வெட்டிவேர் தீர்த்தம்!

திருமலைநாயக்க மன்னர் காலத்து ஏழு நிலை ராஜகோபுரம் கம்பீரமாக எழுந்து நிற்கிறது. அறுபத்தொன்பதடி உயர ராஜகோபுர மதில் சுவருடன் தொடங்குகிறது திருக்கோயிலின் மூன்றாம் பிராகாரம். சுமார் ஐந்தரை ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ளது, அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அருள்மிகு சுத்தரெத்தினேஸ்வரர் திருக்கோயில்.
லால்குடி தாலுகா ஊட்டத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். மிகப் பழமையான இத்திருக்கோயிலுக்கு 96 ஆண்டுகள் கழித்து 2005-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. மூன்றாம் பிராகாரம் கடந்து சென்றால் வரும் மகா மண்டபமே இரண்டாம் பிராகாரம். மகா மண்டபத்தின் மேற்கூரையில் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், நவகிரகங்கள் ஆகியன கற்சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. இந்த இடத்தில் நின்று இவற்றைத் தரிசித்தபடி மனதில் நினைத்து வேண்டினால் அக்காரியம் கைகூடும் என்பது ஐதீகம். மகா மண்டபத்தின் வடக்கே நூற்றுக்கால் மண்டபம்.
கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியன தரிசித்து கடந்து சென்றால் பிரம்மதீர்த்தம். எந்த ஆடிக்கும் கோடைக்கும் அது வற்றுவதே இல்லை. இந்த பிரம்மதீர்த்தமானது, நோய்களைக் குணப்படுத்தும் வல்லமை கொண்டது. தஞ்சைப் பேரரசன் ராஜராஜ சோழன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, இங்கிருந்து தீர்த்தம் சுமந்து கொண்டுபோய் அருந்திய பின்னரே அந்நோய் அகன்றதாக கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன. கோயிலில் பரவலாக பல இடங்களில் கல்வெட்டுகள் அமைந்துள்ளன.
இரண்டாவது உள் பிராகாரத்தில் வடமேற்கில் அகிலாண்டேஸ்வரிக்கு தனிச் சன்னிதி. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் கட்டத் தொடங்கி, கி.பி. பதினோராம் நூற்றாண்டில் நிறைவுபெற்ற திருக்கோயில். கோயில் கட்டி நான்கு நூற்றாண்டுகள் கழிந்த பின்னரே, அன்னை அகிலாண்டேஸ்வரி தனிச் சன்னிதியில் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறாள். வாயிலின் இருபுறமும் யோகினி சக்தி, போகினி சக்தி அமையப் பெற்றிருக்க, கருவறையில் அன்பே திருவுருவாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறாள் அன்னை. நான்கு திருக்கரங்கள், இரு செவிகளிலும் தாடங்கம் பொருந்தி நின்ற திருக்கோலத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள்.
பாடாலூரில் அப்பர் பெருமான் நின்று கொண்டிருந்தபோது, அங்கிருந்து ஒரு அடிக்கு ஆயிரத்தெட்டு லிங்கங்களாக, ஊட்டத்தூர் வரை சுவாமி காட்சி அளித்ததாகப் பதிகம் பாடியுள்ளார். மூலவர் சன்னிதியில் கிழக்குமுக நந்தி. அதன் வாயிலிருந்து தீர்த்தம் வெளிப்பட்டு நந்தியாறாக ஓடி கொள்ளிடத்தில் கலப்பதாக ஐதீகம். திருக்கோயிலின் அருகே தற்போதும் நந்தியாறு அமைந்துள்ளது.
