துன்புறுத்தாதே... துன்பப்படாதே!

விசித்திரமான மனிதர் ஒருவர், தான் வளர்க்கும் நாயைக் கட்டி வைத்து கடுமையாக அடித்தார். பரிதாபமாகக் கத்தியது நாய். பதறிய நண்பர், ''நாயை ஏன் இப்படி அடிக்கிறீர்கள்?'' என்று கேட்டார்.

''நாய்க்கு மகிழ்ச்சி ஊட்டத்தான்!'' என்றார் நாயின் எஜமானர்.

''அடித்தால் எப்படி மகிழ்ச்சி உண்டாகும்?'' - புரியாமல் கேட்டார் நண்பர்.

நாயின் எஜமானர் சொன்னார் ''அடிப்பதை நிறுத்தியதும்... ஆஹா, அடி நின்றுவிட்டது என்று நாய் சந்தோஷப்படுமே!''

இன்றைய சூழலில், பெருவாரியான மனிதர்கள் இப்படித்தான் மகிழ்ச்சியை உணருகிறார்கள்.

துன்புறுத்தி துன்பப்படுவதும், பிறகு அதிலிருந்து விடுபடுவது இன்பம் என்றும் தவறுதலாகப் படித்து வைத்திருக்கிறது மனம். துன்பமின்றி வாழ எல்லோரும் ஏங்குகின்றனர். ஆனால், துன்பம் உண்டாவது ஏன் என்பதை யோசிக்க மறுக்கிறார்கள்.



உடல்- உள்ளம் இரண்டும் ஆரோக்கியமான ஒருவர் தானும் துன்பப்படுவது இல்லை; பிறரை துன்புறுத்துவதும் இல்லை. வாழ்க்கை, ஆனந்தமாக வாழ்வதற்காகவே தரப் பட்டது. ஆனால், மனித குலம் சிறிது சிறிதாகப் பாழ்பட்டு, இந்த உலகை மனநோய் உள்ளவர்களின் கூடாரமாக ஆக்கிவிட்டது.

மனநல மருத்துவமனையில் சேர்க்கப்படவில்லை என்றாலும், பெருவாரியான மக்கள் மனநலம் குன்றியவர்களாகவே வாழ்கிறார்கள். திறந்தவெளி சிறைச்சாலை போல, இந்த உலகமே திறந்தவெளி மனநல மருத்துவமனையாகி விட்டது. மற்றவரை காயப்படுத்துகிறோம் என்ற உணர்வே இல்லாமல், மற்றவர்களது மனதை நோகடிக்கிறார்கள் மனிதர்கள். பிறரது ஏழ்மையை, இயலாமையை, அறியாமையை, குறைபாட்டை குத்திக் காட்டி கண்ணீர் விட வைக்கிறார்கள்.

'பிச்சை கேட்பவனையும்கூட... 'ஐயா, என்னிடம் பணம் இல்லை' என்று கேட்க வைக்காதே; அவன் கேட்பதற்கு முன்பே கொடு' என்கிறார் திருவள்ளுவர். தனது இல்லாமையைச் சொல்வதற்கு அவன் மனம் என்ன பாடுபடும் என்பதை யோசித்து, 'இல்லை' என்று அவன் புலம்புமுன் கொடுத்து அனுப்பு என்கிறார் வள்ளுவர். 'இவன் என்று எவ்வம் உரையாமை ஈதல்' என்று தொடங்கும் குறளுக்கு இப்படியும் ஓர் அர்த்தம் உண்டு.

உடலும் உள்ளமும் ஆரோக்கிய மாக இருக்கும் நபர், ஒருபோதும் பிறரைத் துன்புறுத்த மாட்டார். அதேபோல், தன்னையும் வதைத்துக் கொள்ள மாட்டார். ஹிட்லர் போல் மற்றவர்களை வதைப்பது; காந்தியைப் போல் தம்மைத் தாமே தண்டித்துக் கொள்வது... இரண்டுமே எனக்கு சரியாகப் படவில்லை.

