நெற்றிக் கண் திறந்தது!

பாண்டிய மன்னன் மனத்தில் ஒரு நெருடல். ‘தனது அரசவைப் புலவர் நக்கீரர் எதற்காக நமட்டுச் சிரிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்?’

‘புலவர் பெருமானே தாங்கள் எதற்காகவோ என்னை கேலிக்குரியவனாக எண்ணுகிறீர்கள் என்று தோன்றுகிறது’ என்றார்.

“மன்னா, இதையாவது தங்களால் தெளிவாக சிந்திக்க முடிந்ததே, அந்தவரை சந்தோஷம்” என்றார் நக்கீரர்.

‘அரசனான நம்மை, ஒரு புலவர் இப்படிப் பரிகாசம் செய்வதா?’ என்று பாண்டிய மன்னன் எண்ணவில்லை. தமிழ்மீது அவன் கொண்டிருந்த பற்று அப்படி. ஆனால், தான் எந்த விஷயத்தில் தெளிவாக சிந்திக்கவில்லை என்று புலவர் நிந்திக்கிறார்?

சற்றே யோசித்த குணபாண்டியனுக்கு விளங்கிவிட்டது. அன்றைய தனது அறிவிப்பின் காரணமாகத்தான் புலவருக்கு இந்தக் கோபம். முன்தினமே தனது அதிருப்தியை வெளியிட்டு விட்டார். நக்கீரரின் அதிருப்திக்கு இரண்டு காரணங்கள். ஒன்று, தனது புலமை அங்கீகரிக்கப்படவில்லை என்பது. மற்றொன்று, அரசாங்கக் கருவூலத்திலிருந்து ஆயிரம் பொற்காசுகள் குறைந்துவிடப்போகிறதே என்ற பதற்றம்.

பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா இல்லையா? இதுதான் மன்னனின் மனத்தில் எழுந்த கேள்வி.

சந்தேகத்தை மன்னன் தன்னிடம் வெளிப்படுத்தியவுடனேயே, “‘தலை’யாய சந்தேகம்தான்!” என்று புன்னகைத்தார் நக்கீரர். பின்னர் “இதிலென்ன சந்தேகம் மன்னா? ஆணோ பெண்ணோ எவருடைய கூந்தலிலும் இயற்கையான மணம் கிடையாது. வாசனை திரவியங்களை பெண்கள் கூந்தலில் தடவிக் கொள்வதுண்டு. நறுமணம் வீசும் மலர்களை சூடிக்கொள்வது அவர்களது வழக்கம். இதனால்தான் அவர்களின் கூந்தலில் மணம் வீசுகிறது” என்றார்.

மன்னனால் இந்தக் கருத்தை முழுவதுமாக ஏற்கமுடியவில்ல. “சில காலத்துக்குமுன், உடல் நலமின்றி இருந்த போது முழுமையாகப் பல நாட்களுக்கு பாண்டிமாதேவி தன் கூந்தலுக்கு எந்த சிறப்பும் செய்துகொள்ளாமல் இருந்த போதிலும்கூட அந்தக் கூந்தலிலிருந்து நறுமண வாசம் வெளிப்பட்டதே.”

இந்தக் கருத்தை மன்னன் வெளிப்படுத்தியதும் நக்கீரர் சற்றே தயங்கினார். ராணியைப் பற்றிக் கூறும்போது, வார்த்தைகளை மேலும் கவனமாகத் தேர்ந்தெடுக்கவேண்டும் எனும் எச்சரிக்கையால் எழுந்த தயக்கம் அது. ஆனால், மன்னன் அதை வேறுவிதமாகப் புரிந்துகொண்டான். நக்கீரருக்கே தெளிவான விடை தெரியவில்லை போலும்.

பின் எப்படி தன் ஐயத்தை தீர்த்துக் கொள்வது? உடனே ஓர் அறிவிப்பை மேற்கொண்டான். “என் சந்தேகத்தை முழுமையாகத் தீர்க்கும் புலவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாக வழங்கப்படும்.”

நக்கீரருக்கு இதில் ஏற்பு இல்லை. எனினும் அடுத்தடுத்த நிகழ்வுகள் அவருக்கு ஓரளவு திருப்தியை அளித்தன.

பாண்டிய நாட்டுப் புலவர்கள் பலரும் தாங்கள் எழுதிய கவிதைகள் மூலம் மன்னனின் சந்தேகம் குறித்த விளக்கத்தை அளிக்க, மன்னன் அவற்றில் முழுத் திருப்தி அடையவில்லை. எனவே ஆயிரம் பொற்காசுகளும் யாரையும் அடையவில்லை.

தான் வழிபடும் சிவபெருமானை மீண்டும் மனத்தில் வணங்கிக் கொண்டார் நக்கீரர். “மன்னனின் ஐயம் தானாகவே மெல்ல மெல்ல அடங்கிவிட வேண்டும் ஐயனே!”

