மன்னன் கண்ட மலைக்கோயில்...

ஆனந்தம்... பரமானந்தம்... காஞ்சி மன்னனுக்கு! கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்தாலும் இந்தப் பெரும் பேறு கிடைக்குமா?! கண்ணீர்மல்க... கரம்கூப்பி நின்றிருந்தான்!

அவனையும் அறியாமல்... 'நலம் தரும் நாயகனை நான் கண்டு கொண்டேன்' என்று வாய் அரற்றியது; 'புண்ணிய வழிகாட்டிய அந்த வராஹத்தை இது தெரியாமல் கொல்லத் துணிந்தேனே' என்று மனம் புழுங்கியது!

யாரைக் கண்டு இவ்வளவு ஆனந்தம் அந்த மன்னவனுக்கு? அவன், வராஹத்தைக் கொல்லத் துணிந்தது ஏன்?

காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த இந்த பல்லவ மன்னன், ஸ்ரீரங்கநாதரின் பக்தன். சில நாட்களா கவே அரண்மனை நந்தவனத்தில், நந்தியாவட்டை மலர்கள் மட்டும் களவு போயின. கடும்கோபம் கொண்டான் காஞ்சித் தலைவன். பின்னே... தன் நேசத்துக்கு உரிய அரங்கனின் பூஜைக்காக அல்லவா அந்தப் பூக்களை பார்த்துப் பார்த்து பராமரித்தான்! மலர்ந்து மணம் பரப்பும் வேளையில் அவை காணாமல் போனால், மன்னனுக்குக் கோபம் வரத்தானே செய்யும்!



நந்தவன கண்காணிப்பை பலப்படுத்தினான். ஒருநாள் நள்ளிரவில்... அழகிய நந்தியாவட்டை பூக்களை, வராஹம் (பன்றி) ஒன்று தின்று கொண்டிருப்பதை அறிந்தான். அதை வேட்டையாட, தானே கிளம்பினான்.

'இந்த அம்பு சரியாக வராஹத்தின் வாயைத் தைக்க வேண்டும்... அதுதான் அதற்கு சரியான தண்டனை!' என்ற எண்ணத்துடன் மன்னன் குறிபார்த்த வேளை... அழகாக தாவிக் குதித்து... அரச மரக் கிளை, நந்தியாவட்டை மற்றும் எலுமிச்சைச் செடி ஆகியவற்றை வாயில் கவ்விக் கொண்டு ஓடியது வராஹம். மன்னவனும் துரத்திச் சென்றான்.

வழியில், தாக்குதல் இலக்குக்குள் வராஹம் வந்தபோதெல்லாம் கணை தொடுத்தான்; பலன் இல்லை. போக்குக் காட்டியபடியே தப்பியோடிய வராஹம், மன்னனை ஒரு குன்றின் அடிவாரம் வரை அழைத்து வந்து விட்டது. சட்டென்று... குன்றின் மீது ஏறிய வராஹம், ஒரு குகைக்குள் புகுந்தது!

மன்னனும் குன்றின் மீது ஏறினான். அங்கே ஒரு சுனையின் அருகில்... வராஹம் கவ்விக் கொண்டு வந்த அரச மரக்கிளை தரையில் கிடப்பதை கவனித்தான். அதை, ஓரிடத்தில் நட்டு வைத்தவன், தாகம் தீர சுனையில் நீர் அருந்தினான். பிறகு, மெள்ள குகை வாயிலை நெருங்கினான். அங்கே, நந்தியாவட்டை மற்றும் எலுமிச்சைக் கன்று! அவற்றையும் பத்திரப்படுத்தி விட்டு உள்ளே நுழைந்தவனுக்கு ஆனந்தம்... பேரானந்தம்! குகைப் பாறையில் அரவணையின் மீது ஜகஜ்ஜோதியாக துயில் கொள்ளும் பெருமாளைக் கண்டான்; மெய்சிலிர்த்தான்!

இதோ... உள்ளம் உருக கைதொழுது நிற்கிறான்.

''காஞ்சித் தலைவனே... ஏற்கெனவே, எமது தரிசனம் வேண்டி இங்கே தவம் புரிந்த மகிஷாசுரமர்த்தினிக்கும், கணப்பொழுதும் எம்மை மறவாமல் வணங்கி வரும் உனக்கும் ஒருசேர தரிசனம் தரவே இப்படியரு அருளாடல். புகழும் மங்கள வாழ்வும் பெறுவாயாக!'' - அசரீரியாக ஒலித்தது ஆண்டவனின் குரல்.

