அட்சயலிங்க விபோ...

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர் ஒருமுறை கீழ்வேளூர் அட்சயலிங்க நாதரைத் தரிசிக்கச் சென்றார். அச்சமயம், ஆலயத்தின் கதவுகள் மூடப்பட்டிருந்தன. மனம் வருந்திய தீட்சிதர், ‘அட்சயலிங்க விபோ ஸ்வயம்போ’ என்று பாட, ஆலயக் கதவுகள் திறந்தன.
இந்தத் திருத்தலம், திருவாரூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் பாதையில் 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஈசனின் திருநாமம் அட்சயலிங்க சுவாமி. ‘அ+க்ஷயம்’ என்றால் ‘கேடு இல்லை’ எனப் பொருள். எனவே, தமிழில் ஈசனின் நாமம் கேடிலியப்பர்.
‘கேடிலியை நாடும் அவர் கேடிலாரே’ என, இத்தல ஈசனைத் தரிசித்து வழிபடுபவர்களுக்கு எந்நாளும் கேடில்லை என்கிறார் திருநாவுக்கரசர். சம்பந்தர் பெருமான் இக்கோயிலை ‘பெருந்திருக்கோயில்’ என்கிறார். சுந்தரர் ‘திருநாகைக் காரோண திருத்தாண்டகத்தில்’ இத்தலத்தைப் போற்றிப் பாடுகின்றார். எனவே, மூவராலும் பாடல்பெற்ற சிறப்புத் தலம்.
கோச்செங்கணான் கட்டிய மாடக் கோயில்களுள் இதுவும் ஒன்று. ஏழுநிலை ராஜகோபுரம். கிழக்கு நோக்கிய சன்னிதி. இரண்டு பிராகாரங்கள். கருவறையில் சுயம்பு மூர்த்தியாக கேடிலியப்பர். கோஷ்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகிய இறைவடிவங்களுடன், அஷ்டதிக் பாலகர்களின் வடிவங்களும் அமைந்துள்ளன. அகத்தியர் பூஜித்த லிங்கமும் உள்ளது. குபேரனுக்கும், முருகப் பெருமானுக்கும் மிகப்பெரிய சன்னிதிகள்.
முதல் திருச்சுற்றில் கிழக்கு நோக்கிய அம்பாள் சன்னிதி. அம்பிகையின் நாமங்கள் - சுந்தர குஜாம்பாள், வனமுலை நாயகி. அன்னை தன் மேலிரு கரங்களில் அட்சமாலை, தாமரை மலர் தாங்கியும், கீழிரு கரங்கள் அபய ஹஸ்தமும் இடுப்பில் கையூன்றிய கோலமும் கொண்டு காட்சி தருகிறாள். தல விருட்சம் இலந்தை மரம். முதல் திருச்சுற்றின் வட கிழக்கு மூலையில், ‘அஞ்சு வட்டத்தம்மன்’ என்ற பெயரில் காளியம்மன் வடக்கு நோக்கி அருள்புரிகிறாள்.
ஈசன் அகத்திய முனிவருக்கு திருமணக் கோலத்தில் காட்சி கொடுத்ததால், ‘காட்சி கொடுத்த நாயகர்’ என்றழைக்கப்படுகிறார். அகத்தியர் வேண்டியபடியே இங்குள்ள நடராஜர் இடது பாதம் ஊன்றி வலது பாதம் தூக்கிய நிலையில் அகத்தியருக்கு தரிசனம் தந்தார். நடராஜர் என்றதும் நினைவுக்கு வருவது நான்கு திருக்கரங்களோடு கூடிய, தில்லைக் கூத்தனின் திருவடிவம்தான். ஆனால், இங்கே பத்து திருக்கரம் கொண்டு துலங்குகிறார் பெருமான். அருகே அன்னை சிவகாமி. முன்புறம், திருமால், நந்தி... என்று கூத்து மேடை தரிசனம். இது வேறெங்கும் காண முடியாத அழகு.
தாருகாவன முனிவர்களின் அகந்தையை அடக்க பிட்சாடனர் உருவம் எடுத்துச் சென்ற ஈசனின் அழகில் மயங்கி முனிவர்களின் மனைவியர் பின்னே செல்ல, வெகுண்ட முனிவர்களின் ஆணவத்தை அடக்கினார் நடராசர். அவர்கள் ஏவிய முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி நடனமாடினார். இதுவே ஆருத்ரா தரிசனம்.
சேந்தனார் என்ற விறகுவெட்டிக்கும், ஆதிரை என்ற பக்தைக்கும் அருள்பாலித்தது இந்த ஆருத்ரா நன்னாளில்தான். சேந்தனாரின் பக்தியை மெச்சும் விதமாகத்தான் அவர் தந்த களியை ஏற்று அருள்பாலித்தார்.
மார்கழி மாத திருவாதிரையை இறுதி நாளாகக் கொண்டு, பக்தர்கள் திருவெம்பாவை நோன்பு நோற்பர். ஆருத்ரா அன்று அதிகாலை வேளையில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, சூரிய உதயத்தில் விசேஷ தரிசனம் நடைபெறும்.
தகவல் பலகை: திருவாரூரில் இருந்து 13 கி.மீ.. பேருந்து வசதி உண்டு .
தரிசன நேரம்: காலை 6 - 12, மாலை 5 - 9 வரை.
பல்லவி
அட்சய லிங்க விபோ ஸ்வயம்போ
அகிலாண்ட கோடி பிரபோ பாஹி சம்போ
அனுபல்லவி
அட்சர ஸ்வரூப அமித பிரதாப அருத விஷ வாஹ
ஜகன்மோக தக்ஷ சிக்சன தக்ஷ தாரா சுர லட்சண
விதி விளக்ஷன லக்ஷ்ய லட்சண பாஹு விணீாக்ஷன
சுத பக்ஷன குரு கடாக்ஷ விதஷன
சரணம்
பதாரி வன முல நாயிகா சஹித
பத்ர கப்ஷ பக்த விஹித
மதன ஜனகாதி தேவ மஹித
மாய கார்ய கலான ரஹித
சதய குரு குஹ தத குணாதித
சாது ஜனோபேத சங்கர நவநித
ஹ்ருதய விபாத தும்புரு சங்கித
ஹ்ரிம்கார சம்பூத ஹேம கிரி
சதஸ்ரித கல்பக மஹி ருஹ
பதாம்புஜ பாவ ரத கஜ துராஹ
பாதாதி சம்யுத கைத்ரோத்சவ
சதாசிவ சச்சிதானந்த மய

Comments