இதயப்பதி!

அதுவே தலம் அருணாசலம் தலம் யாவிலும் அதிகம்
அது பூமியின் இதயம் அறி: அதுவே சிவன் இதயப்
பதியாம் ஒரு மருமத்தலம் பதியாம் அவன் அதிலே
வதிவான் ஒளி மலையா நிதம் அருணாசலம் எனவே.
‘அருணாசல சிவ அருணாசல சிவ...’ என்று இசைத்தார் ‘அண்ணாமலையாரின் அற்புதங்கள்’ என்ற தம் சொற்பொழிவில் திருமதி சிந்துஜா சந்திரமௌலி.
இந்த உலகத்துக்கே ஆன்மீக இதயமாக இருப்பது நம் பாரதம். கணக்கில்லா முனிவர்களும் யோகிகளும் அவதாரம் செய்த மிகப்பெரிய புண்ணிய பூமி. திருவாரூரில் பிறந்தால் முக்தி, சிதம்பரத்தில் வசித்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, ஆனால், திருவண்ணாமலையை ஸ்மரித்தாலே முக்தி. அதாவது, அருணாசலம் என்று சொல்லக்கூட வேண்டாம். மனதால் நினைத்தாலே முக்தி. அப்பேர்ப்பட்ட பெருமைக்கு உரியவர் அருணாசலேஸ்வரர்.
‘அருணம்’ என்றால் ஒளிமய மான ஞானம் என்று அர்த்தம். ‘அசலம்’ என்றால் ப்ரும்மம் என்று அர்த்தம். நம் மனதில் உள்ள இருளை நீக்கி ஞானம் என்கிற அருளை வழங்குவதால், இந்தத் திருவண்ணாமலை தலத்துக்கு அருணாசலம் என்று பெயர்.
பகவான் ரமண மகரிஷி, ‘காஞ்சி, அயோத்யா, மதுரா, துவாரகான்னு இருக்கக்கூடிய புண்ணிய ஸ்தலங்களை தராசின் ஒரு தட்டில் வைத்து மற்றொரு தட்டில் திருவண்ணாமலையை வைத்தால், திருவண்ணாமலை தட்டுதான் அதிக கனமாக இருக்கும்’ என்கிறார். முக்திபுரி, ஞான நகரம், கௌரி நகரம் அப்படீன்னு ஏகப்பட்ட அபூர்வமான பெயர்கள் திருவண்ணாமலைக்கும் அங்கு கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானுக்கும் இருக்கிறது என்பதை கல்வெட்டுகள் சொல்கின்றன.
‘அருணாசல நாதம் ஸ்மராமி’ என்கிறது ஒரு பாடல் வரி. பஞ்ச பூத ஸ்தலங்களுள் அக்னி வடிவாக இங்கே பகவான் நமக்குக் காட்சி தருகிறார். ஸ்ரீசக்ர வடிவத்தில் திருவண்ணாமலை இருப்பதால், நவ துவாரபுரி என்ற ஒரு பெயரும் இந்தத் திருநகரத்துக்கு உண்டு. க்ருத யுகத்தில் அக்னி மயமாக இருந்து, த்ரேதா யுகத்தில் மணி மயமாக இருந்து, துவாபர யுகத்தில் ஸ்வர்ண மயமாக இருந்து, கலியுகத்தில் மரகத மயமான மலையாக பகவான் இறங்கிவந்து ஒரு தொண்டனுக்குத் தொண்டனாக இருக்கிறார் திருவண்ணாமலையில். தொண்டருக்குத் தொண்டராகி தூது நடந்த பாதம் இல்லையா சர்வேஸ்வரனின் பாதம்? அப்பேர்ப்பட்ட பகவானைக் கண்டவர்களுக்கு கால பயம் உண்டோ? அத்தனை பேருக்கும் சந்தோஷத்தை மட்டுமே அளிக்கக் கூடியவர் அருணாசலேஸ்வரர்!
எத்தனையோ புராணங்களிலும் இதிகாசங்களிலும் திருவண்ணாமலையைப் பற்றியும், அருணா சலேஸ்வரரின் மகாத்மியத்தைப் பற்றிய குறிப்புகளும் இருக்கிறது. நமது தொல்காப்பியத்தில் கூட அருணாசல ஸ்தலத்தைப் பற்றியும் தீபத்தைப் பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது. திருமந்திரத்தில் 372 முதல் 380 வரையிலான பாடல்கள், சம்பந்தரின் தேவாரத்தில் இரண்டு பதிகங்கள், அப்பரின் தேவாரத்தில் இரண்டு பதிகங்கள், திருப்புகழில் 87 பாடல்கள் என இப்படி அருணாசலத்தின் பெருமைகளை எத்தனையோ பக்தி இலக்கியங்கள் போற்றுகின்றன.
ஆதிசங்கர பகவத் பாதாள் அருணாசலத்துக்கு அஷ்டகத்தை இயற்றினார். அதை எங்கே வந்து எழுதினார் தெரியுமா? திருவண்ணாமலையில் எழுதாமல், திருவண்ணாமலைக்குப் பக்கத்தில் உள்ள அரையணி நல்லூரில்தான் அவர் எழுதினாராம். திருவண்ணாமலைக்குப் போய்விட்டால், அவ்விடத்திலிருந்து திரும்பி வருவதற்கு மனசே இருக்காது என்பதாலேயே, அரையணி நல்லூரிலிருந்தே அருணாசல பகவான் மீது அஷ்டகம் எழுதினார் என்பார்கள்.
ஒரு வெளிநாட்டுக்காரர், ‘இந்தியாவில் குருவைத் தேடி’ என்கிற ஒரு நூலை எழுதினார். அதில், ‘புகழ் பெற்ற தாஜ்மகாலை பௌர்ணமியில் பார்த்திருக்கிறேன். பனி மூடிய நூற்றுக்கணக்கான மலைப்பரப்பு கொண்ட இமயமலையையும் பார்த்திருக்கிறேன். ஆனால், என் அண்ணாமலையார் தரும் முதல் காட்சிக்கு முன்னால் இவை எல்லாம் ஒன்றுமே இல்லை என்று என் மனதுக்குத் தோன்றுகிறது’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அண்ணாமலையார் மீது அப்படிப்பட்ட பக்தி கொண்ட வெளிநாட்டு மக்கள், திருவண்ணாமலையிலிருந்து ஒரு கல்லை தங்களோடு எடுத்துச்சென்று, தங்களது வீட்டு கிரகப் பிரவேசத்தின் பொழுது, அக்கல்லை தங்கள் வீடுகளில் வைத்துக் கட்டுகிறார்கள்.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையையும், நம் அனைவருக்கும் அருள்புரிவதற்காகவென்றே எழுந்தருளியுள்ள அருணாசலேஸ்வரரையும் எப்போதும் நினைப்போம், நலங்கள் தாமே வந்தெய்தும்!

Comments