ஜயந்தி என்பது, அவதார புருஷர்கள், மகான்கள் ஆகியோரின் பிறந்த தினத்தை முன்னிட்டு கொண்டாடப்படும் வைபவம். ஆனால், ஞானத்தைப் போதிக்கும் ஒரு நூலுக்கும் இத்தகைய அந்தஸ்து உண்டு. அது, பகவத் கீதை.
பகவத் கீதை (உபதேசமான) பிறந்த நாள்தான் கீதா ஜயந்தி எனக் கொண்டாடப்படுகிறது. குருகே்ஷத்திரத்தில் நடந்த மகாபாரத யுத்தத்தின் துவக்கத்தில், யுத்தம் செய்ய மனம் துவண்ட அர்ஜுனனுக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணர் உபதேசித்தது இந்த சமயத்தில்தான். அதாவது மார்கசீர்ஷ மாதத்தில் (நவம்பர் - டிசம்பரில்) வளர்பிறை ஏகாதசியன்று நடந்தது அந்த உபதேசம்.அதுதான், ‘கீதா ஜயந்தி’ என்ற பெயரில் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகே்ஷத்திரத்தில் இது பெருந்திருவிழாவாக ஐந்து தினங்களுக்கு கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சுற்றுலாத்துறையே செய்து தருகிறது. இந்த நாளில் இங்குள்ள பிரம்மசரோவர் தீர்த்தத்தில் தீபங்களை மிதக்கவிட்டும், பலரும் கூடி அமர்ந்து பகவத் கீதையை பாராயணம் செய்தும் மகிழ்கிறார்கள். தவிர, பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இதையொட்டி நடைபெறுகின்றன.
அன்றைய தினம் முழுக்க உபவாசம் இருந்து (ஏகாதசியில் சாதாரணமாகவே உபவாசம் இருப்பவர்கள்) கீதையின் 700 ஸ்லோகங்களையும் பலரும் சேர்ந்து அமர்ந்து பாராயணம் செய்வர்.
இந்த கீதா ஜயந்தி இந்தியாவில் மட்டுமல்ல; மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.
1997ல் தின அனுகம்பனதாஸ் (Dina Anukamapana Dass) என்பவர் இந்த கீதை ஜயந்தியில் ஒரு புதுமையைப் புகுத்தினார். சின்னக் குழந்தைகள் பாடும் நர்சரி ரைமிங்கில் இந்த கீதையின் ஸ்லோகங்களை அமைத்து பாட்டாக இயற்றினார். அதனால் எல்லோரும் (சமஸ்கிருத மொழி தெரியாதவர்களும்) சுலபமாகப் பாட வசதியாயிற்று. இது, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் பரவிற்று.
பகவானோடு தொடர்புடைய அனைத்துமே வணக்கத்துக்கு உரியதாகும் என்பார்கள் பெரியோர். அதன் அடையாளமாகவே, பகவானால் உபதேசிக்கப்பட்டதால் கீதைக்கும் ஜயந்தி விழா நடக்கிறது. ‘பகவானோடு பற்று கொள்ளுங்கள். நீங்கள் வணங்கத் தக்கவராக அதுதான் வழி’ என்பதை சூட்சமமாக உணர்த்துகிறது கீதா ஜயந்தி!
Comments
Post a Comment