பணிந்து வணங்கினான் பல்லவன். தனக்குப் பெரும்பேறு கிடைத்த அந்தத் திருவிடத்தையே திருவரங்கமாகக் கருதி, அரவணையில் துயில்கொள்ளும் ஆண்டவனை அனுதினமும் வழிபட்டு உய்வடைந்தான்!

வராஹம் வழிகாட்ட... பல்லவ மன்னன் அருள்பெற்ற இந்தத் தலம்- சிங்கவரம். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி மாநகருக்கு வடக்கே சுமார் மூன்றரை கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது!

பெருமாளின் அருள் பெற்ற இந்த பல்லவ மன்னன் யார் என்பது குறித்த துல்லியமான தகவல்கள் இல்லை. எனினும், இது முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப் பட்ட குடைவரைக் கோயில்களுள் ஒன்று என்பது சரித்திரத் தகவல். இவனே, தன் தந்தை சிம்மவிஷ்ணுவின் நினைவாக, குன்றின் அடிவாரத்தில் அமைந்துள்ள சிற்றூருக்கு சிம்மாசலம் என்றும் சிங்கபுரம் என்றும் பெயர் சூட்டியிருக்க வேண்டும்! இந்தப் பெயரே தற்போது, சிங்கவரம் என்று வழங்கப்படுகிறது. சிங்கவரத்தை, 'விஷ்ணு செஞ்சி' என்றும், இந்த ஊருக்கு மேற்கில் உள்ள மேலச்சேரி எனும் ஊரை பழைய செஞ்சி என்றும், தற்போதைய செஞ்சியை 'சிவ செஞ்சி' என்றும் குறிப்பிடுகின்றன கல்வெட்டுகள்.

இயற்கை எழில் சூழத் திகழ்கிறது சிம்மாசலம். மலையில் சுமார் 160 படிகள் ஏறிச் சென்றால்... பிற்கால கட்டுமானங்களான ஐந்து நிலை கோபுரம் மற்றும் மண்டபங்களுடன் அமைந்திருக்கிறது ஸ்ரீஅரங்கநாத ஸ்வாமி ஆலயம். தீப, துவஜ ஸ்தம்பங்களை தாண்டிச் சென்றால் பூதேவி- ஸ்ரீதேவியுடன் ஸ்ரீவரதராஜ பெருமாள் தரிசனம்.அடுத்து ஸ்ரீரங்கநாயகி தாயார் சந்நிதி! கருணை ததும்பும் திருமுகம், மலர்கள் மற்றும் அபய- வர அஸ்தம் துலங்கும் திருக்கரங்களுடன், அமர்ந்த கோலத்தில் உள்ள தாயாரை தரிசித்துக் கொண்டே இருக்கலாம்... அவ்வளவு அழகு! தாயாரின் சந்நிதிக்குள் ஒரு சந்நிதி. உள்ளே புடைப்புச் சிற்ப மாக ஸ்ரீகொற்றவை; அபூர்வ தரிசனம்!

தாயார் சந்நிதிக்கு அருகிலேயே சந்திரபுஷ்கரணி. வற்றாத தீர்த்தமாகிய இதிலிருந்துதான் ஸ்வாமியின் திருமஞ்சனம் மற்றும் திருவாராதனைக்கு நீர் எடுக்கின்றனர். மலைக்கு மேல் லட்சுமி- ராம தீர்த்தங்கள் உள்ளன. சூரிய கிரணங்கள் விழாத சுனை ஒன்றும் உண்டு. ஸ்தல விருட்சங்கள்- நந்தியாவட்டை, எலுமிச்சை. அரச மரமும் உண்டு. கோயிலின் உள்ளே சிறு மேடையில் ஸ்ரீநிகமாந்த மகாதேசிகரின் சிலாரூபத்தையும் தரிசிக்கலாம்.

குடைவரையாகத் திகழும் கருவறையில்- தலையை சற்றே தூக்கியவாறு, வலக்கையை கீழே தொங்கவிட்டு, இடக் கையால் கடக முத்திரை காட்டி, (தெற்கில் தலை வைத்து) அரவணையில் சயனித்திருக்கிறார் ஸ்ரீஅரங்கநாதர். ஸ்வாமியின் விக்கிரகம்- 22 அடி நீளமாம். ஸ்வாமியை ஒட்டுமொத்தமாக தரிசிப்பது இயலாது; மூன்று பாகங்களாக தரிசிக்கலாம். முதல் நிலையில்- ஸ்வாமியின் திருமுகம், திருக்கரங்கள், ஆதிசேஷன், கந்தர்வர் மற்றும் திருமகள்; 2-வது பாகத்தில்- பிரம்மா, 3-வது பாகத்தில்- திருவடியின் கீழே பூமாதேவி, நாரதர், பிரகலாதன், பிருகு மற்றும் அத்ரி முனிவரை தரிசிக்கலாம். மூலவரின் அருகிலேயே ஸ்ரீதேவி- பூதேவியுடன் உற்ஸவர்!

