பலசாலி ஆகும் ரகசியம்!

விரைவாக வீடு கட்ட விரும்பினார் ஒருவர். இரண்டு கொத்தனார்களை வேலைக்கு அமர்த்தி, ''இருவருமாகச் சேர்ந்து சீக்கிரம் கட்டுங்கள். மூன்று மாதத்துக்குள் முடிக்க வேண்டும்'' என்றார்.

வேலை ஆரம்பமானது. கொத்தனார்களில் ஒருவர், வரிசையாக செங்கற்களை அடுக்கிவிட்டு, சிமென்ட் குழைக்க கீழே குனிந்தார். கலவை தயாரித்து நிமிர்ந்தால்... இவர் அடுக்கி வைத்திருந்த செங்கற்களை, வேகமாக எடுத்து தூர எறிந்துவிட்டு வேறு கற்களை அடுக்கிக் கொண்டிருந்தார் மற்றவர். சிமென்ட் எடுப்பதற்காக அந்தக் கொத்தனார் கீழே குனிந்ததும், அவர் அடுக்கிய கற்களைக் கலைத்து தூர எறிந்தார் முதலாமவர்.

இப்படி இருந்தால், இந்த இருவரும் சேர்ந்து வீடுகட்டி முடிப்பார்களா?

இந்தக் கூத்துதான் தினம்தோறும் கணம்தோறும் நமக்குள்ளும் நடக் கிறது. ஆயிரம் ஆயிரம் முரண்பட்ட எண்ணங்கள், எதிர் எதிரான ஆசைகள் நம்மை ஆட்டிப் படைக்கின்றன.

யாரை நேசிக்கிறோமோ அவரையே நாம் வெறுக்கிறோம். காலையில் விவாகரத்து பற்றி காரசாரமாகப் பேசுகிறோம்; மாலையில் மன்னிப்பு கோருகிறோம். சாப்பிடும்போது, 'இதைச் சாப்பிடக் கூடாதே' என்று யோசித்துக் கொண்டே சாப்பிடுகிறோம். 'இந்தத் தவறைச் செய்யக் கூடாது' என்று சங்கல்பித்தபடியே... குறிப்பிட்ட அந்தத் தவறை, குற்ற உணர்வுடனேயே செய்து விடுகிறோம். இந்த முரண்பாடுகள் நம்மை துக்கமடையச் செய்கின்றன; களைப்பாக்குகின்றன!

நண்பர் ஒருவர், 'இனிமேல் குடிப்பதில்லை' என்று கோயிலில் சத்தியம் செய்திருந்தார். ஒரு மாதம் கழிந்திருக்கும்... குடித்து விட்டு எதிரில் வந்தார். மறுநாள் அவரிடம், ''கோயிலில் சத்தியம் செய்துவிட்டு குடிக்கிறாயே? வெட்கமாக இல்லை?'' என்று கடிந்து கொண்டேன். ''குடிப்பதில்லை என்ற சத்தியத்தை ஒரு மாதம் காப்பாற்றியதைக் கொண்டாடுவதற்காகக் குடிக்க நேர்ந்தது'' என்றார் அவர். ஒரு கை செங்கல்லை வைக்கும்போதே, மறு கை எடுத்து எறிகிறது! எப்படி அவரால் வீடு கட்ட முடியும்? நமது முரண்பாடுகளால்தான் நம் சக்தி திவாலாகிறது; மரணம் நெருங்குகிறது!

அழகான உருவகக் கதை ஒன்று...

ஞானி ஒருவர், தெரு வழியே போனார். அங்கே ஒருவன் தன் உடலைக் கத்தியால் கீறி, ரத்தம் வழிய தன் மார்பில் அறைந்தபடி, அலறிக்கொண்டு இருந்தான். பதறிப்போன ஞானி அவனை அணுகி, ''முட்டாளே, ஏன் இப்படிச் செய்கிறாய்?'' என்று கேட்டார்.

''நான் மட்டுமா இப்படிச் செய்கிறேன். இந்த உலகில் எல்லோருமே இதைத்தானே செய்கிறார்கள்'' என்று புலம்பினான் அவன்.

''பைத்தியமே, உன் பெயர் என்ன?'' என்று ஞானி கேட்க, ''அதுவா? அநேகம்... அனந்தம்!'' என்று பரிதாபமாகச் சிரித்தான் அந்த மூடன்.

