மஹோதயபுரம் அன்று அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது.
போருக்கான ஆயத்தங்கள் மிகத் தீவிரமாக நிகழ்ந்து கொண்டிருந்தன.
யார்மீது போர் தொடுக்கப்போகிறோம்? எதற்காக இந்தப் போர்? எந்த இடத்தில் நிகழப்போகிறது?
இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பினர், உப தளபதிகள். ஆனால், இதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க இயலவில்லை படைத்தளபதிகளால். அவர்களுக்கே எந்த விவரமும் தெரியாது. மன்னர் அழைத்து, “உடனே நாற்படைகள் ஆயத்தமாகட்டும். இந்தக் கணமே நாம் போருக்குப் புறப்படுகிறோம்” என ஆணையிட்டு விட்டார்.
காலாட்படை, ரதங்கள், கஜங்கள், புரவிகள் எனப் பல விஷயங்கள் பரபரப்புடன் ஒன்றிணைக்கப்பட வேண்டும். ஆயுத சாலையைத் திறந்து, குவிந்து கிடக்கும் வாள், வேல், ஈட்டி, கல்லெறி கவண்கள் போன்றவற்றை எடுத்துத் தூசு, துரு நீக்கித் துடைத்துப் பகிர்ந்தளிக்க வேண்டும். ‘படையை ஆயத்தம் செய்’ என ஆணையிட்ட மன்னர், அடுத்தகட்ட ஆணையில் இதர விவரங்களைத் தெரிவிக்கமாட்டாரா என்ன!
மஹோதயபுரம் அரண்மனையில் அன்று, சற்று முன்பு வரை கூட எந்தப் பரபரப்பும் இல்லாமல், அமைதிதான் கோலோச்சியது. ராஜ கூடத்தில், பெரியவர் ஒருவர் வந்தமர்ந்து இராமாயண கதாகாலட்சேபம் நிகழ்த்திக்கொண்டிருந்தார். புராணக் கதைகளையும், இதிகாசக் கதைகளையும் விரித்துரைப் பதில் வல்லவர் அவர். மூல நூலிலிருந்து சில சமஸ்கிருத சுலோகங்களை அவர் சொல்லும்போதும், மலையாள மொழிப் பாடல்களைப் பாடும்போதும், சில வாத்தியக் கலைஞர்கள் அவருடன் அமர்ந்து இன்னிசை எழுப்பிக் கொண்டிருந்தனர்.
இசையும் பாட்டும் கதையும் கேட்டுக் கொண்டிருந்த சேர மன்னர் குலசேகரன், அதில் மிகவும் ஒன்றிப் போயிருந்தார். அவர் மாவீரர். எதற்கும் அஞ்சாத குணமும், எவரையும் வெற்றிகொள்ளும் ஆற்றலும் கொண்டிருந்தவரான குலசேகர மன்னர், எளிதில் உணர்ச்சிச் வயப்படுகிறவராகவும் இருந்தார்.
அவரிடம் வீரமும் உண்டு; நெஞ்சில் ஈரமும் உண்டு என்பது நாடறிந்த செய்தி. அதை மறுபடி ஒருமுறை நிரூபிப்பதே போன்ற சம்பவம் அன்று நிகழ்ந்தது.
