வெண்ணெய் காப்புக்குப் பிறகு வெந்நீர் அபிஷேகமா

ஸ்ரீநடராஜர், ஸ்ரீவிநாயகர் ஆகியோரது திருவுருவச் சிலைகளை அலங்காரத்துக்காக வரவேற்பறையில் வைக்கலாமா? தெய்வ குற்றமாகி விடுமா?
- தெய்வ குற்றமாகாது. அதே நேரம், அந்தச் சிலைகளில் சாந்நித்யம் இருக்காது. அவை வெறும் பொம்மைகள்தான். கோபுரங்களில் நிறைய திருவுருவங்கள் இருக்கும். அவை, நித்திய பூஜைகளை எதிர்பார்க்காது. சிற்பிகள் வடிக்கும் இறையுருவங்களில், முறைப்படி கும்பாபிஷேகம் நிகழ்ந்தால் மட்டுமே தெய்வம் குடிகொண்டிருக்கும்!

ஆகவே, வரவேற்பறையில் திருவுருவங்கள் இருப்பது தவறும் அல்ல; தெய்வ குற்றமும் அல்ல!

ஓவியங்களும் சிலைகளும் மக்களை ஈர்ப்பதற்காகத்தான். அவற்றில் இறைவன் இருப்பதாக உணர்ந்தால், அந்தத் திருவுருவச் சிலைகள், வரவேற்பு அறையில் இருந்து பூஜை அறைக்கு மாறிவிடும்.

நல்லெண்ணம் மற்றும் இறை பக்தியுடன் தாங்கள் வாழ்வதாக பிறர் உணர வேண்டும் என்பதற்காக சிலர், தங்கள் வீட்டு வரவேற்பறையில் இறை திருவுருவங்களை வைத்திருக்கலாம். ஆக, இறைவன் எனும் எண்ணம் இல்லாமல்தான் அங்கே இறையுருவங்கள் உள்ளன என்பதே உண்மை!


--------------------------------------------------------------------------------


வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்த மறுநாள், அதைக் கலைத்து விட்டு, ஸ்வாமி விக்கிரகத்தின் மீது வெந்நீர் ஊற்றுகிறார்களே... இறைவன் திருமேனியில் வெந்நீர் ஊற்றலாமா?
- ஸ்வாமி விக்கிரகத்தை வெந்நீரால் அபிஷேகம் செய்ய மாட்டார்கள். விக்கிரகத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் வெண்ணெயை அகற்ற வெந்நீரை உபயோகிப்பார்கள்.

வெண்ணெய் ஒட்டிக் கொண்டிருந்தால்... மற்ற திரவியங்களால் செய்யப்படும் அபிஷேகங்களில் நிறைவு இருக்காதுதானே?

இறையுருவத்துக்கு பால், தயிர் முதலான அபிஷேகம் முடிந்ததும், எலுமிச்சை பழச் சாறு கொண்டு அபிஷேகிப்பதும் உண்டு. எலுமிச்சைத் தோலைக் கொண்டு திருவுருவச் சிலையை சுத்தப்படுத்துபவர்களும் உள்ளனர். எலுமிச்சையின் சாறு, ஒட்டிக் கொண்டிருக்கும் பால், தயிர் போன்றவற்றை எடுத்து விடும். இதேபோல்தான் வெந்நீரும்! அதன் சூட்டில் வெண்ணெய் உருகி அகன்று விடும். ஆகவே, இதில் தவறேதும் இல்லை.


--------------------------------------------------------------------------------

எங்கள் பகுதியில் கடும் தண்ணீர்ப் பஞ்சம். எனவே, துணி துவைத்த தண்ணீரால் வாசல் தெளிக்கிறோம். இதனால், வீட்டுக்குள் லட்சுமி வரமாட்டாள் என்கின்றனர் சிலர். இதுகுறித்து தங்களது விளக்கம்?
- 'தண்ணீர்ப் பஞ்சத்தால் வாசலில் நீர் தெளிப்பதையே தவிர்த்து விட்டேன்' என்று சொல்லாமல், கிடைத்த தண்ணீரைக் கொண்டு வாசல் தெளித்தீர்களே... அதுவே சிறப்புதான்! அந்தத் தண்ணீருடன் சிறிதளவு பசும் சாணியையும் சேர்த்துத் தெளித்தால், தங்களின் மனநெருடல் விலகி விடும். அத்துடன், கோமியத்தில் வாசம் செய்யும் ஸ்ரீலட்சுமியும் தங்களது இல்லத்தில் குடியேறி விடுவாள்!

