பொன்னூர் ஸ்ரீகாமீஸ்வரர்

பிரம்மத்தைத் தேடும் பணியை அனேக பக்தர்கள் செய்வதில்லை. காரணம், பரப்பிரம்மமான ஈஸ்வரன் லிங்கத் திருவுருவாய் எழுந்து அருள் புரியும் அருட்தலங்களை வழிபட்டாலே போதுமானது என அவர்கள் எண்ணுவதால் தான்! மகேசன் உறையும் அப்படிப்பட்ட சிறப்புமிக்க தலங்களுள் ஒன்று பொன்னூர்!

ஊரின் மையத்தில் சிவாலயமும், வைணவாலயமும் ஒரே வளாகத்தில் அமையப்பெற்றுள்ளது. ‘பொன்னூர் நாட்டு பொன்னூர்’ என சுந்தரரால் வைப்புத் தலமாகப் பாடப்பெற்ற பெருமையுடையது இந்தத் தலம்!

பிரம்மனாலும், பராசர முனிவராலும் வழிபடப்பட்டுள்ள இந்தப் பதி, பல்லவர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டு, சோழர்களாலும் சம்புவராய மன்னர்களாலும் புனரமைக்கப்பட்டுள்ளது. விஜயநகர மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் சபா மண்டபம் கட்டப்பட்டு, கோயில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஈசன் இங்கு ஸ்ரீகாமீஸ்வரராக அருள்பாலிக்கிறார்! பராசர முனிவர் வழிபட்டதால் ஸ்ரீபராசரேஸ்வரர்! ஸ்ரீபிரம்மேஸ்வரர் என்றும் போற்றப் படும் இவர், பச்சைக்கல் வடிவில் மிளிர்கின்றார்.

அன்னை ஸ்ரீசாந்தநாயகி, தெற்கு முகமாக அருள்மழை பொழிகின்றாள்! பெயருக்கேற்ப, வழிபடுவோர்க்கு அமைதியும் குளுமையும் தந்து அருள்கிறாள். தல தீர்த்தமாக பிரம்ம தீர்த்தமும், தல விருட்சமாக சரக்கொன்றை மரமும் விளங்குகிறது. திருக்குளம் முற்றிலும் பாழ்பட்டு சிதைந்து கிடக்கிறது! நீர் தூர்ந்து, படிகள் சரிந்து, பார்க்கும் படியாக இல்லை.

கோஷ்ட மூர்த்திகள் சுற்று முறையில் இன்றி, வரிசை முறையில் மகா மண்டபத்தில் காணப்படுகின்றனர். பல்லவர்கள் ஆட்சிக் காலத்திலேயே பெருமாள் ஆலயமும் கட்டப்பட்டுள்ள செய்தியை, பல்லவ மன்னன் கோப்பெருசிங்கன் கல்வெட்டின் மூலமாக அறிகிறோம். ‘ஸ்ரீ விண்ணகர்’ என்று வர்ணிக்கப்பட்ட இப்பதி, தற்போது அழகப் பெருமாள் கோயில் என்று அழைக்கப்படுகிறது. அத்தி மரத்தால் ஆன மூலவர் சிலை. சிவன் ஆலயத்துக்கு வடதிசையில் சுமார் 7 அடி உயரத்தில் மகாவிஷ்ணுவின் சிலையைக் காணலாம். இதுவே வைணவ ஆலயத்தின் பழைய மூல மூர்த்தியாகும்!

கடந்த 100 ஆண்டுகளாக புதர் மண்டி கவனிப்பாரற்று இருக்கும் இப்புனித கே்ஷத்திரத்தை மீண்டும் புத்துயிர் பெற்று எழச் செய்திட, பக்த கோடிகள் ஒன்று திரண்டாலே போதும்.

செல்லும் வழி: பொன்னூர் - திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியிலிருந்து 10 கி.மீ.. வந்தவாசியிலிருந்து கீழ்புத்தூர், வங்காரம், பொன்னூர் செல்லும் பேருந்துகளில் செல்லலாம்.தொடர்புக்கு: 99628 05037.

Comments