இராமாயணக் கதையை விஸ்தாரமாகச் சொல்லிவந்த பெரியவர், இராமனின் அவதார மகிமை; விசுவாமித்தரரோடு கானகம் சென்று, தாடகையை வதைத்த விதம், அகலிகையின் சாப விமோசனம்; ஜானகியை மணந்த கோலாகலம், பரசுராமனின் கர்வபங்கம்; சிற்றன்னை கைகேயி கேட்ட வரம்; ஆரண்யம் வரை சீதாபிராட்டியும் கால்நோவ ராமன்பின் ஏகுவது; குகனின் தோழமை... என்று விவரித்தார். ஆரண்யத்தில் வசிக்கையில், இலங்கை வேந்தனின் இளைய சகோதரி சூர்ப்பனகை வந்து மோக நாடக மாட, அவள் மூக்கை இலக்குவன் அரிந்து விரட்டியது, ராம-லட்சுமணர்கள் மீது போர்த்தொடுக்கத் தூண்ட, கரன், தனது பதினான்கு படைத் தளபதிகளின் துணையுடன் பதினான்காயிரம் அரக்கர் சேனையுடன் சித்திரக்கூட நீவனம் புகுந்து போரிடத் தொடங்கினான். சீதாபிராட்டிக்குத் துணையாக இலக்குவனை இருக்கச் செய்த இராமன், தன்னந் தனியே கோதண்டத்துடன் புறப்பட்டு வந்து, அரக்கர் சேனையை எதிர்கொள்ளத் துணிந்தான் என்பதை, அப்பெரியவர் விவரித்த சமயம் அது...
“ஆ! என்னே இது அநியாயம்! என் ராமபிரானுக்கு உதவ எவருமில்லையா? கொடிய அரக்கர் சேனை முன் அண்ணல் தனியே நிற்கிறாரா? பெரியவரே, போதும் நிறுத்தும். இனி இங்கு அமர்ந்து கதை கேட்டுக்கொண்டிருக்க என்னால் இயலாது. நான்... நானே என் சேனையுடன் சென்று, அண்ணலுக்கு உதவுவேன். அரக்கர் சேனையைத் துவம்சம் செய்யாமல் திரும்பேன்... இது சத்தியம்...” என்றவாறே எழுந்து நின்றார் மன்னர் குலசேகரன்.
அப்போதுதான் அவர் உடனே படைத் தலைவர்களை அழைத்து, “ஆயத்தமா கட்டும் நம் சேனை” எனக் கட்டளை பிறப்பித்திருந்தார்.
“நிறுத்துங்கள் சுவாமி. மேற்கொண்டு கதை சொல்லவேண்டாம்...” என்று கையை உயர்த்தி, அரசர் கட்டளையிட்டதால், கதை சொல்வதை நிறுத்திய பெரியவர், அடுத்து அங்கே நிகழ்ந்தவை அனைத்தும் வேடிக்கை என்றெண்ணினார். ஆனால், குலசேகரவர்மர் கோபம் அடங்காமல் இருப்பதையும், அங்கே நிஜமாகவே போர்ப்பயண ஏற்பாடுகள் நிகழ்வதையும் அறிந்து ஆச்சர்யத்தின் எல்லைக்கே சென்றுவிட்டார்.
மாவீரரான குலசேகரவர்மன் மிகத் தீவிரமான திருமால் பக்தர் என்பது உலகறிந்த உண்மையாக இருந்தது. அப்பெரியாரும் அதை அறிவார். ஆயினும் ‘இப்படியொரு பக்தியா? அரசரின் ராம பக்தி அளவற்றதாக இருக்கிறதே! கேட்பது கதை என்பதைப் பிரித்துணராத பக்தி ஆவேசத்துடன், அவர் கர-துஷணாதிகள் மீது போர்ப் பயணமே துவங்க இருப்பது, இதுவரை எங்கும் கேட்டிராத அதிசயமாக இருக்கிறதே!’ என வியந்து போனார்.
அமைச்சர்கள் அவரை அணுகி, “சுவாமி! ஏதாவது செய்யுங்கள். ஆவேசம் வந்து நிற்கும் அரசரைத் தங்கள் வார்த்தைகள்தான் நிதானமுறச் செய்யும். இல்லையேல், உலகம் இவரை சித்தப்பிரமை பிடித்தவர் எனத் தூற்றும் நிலை உருவாகும்” என்றனர்.
