ரிஷிகள் போட்ட பாதை!

வியாசர்- பிறப்பிலேயே அறிவாளியாகத் திகழ்ந்தவர். முற்பிறவியில் சேர்த்த புண்ணியம்... பராசர முனிவர் வாயிலாக வியாசரிடம் தென்பட்டது எனலாம். ஆகவே, உலகவியலில் பற்று கொள்ளவில்லை; பிறந்தவுடனே அன்னையை விட்டுப் பிரிந்தார். 'தாங்கள் விரும்பும்போது தங்கள் முன் தோன்றுவேன்' என்று அன்னைக்கு வாக்களித்துச் சென்றார்! சுகபிரம்மமும் ஞானியாகவே பிறந்தவர்; பற்றற்றவர்.

வியாசர், வேதத்தை வகுத்து கர்ம மார்க்கத்தின் உயர்வை உணர்த்தி, உயிர்களுக்கு நல்வழி காட்டியவர் என்றால்... பக்தியின் பெருமையை விளக்கி, பாமரரும் பிறவிப் பயன் அடைய வழி சொன்னவர் சுகபிரம்மர்.

இப்படி, பொதுநலனையே அறமாக ஏற்று சமுதாய முன்னேற்றத்தை ஏற்படுத்தியவர்கள், அன்றைய முனிவர்களும் ரிஷிகளும். கச்யபர் முதலான ஸப்தரிஷிகள், அகத்தியர், வசிஷ்டர், அருந்ததி ஆகியோர் விண்ணில் குடிகொண்டு உலக இயக்கத்துக்கு உறுதுணையாக இருப்பவர்கள். ததீசியின் தியாகமும், துர்வாச முனிவரின் தவமும் உலக நன்மைக்கு பயன்பட்டன. இவர்களைப் போன்றே புராணங்கள் குறிப்பிடும் இன்னும் பல ரிஷிகளும் முனிவர்களும் மேன்மையான வாழ்க்கைக்கு வழிகாட்டினார்கள்.



சிறு வயதிலேயே அன்னையைப் பிரிந்து ஆன்மிகத்தில் திளைத்து, அனைத்து உயிர்களுக்கும் ஆன்மிக குருவாகத் திகழ்ந்தவர் ஆதிசங்கரர். இவர் காலத்துக்குப் பிறகும் தோன்றிய மகான்களும் சிந்தனையாளர்களும்கூட மனிதர்களின் அறிவுப்பசியை அகற்றினார்கள்; மீமாம்சை, வேதாந்தம், நியாயம், வைசேஷிகம், ஸாங்க்யம், யோகம்... என்று பல்வேறு நூல்களால் அனைவரது மனத் துயரையும் அறியாமையும் நீக்கி மகிழ வைத்தார்கள். உடற்கூறு குறித்து ஆராய்ந்த இந்த மகான்களும் ஞானிகளும், உள்ளம் குறித்தும் போதித்தார்கள்.

கண்ணுக்குப் புலப்படாத நம் மனமும், அதன் தவறான போக்குமே அனைத்து இன்னல்களுக்கும் காரணம். போலியை உண்மை எனக் கருதும் மனம், சிந்தனைத் திறனை இழந்து, துயரத்தில் சிக்கி, ஒட்டுமொத்த வாழ்க்கையையும் கசப்பாக்கி விடும் என்பதை உணர வேண்டும். உண்மையை ஏற்கும் மனமே, நிரந்தர மகிழ்ச்சியைச் சந்திக்க வைக்கும். 'உடலையும் உறுப்புகளையும் பராமரிக்கும் நாம், உள்ளத் தூய்மையையும் பராமரிக்க வேண்டும்' என்று அறிவுறுத்துகின்றன- மகான்களும் ரிஷிகளும் அருளிய சம்ஸ்கிருத இலக்கியங்கள்!

'சத்யம் வத; தர்மம் சர' - அதாவது, 'உண்மையைப் பேசு; தர்மத்தைக் கடைப்பிடி' என்ற வேத வாக்கு, ஞானிகள் மற்றும் மகான்களின் சிந்தனைக்கு ஆதாரம்.



