சாதுக்களின் பார்வை !.

‘Žசுவை மிகுந்த இலக்கியங்களை எழுதலாம். ஆனால் அதில் பகவத் குணம் இல்லையென்றால், அதை யாரும் அனுபவிக்கவே மாட்டார்கள்’ என்று நாரதர் வியாசாச்சாரியாரிடம் கூறினார். உண்மைதான்! ‘ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் எத்தனை எத்தனையோ நாவல்கள், கதைகள், கட்டுரைகள், கவிதைகள்னு வந்தாலும் அவற்றை எல்லாம் திரும்பத் திரும்ப நம்மால் படிக்க முடியாது. மற்ற இலக்கியங்கள் சுகத்தைத் தரும். ஆனால், சாந்தியைத் தருவது பகவத் குணம்தான்’ என்றார் தமது ஸ்ரீமத் பாகவத சப்தாக சொற்பொழிவில் ஸ்ரீ ஹரிஜி.
பகவத் குணம், சாதாரண ஜீவன்களைக் கூட உயர்ந்த நிலைக்குக் கொண்டுபோய் விடக் கூடியது. இதற்கு உதாரணமே நான்தான் என நாரதர் தன் பூர்வஜென்ம கதையைச் சொல்கிறார்: ‘வீடுகள் கூட்டற ஒரு அம்மாவின் குழந்தையாக நான் பிறந்தேன். அந்த கிராமத்துக்கு ஒருநாள் சாதுக்கள் வந்தார்கள். அவர்கள் தங்கியிருந்த மடத்தில் கைங்கர்யம் பண்ணும் வேலை என் அம்மாவுக்குக் கிடைத்தது. நான் சிறு பிள்ளையாக இருந்ததால், அங்கு விளையாடிக் கொண்டிருப்பேன். அப்படியே அந்த சாதுக்களின் கடாட்சத்துக்கு நான் பாத்திரம் ஆனேன். என் அம்மாதான் என் முதல் குரு. அம்மா என்னிடம் வந்து, குழந்தை! சாதுக்கள் வரும்பொழுது இந்த மாதிரி குச்சிகள் எல்லாம் வைத்துக் கொண்டு விளையாடக் கூடாது. அவர்கள் வரும்பொழுது அவர்களைப் பார்த்து கைகளை குவித்துக் கொள்ளணும். விழுந்து நமஸ்காரம் செய்யணும் - அப்படீன்னு எங்கம்மா சொல்லிக் கொடுத்தாள். அம்மா சொன்னபடியே நானும் செய்ய ஆரம்பித்தேன்’ என்றார் நாரதர்.
இந்த இடத்துல நான் ஒண்ணு சொல்லிக்கணும். அம்மா அப்பா தானே நம்மை பகவத் விஷயம் நோக்கி மனம் செலுத்த இன்றளவும் பழக்கிக் கொண்டிருக்கிறார்கள். முதல் நாள் பள்ளிக் கூடத்துல கொண்டுபோய் ஒரு குழந்தையைச் சேர்க்கும் பொழுது, அது நிச்சயம் அழுது அடம் பிடிக்கத்தானே செய்ய்யும். அதற்காக அதை அப்படியே எந்த அம்மா அப்பாவும் விட்டுடறதில்லையே?! அதே மாதிரிதான் கோயில்களுக்கும் கதா காலட்சே பங்களுக்கும், குழந்தைகளை பெற்றவர்கள்தான் அழைத்துக் கொண்டு வரவேண்டும். அது அந்தக் குழந்தையோட "individuality' - அதெல்லாம் வராதுன்னு சொல்லக் கூடாது.
சரி, நாரதரின் பூர்வ ஜென்ம கதைக்குள் போவோம். ‘சாதுக்களை நமஸ்காரம் பண்ணினால் மட்டுமே போதாது. அவர்கள் பின்னாடியே நீ போக வேண்டும்’ என என் அம்மா சொல்லித் தர, நானும் அப்படியே மெல்ல அவர்கள் பின்னாடியே போக ஆரம்பித்தேன். இப்படி ஒரு குழந்தை நம் பின்னாலேயே வருகிறதே என சாதுக்களுக்கும் தனி ஒரு க்ருபை என் மேல் வந்தது. சாதுக்கள் செய்த பூஜை, சொன்ன கதைகள்னு எல்லாம் எனக்குப் பிடிக்க ஆரம்பித்தன. இதில் என்ன விசேஷம்னா, எனக்கு புரியற மாதிரி க்ருஷ்ணரோட கதைகளை எல்லாம் சாதுக்கள் சொல்ல ஆரம்பித்தார்கள். சாதுக்கள் சாப்பிட்ட தட்டை எடுத்துக் கொண்டு போய் என் அம்மாவிடம் கொடுத்தேன். அந்தத் தட்டில் ஒட்டியிருந்த இனிப்புத் துண்டுகளை வாயில் போட்டுக்கொள்ள ஆரம்பித்தேன். அதனால் ‘சித்த சுத்தி’ ஏற்பட்டது.
நான்கு மாதங்கள் கடந்தன. சாதுக்கள் அந்த ஊரை விட்டுக் கிளம்பும் நேரமும் வந்துவிட்டது. துளசிதாசர் ரொம்ப அழகாகச் சொல்லுவார். ‘சாதுக்கள் ஹ்ருதயமும், திருடர்களின் குணமும் ஒன்று’ என்று. திருடர்கள் பணத்தைத் திருடிக்கொண்டு போவார்கள். சாதுக்கள் நம் ஹ்ருதயத்தையே திருடிக் கொண்டு போய் விடுவார்கள் என்று!’ அப்படித்தான் அந்த சாதுக்கள் ஊரை விட்டுக் கிளம்பும் பொழுது நானும் வரேன்னேன். இல்ல நீ அம்மாவோடதான் இருக்கணும்னு சொல்லிவிட்டு சாதுக்கள் கிளம்பி விட்டார்கள். எனக்கு ஒரே உறவாக இருந்த தாயும் ஒரு நாள் பாம்பு கடித்து இறந்துவிட, நேரா நடந்து வெகுதூரம் சென்று ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு குருவாயூரப்பனை நினைத்து தியானம் செய்ய ஆரம்பித்தேன்.
என் ஹ்ருதயத்தில் மெல்ல தன் சரணம் துவங்கி தன் மணிமகுடம் வரை தரிசனம் தர ஆரம்பித்து பட்டுனு அந்தர்த்யானம் ஆகிவிட்டார் பகவான். பகவானை காணலையேன்னு மனசு துடிக்க, மீண்டும் கண்களை இறுக மூடினேன். ‘உன் மனசு பக்குவப்படல.
சாதுக்களின் க்ருபைக்கு நீ பாத்திரம் ஆனதால் உனக்கு இந்த தரிசனம் கிடைத்தது. இந்த தரிசனம் ஸ்திரப்பட வழி பண்ணிக்கொள்’னு சொல்லிட்டு பகவான் மறைந்துவிட்டார். பகவான் நாமாதான் ஸ்திர தரிசனத்துக்கு ஒரே வழின்னு தெரிந்து கொண்ட என் நாவில் நாராயண நாமம் மட்டுமே ஒட்டிக் கொண்டது. இதுதான் என் பூர்வஜென்ம கதை’ என்றார் நாரதர்.
நாரதர் சொல்லிக் கொண்டிருக்கும் நாராயணரின் நாமத்தை, நாமும் என்றென்றும் நம் நாவில் நிலை நிறுத்துவோமாக!"

Comments