வெண்ணெய் மருந்து!

சில அனுபவங்கள், எளிதில் ஏற்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாதவை தான். எதையும் மறுத்தும், வாதம் செய்தும் பழக்கம் கொண்ட எனக்குள்ளும் ஒரு மாற்றத்தை ஏர்படுத்திய தரிசனம், ஷிவகங்கா (கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து தும்கூர் செல்லும் வழியில், தும்கூரிலிருந்து 20 கி.மீ). மலைமேல் அமைந்துள்ள சிவன் கோயில் இது. அந்த மலைப்பகுதியையே ஷிவகங்கா ஹில்ஸ் என்று சொல்கின்றனர்.

அது, 1996ஆம் ஆண்டு. ஒவ்வொரு ஆண்டும், ஆடி மாதம் பௌர்ணமியை மூகாம்பிகை தரிசனத்துக்குரிய நாளாகக் கொள்வோம். அதற்காக மாலை அணிவது, விரதம் இருப்பது, வீட்டில் கலசம் நிறுவி, இரண்டு வேளையும் பூஜிப்பது என்று நியதிகள் உண்டு. மொத்தம் பதினைந்து பேர் காரைக்குடியில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் செல்வோம் (இன்றும் சென்று கொண்டிருக்கிறோம்). திருச்சியில் இருந்து மங்களூர் மெயில் பிடித்து பயணிப்போம். ஒரு கல்யாண முன்னேற்பாட்டுடன் நடக்கும் இந்த யாத்திரை.

நேரடியாக மூகாம்பிகை தரிசனம் என்று முடியாமல், சிருங்கேரி, ஹசன், முருடீஸ்வரர் என்று அருகிலுள்ள வேறு ஸ்தலங்களுக்கும் சென்று வருவோம். எங்கள் குழுவில் ஒருவரின் அம்மா இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அம்மாவின் உடல்நிலை பற்றிய கவலை, அவரை மிகவும் வாட்டிக்கொண்டிருந்தது. இந்த நிலையில் மூகாம்பிகை யாத்திரைக்குச் செல்கிறோமே என்று ஒரு விதமான அச்சமும் அவருக்குள் இடம்கொண்டிருந்தது. என்றாலும் கிளம்பிவிட்டார்.

முழுக்க, முழுக்க, தியானம், ஜபம், ஹோமம், பூஜை என்று நியதிப்படி நடக்கும் வழிபாட்டு முறையை தொடர்ந்தோம். எங்கள் குரு, அந்த விஷயத்தில் எங்களை சரியாகவே பயிற்றுவித்திருந்தார். முதல்நாளே மூகாம்பிகை சென்று அன்னதானம் போன்றவற்றையும் செய்து முடித்தோம். மறுநாள் ஹோமம், தரிசனம் முடிந்தது. சிருங்கேரிக்குக் கிளம்பினோம்.

ஸ்ரீசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட சாரதாம்பிகை, தன் அருள்வெள்ளத்தை துங்கா நதியைப் போலவே வாரியிறைக்கின்ற அற்புதமான ஸ்தலம் அது. இயற்கையும், அமைதியும், சாந்நித்யமும் நிரம்பிய அபூர்வ நிலம் சிருங்கேரி. கம்பீரமான வித்யாசங்கரர் ஆலயமும், ஸ்ரீசாரதாம்பிகையும் அந்தச் சூழலின் தெய்விக அடையாளங்கள். மஹாபுருஷர்களான சிருங்கேரி ஆசார்யர்களையும் தரிசித்து விட்டுத் திரும்பினோம்.

பெங்களூர் வந்து அங்கிருந்து ரயில் பிடிப்பதாக திட்டம். பௌர்ணமிக்கு இரண்டாம் நாள். அநேகமாக துவிதியை. தும்கூரில் இருந்து எங்கள் வேன் பெங்களூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் குருஜி சொன்னார்: ‘ஷிவகங்காவில் நிறுத்து.’ எங்கள் பயண திட்டத்தில், ஷிவகங்கா இல்லை. ‘என்ன விசேஷம்’ என்று கேட்டோம். பதில் சொல்லாமல் புன்னகைத்தார்.

ஷிவகங்கா மலையடிவாரத்தில் வண்டி நின்றது.

கீழே இறங்கிய குருஜி, “அதோ அந்தக் கடைல போய் நெய் வாங்கிக்கோ. அதை வாங்கிட்டு மலை ஏறு. மேலே குருக்கள்கிட்ட கொடு” என்றார் நண்பரிடம். அவரின் அம்மாதான் இதய நோயால் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். “நீங்க வரலையா” என்றோம். “இல்லை. நான் வண்டிகிட்டேயே இருக்கேன்” என்று மறுத்து விட்டார்.

அவர் சொன்னபடியே, கடையில் நெய் கேட்டார் நண்பர். ஒரு பெரிய இலையில் வைத்துத் தந்தார் கடைக்காரர். வாங்கிக் கொண்டு மலையேறினோம். முறையாக செதுக்கப்படாத படிக் கட்டுகள். கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால், முயன்றால் மலை ஏறிவிடலாம். மிகுந்த சிரமப்பட்டு மலை ஏறினோம்.

மலையில், அழகான கோயில். மூலஸ் தானத்தில் சிவபெருமான் லிங்க வடிவில் காட்சித் தந்தார். எங்கள் கையில் நெய்யைப் பார்த்த அர்ச்சகர், அதை வாங்கிக் கொண்டு உள்ளே போனார். சிவபிரானின் லிங்கத் திருமேனியில் அந்த நெய்யை அப்படியே தேய்த்தார். தேய்க்கத் தேய்க்க, அந்த நெய் நிறம் மாறி வெண்மையாய் வெண்ணெய்போல் ஆனது. அதை வழித்து இலையில் பிரசாதமாகக் கொடுத்தார். ஆராதனை முடிந்து இறங்கினோம்.


வண்டியில் ஏறியதும் குருஜி சொன்னார்: “இந்த வெண்ணெயை அம்மாவுக்குக் கொடு. இன்னும் பத்து வருஷத்துப் பயமில்லை. இந்த ஸ்தலத்தில் இந்த நாள்ல இதான் விசேஷம்.” சொன்னால் நம்ப மாட்டீகள். அந்த வெண்ணெயைச் சாப்பிட்ட பின், அம்மாவுக்கு நெஞ்சுவலி வரவில்லை. 2006ல்தான் இயற்கை எய்தினார்.

எவ்வளவோ கோயில்களுக்கு நாம் போகிறோம். எந்த நாளில், எந்த நேரத்தில் அங்கு தரிசனம் விசேஷம் என்று நமக்குத் தெரிகிறதா? குரு வேண்டும் என்று சொல்வது இதற்காகத்தானோ?

Comments