நமக்குள் குடியிருக்கும் எண்ணங்கள் அநேகம்... அனந்தம்... எண்ணற்றவை! இவை, ஒன்றுக்கொன்று எதிரானவை; கடுமையாக முரண்படுபவை; ஒன்றை ஒன்று தோற்கடிக்கும் வெறி மிக்கவை. இவை ஒன்றோடு ஒன்று போராடி, நம்மை ரத்தம் சொட்டச் சொட்ட காயப்படுத்துகின்றன. பகையான எண்ணங்கள் அனந்தம், அநேகம் என்பதையே இந்த உருவகக் கதை உணர்த்தும்.

பாருங்கள்... சிலர், செல்ல மகள் வாழ வேண்டும் என்பதற்காக கோடி கோடியாகச் சேர்ப்பார்கள். ஆனால், அவள் யாரோ ஏழையைக் காதலித்து மணந்தாள் என்பதற்காக சல்லிக்காசு தராமல் துரத்தியடிப்பார்கள். அவள் கஷ்டப்படுகிறாள் என்று யாராவது சொன்னால், ''படட்டும்... போய் பிச்சை எடுக்கட்டும்'' என்று சபிப்பார்கள்.

காலடி தரையில் படாமல் வளர்க்க நினைப்பது ஓர் எண்ணம். தெருத் தெருவாகப் பிச்சைக்கு அனுப்புவது முற்றிலும் நேர்மாறான ஓர் எண்ணம். இரண்டுமே ஒரு தகப்பனுக்குள் எப்படி இருக்க முடியும்? இருக்கிறதே! இது புதிர் அல்லவா!

இந்தப் புதிரை ஓஷோ விடுவிக்கிறார்.

''நாம் ஒரு மனிதர் இல்லை. ஆயிரக்கணக்கான மனிதர்கள் நமக்குள் இருக்கிறார்கள். நமக்கும் ஆயிரம் பேர் இருக்க வேண்டும். நாமும் அநேகம்... அனந்தம்... நமக்குள் இருக்கும் முதல் நபர் காக்க நினைக்கிறார். இரண்டாமவர் அழிக்க நினைக்கிறார். ஒருவர் காதல் செய்யும் போதே மற்றவர் கொலை செய்ய விரும்புகிறார். நம்முள் ஒருவர் பக்தியுடன் கோயிலுக்குள் நுழையும்போதே, இன்னொருவர்... 'இதெல்லாம் பொய். கடவுள் என்று எவரும் இருக்க முடியாது' என்று முணுமுணுக்கிறார். நம்மில் ஒரு பகுதி கோயில் மணி அடிக்கிறது. மறுபகுதி... 'ம்... இது வெறும் பைத்தியக்காரத்தனம்' என்று கூச்சப் படுகிறது. ஒரு பகுதி, ஜப மாலையை உருட்டிக் கொண்டே விஸ்தாரமாகக் கடை நடத்துகிறது!''

- ஓஷோவின் இந்தப் படப்பிடிப்பு, எத்தனை உண்மையானது. நம்மிலும் ஆயிரம் பேர் குடித்தனம் நடத்துவதால் விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம் மாதிரி நம் ஒவ்வொருவருக்கும் ஒரு சகஸ்ர நாமம் சொல்லலாம்!

நம்மில் எதிரெதிராகப் போராடிக் கொண்டிருக்கும் ஆயிரம் ஆயிரம் பேரையும் ஒருங்கிணைக்க முடிந்தால், நாம்தான் உலகமகா பலசாலி. இந்த ஒருங்கிணைப்பை நிகழ்த்தியவர்களே இந்திய யோகிகள்... புத்தர், மகாவீர், சங்கரர், ரமணர் போன்ற ஞானிகள். ஒருங்கிணைப்பின் மூலம் ஆனந்த கீதம் எழுப்பிய சாதனையாளர்கள் இவர்கள். கவனம் சிதறிய மனம் உடையவர்களாக நாம் இருப்பதால்தான் துன்பம் அடைகிறோம்; உலகையும் துன்புறச் செய்கிறோம்.