வீரம் என்ற பெரிய வார்த்தையால் மற்றவர்களைத் துன்புறுத்துகிறோம். தம்மையே துன்புறுத்திக் கொள்வதை தியாகம் என்ற பெயரில் மறைத்து விடுகிறோம்.

வீரம்- பிறர் மீதான வன்முறை; தியாகம்- தன் மீதான வன்முறை. வன்முறை எந்தப் பெயரில் வெளிப் பட்டாலும் அதைக் கண்டறிவதே விவேகம்; விழிப்பு நிலை.

மனித குல மனநோயாளிகளின் போக்கை, Sadist / Masochist என்று இரு பிரிவுகளில் அடக்கி விடுகிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

பிறரைத் துன்புறுத்தும் Sadist-கள் அதிகாரம்- ஆதிக்கம் உள்ள ஒரு நிலையைத் தேர்ந்து கொள்கிறார்கள். அரசியல், விஞ்ஞான ஆராய்ச்சி என்று பெயர் வேறுபட்டாலும் தங்கள் மனோநிலையில் இவர்கள் வேறுபடுவதில்லை.

என் அனுபவத்தில், ஆசிரியர்கள் மத்தியில்கூட பல Sadist-களை பார்த்திருக்கிறேன். பிரம்பும் கையுமாக இருந்த ஆசிரியர்களிடம் படிக்க நேர்ந்தபோது, நான் அடைந்த வேதனைகள் இன்னும் என் நினைவில் நிற்கிறது. மாணவனின் விரல் இடுக்கில் பென்சிலை வைத்து, அவன் துடிக்கத் துடிக்க... பென்சிலுடன் சேர்த்து விரலை அழுத்தும் கொடூரமான ஆசிரியர் ஒருவரை இன்றும் என்னால் மறக்க முடியாது! ஹிட்லர்கூட இவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வளவு கொடூரம்! இப்படி நடந்து கொள்ளும் ஒருசில ஆசிரியர்கள் மனநோயாளிகளே!

ஹிட்லர், தனது படையினர் சிறைப் பிடிக்கும் கைதிகளை கண்ணாடி அறை ஒன்றில் அடைத்து வைத்து, உள்ளே விஷப்புகையை கசியச் செய்வானாம். அவர்கள் துடிதுடித்துச் சாவதை வேடிக்கை பார்க்க டிக்கெட் வசூலும் நடத்தினானாம். எவ்வளவு கொடுமையான மனோநிலை!

பிறரை அவமானப்படுத்தி சந்தோஷப் படுபவர்கள்... தங்களின் நாக்கையே சாட்டையாக்கி சொல்லாலேயே மற்றவரை சுழற்றி அடிப்பவர்கள் எத்தனை பேர்! இவர்களெல்லாம் மனநோய் மருத்துவமனையில் இல்லை என்றாலும் மனநோயாளிகளே!

ஓர் ஆனந்தமான ஆன்மிகவாதி ஒரு போதும் ஒருவரையும் காயப்படுத்த மாட்டான்.

புத்தர் ஒருமுறை, தம் வலது கையை இடது தோள் நோக்கி மெள்ள அசைத்து அசைத்து பயிற்சிபோல் ஏதோ செய்துகொண்டிருந்தார். ''என்ன செய்கிறீர்கள்?'' என்று அவரின் மாணவரும் தம்பியுமாகிய ஆனந்தர் கேட்டார்.

''என் இடது தோளில் ஒரு கொசு அமர்ந்தது'' என்றார் புத்தர்.

''அது எப்போதோ பறந்து விட்டது'' என்றார் ஆனந்தர்.

''தெரியும்! ஆனால், அந்தக் கொசு கடித்ததும் அதைக் கொல்வதற்காக... என்னையும் அறியாமல் என் வலது கை, இடது தோள்பட்டையை நோக்கிச் சென்றது. அதெப்படி, என் உத்தரவு இல்லாமல் என் வலது கை செயல்படலாம்? எனவேதான், என் கட்டளைக்கு மட்டுமே கீழ்ப்படியும்படி வலது கைக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறேன்!'' என்றாராம் புத்தர்.