பெரியவர் உடனே தன் பக்கவாத்தியக் கலைஞர்களிடம் ஏதோ சொன்னார். அக்கணத்தில் அங்கே ஒரு விநோத சப்தம் எழுந்து அதிர்வலைகளைப் பரப்பியது. தோற்கருவியும் துணைக்கருவியும் நரம்புக் கருவியுமாக ஒன்றிணைந்து, ஏக காலத்தில் எழுப்பிய உச்சஸ்தாயி ஓசையாக அது இருந்தது. அதைக் கேட்டு, அவர்கள் பக்கம் கவனம் திருப்பிய குலசேகரவர்மன், “என்ன இது இடி முழக்கம்போல் இருக்கிறது?” என வினவினார்.
“இடி முழக்கம் இல்லை வேந்தே! இது இராமபிரானின் கோதண்டம் எழுப்பிய ஓசை. கர-துஷணாதியரின் அரக்கசேனை முன் தன்னந்தனியே வந்து நின்ற இராமன், கோதண்டத்தை வளைத்து ஒரேயொரு அம்பினை ஏவினான். அது ஆயிரமாயிரம் பாணங்களாக மாறி, எதிரிகளை நிர்மூலம் செய்தது. அதோ, இராமன் தன் பர்ணசாலை திரும்பி, சீதாதேவியுடன் அமர்ந்து ஆனந்தமாக உரையாடிக் கொண்டிருக்கிறான்...”
பெரியவர் சொல்லச் சொல்ல மன்னன் முகத்தில் மலர்ச்சி தாண்டவமாடத் துவங்கியது. அவன் அரியணையில் அமைதியாக அமர்ந்தான். பிறகு தன் தளபதிகளை அழைத்துப் படைகளை அதனதன் இருப்பிடங்களுக்குத் திரும்பச் செய்யுமாறு ஆணை பிறப்பித்தான்.
அமைச்சர்கள் மற்றும் அவையினர், பரபரப்பு நீங்கி அமைதியுற்றனர். ஆயினும், அரசனின் திருமால் பக்தி - இராமஸ்மரணை நாள்தோறும் அதிகரித்த வண்ணமே இருந்தது. சில தருணங்களில் அது பைத்தியக்காரத்தனமாகவும் இருந்தது. தான, தர்மம் என்கிற பெயரில் அரசன் வாரி வழங்கிக் கொண்டிருந்தான். அரசனின் நடவடிக்கைகளால் மனம் சோர்ந்தனர் அமைச்சர்கள்.
மஹோதயபுரம் அரண்மனையில் திருமாலடியார்களின் நடமாட்டம் அதிகரிப்பதே அரசனின் பக்திக் கிறுக்கு அதிகரிக்கக் காரணம் என்றெண்ணிய அமைச்சர்கள், அதற்கொரு முடிவுகட்டத் தீர்மானித்து, ஒரு யோசனை கண்டனர்.
அரண்மனையில் ஸ்ரீராம நவமி கொண்டாட்டம். அப்போது அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீராமனின் திருமேனியிலிருந்து ஒரு நவமணி மாலையை எடுத்து ஒளித்து வைத்துவிட்ட அமைச்சர்கள், அப்பழியை திருமாலடியார்கள் மீது சுமத்தினர். “அரசரிடம் செல்வாக்கு அதிகமிருப்பதால், அந்த அடியார்கள் செய்யும் அக்கிரமங்கள் அளவுக்கு அதிகமாக உள்ளன.
இன்று இப்பிரச்னையை அரசர் தீர்த்து வைக்க வேண்டும். ஒவ்வொரு அடியாரையும் நன்கு சோதனையிட்டால், நவமணி மாலையைத் திருடியவன் அகப்படுவான்; அவர்களின் பக்தி வேடம் கலையும்” என்றனர்.
குலசேகரர் மனம் துடித்துப் போனார். அவரே திருமாலில் திருமார்பை அலங்கரிக்கும் கௌஸ்துபம் என்னும் மணி மாலையின் அவதரிப்பு என்பதல்லவா திருமாலடியார்களின் நம்பிக்கை!