இதற்கு நேர்மாறாக அடங்கா மனத்துடன் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில், ஈசன் சன்னதியில் கண் கலங்க நின்று கொண்டிருந்தார் தருமி. அந்த ஆலயத்தின் மடைப்பள்ளியில் பணிபுரிபவர்.

‘நான் பெரும் புலவனல்ல. என்றாலும் அரசன் அறிவித்திருக்கும் வெகுமதி எனக்குக் கிடைக்கும்படி நீ அருள்புரியக் கூடாதா சுந்தரேசா?’ என்று பிரார்த்தனை செய்தபோது, தருமியின் கண்களில் திரண்ட நீர் தடைமீறி அவரது கன்னங்களில் பாய்ந்தது.

தருமி பேராசை கொண்டவரல்ல. என்றாலும் ஆலய நைவேத்தியத்தைத் தயாரிக்கும் அவர் மனத்தில் திருமண ஆசை சமீப காலமாக முளைவிட்டிருந்தது.

இளைஞனுக்கே உரிய உணர்வுதான் அது. எனினும் தருமியின் திருமண ஆசைக்கு வேறொரு முக்கிய காரணமும் இருந்தது. மீனாட்சி சுந்தரேசரின் கருவறையில் பூஜைகள் செய்யும் பெரும் பேறு தனக்குக் கிட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டார் அவர். ஆனால் கிரகஸ்தர்கள் மட்டுமே அதாவது திருமணமானவர்கள் மட்டுமே ஆலய சன்னதிகளில் பூஜைகள் செய்ய முடியும். அப்படி ஒரு வழக்கம் அங்கு.

தருமியின் விருப்பம் எளிதில் தீர்வதாக இல்லை. அந்த ஏழை அந்தணனுக்கும் பெண் கொடுக்க சிலர் தயாராகவே இருந்தார்கள். ஆனால், திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றால் அதற்கான செலவை மணமகன் ஏற்பதுதானே முறை? ஆனால் தன்னிடமோ சேமிப்பு என்று எதுவும் கிடையாது. பின் எப்படித் திருமணம் செய்து கொள்ள?

இந்த நேரத்தில்தான் அரசனின் ஆயிரம் பொற்காசுகள் அறிவிப்பு அவன் காதுகளை எட்டியது.

இதைவிட ஓர் அரிய வாய்ப்பு தனக்கு கிடைக்காது. ஆனாலும் தன்னால் எப்படி மன்னனின் சந்தேகத்தைத் தீர்க்க முடியும்? அதுவும் பல புலவர்கள் ஏற்கனவே தோல்வியைத் தழுவியிருக்கும்போது!

சோமசுந்தரர் சன்னதிக்கெதிரே சோர்ந்து உட்காந்திருந்த தருமியின் காதுகளில் தேன் பாய்ந்தது. “தருமி, கவலைப் படாதே. மன்னனின் ஐயத்தை தீர்க்கும் பாடலை நான் உனக்கு அளிக்கிறேன்” என்று சிவபெருமானின் கருவறையிலிருந்து ஒரு தெய்விகக் குரல் வெளிப்பட்டது. அடுத்த கணம் தருமியின் அருகே ஒரு ஓலை. அதில் ஒரு பாடல்.

தலைவன் ஒரு வண்டை நோக்கிப் பாடுவதுபோல் அமைந்த பாடல் அது. ‘சிறப்பு இனத்தைச் சேர்ந்த வண்டே... நீ பல நறுமணம் வீசும் மலர்களில் அமர்ந்திருப்பாய். ஆனால், எந்த மலராவது பெண்ணின் கூந்தலில் இயற்கையாகவே எழும் வாசத்தைவிட உயர்வான மணம் கொண்டதாக அமைந்ததுண்டா?’ என்று கேட்பதுபோல் அமைந்திருந்தது அந்த பாடல்.

தேர்ந்த சொற்கள். மன்னனின் ஐயத்துக்கு சிறப்பான முறையில் பதில் அளிக்கும் உத்தி. மகிழ்வுடன் தருமி அந்தப் பாடலை அரண்மனைக்கு எடுத்துச் சென்றார்.

பாடலின் வளத்தில் மன்னன் மயங் கினான். தவிர, ஏற்கனவே அவன் மனத்தில் பெண்களுக்கு இயற்கையில் கூந்தலில் மணம் உண்டு என்ற எண்ணமும் வேரூன்றத் தொடங்கியிருந்தது. ஆனால், பொற்கிழியை அளிப்பதற்குமுன் நக்கீரர் தடுத்தார். “பொருட்குற்றம் உள்ள பாடல். எனவே இது குறித்து ஆழமானதொரு விவாதம் செய்யவேண்டும். பிறகு தான் பொற்கிழி” என்றார்.

