யக்ஷ கின்னர கந்தர்வ ஸித்த
வித்யாதரை ஸ்ஸதா!
ஸ்தூயமானம் மகாத்மானம்
வந்தேஹம் கண நாயகம்!
(யக்ஷர், கின்னர், கந்தர்வர், ஸித்தர், வித்யாதரர் இவர்களால் எப்போதும் துதிக்கப்படுகிறவரும், மஹாத்மாவும், பூத கணங்களுக்குத் தலைவருமான ஸ்ரீமஹா கணபதியை நான் நமஸ்கரிக்கிறேன்).
ஹீலகப் பிரியரான நாரத முனிவர் ஒருமுறை தேவேந்திர சபைக்கு வந்தார். இந்திரனிடமே, தனது கைவரிசையைக் காட்டலானார்:
“தேவேந்திரா! இமயமலைக்கும் விந்திய பருவதத்துக்கும் இடையில் ஏகவதி என்ற ஒரு நகரம் உள்ளது. அந்நகரத்து அரசனான அபிநந்தன் மாபெரும் வேள்வி ஒன்றை தொடங்க முன்வந்துள்ளான். பல மகரிஷிகளும், பல மாமுனிவர்களும், அநேக வேத விற்பன்னர்களும் பங்கேற்கும் இந்த யாகத்தின் தொடக்கத்திலேயே உன் பதவியை நீ இழக்க நேரிடலாம்!”
இதைக் கேட்டு மனக்கலக்கமுற்ற இந்திரன், உடனே காரியத்தில் இறங்கினான். தனக்கு அவிர்பாகம் தராமல் நடத்தப்படும் அந்த யாகத்தை அழிக்கக் கூடியவன் காலரூபியே என்று அவனை நினைத்தவுடன், அந்த காலரூபி அவன் முன் நின்றான். வேள்வியைத் தடுத்து அங்கு துவம்சம் செய்து, அழித்து அரசன் அபிநந்தனோடு ஏனையோரையும் கொன்றுவிடும்படி இந்திரன் அவனுக்குக் கட்டளை இட்டான். திறமைமிக்க கால ரூபி, இந்திரன் கட்டளைபடியே செய்து முடித்தான். ஆனால், யாகத்தை அழித்ததோடு அவன் நிறுத்திக் கொள்ளவில்லை. எங்குமே யாகங்களை நடத்த முடியாதபடி அவைகளை அழித்தும், அங்குள்ளோரைத் தாக்கியும் நாசவேலையிலும் ஈடுபடலானான்!
இதனால் பாதிக்கப்பட்ட முனிவர்கள், விநாயகரை நாடினர். ‘காலரூபியான விக்னனை அடக்க, விரைவில் வரேணிய ராஜனுடைய இல்லத்தில், தான் அவதரிப்பதாகவும், அப்போது அவர்களது இன்னல்களைத் தீர்ப்பதாகவும் வாக்குறுதி அருள்கூர்ந்தார்’ ஆனைமுகத்தோன்.
வெகுகாலமாக புத்திரபேறு அற்ற வரேணிய ராஜன் மனைவி புட்டகை, விநாயகர் அருளால் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள். குழந்தை பிறந்து சில நிமிடங்களுக்குள்ளேயே கணேசர், அங்கிருந்தோர் அறியாவண்ணம் அக்குழந்தையை மறைத்துவிட்டு, தானே ஒரு குழந்தையாக மாறி அவ்விடத்தில் இருந்தார்! அக்குழந்தை மிக அழகோடு, யானை முகம் கொண்டு, மழு முதலிய ஆயுதங்களைக் கொண்ட சதுர்புஜங்கள், நீண்ட தும்பிக்கை, பெரும் தொந்தி, இவைகளோடு காட்சி அளித்ததைக் கண்ட யாவரும் அதிசயம் அடைந்து பயந்து ஓடினர்! இத்தகைய குழந்தையால் தங்களுக்கு கேடுவரலாம் என்று நினைத்த வரேணிய ராஜ தம்பதிகள், அக்குழந்தையை உடனே எடுத்துப் போய் மடுகரையில் தள்ளிவிட்டு வர சேவகர்களுக்குக் கட்டளை இட்டனர். கட்டளையை ஏற்ற சேவகர்கள், குழந்தையை அந்த இரவிலேயே எடுத்துச் சென்று, பராசுவ முனிவரின் ஆசிரமத்துக்கருகில் இருந்த புல் தரையில் இலைகளைப் பரப்பி அதன் மீது அந்தச் சிசுவைக் கிடத்திவிட்டுச் சென்றனர்.
