ஞானப் பழம் வேண்டி வேழ முகத்தானுடன் போட்டியிட்ட பாலன்... தோள்கள் தினவெடுக்க சூரனை வதம் செய்த இளைஞன்... வள்ளிக் குறத்தியை மணமுடிக்க, அவளோடு சதிராடிய கிழவன்... அழகன் முருகன்!
இப்படி, வாழ்வின் முக்கியமான மூன்று பருவங்களையும் ஏற்று அருளாடல் நிகழ்த்திய முருகன், இந்த மூன்று (பருவ) கோலத்துடனும் தரிசனம் தரும் தலம்- ஆண்டார்குப்பம்!
முருகனாகிய ஆண்டவன் அருளும் தலம் என்பதாலும், ஆதியில் ஆண்டிகள் நிறைந்த- அவர்கள் வழிபட்ட தலமாதலாலும் ஆண்டவர் குப்பம் என்றும், இந்தப் பெயரே மருவி ஆண்டார் குப்பம் என்றும் வழங்கப்படும் ஊர், சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் கூட்டுச்சாலை வழியாக பொன்னேரி செல்லும் வழியில் அமைந்துள்ளது. இந்தத் தலத்தின் மற்றொரு சிறப்பம்சம்... திருக்கரங்களை இடுப்பில் வைத்து, அதிகாரத் தோரணையில் அருளும் முருகப்பெருமானின் தரிசனம்!
அதிகாரத் தோரணையிலா... இப்படியரு சிறப்பான கோலம் எதற்கு?! அதற்கான காரணத்தை அறியுமுன் சம்வர்த்தன முனிவரின் கதையைத் தெரிந்து கொள்வோம்.
சம்வர்த்தனர்! முப்போதும் முருகனை பூஜிப்பவர்; எப்போதும் கந்தனையே சிந்தித்திருப்பவர். இவர் ஒருமுறை, திருவேங்கடத்தில் இருந்து தன் மாமனைப் பார்க்க சிந்தாமணி கிராமத்துக்குப் புறப்பட்டு வந்தார். சந்தியாகாலம் நெருங்கியது! சந்தியா வந்தனம் செய்தாக வேண்டும்; தண்ணீரைத் தேடி அலைந்தார். ஆவாரங்காடாகத் திகழ்ந்த அந்தப் பகுதியில் மருந்துக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. சம்வர்த்தனர் கலங்கினார். முருகனைப் பிரார்த்தித்தார். அப்போது, ஒரு சிரிப்பொலி; சிறுவன் ஒருவன் இவரைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்!
''ஐயா... தண்ணீருக்கெல்லாமா இறைவனை அழைப்பது? வாருங்கள் என்னுடன்...'' என்றபடி சம்வர்த்தனரின் கரம் பிடித்து இழுத்துச் சென்றான். சிறிது தூரத்தில், ஆர்ப்பரித்து ஓடும் நதியைக் கண்ட சம்வர்த்தனர் வியந்தார். 'சற்றுமுன் இதே இடத்துக்கு வந்தோமே... அப்போது இந்த நதி தென்படவில்லையே!' சிந்தனையுடன், சந்தியாவந்தனம் செய்து முடித்தவர், சிறுவனைத் தேடினார்; அவனைக் காணோம்.
'ச்சே... சிறுவனின் பெயரைக்கூட கேட்காமல் விட்டு விட்டோமே...' தன்னைத்தானே அவர் நொந்து கொண்டபோது, மீண்டும் அதே சிரிப்பொலி! திரும்பிப் பார்த்தார். அங்கே சரக்கொன்றை மரத்தின் அடியில்... கம்பீரமாகக் காட்சி தந்தார் முருகன். ''சம்வர்த்தனரே... உமக்காகவே பாலனாக வந்து, வேலாயுதத்தால் தரையில் கோடு கிழித்து இந்த நதியைத் தோன்றச் செய்தோம். இது, பாலநதி எனும் பெயரில் தீர்த்தமாக விளங்கும். நானும் இங்கே கோயில் கொள்வேன்!'' என்று அருளிபுரிந்தார்.
அதன்படியே... புன்னகை தவழும் திருமுகம், திருக்கரங்களை இடுப்பில் வைத்து நிற்கும் கம்பீர கோலத்தில், விக்கிரகத் திருமேனியாக எழுந்தருளினார்! ஆனந்தக் கண்ணீருடன் கைதொழுதார் சம்வர்த்தனர். அவர் மனக்கண்ணில்... முன்பொரு முறை, பிரம்மனைத் தண்டித்த முருகப் பெருமானின் அருளாடல் விரிந்தது!
சிவபெருமானை தரிசிக்க வந்தார் நான்முகன். வழியில் அமர்ந்திருந்த பாலமுருகனைப் பொருட் படுத்தாமல் சென்றார். முருகன் துணுக்குற்றார்!