தேசிங்குராஜனும் போற்றிய தெய்வம் இந்தப் பெருமாள். ஒருமுறை, பகைவரை எதிர்கொள்ளப் புறப்பட்ட தேசிங்கு, பெருமாளை தரிசிக்க வந்தான். அப்போது, ''இன்று உன் பெயருக்கும் நட்சத்திரத்துக்கும் உகந்த நாள் இல்லை. எனவே போருக்குச் செல்ல வேண்டாம்'' என்று அசரீரியாக அறிவித்தாராம் பெருமாள். ஆனால், ''சத்திரியன் பின்வாங்கக் கூடாது. போரில் ஜெயித்தால் மீண்டும் வந்து வணங்குகிறேன். வீர மரணம் அடைந்தால் உங்களின் பாதாரவிந்தங்களில் சேர்த்துக் கொள்ளுங்கள்'' என்று கூறிச் சென்றான் தேசிங்கு. அவனுக்கு வீரமரணமே காத்திருந்தது! தேசிங்கு தனது பேச்சை மறுத்ததால், பெருமாள் தம் திருமுகத்தை திருப்பிக் கொண்டதாக செவிவழித் தகவல் உண்டு. ஆனால் இங்கே, ஸ்ரீஅரங்கநாதரின் திருமுகம் திரும்பிய நிலையில் இல்லை!

மலைக்கு மேல், திருமகளை அணைத்தவாறு தனிக் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீவராஹரையும் தரிசிக்கலாம். இன்னொரு சிறப்பும் உண்டு...

அந்நியர்களால் திருவரங்கம்- அரங்கனுக்கு (உற்ஸவர்) ஆபத்து ஏற்படக் கூடாது என்பதற்காக அடியார் சிலர், அரங்கனின் விக்கிரகத்தை வெவ்வேறு தலங்களுக்கு எடுத்துச் சென்று திருப்பதிக்கு வந்து சேர்ந்தனர். இந்தக் காலத்தில் கோபண்ணா என்பவரின் ஆளுகையில் இருந்தது செஞ்சி. இவர், தம் ராஜகுரு செஞ்சி திருமலை நல்லான் சக்ரவர்த்தி சத்ரயாகம் சேஷாத்ரியாச்சார்யர் அனுமதியுடன், அரங்கனின் விக்கிரகத்தை சிங்கவரம்- ஸ்ரீஅரங்கநாதர் ஆலயத்துக்குக் கொண்டு வந்தாராம்.

ஆம், திருவரங்கனும் தங்கி அருள்பாலித்த இந்த தலத்துக்கு நாமும் சென்று அருள்பெறுவோமே!-

பெருமாளுக்கு பால்சாதம்...
பக்தர்களுக்கு குழந்தை வரம்!

குழந்தை வரம் அருள்வதிலும் கண்கண்ட தெய்வம் சிங்கவரம்- ஸ்ரீரங்கநாதர். ''திருவாதிரை, அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில்... பெருமாளுக்கு, பால் கலந்த சாதத்தை நிவேதனம் செய்து வழிபட்ட பிறகு, பிரசாதத்தை மலையில் வசிக்கும் குரங்குகளுக்கு உண்ணக் கொடுப்பது சிறப்பு. இதனால் குழந்தை இல்லாத தம்பதிக்கு விரைவில் புத்திர பாக்கியம் ஸித்திக்கும்'' என்கிறார் ஆலய அர்ச்சகர் ரங்கநாதன். குழந்தை வரம் வேண்டி வரும் பக்தர்கள், இங்குள்ள அரச மரத்தில் 'உறி' கட்டியும் (கையகல துணியில் சிறு கல்லை முடிந்து கட்டி) வழிபட்டுச் செல்கிறார்கள்.

கோயில் திறந்திருக்கும் நேரம் காலை 8- 930 மாலை 5- 630

தொடர்புக்கு 94434 39167

Comments