பாலைவனத்தில் சிக்கிக்கொண்ட ஒருவன், தினசரி அனுஷ்டானங்களைச் செய்ய விரும்பினான். கைகளில் நீரை அள்ளி ஆதவனுக்கு அளிக்க வேண்டும்; ஆனால், நீர் இல்லை. இந்த நிலையில், அங்கே உள்ள மணலையே தண்ணீராக நினைத்து, ஆதவனுக்கு அளிக்கச் சொல்கிறது தர்மசாஸ்திரம். அதே நேரம்... தண்ணீர் இருந்தும் மணலை அளிப்பது பாபம்!

கடும் தண்ணீர்ப் பஞ்சம். கொஞ்சம் தண்ணீர்தான் இருக்கிறது. அன்று அமாவாசை வேறு! முன்னோருக்கு எள்ளும் தண்ணீரும் விட வேண்டும். தோட்டத்தில் இருக்கும் மாமரத்துக்கும் தண்ணீர் விட வேண்டும். என்ன செய்வது? கவலையே வேண்டாம்... மாமரத்தடியில் அமர்ந்து முன்னோரை நினைத்து எள்ளும் தண்ணீரும் அளிக்கலாம் என்கிறது சாஸ்திரம் (ஆம்ரா ச சிக்தா பிதர ச த்ருப்தா). ஆகவே தண்ணீர்ப் பஞ்சம் இருக்கும் வரை, தங்களது செயல்பாடு தவறாகாது!


--------------------------------------------------------------------------------

மற்றவர்களின் காலைத் தொட்டு வணங்கினால்... அவர்களுடன் கை குலுக்கினால்... நமது புண்ணியம் அவர்களுக்கும், அவர்களது பாவம் நமக்கும் வந்து விடும் என்கின்றனரே... அப்படியா?
- பக்தி அல்லது பணிவை வெளிப்படுத்த பிறரது காலைத் தொட்டு வணங்க வேண்டிய கட்டாயம் இல்லை. நட்பை பரிமாறிக் கொள்ள கைகுலுக்குவதும் தேவையற்றது. காரணமே இல்லாமல் ஒருவரையருவர் தொட்டுக் கொள்வது தவறு என்கிறது தர்மசாஸ்திரம்.

குரு, முனிவர்கள், வேதம் ஓதுவோர், விருந்தினராக வரும் பெரியவர்கள் ஆகியோரின் திருப்பாதங்களை நீரால் கழுவி, பணிவிடை செய்யலாம். வணக்கத்துக்கு உரிய பெரியவர்களை காலைத் தொட்டு வணங்காமல், விழுந்து நமஸ்கரிக்கலாம். இதேபோல், நட்பையும் பேச்சின் மூலம் வெளிப்படுத்தலாம்; கை குலுக்கத் தேவையில்லை.

வணங்க வேண்டியவர்களைத் தவிர்ப்பதும் தவறு; வணங்கக் கூடாதவர்களை வணங்குவதும் தவறு என்கிறது சாஸ்திரம். மற்றபடி, கைகளும் கால்களும் பாவ- புண்ணியங்களை பரிமாறிக் கொள்கிற கருவிகள் அல்ல!


--------------------------------------------------------------------------------

கலசத்தில் மஞ்சள் கலந்த நீர், அதன் மேலே தேங்காய், பிறகு வெள்ளியால் ஆன அம்பாள் முகம் ஆகியவற்றை வைத்து... வாரந்தோறும் கலசத் தேங்காயை மட்டும் மாற்றி, பூஜித்து வருகிறேன். இது சரியா? சிலர், வீட்டில் கலசம் வைத்து வழிபடக் கூடாது என்கின்றனரே?
- தேங்காயை மட்டும் மாற்றினால் போதாது. கலச நீரையும் மாற்ற வேண்டும். தொடர்ந்து பல நாட்கள் செய்து வரும் பூஜையில்தான், கும்ப நீரை மாற்றாமல் இருக்கலாம். உங்களுடைய வழிபாடு அப்படியல்ல என்பதால், கும்ப நீரை மாற்ற வேண்டும்.