''பிரம்மதேவரே'' - கம்பீரமாக ஒலித்த முருகனின் குரல், பிரம்மனை தடுத்து நிறுத்தியது!
அருகில் வந்த முருகன், ''இவ்வளவு வேகமாக எங்கு செல்கிறீர்கள்...?'' என்று கேட்டார்.
''கயிலைநாதனை தரிசிக்க!''- பிரம்மன்.
''சரி... அதற்குமுன், எனது கேள்விகளுக்கு பதில் சொல்லி விட்டுச் செல்லுங்கள்... தாங்கள், எதை அடிப்படையாகக் கொண்டு படைப்புத் தொழில் புரிகிறீர்கள்?''
''வேதத்தை!''
''அப்படியானால், வேத வியாக்கியானங்களும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்... அப்படித்தானே?''
''ஆமாம்... சொல்லட்டுமா?''
- ஏதோ, குழந்தை... தானும் தெரிந்து கொள்வதற்காகக் கேட்கிறான் போலும் என்று கருதிய பிரம்மன், 'ஓம்...' என்று ஆரம்பித்தார்.
சட்டென்று இடைமறித்தான் வேலன்
''நிறுத்துங்கள்... ஓங்காரத்துக்குப் பொருள் என்ன? அதைச் சொல்லுங்கள் முதலில்!''
ஆடிப்போனார் பிரம்மன். பிறகு? பிரணவத்துக்குப் பொருள் கேட்டால்... அவருக்குத் தெரியாதே! இயலாமையுடன் விழித்த பிரம்மனை, தலையில் குட்டி சிறையில் அடைத்தார் முருகப்பெருமான்.
- இப்படி, பிரம்மனைக் கேள்வி கேட்ட அதிகாரத் தோரணையுடன்தான், இடுப்பில் கரம் வைத்து இங்கே காட்சி தருகிறார் முருகன் என்பதை அறிந்த சம்வர்த்தனர் மகிழ்ந்தார். ஆயுள் முழுக்க இந்த முருகனுக்குப் பணிவிடைகள் செய்தவர், அவனது திருவடியிலேயே கலந்தார்!
வெகுகாலம் கழித்து... இந்தப் பகுதிக்கு படை நடத்தி வந்த சுல்தான் ஒருவன், ஆண்டார்குப்பம் செல்லும் பக்தர்களைக் கண்டான். அவர்கள் மூலம் இந்தத் தலத்து முருகனின் மகிமைகளை அறிந்தவன், ''எனது வெற்றிக்காகவும் உங்கள் இறைவனி டம் பிரார்த்தியுங்கள்'' என்று கேட்டுக் கொண்டானாம். பிறகு போரில் எளிதில் வெற்றி பெற்றவன், முருகன் கோயில் இருக்கும் பகுதியை கோயிலுக்கே எழுதி வைத்ததாகவும், அடியவர்கள் அங்கே கோயில் எழுப்பிய தாகவும் விவரிக்கின்றன சரித்திரத் தகவல்கள்!
மாடவீதிகளுடன் திகழும் ஆண்டார் குப்பத்தின் வடகிழக்கில் ஓடுகிறது பாலநதி (வேலாயுத தீர்த்தம்); சம்வர்த்தனருக்காக முருகன் உருவாக்கியது இதுதான். தென்கிழக்கில்- குமார சுவாமி குளம்; ஊரின் நடுவே... சிற்பங்களுடன் கூடிய ஐந்து நிலை ராஜ கோபுரம், பிராகாரம் மற்றும் மண்டபங்களுடன் திகழ்கிறது ஆலயம். சரக்கொன்றையே ஸ்தல விருட்சம்!
பிரம்மன் சிறைப்படுதல், சம்வர்த்தனருக்கு தீர்த்தம் அருளுதல், சரஸ்வதி, திருமகள், தந்தைக்கு உபதேசிக்கும் சுவாமிநாதன்... என்று அழகிய தூண் சிற்பங்களுடன் திகழ்கிறது சோபன(16 கால்) மண்டபம். ஸ்ரீவிநாயகர், ஸ்ரீகாசி விஸ்வநாதர்- விசாலாட்சி, ஆடல்வல்லான், ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. கொடிமரம், பலிபீடம் மற்றும் மயில் வாகனத்தைக் கடந்து மண்டபத்துக்குள் நுழைந்தால், ஸ்ரீவிநாயகர்- ஸ்ரீகாசிவிஸ்வநாதர் ஆகியோருக்கு நடுவே சந்நிதி கொண்டிருக்கிறார் ஸ்ரீபாலசுப்ரமணியர்.