ஒரு காலத்தில் வில்வாரண்ய கே்ஷத்திரமாக இருந்துள்ளது. வில்வ மரத்தினை வெட்டியபோது ரத்தம் பீறிட்டு, அதிலிருந்து சுயம்புவாக லிங்க உருவம் வெளிப்பட்டுள்ளது. தூய மாமணி, மாசிலாமணி, துகு மாமணி என்றும் பலப்பல திருநாமங்கள் இத்தலத்து சுத்தரெத்தினேஸ் வரருக்கு. கருவறை அடுத்து உள் பிராகார வடக்கு பாகத்தில் தனிச் சன்னிதியில் நடராஜர் - சிவகாமி. ஆடல் வல்லானை, அருகே நின்றிருக்கும் சிவகாமி தன் திருமுகம் சாய்த்து பார்த்துக் கொண்டிருப்பது தனி அழகு. இந்த நடராஜர், சாதாரண நடராஜர் அல்ல. திருக்கோயில் அர்ச்சகர் சொல்லக் கேட்போம்...
ஆடல்வல்லானாக ஆடிக் கொண்டிருக்கும் இந்த நடராஜருக்கு, பஞ்சநதன நடராஜர் எனும் திருநாமம். ஆசியாவிலேயே அபூர்வ நடராஜர், இங்கு அமையப் பெற்றிருப்பவர். அந்தகநரிமனம் என்கிற வேரானது, பல கோடி பாறைகளில் ஒரு பாறையைப் பிளக்கும். அந்தப் பாறைக்கு பஞ்சநதனக் கல் எனப் பெயர். சூரிய உதயத்தின்போது பல கோடி செல்களை ஈர்க்கக்கூடிய ஆற்றல் அந்தக் கல்லுக்கு உண்டு. இந்திரன் பதவியிழந்த பின்னர், பஞ்சநதன நடராஜரை வழிபட்ட பிறகே அவனுக்கு மீண்டும் பதவி கிட்டியதாகப் புராணம். தற்போதும் பதவி வேண்டுவோர், பதவி உயர்வு வேண்டுவோர் இந்த பஞ்சநதன நடராஜரை வேண்டிச் செல்கின்றனர்.
இந்தப் பஞ்சநதன நடராஜர் பக்தர்களின் வேலைவாய்ப்பு, வேலை உயர்வு, பிரமுகர்களின் பதவி மற்றும் பதவி உயர்வுக்கு மட்டுமின்றி, சிறுநீரகப் பிரச்னைகளையும் தீர்த்து வைக்கிறார்.
சிறுநீரகப் பிரச்னைகளால் துயருறும் பக்தர்கள் பலரும், இங்கு வந்து வேண்டிச்சென்று அந்தப் பிரச்னைகளிலிருந்து விடுதலை பெறுகின்றனர். நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் வெட்டிவேர் 48 கத்தைகள் வாங்கி வருகின்றனர். அவற்றை பஞ்சநதன நடராஜர் திரு மேனி மீது சாத்தி, பூஜை வழிபாடுகள் செவித்து திரும்பப் பெறுகின்றனர்.
வீட்டில் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு கத்தை வெட்டிவேர் என, அதனைத் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி, அந்தத் தண்ணீரைத் தொடர்ந்து 48 நாட்களுக்கு அருந்தி வருகின்றனர். அதன் பின்னர் அவர்களது சிறுநீரகப் பிரச்னைகள் சீராகி, விலகி ஓடி விடுகிறது. சிறுநீரகப் பிரச்னைகளைச் சீராக்கும் சிவன் ஆக, இத்திருத்தலத்தில் பஞ்சநதன நடராஜர் ரூபத்தில் ஈசன் அருள்புரிந்து வருகிறார்!" என்கிறார் திருக்கோயில் பரம்பரை அர்ச்சகர் நடராஜ சிவாச்சாரியார்.
செல்லும்வழி
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஊட்டத்தூர் டவுன் பஸ்- காலை 4.30, 10.30, மதியம் 1.30, 4.30, இரவு 7.30.
தரிசன நேரம்: காலை 6 -12. மாலை 4.30 - இரவு 8.
தொடர்புக்கு: 97869 05159, 97880 62416.

Comments