ஆடல் காணீரோ?

தஞ்சாவூர் இராஜராஜீசுவரம் திருக்கோயிலில் காணப்படும் தளிச்சேரிக் கல்வெட்டு தமிழ்நாட்டுக் கலை வரலாற்றுக்குக் கிடைத்த அரும் புதையலாகும். முதலாம் இராஜராஜருக்கு முற்பட்டோ அல்லது அவருக்குப் பிற்பட்டோ ஆடற்கலை பற்றியும் நுண்கலை வித்தகர்கள் பற்றியும் பல்துறை சார்ந்த கோயில் பணியாளர்கள் குறித்தும் இப்படியொரு விரிவான கல்வெட்டு அமையவே இல்லை.

கி.பி.பத்தாம் நூற்றாண்டளவில் தமிழ்நாட்டில் பெருமையுடன் விளங்கிய நூற்றிரண்டு தளிச்சேரிகளின் பெயர்கள் இக்கல்வெட்டின் வழி வெளிப்படுகின்றன. அவற்றுள் நாற்பத்தொன்பது தளிச்சேரிகள் கோயில்களை ஒட்டியும், ஐம்பத்து மூன்று தளிச்சேரிகள் ஊர்களுக்குள்ளும் இருந்தன.

ஆடற்கலையை வளர்ப்பதற்கும், பரப்புவதற்கும் செழுமைப் படுத்துவதற்கும் பயன்பட்ட இந்த உறைவிடப் பள்ளிகளில், நூற்றுக்கணக்கான பெண்கள் ஆடற்கலையையும் இசைக்கலையும் பயின்றனர். கூத்தி, கூத்தப்பிள்ளை, தளிப்பெண்டு, தேவனார் மகளார், தளியிலார், பதியிலார் எனப் பல நிலைகளில் இவர்தம் தகுதிகள் கலை சார்ந்து அமைந்தன. தகுதி மாறுபாட்டிருப்பினும் ஆடற்கலையில் சிறந்து விளங்கிய இப்பெண்கள் அனைவரும் தங்கள் பெயருக்கு முன்னால் ‘நக்கன்’ எனும் முன்னொட்டைக் கொண்டிருந்தனர்.

நக்கன் என்ற சொல், சிவபெருமானைக் குறிப்பதாகும். இச்சொல்லால் திருமுறை ஆசிரியர்கள் சிவபெருமானை அழைத்து மகிழ்வதைப் பதிகங்களில் பார்க்க முடிகிறது. சங்க இலக்கியங்களிலோ, இரட்டைக் காப்பியங்களிலோ, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலோ பயின்று வராத இச்சொல், கி.பி. ஐந்தாம் நூற்றாண்டளவிலேயே வழக்கில் இருந்ததை, சிற்றண்ணல்வாயில் வட்டெழுத்துக் கல்வெட்டொன்று நிறுவுகிறது. இச்சொல்லைப் பரங்குன்றத்துப் பராந்தகன் நெடுஞ்சடையன் காலக் கல்வெட்டிலும் காணமுடிகிறது. ஜேஷ்டாதேவிக்குப் பரங்குன்றத்தில் குடைவரை அமைத்த நக்கன்கொற்றி என்ற பெண்ணரசி அக்கல்வெட்டில் இடம்பெற்றுள்ளார்.

கோயிற் பணிகளுக்கென்றே தங்களை அர்ப்பணித்துக்கொண்ட மக்களும், நக்கன் என்ற முன்னொட்டைத் தங்கள் இயற்பெயருடன் இணைத்துக்கொண்டனர். இது ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்துவதைப் பல கல்வெட்டுகளால் அறியமுடிகிறது. முதலாம் இராஜராஜரின் மனைவியான பஞ்சவன்மாதேவியும், முதலாம் இராஜேந்திரரின் துணைவியான பஞ்சவன்மாதேவியும் பழுவேட்டரையர் பெண்கள். அவர்கள் இருவருமே தங்கள் பெயருடன் நக்கன் என்ற முன்னொட்டைக் கொண்டிருந்தனர். சேர அரசர் ஒருவரின் தேவியராகப் பழுவூர்க் கல்வெட்டுகளில் இடம்பெறும் அக்காரநங்கையும், நக்கன் என்ற முன்னொட்டோடு தளித்தேவனார் மகளாகக் குறிக்கப்பட்டுள்ளார்.