மறுநாள் விடியற்காலையில் தடாகத்தில் நீராட வந்த பராசுவ முனிவர் அந்த அதிசய குழந்தையைக் கண்ணுற்றார். மனமகிழ்ந்து அக்குழந்தையை வாரி அணைத்து தன் ஆசிரமம் ஏகினார். அவரது மனைவி வீரிய அத்ஸலா, அம்மகவை அவரிடமிருந்து வாங்கி அன்றுமுதல் பாலூட்டி சீராட்டி மிகவும் செல்லமாக வளர்த்து வந்தாள்.
நாட்கள் கடந்தன. ஒருநாள் இந்திராதி தேவர்களும், வசிஷ்டாதி முனிவர்களும் விநாயகரை தரிசித்து, விக்னனால் தங்களுக்கு தொடர்ந்து வரும் துன்பங்களைத் துடைத்தருளும்படி வேண்டினர். அதன்படி விக்னனைத் தாக்க, மூஷிக வாகனமேறி, தேவர்களும், முனிவர்களும் புடைசூழ, அவன் இருப்பிடம் ஏகி, யுத்தத்தைத் தொடங்கினார் விநாயகர்.
மாயாவி விக்னன் யுத்த களத்தில் ஜலப்ரளயமாகி வெள்ளத்தால் பலரை மூழ்கடித்தான். பிரளய காலத்தில் தோன்றும் வடவாக்னியாகவும், சண்டமாருத மழையாகவும் இன்னும் பல தந்திர வழிகளை பிரயோகித்தும் அவனால் வெல்ல முடியவில்லை. முடிவில் மூஷிக வாகனர் ஓர் அபூர்வ வேலாயுதத்தை அவன் மீது வீசி எறிந்தார். அதிலிருந்து தப்பித்த விக்னன், விரைந்தோடி வந்து விநாயகரின் திருவடிகளைப் பற்றிக்கொண்டு தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினான்.
“காலரூபியே! செய்த குற்றங்களை நீயே உணர்ந்துவிட்டதால், உன்னை மன்னித்துவிட்டேன். இனியும் நீ துன்பம் தரக்கூடாது. இதற்கு மாறாக நீ நடந்து கொண்டால் உன்னை நான் அழித்து விடுவேன்” என்று எச்சரித்தார்.
அதை ஏற்ற விக்னன், “ஐயனே! ஒரு சிறிய வேண்டுகோள். தங்கள் திருநாமத்தோடு என் பெயரையும் இணைத்து விக்னேஷ்வரர் எனும் பெயருடன் தங்களை அண்டும் அடியவர்களுக்கு அருள் புரிய இங்கேயே எழுந்தருள வேண்டும்” என்று விண்ணப்பித்தான். அப்படி விக்னராஜர் என்ற பெயருடன், விநாயகர் எழுந்தருளிய தலம் ஓஜர்.
நான்கு மதில் சுவர்களால் சூழப்பட்ட ஓஜர் விக்னேஸ்வரர் கோயில் கிழக்கு நோக்கி உள்ளது. நுழைவாயில் துவார பாலகர்களைத் தாண்டி சென்றால், எதிரே தென்படும் இரு தீபஸ்தம்பகளை தீப மாலா என்கின்றனர். விசேஷ காலங்களில், தீபங்கள் ஏற்றப்பட்டு, இவை ஜகஜ்ஜோதியாக தென்படும். இப்பெருங் கோயிலில் இரு மண்டபங்கள் உள்ளன. இருபது அடிகள் உயரம் கொண்ட முதல் மண்டபத்தின் வடக்கு தெற்கு பக்கங்களில் கதவுகள் உள்ளன. இம்மண்டபத்தில் துண்டிராஜ் சிலையைக் காணலாம். அதை அடுத்த மண்டபம் பத்து அடிகள் உயரம் கொண்டது. இம்மண்டபத்தில் பளிங்கால் தயார் செய்யப்பட்ட எலி சிலை, தாவிப்பாயும் நிலையில் தோற்றமளிக்கிறது. கருவறை நான்கு புறமும் பஞ்ச யாதன முறைப்படி சூரியன், சிவன், விஷ்ணு, தேவி இவர்களது சிலைகளைத் தரிசிக்கலாம்.