ஒருமுறை... சத்சங்கம் நடத்திக் கொண்டிருந்தார் புத்தர். அப்போது, எதிரில் இருந்த மன்னரின் கால் கட்டைவிரல், அவரையும் அறியாமல் ஆடுவதை கவனித்தார். தமது உபதேசத்தை நிறுத்திவிட்டு, ''இந்த விரல் ஏன் இப்படி ஆடுகிறது'' என்று மன்னரிடம் நேரடியாகவே கேட்டார்.



மன்னரின் நிலை தர்மசங்கடமாகிவிட்டது. ''விடுங்கள்... தாங்கள், எத்தனை மேலான விஷயங்களைப் பற்றிப் பேசுகிறீர்கள். இதை ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள்?'' என்று சமாளித்தார்.

''எனக்கு விடை தெரிய வேண்டும்'' - பிடிவாதம் பிடித்தார் புத்தர்.

வேறு வழியின்றி, ''உண்மையைச் சொன்னால், நீங்கள் கண்டுபிடித்துச் சொல்லும் வரை என் விரல் ஆடுவது எனக்கே தெரியாது. நீங்கள் சொன்னதும்தான் அதை கவனித்தேன். அடுத்த கணம் அது ஆடாமல் நின்று விட்டது, அவ்வளவுதான்!'' என்றார்.

''பாருங்கள்... உங்களுக்கே தெரியாமல், உங்கள் கால் விரல்கள் ஆட முடியும் என்றால், நாளை உங்களுக்கே தெரியாமல் உங்கள் கைகள் கொலையும் செய்யுமே! புரிந்து கொள்ளுங்கள்... நீங்கள் விழிப்படையாதபோது விரல் ஆடியது; விழிப்படைந்ததும் ஆட்டம் நின்று விட்டது. நாம் விழிப்படையாமல் போனால், நம்மை அறியாமலேயே நாம் பல்வேறு பிழையான செயல்களைச் செய்ய நேரிடும். நமது ஒவ்வொரு செயலும் நமது விழிப்பு நிலையிலேயே நிகழ வேண்டும்'' என்றார் புத்தர்.

சுவாசிப்பதில்கூட, விழிப்பின்றி எந்திரம் போல் சுவாசிக்கிறோம். ஞானி, சுவாசத்தைக்கூட தன் நிர்வாகத்தில் வைத்திருக்கிறான். சுவாசத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலமே, மனதில் சிதறிக் கிடக்கும் பல்வேறு எண்ணங்களை ஒழுங்குபடுத்தி ஒருமுகமாக்குகிறான்.

மெஹர் பாபா என்ற மகானைப் பார்க்க, உளவியல் நிபுணர் ஒருவர் வந்தார். பிறர் மனத்தில் ஓடும் எண்ணங்களைப் படித்துச் சொல்வதில் வல்லவர். மெஹர் பாபா முன் அமர்ந்து நெடுநேரமாகியும் எதையும் சொல்லவில்லை. மௌனமாகப் புறப்பட்டார்.

ஏன் என்று நண்பர்கள் துளைத்தெடுத்தனர். அதற்கு அவர் சொன்னார்... 'இவர் அதிசயமானவர். இவர் மனதில் எண்ணங்களே இல்லை. இப்படி ஒருவரை நான் பார்த்ததே இல்லை.'' என்றாராம்.

எண்ணங்களே அற்ற நிலை பரப்ரும்ம நிலை- உச்ச நிலை! அத்தனை உயரம் நாம் போகாவிட்டாலும், மனதை யுத்த களமாக வைத்திருக்காமல், எதிர் எதிரான எண்ணங்களை ஒருமுகப்படுத்த பழக வேண்டும்.

குழந்தைகள் சாக்லேட்டுக்கு அழும். கிடைத்த பிறகு, சாப்பிட்டால் கரைந்து விடுமே என்று அழும். சாப்பிடவும் வேண்டும், கரையவும் கூடாது என்று எதிர்பார்ப்பது சரியா? கிராமத்துப் பெரிய வீட்டையும் விற்க மனம் வராமல், நகர்ப்புறத்தில் ஒரு குருவிக் கூட்டையாவது வாங்கி விடும் தவிப்பில் ஆஸ்பத்திரிக்குப் போனவர்கள் அநேகம். கல்லறையில் குடியேறியவர்கள் அனந்தம்!

Comments