மகாவீரர், தன் மீது கல்லெறிந்தவனை மன்னித்ததாக ஒரு கதை சொல்வார்கள். அது தவறு. அவர் மன்னிக்கவில்லை. காரணம்... அந்த மனிதனின் செய்கையை அவர் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அத்தனை உயர்ந்த நிலை அவருடையது. கோபம் கொள்கிறவர்களே மன்னிக்கிறார்கள்; தண்டிக்க நினைப்பவர்களே மன்னிக் கிறார்கள். மகாவீரரோ கோபம், தண்டனை என்ற அற்ப நிலைகளை எல்லாம் கடந்த மகாஞானி... பூரணர்.

பிறரைத் துன்புறுத்தும் நபர் Sadist ஆகிறார் என்றேன். தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்பவர்களை masochist என்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் கவிதை, கலை, ஓவியத்தில் தீவிரப் பற்றுள்ளவர்களாகவோ, தீவிர மதத்தன்மை கொண்ட மதவாதியாகவோ இருக்கிறார்கள். சுய சித்ரவதை இவர்களது பிரதான இயல்பு. காதல் என்ற பசப்பு வார்த்தைக்காக, கை நரம்புகளை பிளேடால் கீறிக் கொள்ளும் சினிமா கதாபாத்திரங்கள் இந்த மாஸோகிஸ்டுகள் வகையறாவே.

வின்சென்ட் வான்காக் என்ற ஓவியர், தன் காதலியைச் சந்திக்க நினைத்தார். அவளது தந்தை மறுத்தார். உடனே, எரியும் நெருப்பில் கையை நுழைத்து, ''அவளைப் பார்க்க அனுமதிக்கும் வரை இப்படியே என் கையை வைத்திருப் பேன்' என்று கையை தீயில் பொசுக்கிக் கொண்டார்.

விலைமகள் ஒருத்தி... ஏதாவது பாராட்ட வேண்டுமே என்ற நினைப்பில், ''உங்கள் காதுகள் மிக அழகானவை'' என்று அவரைப் பாராட்டித் தொலைத்தாள். வீடுதிரும்பிய மனிதர், தம் காதுகளில் ஒன்றை வெட்டி அவளுக்கு அனுப்பி வைத்தார். கூடவே ஒரு கடிதம்... அதில், ''நீ விரும் பியதை நான் வைத்திருக்கலாமா? எனது அன்புப் பரிசாக இதை அனுப்புகிறேன்'' என்று வியாக்கியானம் வேறு!

நான் சொல்வது அதிர்ச்சியைத் தரலாம். இருந்தாலும் சொல்கிறேன். இன்றும் மதம், கடவுள், சாதனை என்கிற ஏதோ ஒரு பெயரில் பலர் தாங்களைத் தாங்களே வதைத்துக் கொள்கிறார்கள். இது, ஆரோக்கியமான ஆன்மிகம் ஆகாது. முட்கள் மீது உட்காருவது, ஆணிப் படுக்கையில் படுப்பது, பட்டினி கிடந்து சாவது. கையை, காலை உயர்த்தி நிறுத்தி ரத்த ஓட்டத்தைச் சீர்குலைத்து சித்திரவதை செய்து கொள்வது... இவை எல்லாம் அறிவுடைமையும் அல்ல; ஆன்மிகமும் அல்ல.

பிறரைத் துன்புறுத்தவோ, நம்மை நாமே துன்புறுத்திக் கொள்ளவோ கடவுள் இந்த உலகைப் படைத்திருக்க மாட்டார் என்று உணர்தலே உண்மையான ஆன்மிகம். தானும் ஆனந்தமாக இருந்து, பிறரையும் ஆனந்தம் அடையச் செய்பவனே பூரணமான ஆன்மிகவாதி.

Comments