“என் அரண்மனையில் திருமாலடியார்களுக்கு ஒரு அப கீர்த்தி ஏற்படுவதை என்னால் ஏற்க முடியாது. அவர்கள் தூயவர்கள். களவு மனம் அவர்களிடம் ஒருபோதும் இராது... இது சத்தியம்” என்ற மன்னர், நச்சரவம் உள்ள குடம் ஒன்றைக் கொண்டு வரச் செய்து, “இதோ இக்குடத்துள் என் கையை விடுகிறேன். திருமாலடியார்கள் திருடர்கள் என்றால், அரவம் என்னைத் தீண்டட்டும். அது நிகழவில்லை என்றால், நீங்கள் உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும். திருமாலடியார்களின் பாதங்களில் வீழ்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.
அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர்.
அரசர், நச்சரவக் குடத்துள் கைவிட்டு வெகு நேரமாகியும் நாகம் அவரைத் தீண்டவில்லை. அமைச்சர்கள் நடந்த உண்மையைக் கூறி, தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டனர். அரசரையும் திருமாலடியார்களையும் பணிந்து வணங்கி, மன்னிப்பு கேட்டனர்.
மன்னர் குலசேகரவர்மர் அமைச்சர்களை மன்னித்தார். ஆனால், அதன்பிறகு மண்ணாள அவர் மனம் இடம் தரவில்லை. மறுகணம் மகுடத்தைக் கழற்றி, அரியணையில் வைத்துவிட்டு எழுந்தார். அமைச்சர்களைப் பார்த்து, “இனி இந்த மஹோதயபுரம் என்னும் வஞ்சிமாநகர அரியணையில் என் மகன் இருந்து நாடாள்வான். நான் இந்தத் திருமாலடியார்களுடன் திருவரங்கம் செல்கிறேன், திருமலை செல்கிறேன், திவ்ய தேச யாத்திரைதான் இனி எனக்கு உகந்தது. திருமலையில் உள்ள புஷ்கரணியில் மீனாகக் கிடந்தாலும் கிடப்பேன்; அம்மலையின் ஒரு முட்புதராகக்கூட இருப்பேன். வேங்கடவன் உமிழும் எச்சிலை ஏந்தும் பாத்திரமாகவும் இருப்பேன். அவன் ஆலயத்தில் பக்தர்கள் மிதித்துச் செல்லும் ஒரு படியாகக்கூட கிடப்பேன். ஆனால், இனி அரைக் கணமும் இந்த அரியணையில் அமரமாட்டேன்...” என்றார்.
“அரசே, இவ்வாறு தாங்கள் செய்தால், உலகோர் தங்களைப் பித்தர் என்பார்களே?” என்றனர் அமைச்சர்கள்.
“பக்தி என்பது பக்தி இல்லாதவர்களுக்குப் பித்து போலத்தான் தோன்றும். நான்,
தீதில் நன்னெறி நிற்க அல்லாது செய்,
நீதி யாரொடும் கூடுவதில்லையான்,
ஆதி ஆயனரங்கன், அந்தாமரைப்
பேதை மாமண வாளன்றன் பித்தனே
எத்திறத்திலும் யாரொடும் கூடும், அச்
சித்தந் தன்னைத் தவிர்த்தனன் செங்கண்மால்
‘அத்தனே! அரங்கா’ என்றழைக் கின்றேன்,
பித்தனா யொழிந்தேனெம்பிரானுக்கே
என்று பாடினார். பிறகு அரசைத் துறந்து, வைணவ அடியார்களுடன் புறப்பட்டுவிட்டார்.
குலசேகராழ்வாரின் பாடல்கள் ‘பெருமாள் திருமொழி’ எனப் போற்றப்படுகின்றன. அவருடைய பக்திச் சிறப்பைக் கொண்டாட, எங்கே திருமால் ஆலயங்கள் அமைந்திருப்பினும் அவற்றின் கருவறைப்படி, ‘குலசேகரன் படி’ என்றே போற்றப்படுகின்றது.

Comments
Post a Comment