சூரசம்ஹாரம் உணர்த்தும் உண்மை!

தட்ச யாகத்தில் கலந்து கொண்டு, சிவபெருமானின் கோபத்துக்கு ஆளான தேவர்கள், இப்போது சிவனாரிடமே தஞ்சமடைந்தனர். காரணம்- சூரபத்மன். சிவன்- சக்தி ஐக்கியத்தில் உருவாகும் மைந்தனே தங்கள் துக்கத்தைப் போக்க வல்லவன் என்பதை அறிந்திருந்த தேவர்கள், சிவபெருமானை பிரார்த்தித்தனர்.

சிவபெருமான் தன் உஷ்ணத்தால் ஆறு அழகிய உருவங்களைப் படைத்து, அந்த ஆறையும் ஓர் உருவமாக்கி, 'உங்களைக் காக்க வந்த ஆறுமுகன் இவனே!' என்று தேவர்களின் அச்சம் போக்கினார்.

சூரபத்மனை சூறையாடும் தருணமும் வந்தது. இருந்தும், முதலில் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி நடவடிக்கை எடுக்க வேண்டுமே. அதுதானே அழகு?! எனவே தளபதி வீரபாகு மூலம் சமாதானப் பேச்சு நடத்தினார் முருகன். ஆனால், சூரபத்மனின் பேச்சு, போரைத் துவக்க காரணமானது. முருகன், மேரு மலையைப் பிளந்து, சூரபத்மனின் சகோதரர்கள் உள்பட அனைவரையும் அழித்தார். பிறகு, அன்னை சக்தி அளித்த வேலினால், சூரனின் கோட்டையை அழித்து தவிடு பொடியாக்கி, சூரபத்மனின் உடலையும் இரண்டாகப் பிளந்தார்.

வாழும்போது திருந்தாத பலர் இறக்கும் தருணத்தில் திருந்த ஏங்குவர். சூரபத்மனும் அப்படித்தான்! தன் அகந்தை அழிந்து சரண் அடைந்த சூரபத்மனின் வேண்டுகோளுக்காக, முருகக் கடவுள், இரண்டாகப் பிளந்த அவனின் உருவத்தை ஒருபுறம் வேலாகவும், மறுபுறம் சேவற்கொடியாகவும் கொண்டு, பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தீயவை செய்வது ஒருவனின் குணமாக இருப்பினும், அவனைத் திருத்தி, மன்னித்து, அவனையும் நல்ல மனிதனாக பாவிக்க வேண்டும்.

தீயவை செய்தாரேனும் குமரவேல் திருமுன்பு உற்றால்
தூயவராகி மேலைத் தொல்கதி அடைவர்!

- என்ற கந்தபுராணப் பாடலுக்கு ஏற்ப, ஒருவர் தீயவராக இருந்தாலும், பிறகு திருந்தி குமரவேலின் முன் சரணடைந்தால், நற்கதி அடைவது நிச்சயம்! மன்னிப்பது- மனிதகுணம். மன்னித்து மண்ணில் நல்லபடி வாழ வைப்பது- தெய்வகுணம். இதை உணர்த்தும் கதை...

மருதூரில் சகோதரர்கள் இருவர் வாழ்ந்தனர். ஒருநாள் தந்தை இறந்துவிட, இருந்த மூன்று வீடுகளை சரிசமமாகப் பங்கிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. ஊரார் தலையிட, பேராசை கொண்ட மூத்தவன், 'தந்தைக்கு பிறகு நானே சகலத்துக்கும் பொறுப்பு. ஆகவே சொத்து அனைத்தும் என்னையே சாரும்' என்றான். முருகப் பெருமானின் பக்தனான இளையவனோ, பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்தான்; நம்பிக்கையுடன் தொழிலில் ஈடுபட்டான்.



சொத்து சுகத்தில் மகிழ்ந்த மூத்தவன், தவறான பழக்கங்களுக்கு அடிமையாகி, நற்குணங்கள் அழிந்து ஒரு கட்டத்தில் அனைத்தையும் இழந்து பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளானான்.

ஒருநாள், சகோதரனின் குடில் என்பதை அறியாமல், அங்கே சென்று பிச்சை கேட்டான். தன் அண்ணனை அடையாளம் கண்ட இளையவன், அவன் செய்த தீவினையை மறந்து, உள்ளே அழைத்து உணவிட்டான். நற்குணங்களே நம்மை வாழ்விக்கும் என்பதை அண்ணனுக்கு எடுத்துச் சொன்னான். இந்த இளைய சகோதரனைப்போல, மன்னித்து வாழும் தெய்வ குணத்தைப் பெறுவதற்கு, நமக்கு வழிகாட்டுவதே இந்த சூரசம்ஹார நிகழ்வு என்பதை உணருங்கள்.

Comments