தனம் தரும் பைரவர்

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கல்லிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது தாடிக்கொம்பு. தெலுங்கு மொழியில் தாடி என்பது பனைமரத்தைக் குறிக்கும். கும்பு என்றால் கூட்டம். ஒரு காலத்தில் இப்பகுதி முழுவதும் பனைமரங்கள் கூட்டமாக நிறைந்திருந்ததால் இப்பெயர் ஏற்பட்டுள்ளது.
இத்தலத்தில் உள்ள ஸ்ரீ சௌந்திரராஜப் பெருமாள் திருக்கோயில் மிகப் பிரபலமானது. வைணவ ஆலயங்களில் பைரவருக்கு தனிச் சன்னிதி உள்ள அபூர்வ ஆலயம் இது. இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் மிகவும் வரப்பிரசாதியாகத் திகழ்கிறார். பெருமாள் கருவறையின் ஈசான மூலையில் பைரவர் சன்னிதி அமைந்துள்ளது.
இந்த சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால் - இழந்த சொத்துக்கள், வாராக் கடன்கள் ஆகியவை திரும்பக் கிடைப்பதுடன் செல்வத்துக்கும், பணத்துக்கும் தட்டுப்பாடின்றி ஐஸ்வர்யமான வாழ்க்கை அமையும்.
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி நாளன்று பைரவருக்கு மஞ்சள் பொடி, பசும்பால் அபிஷேகம் செய்து, செவ்வரளி மாலை சாத்தி அர்ச்சனை செய்து வழிபட நினைத்த காரியம் நிறைவேறும் என்பதால், இந்நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.
தவிர, ஒன்பது பௌர்ணமி நாள் இரவில் கோயிலில் தீபம் ஏற்றி பைரவ அஷ்டகத்தை 18 முறை பாராயணம் செய்தால் நினைத்த காரியம் கைகூடும். பெருமளவு தனவரவு கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஒன்பதாவது பௌர்ணமி நாளன்று இயன்ற நைவேத்தியம் செய்து வழிபடுகின்றனர்.
தேய்பிறை அஷ்டமி நாட்களில் - இந்த பைரவருக்கு நான்கு கால அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
அபிஷேகத் தேன்
திருவோண நட்சத்திரத்தன்று இங்குள்ள ஹயக்ரீவருக்கு தேன் அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த அபிஷேகத் தேனை குழந்தைகளின் நாவில் தடவி வந்தால், அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர்.
தன்வந்திரி பகவானுக்கு நடைபெறும் விசேஷ அபிஷேக ஆராதனையின் போது மடப்பள்ளியில் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படும் அபிஷேக லேகியம் மிகுந்த மருத்துவப் பயன் கொண்டது. சந்தனாதித் தைலமும் தருகிறார்கள். இதை மேனியில் பூசிக்கொண்டால் சரும நோய்கள் அண்டாது என்பது நம்பிக்கை.

Comments