உடலுக்குள் உறைந்திருக்கும் ஆன்மா அசல்; நம் உடல் போலி! இந்த உடலுக்கு மூப்பு உண்டு; மனதுக்கு இல்லை. உடலானது முதுமை அடைவதற்குள் முக்திக்கு வழி தேட வேண்டும்.

'முற்பிறவிப் பயனை அனுபவிக்கவே இந்த உடலை தனது இருப்பிடமாகக் கொள்கிறது ஜீவாத்மா' என்கிறது ஜோதிடம். இந்த உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக வைத்திருப்பவனுக்கு, நிலையான அமைதியும் ஆனந்தமும் உண்டு. ஆனால் நாம், புலன்களின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு மனதை மாசு படுத்துகிறோம். தகாத உணவும், தாறுமாறான சிந்தனையும் நம் உடலையும் உள்ளத்தையும் அழித்து விடுகின்றன.

'உடல் ஓர் எந்திரம்; அதன் இயக்குனர் மனம்; இயக்கும் தகுதியை மனதுக்கு அளிப்பது ஆன்மா' என்ற பேருண்மையை அறிய வேண்டும். ஆம், மனம் ஆன்மாவுடன் இணைந்து தனது சிந்தனையைச் செயல்படுத்தும். ஆகவே, மனமும் உடலும் பரிசுத்தமாக இருந்தால் வாழ்வில் பரிபூரணம் அடையலாம்.

வேதங்கள், புராணங்கள் மற்றும் ஞானிகள் அருளிய இலக்கியங்கள் அனைத்தும், மனத் தூய்மையை நிலைநிறுத்தத் தேவையான அறிவுரைகளைத் தருகின்றன. புராணங்களில் வரும் கதைகளை மட்டுமே பார்க்கக்கூடாது. அவற்றின் அறிவுரையையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். 'ராமனைப் போல் வாழ வேண்டும்; ராவணனைப் போல வாழக் கூடாது' என்பது ராமாயணத்தின் அறிவுரை. 'அறத்தில் இருந்து நழுவினால் வாழ்க்கை துன்பமாகும்' என்பது பாரதத்தின் பாடம். 'உலகப் பற்றுகளில் இருந்து விடுபட்டு, பரம்பொருளை மட்டுமே மனதில் நிறுத்து. நித்யசுத்தனான இறைவன் குடியேறினால் மனம் சுத்தமாகும்; தூய்மை பெற்ற மனம் துயரத்தைச் சந்திக்காது' - இது பாகவதத்தின் போதனை!

இப்படி, ஞான நூல்கள் ஒவ்வொன்றும் நேரிடையாகவோ மறைமுகமாகவோ, மனத் தூய்மையின் முக்கியத்துவத்தையே உணர்த்துகின்றன.

உடலையும் உள்ளத்தையும் பராமரிக்கும் வழிமுறைகளின் தொகுப்பு தர்மசாஸ்திரம். உண்மை எது, போலி எது? என்று பிரித்தறியும் பகுத்தறிவைத் தரும் தர்மசாஸ்திரத்தின் அறிவுரைகள் நம் மனதைத் தெளிவாக்கும்.

தெளிந்த மனதில் மட்டுமே எதிர்பார்ப்பு இல்லாத பக்தி தோன்றும்; இதன் பலனால் கடவுளின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். எந்தக் காலத்திலும்... தெளிந்த மனமே நமது குறிக்கோளை அடைய வைத்து, மகிழ்ச்சியைத் தரும். தெளிவான மனதைப் பெற... இன்றைய இளைஞர்கள் புராண- இதிகாச நூல்களைப் படிக்க வேண்டும். அவை நம்மை வழிநடத்தும் என்ற நம்பிக்கை வளர வேண்டும். அப்போது, நிலையானது- நிலையற்றது குறித்து தெளிந்த சிந்தனை கிடைக்கும்; ஆன்மாவை பற்றிய பகுத்தறிவு பிறக்கும்; தன் தகுதியை உணர்ந்து, அகங்காரத்தை நீக்கி, பணிவுடன் உலக நன்மைக்காக மட்டுமே செயல்படும் பக்குவம் உருவாகும்.