'... தெற்காகு மிப்பாரில் கீர்த்திக் கிசைந்த தச்சூர்
வடக்காகு மார்க்கத் தமர்ந்த பெருமாளே'- என்று
அருணகிரியாரும், 'திகழாண்டார்குப்பம் திருநகரில் மேவும் தகவுடைய கந்தன் சரணம்'- என்று வாரியாரும் போற்றிய தெய்வம். வேலும்- மயிலும், தேவதேவியரும் இல்லாமல் தனித்து அருளும் முருகன். இவரது சந்நிதியில் நிற்கும்போது, 'நான்' எனும் அகங்காரமும் தூள்தூளாகிப் போகிறது; கர்வம் தொலைந்த மனம், பேரானந்தத்தில் திளைக்கிறது! பிரம்மனின் ஆணவத்தையே அடக்கிய ஆண்டவனுக்கு நாமெல்லாம் எம்மாத்திரம்?
''பிரம்மனை சிறையிலிட்டு அவன் அதிகாரத்தைக் கைப்பற்றிய இந்த முருகன், தன்னை வணங்கும் பக்தர்களுக்கும் அதிகாரம் மிக்க பதவிகள் கிடைக்க அருள்புரிவதில் வள்ளல்'' என்கிறார் ஆலய அர்ச்சகர். உடலும் உள்ளமும் சிலிர்க்க தரிசிக் கிறோம். காலையில்- பாலனாக; நண்பகலில்- வாலிபனாக; மாலையில் வயோதிகனாக அருளும் முருகன்... அந்த அதிகாலை வேளையில் அழகுச் சிறுவனாக... 'யாமிருக்க பயமேன்?' என்று நம்மைப் பார்த்துச் சிரிப்பது போல் இருந்தது! தனிச் சந்நிதியில் அருளும் ஸ்ரீஆறுமுகர், வள்ளி-தெய்வானையுடன் கூடிய முருகன் ஆகிய உற்ஸவ விக்கிரகங்களும் கொள்ளை அழகு!
மூலவர் சந்நிதிக்கு நேர் எதிரில், நடுகல் அமைப்பில் ஒரு சிற்பம்; தாமரைப்பூவில்... கமண்டலம் ஜபமாலையுடன் பிரம்மன் அமர்ந்திருப்பது போன்ற தோற்றம். சிறைப்பட்ட பிரம்மன், 'இனியும் ஆணவம் தலைதூக்காமல் இருக்க அருள்பாலிக்க வேண்டும்' என்று முருகனை தியானிப்பதாக ஐதீகமாம்.
ஐப்பசி- சூரசம்ஹாரம், திருக்கார்த்திகை மற்றும் குமார சஷ்டி, சித்திரை பிரம்மோற்ஸவம் ஆகிய விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இந்த நாட்களில் இங்கு வந்து முருகனை தரிசிக்க, வல்வினைகள் நீங்கி வளம் பெறலாம்.
பாம்பன் சுவாமிகள் வழிபட்ட பாலன்!
சென்னையைச் சுற்றியுள்ள முருகன் தலங்களை தரிசித்த பாம்பன் சுவாமிகள் ஆண்டார்குப்பத்துக்கும் வந்தார். அவர் வந்த வேளையில் கோயில் நடை சாத்தியிருந்தது. மனம் கலங்கினார் சுவாமிகள். இந்த நிலையில் அங்கே வந்த வயதான அந்தணப் பெண் ஒருத்தி, அர்ச்சகர் ஒருவரின் சிறு வயது மகனை அழைத்து, 'இவருக்கு சாமி தரிசனம் செய்துவை' என்றாளாம். சுவாமிகளுக்கு முருக தரிசனம் கிடைத்தது. அத்துடன் அடியவர் ஒருவரின் உதவியால் இரவு தங்குவதற்கு இடமும் உணவும்கூடக் கிடைத்தது. இதனால் மகிழ்ந்த சுவாமிகள், 'யாக்கையே பனிப்பென்று...' எனத் துவங்கி ஆண்டார்குப்ப நாயகனைப் போற்றிப் பாடினாராம்!
பிரார்த்தனைகள் பலிக்கும்!
தொடர்ந்து மூன்று வெள்ளி அல்லது செவ்வாய்க்கிழமைகளில் இங்கு வந்து, நெய் தீபம் ஏற்றி முருகனை வழிபட, பதவி உயர்வும், புத்திர பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பரணி நட்சத்திர நாளன்று கோயிலுக்கு வந்து, அன்றிரவு அபிஷேக- ஆராதனைகளை தரிசித்து, அங்கேயே தங்கி மறுநாள் கிருத்திகை வழிபாடுகளையும் தரிசிக்க... சிக்கலான வாழ்க்கைப் பிரச்னைகள் அனைத்தும் நீங்கும்.

Comments
Post a Comment