அனுதினமும் பூஜை முடிந்ததும் கும்ப ஜலத்தை உடலில் தெளித்துக் கொள்ள வேண்டும். ஏழு நாட்கள் வரை அந்தத் தண்ணீரை வைத்திருக்கக் கூடாது. இயலவில்லை எனில், கும்பம் வைப்பதைத் தவிருங்கள். அதற்கு பதிலாக தேங்காயின் மீது வெள்ளி இறையுருவத்தை வைத்து பூஜிக்கலாம்.

வீடுகளில் கும்பம் வைத்து பூஜிப்பது தவறில்லை. ஆனால், பூஜை நடைமுறைகளை ஒழுங்காகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். ஒரேயரு இரவுப் பொழுதைக் கடந்தாலே, தண்ணீர் மாசுபட்டதாகி விடும். ஆகவே, ஜலத்தை மாற்றுவது உத்தமம்!


--------------------------------------------------------------------------------

திருமணப் பத்திரிகைகளை, திருமணம் முடிந்ததும் ஆற்றில் போட வேண்டுமா? அல்லது நாளிதழ்களுடன் சேர்த்து எடைக்குப் போடலாமா?

- அது உங்கள் இஷ்டம்!

திருமணத் தகவலை சுற்றத்தாருக்குத் தரும் கருவிதான் பத்திரிகை. முன்பெல்லாம் தபால் கார்டில் எழுதி தகவல் சொன்னார்கள். பிறகு, அச்சகத்தில் கொடுத்து பிரிண்ட் செய்து விநியோகித்தனர்.

திருமண பந்தம்தான்- காப்பாற்றப் பட வேண்டிய பொக்கிஷம்; ஆனால் திருமணப் பத்திரிகையை பத்திரப் படுத்தி, பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை. சம்பிரதாயங்கள் மாறிக் கொண்டே இருக்கும். திருமணப் பத்திரிகையும் சம்பிரதாயத்துக்கு உட்பட்ட ஒன்றுதான்!


--------------------------------------------------------------------------------

பரத்வாஜ கோத்திரத்தை உருவாக்கியது வடக்கில் வாழ்ந்த பரத்வாஜ முனிவரா? எனில், தெற்கில் பிறந்த நான் பரத்வாஜ கோத்திரத்தைச் சார்ந்தவளாக இருப்பது எப்படி? சரி... பரத்வாஜரின் தந்தையும் பாட்டனாரும் என்ன கோத்திரம்? தயவு செய்து விளக்குங்களேன்!
உலகமே ஒரு கூரையின் கீழ் இருப்பதாகப் பார்க்கிறது வேதம். சனாதனமும், 'உலக மக்கள்' என்றே குறிப்பிடுகிறது. ஆனால், வடக்கு- தெற்கு எனும் பாகுபாடு பார்ப்பது நாம்தான்.

கோத்திரம் என்றால் வம்சம் என்று பொருள். அதாவது, பரத்வாஜரிடம் இருந்து வம்சம் ஆரம்பம்!

சரி... பரத்வாஜர்? அவர், பரம்பொருளில் இருந்து தோன்றியவர். பரம்பொருளுக்கு கோத்திரம் ஏது?

ஜீவாத்மா, உடலுடன் இணைந்து செயல்படும் போது கோத்திரமும் ஒட்டிக் கொள்ளும். ஆகவே, பரத்வாஜரை தோன்றச் செய்தார் பரமாத்மா. சங்கிலித் தொடர் போல் பல்லாயிரம் வருஷங்களாக பரத்வாஜரின் வாரிசுகள் தொடர்கின்றனர் என்பதற்கு தாங்களே சாட்சி.