நம் முன்னோரான ரிஷிகளும் முனிவர்களும் நினைத்ததை நிறைவேற்றும் வல்லமை பெற்றிருந்தும், தங்களின் ஆற்றல் குறித்து அகங்காரம் கொள்ளாமல்... தங்களின் அகம் உணர்ந்து நிலையறிந்து, பணிவுடன் உலக நன்மைக்காக செயல்பட்டார்கள். எந்தக் காரியத்தை, யார், எப்படிச் செய்ய வேண்டும் என்ற சாஸ்திரத்தின் கட்டளையை சிரமேற்கொண்டு வாழ்ந்தனர்.

தவ வலிமையால் புதிய சொர்க்கத்தையே நிர்மாணித்தவர் விஸ்வாமித்திரர். ஆனாலும்... தனது வேள்விக்கு பங்கம் விளைந்தபோது ஸ்ரீராமனை துணைக்கு அழைத்து வந்தார். ஸ்ரீராமன் செய்ய வேண்டிய அறத்தை, விஸ்வாமித்திரர் தான் ஏற்றுக்கொள்ளவில்லை.

பெரும் படையை, தனது தண்டத்தால் அடக்கி யவர் வசிஷ்டர். ஆனாலும், ஆணவம் இன்றி ஆன்மிகத்தில் திளைத்தார் இந்த முனிவர்.

தனி நபர் அறம், பொது அறம் மற்றும் இக்கட்டான சூழலில் கடைப்பிடிக்க வேண்டிய அறம்... இவை குறித்து வேதம் என்ன சொல்கிறதோ, அதன்படி அவரவர் அறத்தை அவரவர் செயல் படுத்த உதவிய ஞானிகள் இவர்கள்.

தவசீலரான காலவ மகரிஷி ஒரு குதிரையுடன் சென்று, சத்ருஜித் என்ற அரசனைச் சந்தித்தார். வரவேற்று உபசரித்த அரசனிடம், ''அரசே, அசுரர்கள் பலர் விலங்குகளின் வடிவில் வந்து எனது ஆஸ்ரமத்தை நாசமாக்குகிறார்கள். எனது தவ வலிமையால் அவர்களை அழித்து விடலாம். ஆனால், எனது தவ ஆற்றல் வீணாவதில் விருப்பம் இல்லை. எனது நிலையறிந்த சூரியபகவான், 'குவலயம்' எனும் இந்தக் குதிரையை அளித்தார். மண்ணில் மட்டுமின்றி விண்ணுக்கும் பாதாளலோகத்துக்கும் பயணிக்கும் அற்புதக் குதிரை இது. தங்கள் புதல்வனான ரிதத்வஜனை என்னுடன் அனுப்பினால், இந்தக் குதிரையின் துணையுடன் அசுரர்களை அவன் அழிப்பான் என்று நம்புகிறேன்'' என்று கேட்டார். சத்ருஜித்தும் தன் மைந்தனை முனிவருடன் அனுப்பி வைத்தான்.

ரிதத்வஜனும் அற்புதக் குதிரையின் துணையுடன், அசுரர்களை அழித்தான்; 'குவலயாசிவன்' என்று புகழ் பெற்றான். அதுமட்டுமா? பாதாளராஜன், தன் மகள் மதாலஸாவை, ரிதத்வஜனுக்கு திருமணம் செய்து வைத்தான். இப்படியரு கதை உண்டு.

அரசனின் அறம் மக்களைக் காப்பது. இதை, நடைமுறைப் படுத்த, சத்ருஜித்துக்கும் அவன் மகன் ரிதத்வஜனுக்கும் வாய்ப்பு அளித்துடன், உலக நன்மைக்கு உறுதுணையாகச் செயல்பட்டார் காலவர்.

இந்த முனிவர்களின் வழியில்... நாமும் நமது பிறப்பின் நோக்கம் அறிந்து, நம் தகுதி, செயல்பாடு மற்றும் திறமை ஆகியவற்றை உணர்ந்து செயல்படவேண்டும். அப்போது மனம் தெளிவாகும். செயல்கள் யாவும் வெற்றி பெறும்!

Comments