடராஜர்), அம்பலவாணர் விக்கிரகங்கள் வந்து சேர்ந்திருந்தன. அவற்றை, சித்தர் சிவப்பிரகாசரிடம் கொடுத்து, பூஜைகள் குறைவற நடக்க வழி செய்தார்.



சித்தர் சிவப்பிரகாசர், அற்புதங்கள் பல புரிந்த மாபெரும் சித்தர். அவர் தம் குருநாதரிடம் இருந்து பெற்ற சிவ மூர்த்தங்களை வழுவாமல் பூஜித்து வந்தார். ஒருநாள்... சித்தர் சிவப்பிரகாசர் மூவலூருக்கு வந்தார். அவரின் வருகையைக் கேட்ட வைத்தியநாதருக்கு உள்ளம் அவர் பேரிலேயே சென்றது. உடனே சென்று அவரைப் பணிந்தார். சித்தர் சிவப்பிரகாசரின் ஒளி பொருந்திய மேனியும், சிவநெறி பக்தியும் வைத்தியநாதரை அருகிலேயே இருக்க வைத்தது; அன்பின் மிகுதியால் கண்ணீர் பெருக, ஏற்ற குரு கிடைத்துவிட்டார் என்று மனம் மகிழ்ந்தார். அந்த மகிழ்ச்சியுடனே, சித்தர் சிவப்பிரகாசரிடம், தம்மை ஆட்கொள்ளும்படி வேண்டி னார் வைத்தியநாதர்.

அவரின் மனப் பக்கு வத்தை அறிந்த சிவப் பிரகாசர், அவருடைய பெற்றோரின் அனுமதி பெற்று வைத்தியநாதரை திருவாவடுதுறைக்கு அழைத்துச் சென்றார். அங்கே, மாசிலாமணி பெருமானையும் ஒப்பிலா முலையம்மையையும் வணங்கி, பணிவிடை செய்வதே பணியாகக் கொண்டார் வைத்திய நாதர்.

வைத்தியநாதரின் அன்புள்ளமும் சிவநெறி உறுதியும் கண்ட சித்தர் சிவப்பிரகாசர், அவருக்கு அருள் தர எண்ணினார். சிவபெருமானிடம் இருந்து நந்தியம்பெருமான் மூலம் வழிவழியாக வந்த ஞான அனுபவத்தை, வைத்திய நாதருக்கு முறையாக போதித்தார். பின்னர், இவரின் ஞானநிலை அறிந்து, தீட்சை வழங்கினார் சிவப்பிரகாசர். தீட்சா நாமமாக தம் குரு நாதரான நமசிவாயரின் பெயரையே சூட்டினார். அன்று முதல், ஸ்ரீநமசிவாயர் ஆனார் வைத்தியநாதர்.

ஒருநாள்... நமசிவாயர் காவிரிக் கரை சென்றிருந்தார். அப்போது சிவப்பிரகாசர் தாம் இருந்த இடத்தைக் கீறி, அதில் ஓர் அறை அமைத்தார். மற்ற மாணாக்கர்களை அழைத்தார். அவர்களிடம், ''அன்பர்களே... திருமறைக்காட்டுக்குச் செல்கிறேன். இனி இந்த திருச்சிற்றம்பல உடையார், அம்பலவாணர் பூஜைகளை நமசிவாயன் செய்து வரட்டும். அவன் இந்த அறையில் அமர்ந்து, சைவ சித்தாந்த மரபு செழிக்க அனைவருக்கும் ஞானத்தை வழங்கட்டும். இது நம் ஆணை என்று அவனிடம் கூறுங்கள்...'' என்று சொல்லி, திருமறைக் காட்டுக்குச் சென்றார். காவிரியில் நீராடி முடித்து, திருமடத்துக்கு வந்த நமசிவாயர் நடந்ததை அறிந்து மனம் வருந்தினார். குருநாதரை இனி எப்போது காணப் போகிறோம் என்று தவித்து மருகினார். பிறகு, அவருடைய ஆணையை நிறைவேற்றத் தயாரானார். அன்றுமுதல், உமாபதிசிவம் வழிபட்ட நடராஜர், அம்பலவாணர், தமக்கு வைத்தியநாதப் பெருமானே அளித்த சிவலிங்கம் ஆகியவற்றை பூஜித்து வந்தார்.



அன்பர்களிடம் இருந்து எத்தனை எத்தனையோ வேண்டுதல் கள்! சித்தர் சிவப்பிரகாசரின் அருளால், அங்கே வந்தவர்கள் அருளும் ஞானமும் குறைவறப் பெற்றனர்.

ஒருநாள்... தமது பூவுலகப் பணி முடியும் நேரம் நெருங்கியதை உணர்ந்த நமசிவாயர், அம்பல வாணரிடம், பொறுப்புகளை வழங்கினார். தமது பூதவுடலோடு இருந்தபடியே இருந்து, எங்கும் பரந்த பரசிவத்துடன் கலந்தார்.

