அருள் பெருக்கான அம்பிகைக்கு ஆயிரமாயிரம் திருநாமங்கள். எத்தனை வார்த்தைகளால் வர்ணித்தாலும் தீராத, அந்தக் கருணை வெள்ளத்தை ஹனேஸ்வரி என்ற பெயருடன் நாம் தரிசிப்பது ‘பான்ஸ்போரா’வில். மேற்கு வங்க மாநிலம், ஹூப்ளி மாவட்டத்தில் உள்ளது இந்த இடம். கொல்கத்தாவில் இருந்து 2 மணி நேர கார் பயணம்.
இந்திய தொல் பொருள் ஆராய்ச்சிக் கழகத்தின் பராமரிப்பில் உள்ள இந்தக் கோயில், 1814ல் கட்டி முடிக்கப்பட்டது என்று அறிகிறோம்.
13 கோபுரங்களுடன் அமைந்துள்ளது ஆலயம். ஒவ்வொரு கோபுரமும் தாமரை வடிவில் 90 அடி உயரத்தில் உள்ளது. இந்த கோபுரங்களின் உட்கட்டமைப்பு மனித உடல் அமைப்பில் உள்ளது.
உதயசூரியன் தன் ஆயிரக்கணக்கான கதிர்களுடன் இருப்பது போன்ற அமைப்பு மத்தியில் உள்ள கோபுரத்தில் உள்ளது. இங்குள்ள கடவுள் சிலைகூட யோக முத்திரைகளுடன் காணப்படுகிறது. இந்த ஹனேஸ்வரி சிலை முதிர்ந்த வேப்பமரத்தில் கடையப் பெற்றுள்ளது.
நீல வண்ணத்தில் நான்கு கைகளுடன் கூடியதாக துலங்குகிறது. இடது காலை வலத் தொடையில் வைத்து அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறது. மேலே உள்ள இடது கையில் கத்தியும், கீழே உள்ள இடது கையில் ஒரு துண்டிக்கப்பட்ட அரக்கனின் தலையும், மேலே உள்ள வலது கை அபய ஹஸ்தமாகவும், கீழ் வலது கை கோரும் வரத்தை அருள்வதாகவும் அமைந்துள்ளது.
மத்தியில் உள்ள கோபுரத்தின் கீழ் வெள்ளை சலவைக்கல்லினாலான ஒரு சிவலிங்கம் உள்ளது. மனித உடலில் உள்ள இடா, பிங்கலா, சுஷும்னா என்னும் நாடிகளைக் குறிக்கும் விதத்தில் கோயிலின் அமைப்பு உள்ளது. இந்த ஹனேஸ்வரி, காளியின் மற்றொரு பரிணாமமாகப் போற்றப்படுகிறாள்.
இந்த ஆலயத்தை அமைத்தவர் ராஜா நரசிம்ம தேவ் (1792-1798). இவர் காசியில் இருந்தபோது யோகாவில் அதிக ஈடுபாடு கொண்டு, குண்டலினி சக்தியைப் பற்றியும், அது நம் உடலிலுள்ள 6 சக்கரங்களின் யோக சித்தியால் எழுப்பப்பட்டு பாயச் செய்வதையும் கற்றுத் தேர்ந்தார்.
அப்போது அவர் மனதில், இப்படி யோக அமைப்புள்ள ஒரு கோயிலைக் கட்டவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆதலால், லண்டனுக்குச் செல்லவிருந்த தனது பயணத்தைத் தள்ளிவைத்து இந்த ஹனேஸ்வரி ஆலயத்தை அமைக்கும் பணியை மேற்கொண்டார்.
அந்தக் காலத்திலேயே 1 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவில் கோயில் பணி தொடங்கியது. கோயிலுக்கான சலவைக் கற்களை (Marble)காசிக்கு அருகிலுள்ள சறிநார்மலையிலிருந்து கொண்டுவந்து சிறந்த சிற்பிகளைக் கொண்டு கோயில் பணிகளைத் தொடங்கினார்.
துரதிர்ஷ்டவசமாக அவர், கோயில் பணிகள் முடிவடையும் முன்னரே அவர் காலமாகிவிட, அவரது மனைவி ராணி சங்கரி பணியைத் தொடர்ந்து கட்டி முடித்ததாகச் சொல்கிறார்கள். சுற்றிலும் பசுமை போர்த்திய இயற்கையும், மேலே இளம் நீல வானப்படுகையும், நடுவே வெண்ணிற ஊசிக் கோபுர அமைப்புமாகப் பார்க்கும்போது, ஹனேஸ்வரி ஆலயம் நம்மை முற்றிலுமாக அங்கே பிணித்து விடுகிறது என்பது நிஜம்.
Comments
Post a Comment