ஆனந்தமாய், நிம்மதியாய் வாழ... அள்ளிக் கொடுப்போம் நிதி!

மிகப் பெரிய கோயிலாக, ஆயிரக்கணக்கான வருடங்கள் பழைமைமிக்க ஆலயமாக, புராண- புராதனப் பெருமைகள் கொண்ட திருத்தலமாக இன்றைக்கு நாம் சென்று தரிசித்து வருகிற கோயில்கள் எல்லாமே, ஒருகாலத்தில் முனிவர்களும் யோகிகளும் கடும் தவமிருந்து வழிபட்ட அற்புதமான தலங்கள்! அங்கே வியாபித்திருக்கும் சூட்சும சக்தியை உணர்ந்த முனிவர்களும் ஞானிகளும், 'இந்த இடத்தில் தவமிருந்தால், இறைவனை அடையலாம்’ எனத் தீர்மானித்து, அந்த இடத்திலேயே பர்ணசாலை அமைத்தோ, ஆஸ்ரமங்கள் கட்டிக்கொண்டோ தங்கினார்கள்; சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, தினமும் சிவலிங்க பூஜை செய்து வணங்கினார்கள்.

மாமுனி அகத்தியரின் திருப்பாதம் படாத தலங்கள் தென்னகத்தில் மிக மிகக் குறைவுதான். எங்கெல்லாம் அவர் தங்கினாரோ, அங்கெல்லாம் சிவபூஜை செய்திருக்கிறார்; சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, நித்தியானுஷ்டானங்களைத் தவறாது நிறைவேற்றியிருக்கிறார். அவர் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்த இடங்களில் மேலும் மேலும் சூட்சும சக்தி பெருகியது. அந்த சக்தி, அந்த இடத்தின் வழியே வருவோரையும் போவோரையும் ஊடுருவி, அவர்களுக்கு நல்லன எல்லாம் வழங்கியது; எப்போதும் துணையாய் இருந்து காத்தருளியது!

அப்படி ஸ்ரீஅகத்திய முனிவர் தொண்டை தேசத்துக்கு வந்தபோது, அங்கே அவர் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்ட இடங்கள், பின்னாளில் மன்னர்களால் கண்டறியப்பட்டன. அங்கெல்லாம் தெய்வ சாந்நித்தியம் குடிகொண்டிருக்கும் கோயில்களையும், கலை நுட்பங்கள் கொண்ட ஆலயங்களையும் பிரமாண்டமாக அமைத்து, மக்களும் வழிபட்டுப் பயனுற வழிவகை செய்தார்கள்.

அகத்திய முனிவருக்கு ரிஷபாரூடராக, தம்பதி சமேதராக சிவனார் திருக்காட்சி தந்தார் என்கிறது புராணம். அம்மையையும் அப்பனையும் ஒருசேர தரிசித்த ஆனந்தத்தில் மூழ்கினார் அகத்தியர். எனவே, பெரும்பான்மையான சிவாலயங்களில் அம்பாளுக்கு ஸ்ரீஆனந்தவல்லி என்றும், ஸ்வாமிக்கு ஸ்ரீஆனந்தீஸ்வரர் என்றும் திருநாமங்கள் அமைந்ததாகச் சொல்வார்கள்.

சென்னைக்கு அருகில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது திருநின்றவூர். இங்கிருந்து பெரியபாளையம் செல்லும் வழியில் சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது பாக்கம் எனும் கிராமம். இந்த ஊரில், சித்தேரிக் கரையில் அற்புதமாக அமைந்துள்ளது ஸ்ரீஆனந்தீஸ்வரர் திருக்கோயில். அந்தக் காலத்தில் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியாக இந்த ஊர் அமைந்திருந்தது என்றும், ஈக்காடு கோட்டத்தில், புலியூர் நாட்டில் 'அங்கு கலில சதுர்வேத மங்கலம்’ என்று இந்த ஊர் அழைக்கப்பட்டதாகவும், 1022-ஆம் வருடம், முதலாம் ராஜேந்திர சோழ மன்னனால் இந்தக் கோயில் கட்டப்பட்டது என்றும் கோயிலின் கல்வெட்டு தெரிவிக்கிறது.



தாமரை இதழ் வடிவிலான ஆவுடையாரைத் தரிசித்துக்கொண்டே இருக்கலாம். குபேர சம்பத்தை அள்ளித் தரும் லிங்க மூர்த்தம் என்கிறார்கள் சிவனடியார்கள். இந்தச் சிவலிங்கத் திருமேனியைக் கண்ணாரத் தரிசித்தாலே, நம் பாவமெல்லாம் பறந்தோடி விடும் எனச் சொல்லிச் சிலிர்க்கிறார்கள் பக்தர்கள். கோயிலின் ஸ்தல விருட்சம், கல்லால மரம். எனவே, இங்கு வந்து வேண்டினால், கல்வியும் ஞானமும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்!