திருமூலர் மற்றும் திருமாளிகைத் தேவரின் சமாதிக் கோயில்கள் உள்ள அதே தலத்தில் ஸ்ரீநம சிவாயருக்கும் ஆலயம் அமைக்கப் பட்டது. அவருடைய ஆலயம், திருவாவடுதுறை ஆதினத்துள் அமைந்துள்ளது. இதில், நமசிவாய மூர்த்திகளின் திருமேனி எழுந்தருளி வைக்கப்பட்டு, வழிபாடுகள் சிறப்பாகச் செய்யப்படுகின்றன.

ஆண்டுதோறும் தை மாதம் அசுவதி நாள் குருபூஜை தினமாகக் கொண்டாடப் படுகிறது (23.01.2010; தை-10). அதற்கு பத்து நாட்களுக்கு முன் விழா தொடங்கும். முதல் நாளில் காவிக்கொடி ஏற்றுகின்றனர். இதை அன்னக் கொடி என்பர். பத்து நாள்களும் சிறப்பு வழிபாடுகள், சொற்பொழிவுகள் என விழா களைகட்டுகிறது. இதை மகரத் தலைநாள்(மகரம்-தை மாதம்) குருபூஜை விழா என்றும் அழைக்கின்றனர்.

இப்படி... சிறப்புகள் பல கொண்ட திருவாவடுதுறை ஆலயத்துள் நம் பாதங்கள் படும் போதே, உடல் சிலிர்க்கிறது. இந்த சித்தர்புரத்துக்கு ஒரு முறை சென்று தரிசித்து வணங்கினாலே போதும்... நம் துன்பங்கள் எல்லாம் பறந்தோடும்.

படையை விரட்டிய பிரமாண்ட நந்தி!

போகரின் சீடரான திருமாளிகைத் தேவர் இங்கே சிவத்தொண்டு செய்து வந்தார். ஒரு முறை... அவர் மீது வீண்பழி சுமத்தப்பட்டதால், மன்னன் படைவீரர்களை அனுப்பி அவரைத் தாக்க முயன்றான். அப்போது, திரு மாளிகைத்தேவரை காக்கும்படி சிவனாரிடம் அம்பிகை வேண்டினாள். சிவனார் நந்தி படையை அனுப்பி அவர்களை விரட்டினார். இந்த நந்திகள் ஒன்றாகச் சேர்ந்து இந்தத் தலத்தில் பிரமாண்ட நந்தியாக விளங்குகிறது.

சித்தர்காட்டில் ஓர் இரவு!
சித்தர் சிவப்பிரகாசர் வேதாரண் யத்துக்கு அருகில் உள்ள சித்தர்காட்டில் இன்றும் அருவ நிலையில் இருந்து அருள் புரிவதாக நம்பிக்கை. சிலருக்கு அவர் காட்சியும் கொடுத்துள்ளாராம். எனவே, திருவாவடுதுறை ஆதினப் பொறுப்புக்கு வருபவர்கள், ஒருநாள் இரவு அந்த சித்தர்காட்டில் தங்கி, சித்தர் சிவப் பிரகாசரின் அருளைப் பெற வேண்டும் என்பது ஐதீகமாம்!

திருமூலரின் ஷீவ சமாதி

சுந்தரநாதர் எனும் சிவயோகி யார் கயிலாயத்தில் இருந்து பூலோகத்துக்கு சிவத்தலங்களை தரிசிக்க வந்தார். அவர் இங்கே வந்தபோது, மூலன் எனும் இடையன் இறந்து கிடக்க, அவனைச் சுற்றிலும் பசுக்கள் அழுது கொண்டிருந்தன. பசுக்களின் மீது பரிவு காட்டிய அவர் தன் உயிரை மூலன் உடலில் புகுத்தி எழுந்தார். பின் பசுக்களை வீட்டில் விட்டுவிட்டு இங்கே வந்து தவம் செய்யத் துவங்கினார். இவரே, திருமூலர். ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம், மொத்தம் 3 ஆயிரம் பாடல்களைப் பாடினார். இவையே திருமூலரின் திருமந்திரம். இவர் சிவ-ஜீவ ஐக்கியமான இந்தத் தலத்தில், பிராகாரத்தில் இவருக்கு சந்நிதி உள்ளது.

ஒரே இடத்தில் மூன்று சூரியர்கள்!

திருவாவடுதுறை ஆலயத்தில், மூலவர்- கோமுக்தீஸ்வரர். அம்மன்- ஒப்பிலாமுலைநாயகி. தல விருட்சம்- அரசு.

கோயிலில் ஒரே இடத்தில் மூன்று சூரியர்கள் இருப்பது விசேஷமான தரிசனம். மாங்கல்ய பாக்கியம் நிலைக்க, தம்பதியர் ஒற்றுமை சிறக்க, புத்திர பாக்கியம் கிடைக்க இங்கே வேண்டிக் கொள்கிறார்கள்.

சிவபெருமான், இந்தத் தலத்தில் போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கு அஷ்டமாஸித்திகளை உபதேசித்தார் என்பது சிறப்பம்சம்.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை மணி 6 -12; மாலை 4 -8 வரை. கோயில் தொடர்புக்கு: 04364-232055 ஆதின தொடர்புக்கு: 04364-232021

Comments