உங்களைப் போலவே, முனிவர்கள் பலரது பரம்பரைகள் அறுபடாமல் தொடர்வதால், அந்தந்த முனிவரின் பெயரைச் சொல்லி, 'இன்னாரது வம்சத்தைச் சேர்ந்தவன்' என்று அறிமுகம் செய்து கொள்கிறோம்.

அனைத்து ஜீவராசிகளின் முதல் தோற்றம் என்பது பரம்பொருளில் இருந்தே வெளிவந்தது. பின்னர் வரும் வாரிசுகளுக்கு, அந்த முதல் தோற்றமே காரணமாகி விடுகிறது.

ஆகவே, வடக்கு- தெற்கு என்றில்லாமல், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பரம்பரையின் தொடர்ச்சி ஒட்டிக் கொண்டுதான் இருக்கும்!

? துளசிமாலையை அணியும்படி புராண- இதிகாசங்கள் பரிந்துரைக்க... தற்கால இளைஞர்களோ தங்க நகைகள் அணிவதையே விரும்புகிறார்கள். துளசி மாலையின் மகத்துவத்தை விளக்குங்களேன்...
- சாஸ்திரம், தங்கம் அணியும்படி பரிந்துரைக்கிறது. காதுகுத்து கல்யாணம்- தங்கத்தை அணிய ஏற்பட்ட சடங்கு. ஆண்களின் காதில் கடுக்கன்; கையில்- மோதிரம் உண்டு. பெண்களின் மேனியெங்கும் தங்க ஆபரணங்கள் அலங்கரிக்கும். கர்ண வேதம், தங்கத்தை அணிவதை கட்டாயமாக்குகிறது. தங்கம்- வெறும் அணிகலன் மட்டுமல்ல; அதை அணிவது ஆடம்பரமும் அல்ல! அது, உடலையும் உள்ளத்தையும் மகிழ்விக்கும் மங்கலப் பொருள்!

தங்கத்துக்கு மாற்றாக துளசி மாலையைச் சொல்லக் கூடாது. துளசிமாலை உயர்ந்தது. ஜபம் செய்யும் வேளையில் துளசி மாலை அணியலாம். 'முகுந்தன் காலடி தொட்ட துளசியை முகர்ந்து பார்' என்கிறார் குலசேகரப் பெருமாள். ஸ்ரீகண்ணனின் துலாபாரத்தில் துளசி வென்றது. உயிர் பிரியும்போது துளசி கலந்த ஜலம் அருந்தினால் மறுபிறவி கிடையாது என்கிறது புராணம். குறிப்பாக பெண்கள் தினமும் துளசி பூஜை செய்ய வேண்டும். லட்சுமி வசிக்கும் இடமாக துளசியைப் பார்க்கிறது புராணம். பிருந்தாவன துவாதசியில் துளசி வழிபாடு சிறப்பு. துளசி விரதம் ஏற்கச் சொல்லுகிறது விரதகோசம். தானம் அளிக்கும்போது துளசியை சேர்க்கச் சொல்லுகிறது தர்ம சாஸ்திரம். கடவுளுக்குப் படைக்கும் நிவேதனத்தில் துளசியை சேர்ப்பது உண்டு. பூஜைக்கு உரிய பொருட்களில் சிறந்தது துளசி.

'துளசி இதழ் ஒன்றை எனக்கு அர்ப்பணி; உனது யோக க்ஷேமத்தை நான் கவனித்துக் கொள்கிறேன்' என்று வாக்குறுதி தருகிறான் கண்ணன். துளசிக்கு நிர்மால்யம் கிடையாது. வாடி வதங்கினாலும் தரம் குறையாது.

மருத்துவ குணமும் கொண்டது துளசி. விஷக் கிருமிகளை அகற்ற உதவும். உப்புடன் கலந்த கரும் துளசி, தோல் வியாதியைக் குணப்படுத்தும். வணக்கத்துக்கு உரிய பொருளை மாலையாக அணிந்து கௌரவிப்பது சிறப்பு.

அதே நேரம்... மங்கலப் பொருளான தங்கம் அணிவதையும் தவிர்க்க வேண்டாம். கூடவே, பக்தியின் அடையாளமான துளசியையும் அணிந்து கொள்ளலாம்

Comments