ஆனால்... இந்தக் கோயில், கடந்த பல வருடங்களாகவே சிதிலம் அடைந்து காணப்படுகிறது. முட்கள் மண்டிப் போய், வழிபாடுகளும் தடைப்பட்டுவிட்டன. வரம் தருவதற்கு இறைவனும் இறைவியும் காத்திருந்தாலும், வழிபாடு செய்வதற்கோ, வரம் பெறுவதற்கோ அர்ச்சகரும், பக்தர்களும் இல்லாமல், பரிதாபமான நிலையில் இருக்கிறது ஆலயம்.

அகிலத்து மக்களுக்கு ஆனந்தம் தரும் ஸ்ரீஆனந்தீஸ்வரர், அவல நிலையில் இடிந்தும் சிதைந்தும் கிடக்கிற கோயிலில் குடியிருந்தால், அது அகிலத்துக்கு நல்லது அல்லவே என்று எண்ணிப் பதறிய பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், ஆலயத் திருப்பணிக்குழு ஒன்றை ஏற்படுத்தி, முட்களை அகற்றினார்கள். புதர்களை மூடி, பாதையைச் சமன்படுத்தினார்கள்.





சந்நிதி முழுவதும் இடிந்து, சிவலிங்கம் மட்டுமே காட்சி தந்த நிலையில் இருந்து, உடனடியாக ஓலைக் கொட்டகை எழுப்பி, மேற்கூரை அமைத்து, தினப்படி பூஜைக்கும் ஏற்பாடு செய்தார்கள்.

அதையடுத்து, சிவனடியார்களின் பெருங்கருணையாலும் நிதியுதவியாலும் கீற்றுக் கொட்டகை, சிமென்ட் கட்டடமாக மாற்றப்பட்டது. எனினும், ராஜேந்திர சோழன் கட்டிய அதே அளவில், இந்தக் கோயிலை பிரமாண்டமாக எழுப்புவது என ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டு, அதற்கான திருப்பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

''ஸ்வாமிக்கு அருமையான சந்நிதியும், அம்பாளுக்கு தனிக்கோயில் அமைப்புல ஒரு சந்நிதியுமா கட்டுறதுன்னு முடிவு செஞ்சிருக்கோம். அகத்திய முனிவருக்குக் கல் விக்கிரகம் வைக்கவும் திட்டமிட்டிருக்கோம். கோயிலுக்கு எப்ப கும்பாபிஷேகம் ஆச்சுன்னே தெரியலை. அதனால எவ்வளவு சீக்கிரம் நடத்த முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் திருப்பணிகளை முடிச்சு, கும்பாபிஷேகத்தை சீரும் சிறப்புமா நடத்திடணும்னு எங்களுக்கு ஆசை. அதுக்கு அந்தச் சிவபெருமான்தான் அருள்புரியணும்!'' என்கின்றனர் திருப்பணிக் குழுவினர்.

அகத்திய முனிவர் வழிபட்டு அருள் பெற்ற ஆலயம், மீண்டும் பழையபடி பொலிவுக்கு வருவது நம் கையில்தான் இருக்கிறது. ரிஷபாரூடராக அகத்திய முனிக்குக் காட்சி தந்த ஆலயத்தில், ரிஷபத்துக்கு- நந்திதேவருக்குக் குளிரக் குளிர அபிஷேகம் நடந்து, பிரதோஷ பூஜை சிறப்புற நடைபெறுவது நமது பொறுப்பு என்பதை நாம் உணர்ந்து செயல்பட்டாலே போதும்!

அகிலத்தில் உள்ள அனைத்து உயிர்களும் ஆனந்தமாகவும் நிம்மதியாகவும் வாழ அருள் செய்யும் ஸ்ரீஆனந்தவல்லி அம்பாள் அம்சமாய் புடைவை உடுத்தி, அழகாய் அலங்காரம் செய்துகொண்டு திருக்காட்சி தருவதும், திருக்கல்யாண உத்ஸவங்கள் நடப்பதும், நாம் மனது வைத்தால் ஆகிற காரியங்கள்தானே!

1022-ஆம் வருடம் ராஜேந்திர சோழன் கட்டிய கோயிலைப் புனரமைத்து, சீர்படுத்திச் செம்மையாக்கி, விமரிசையாகக் கும்பாபிஷேகத்தை நாம் நடத்தாவிட்டால், வேறு யார் வந்து நடத்துவார்கள்?

திருப்பணிக்கு ஆனந்தத்துடன், மகிழ்ச்சி யுடன் தோள் கொடுங்கள். அந்த மகிழ்ச்சியும் ஆனந்தமும் மளமளவெனப் பரவி, ஸ்ரீஆனந்தீஸ்வரர் ஆலயத்தைத் தகதகவென ஜொலிக்கச் செய்யும் என்பது உறுதி!

எங்கே இருக்கிறது?

சென்னை, சென்ட்ரல் - திருவள்ளூர் ரயில் மார்க்கத்தில் உள்ளது திருநின்றவூர் ரயில் நிலையம். இங்கிருந்து பெரியபாளையம் செல்லும் சாலையில் சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது பாக்கம் எனும் சிறிய கிராமம். இங்குதான் ஸ்ரீஆனந்தவல்லி சமேத ஸ்ரீஆனந்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.

Comments