தருமி திடுக்கிட்டார். சிவபெருமானே எழுதிய பாடல் என்பதால், அதற்கு மறுப்பேதும் இருக்க முடியாது என எண்ணி, ஓலையை எடுத்து வந்தால் இங்கு அரசவையில் நடப்பது எதிர்பாராததாக இருக்கிறதே. தமிழே உருவான நக்கீரருடன் தான் எப்படி வாதிட்டு வெல்ல முடியும்? இந்த அவநம்பிக்கை தலைதூக்க, அவர் மன்னிப்பு கேட்டபடி அரசவையிலிருந்து வெளியேறினார். நேரே ஆலயத்துக்குச் சென்று கதறினார்.

மனம் பொறாத சிவபெருமான் ஒரு புலவரின் வேடத்தில் அரசவைக்குள் நுழைந்தார். தருமி கெண்டுவந்த பாடலை இயற்றியது தாம்தான் என்றும். அது குறித்த வாதத்துக்கு, தான் தயார் என்றும் கூறினார்.

மன்னனுக்கு அடங்காத மகிழ்ச்சி. இப்படி ஒரு வாதம் நடந்தால், அது தமிழுக்குப் பெருமையல்லவா? தவிர, இது தலைசிறந்த வாதமாக அமைந்தால், தன் பெயரும் சரித்திரத்தில் இடம்பெறும் அல்லவா?

வாதம் தொடங்கியது. “பாடலில் சொற்குற்றம் இல்லை; பாடுபொருள் குற்றம் இல்லை” என்றெல்லாம் அடுக்கிய நக்கீரர், “ஆனால் பொருட் குற்றம் இருக்கிறது” என்று அப்பாடலின் அடிப்படையையே மறுதலித்தார். பெண்களில் கூந்தலுக்கு இயற்கையான வாசம் கிடையாது என்று வாதிட்டார். ஆனால், வந்திருந்த புலவர் இதை மறுத்தார்.

வாதம் உச்சநிலையை அடைந்தது. தேவலோகத்து மகளிரின் கூந்தலுக்குக் கூட இயற்கை மணம் கிடையாது என்றார் நக்கீரர். இதைவிட ஓர் ஆணித்தரமான உதாரணத்தைக் கூறிவிடமுடியாது என்ற கர்வமும் அவரிடம் எழுந்தது. ஆனால், அவர் எதிர்பாராத கோணத்தை அவர் சந்திக்க நேர்ந்தது.

“நீர் தினமும் தொழும் சிவபெருமானின் சரிபாதியான உமாதேவியின் கூந்தலுக்குக்கூட இயற்கையான மணம் கிடையாதா?” என்று புலவர் வேடத்தில் வந்திருந்த சிவபெருமான் கேட்க, “இதிலென்ன ஐயம்? அவர் கூந்தலுக்கும் அதே நிலைதான்” என்றார் நக்கீரர்.

சிவபெருமான் சினந்தார். தன் நெற்றிக் கண்ணைத் திறந்து காட்டினார். ‘தன்னுடன் வாதாட வந்திருப்பது முக்கண்ணனா!’ திகைப்பும் பரவசமும் எழுந்தன நக்கீரரின் மனத்தில். ஆனாலும் (அதை அறியாமை என்றும் வைத்துக் கொள்ளலாம், அகம்பாவம் என்றும் கூறலாம், கொள்கைப் பிடிப்பு என்றும் கொள்ளலாம்) “சிவபெருமானே, நீர் நெற்றிக்கண்ணை திறந்து காட்டிய போதும், உமது பாடலின் பொருள் பிழையானதுதான் என்பதில் எனக்கு எந்த மாற்றமும் இல்லை. குற்றம் குற்றமே” என்றார்.

சிவபெருமான், “சங்கறுக்கும் குலத்தில் உதித்த உமக்கு, எனது பாடலை ஆராயும் தகுதி உண்டோ?” என்று சீண்டினார்.


தன்னை மறந்த நக்கீரர், “நீர் மட்டும் என்ன? யாசகம் செய்வதைத் தொழிலாகக் கொண்டவர்தானே” என்றார்.

அழிக்கும் கடவுளுக்கு ஆத்திரம் பொங்கியது. அவர் நெற்றிக்கண்ணிலிருந்து கிளம்பிய ஜுவாலை நக்கீரரை வாட்டி எரித்தது. பின்னர், சினம் தணிந்த சிவபெருமான் அருள் புரிய, மதுரை ஆலயத்தின் பொற்றாமரைக் குளத்திலிருந்து பங்கமின்றி வெளிவந்தார் நக்கீரர்.

யாரோ ஒரு பக்தனுக்காக அரசவைக்கு வந்து வாதிட்ட கருணை, மற்றொரு பக்தனின் பெயரை காலம் உள்ள அளவும் நிலைநிறுத்திய அன்பு இரண்டும் அல்லவா நடந்தேறின மேற்படி சம்பவத்தில்!

Comments