இடம்புரி விக்னேஷ்வர் கருவறையில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். எண்ணெய் கலந்த செந்தூரம் இவர் திருமேனி முழுவதும் பூசப்பட்டு பளபளக்கிறார். இரு கண்களிலும் மரகதம். முன் நெற்றியிலும், தொந்தியிலும் வைரங்கள் மின்னுகின்றன. ஐம் பொன்னால் உருவாக்கப்பட்ட சித்தி, புத்தி தேவிகள் அவரது இரு மருங்கிலும் நிற்கின்றனர்.
அஷ்டவிநாயகர் ஆலயங்களில் இக்கோயிலில்தான் தங்க கூரையையும், தங்க கலசத்தையும் கண்டுகளிக்கலாம். பாஜி ராவ் பேஷ்வாவின் இளையவன், போர்த்துகீசியர் வசமிருந்த ‘வாஸை’ என்னும் கோட்டையை கைப்பற்றியதன் நினைவாக, இக்கோயிலைப் புனருத்தாரணம் செய்ததோடு, தங்க விமானத் திருப்பனியையும் செய்தானாம். கி.பி 1785ல் தோற்றுவித்த இக்கோயில் 1967ல் மீண்டும் ஜீரணோத்தாரணம் கண்டது. விநாயகர் சம்மந்தப்பட்ட பண்டிகை காலங்களில் ஓஜர் தலம் திரு விழாக்கோலம் பூணும்.
விக்னராஜர்!
ஒருமுறை அன்னை பார்வதிதேவி பூங்காவனத்தில் தனது சேடிகளோடு விளையாட்டாகவும், வேடிக்கையாகவும் அளவளாவிக் கொண்டிருந்தபோது, உரக்க வாய்விட்டு சிரித்தாள். அந்தச் சிரிப்பொலியிலிருந்து ஒரு புருஷன் தோன்றினான். அவனுக்கு மம்தாசுரன் என்று பெயரிட்ட சங்கரி, ‘விநாயகரை பரிபூரணமாக சரணடைந்துவிட்டால், அவனுக்கு ஆகாத காரியம் ஒன்றுமில்லை’ என்று கூறி, கணபதியின் ஷடாக்ஷர மந்திரத்தை உபதேசித்தாள். அதைத் தொடர்ந்து, கடும் தவத்தால் அரிய வரங்களைப் பெற்றான் மம்தாசுரன்.
பெருஞ்சேனையுடன் கிளம்பி பூலோகம், பாதாள லோகம் முழுவதையும் விரைவில் வென்று தன்னாட்சிக்கு உட்படுத்தினான். இதன்பின் தேவலோகத்தை முழுவதும் கைப்பற்றி ஓடி ஒளிந்த தேவர்களைக் கைது செய்து சிறைகளில் அடைத்துவிட்டான்! இதனால் தர்மம் சீர்குலைந்து அதர்மம் தலைதூக்கியது!
அவனை எச்சரித்தார் விநாயகர். ஆனால், அவன் அலட்சியம் செய்தான். அதனால், கோபம் கொண்டு தம் கரத்திலிருந்த தாமரைப் பூவை அவன் பக்கம் வீசி எறிந்தார். அப்பூவின் வாசனை எங்கும் பரவி, அதனால் பலமிழந்த அவனது சேனை மூர்ச்சை அடைந்தது. இதைக்கண்டு திகிலுற்ற மம்தாசுரன், விக்னராஜரின் பாதம் பணிந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டினான். அவரும் அவனை மன்னித்ததோடு அவ்வசுரனை பாதாள லோகத்துக்கு அனுப்பிவிட்டார். இதனால் பேரானந்தம் பெற்ற அமரர் யாவரும் விக்னராஜரை மனமாரப் போற்றிப் புகழ்ந்தனர்.
ஓஜர் செல்லும் வழி!
புனே மாவட்டத்தின் ஜுன்னார் வட்டத்திலுள்ள ஓஜர், புனே நகரத்திலிருந்து 85 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்நகரிலிருந்து ‘ஓஜர்’ தலத்தை அடைய பேருந்து வசதி உண்டு. ரயில் வசதி கிடையாது.

Comments
Post a Comment