நக்கன் என்ற பொது அழைப்புடன் ஆடற்கலை அரசிகளாக விளங்கிய தளிச்சேரிப் பெண்டுகள் வாழ்ந்த நூற்றிரண்டு சோழ மண்டலத் தளிச்சேரிகளும் அறுபத்து மூன்று ஊர்களில் இருந்தன.

தளிச்சேரிகள் இருந்ததாகக் கல்வெட்டுக் குறிப்பிடும் 49 கோயில்களுள் 42, சிவபெருமானின் கோயில்களாக விளங்கின. அவற்றுள் ஏழு, தேவார ஆசிரியர்ளின் பாடல் பெற்றவை. அரபுரத்து ஸ்ரீதாழி விண்ணகர், அம்பர் அவனி நாராயண விண்ணகர், பாம்புணி ஸ்ரீபூதி விண்ணகர், தஞ்சாவூர் மாமணிக்கோயில் ஆகிய நான்கு மட்டுமே பெருமாள் கோயில்கள். அவற்றுள் மாமணிக்கோயில் ஆழ்வார்களின் பாடல் பெற்றது.

கல்வெட்டுக் குறிப்பிடும் 49 கோயில்களும் 20 ஊர்களில் இருந்தன. அவ்வூர்களில் ஒன்றுகூட மங்கலம் அல்லது சதுர்வேதிமங்கலம் எனும் பின்னொட்டுக் கொண்டிருக்கவில்லை. இந்த 49 கோயில்களுள் இன்று வழிபாட்டில் இருப்பவை பத்துக் கோயில்களே. மற்றவை, மக்களின் கவனக்குறைவாலும் அலட்சியப் போக்காலும் சுவடழிந்த கோயில்களாகிவிட்டன.

தளிச்சேரிகள் இருந்த ஊர்ப்பகுதிகளாக 53 இடங்கள் சுட்டப்படுகின்றன. இந்த 53 தளிச்சேரிகளில், மிகுதியான அளவில் தளிப்பெண்களை இராஜராஜீசுவரத்துக் குடியிருப்புகளுக்கு அனுப்பி வைத்தது. திருவிடைமருதூர்த் தளிச்சேரியாகும்.


இந்த 53 ஊர்களுள் 16 ஊர்கள் பதிகச் சிறப்புடைய கோயில்களைப் பெற்றிருந்தன. பல்லவ நாராயணபுரம், அவனி நாராயணபுரம் என்ற இரண்டு ஊர்ப் பெயர்களும் பல்லவர் ஆட்சியின் எச்சங்களாய் நிற்க, ‘கஞ்சாறநகர’ என்பது அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான மானக்கஞ்சாற நாயனாரை நினைவுப்படுத்துகிறது.

முதல் இராஜராஜர் காலத்தில் உச்சத்தில் விளங்கிய ஆடற்கலை பிற்காலச் சோழர், பிற்காலப் பாண்டியர் காலத்தில் மெல்ல, மெல்ல செல்வாக்கிழந்தமையையும், சமுதாயத்தில் செழிப்புடனும் பெருமையுடனும் வாழ்ந்த தளிச்சேரிப் பெண்கள் பெருமைக்குறைவு அடைவதையும்கூட, கல்வெட்டுகளே வரலாற்றின் பார்வைக்கு வழங்குகின்றன.

(தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 2; கல்வெட்டு எண் 60)

Comments