ஸ்ரீ நரஸிம்ம வைபவம்!

அஹோபிலே கருட சைல மத்யே

க்ருபாவசாத் கல்பித சன்னிதானம்

லஷ்ம்யா சமாலிங்கித வாமபாகம்

லஷ்மி ந்ருஸிம்மம் சரணம் பிரபத்யே

ஸ்ரீயத் பதியான சர்வேஸ் வரன் ஸ்ரீமன் நாராயணன் சம்சாரிகளின் உஜ்ஜீவனத்துக்காக எத்தனையோ அவதாரங்களைப் பண்ணி அருளுகிறான். பலப்பல அவதாரங்களை ஆழ்வார்களும் அனுபவித்திருக்கிறார்கள். சாஸ்திரம் சொல்லுகிறது. ‘அஜாயமானஹா பஹுதா விஜாயதே’ பிறப்பே இல்லாதவனான பெருமான் பல பிறவிகளாகப் பிறக்கிறான். நம்மைப் போலக் கர்மத்தாலே உந்தப்பட்ட பிறப்பு பகவானுக்குக் கிடையாது. அவன் இச்சையாலே அவன் ஆசைப்பட்டு, பிறக்கிறானே தவிர நம்மைப் போலே நிர்பந்திக்கப்பட்டு அவன் பிறப்பது கிடையாது. பிறப்பில்லாத அவன் பல படிகளாகப் பிறக்கிறான்.

‘பிறப்பில் பல்பிறவிப் பெருமான்’ என்பதும், ‘சென்மம் பலப்பல செய்து’ என்பதும் நம்மாழ்வாருடைய திருவாக்கு. இத்தனையும் பிறந்தது எதற்காக?

சம்சாரி சேதனனாக ஜீவாத்மாவை திருத்தி, பணி கொண்டு தன் திருவடிகளில் சேர்த்துக் கொள்வதற்காகத்தான் இத்தனை அவதாரங்களையும் பண்ணினார். தான் வைகுந்தத்திலே மட்டுமிருந்தால் கீழே கிடக்கிறவனைக் கைதூக்கிவிட முடியாது. கிணற்றுக்குள்ளே ஒருவன் விழுந்துவிட்டான். சகதிக்குள்ளே ஒருவன் விழுந்துவிட்டால், எவ்வளவு தூரம் ஒருவனால் கைகொடுக்க முடியும்? கை எட்டுகிற அளவுதான் நீட்ட முடியுமே தவிர, அதற்கு மேல் கிணற்றில் விழுந்தவனைக் கைகொடுத்துத் தூக்கிவிட வாய்ப்பில்லை. நாமும் அந்தப் பள்ளத்துக்குள்ளே குதித்தாலொழிய நம்மால் அவனைத் தூக்க முடியாது.

அதேபோன்ற செய்கைதான் பகவானுடையது. நாமெல்லாம் பள்ளத்திலே விழுந்திருக்கிறோம். அதை ‘தூராக்குழி’ என்கிறார்கள் ஆழ்வார்கள். ‘அகங்கார மமகார காம க்ரோத லோப மதம் மாச்சர்யம்’ இவை ஒவ்வொன்றும் நாம் இருக்கும் பெரிய குழிகள். முப்பது அடி நாற்பது அடி கிணறு பார்க்கிறோம். கோவை பக்கம் போனால், கிணறுகள் 200 அடி 250 அடி என்று ஆழமிருக்கும். வடக்கே போனோமென்றால் ஆயிரம் அடி போட்டிருக்கிறார்கள். நாம் கிடக்கும் பள்ளம் ஆயிரமில்லை; பத்தாயிரமில்லை; லட்சமில்லை; அடி காண முடியாத மகாக் குழி, இந்த சம்சாரம் என்னும் மகார்ணவம்.

ஆளவந்தார் என்ற மகான் தெரி விக்கிறார் ‘அபராத சஹஸ்ர பாஜனம்.’ அதாவது, ‘ஹே பகவன், பாவக் கடன்களை ஆயிரம் ஆயிரமாக சேர்த்து வைத்திருக்கிறேன். பயங்கரமான பெரியதான சம்சாரக் கடலின் நடுவில் விழுந்துவிட்டேன்.’

கடலின் மேல் பகுதியில் விழுந்திருந்தால் கூடப் பரவாயில்லை.அதன் ஆழத்தில் போய் விழுந்துவிட்டால் கை பிடித்துத் தூக்கக்கூட முடியாதே. அவ்வளவு ஆழத்திலே நாம் இருக்கிறோம். அவனோ, எவ்வளவோ உயரத்தில் இருக்கிறான். உயரத்தில் இருக்கிறவன் ஆழத்தில் இருக்கிறவனைக் கைபிடித்துத் தூக்க, இறங்கினால்தான் முடியும். அப்படி இறங்குவதைத்தான், அவதாரம் என்று சொல்கிறார்கள்.

பரந்தாமன் எடுத்தது ஆயிரம் ஆயிரம் அவதாரங்கள். அவற்றில் ஒரு பத்தை மட்டும் எடுத்து பெரியவர்கள் எல்லாம் அனுபவித்திருப்பதால், பத்து மட்டும்தான் அவனுடைய அவதாரங்கள் என்று சொல்ல முடியாது. யாருமே பத்து என்றும் சொல்லவில்லை. இருபது என்றும் சொல்லவில்லை. ஜென்மம் பலப்பல என்றும், ஜென்மங்கள் ஓடிப்போயின என்றும்தான் சொல்லியிருக்கிறார்கள். அத்தனையும் எதற்கு? அடியவர்களை ரக்ஷிப்பதற்காக. துட்டர்களை நிரசனம் பண்ணுவதற்காக. அப்படியொரு அவதாரம்தான் நரசிம்மாவதாரம்!

அந்தப் பத்து அவதாரங்களுக்குள்ளே, முதல் ஐந்து அவதாரங்களான, மத்ஸ்யாவதாரம், கூர்மாவதாரம், வராகாவதாரம், நரசிம்மாவதாரம், வாமன அவதாரம் இவை ஐந்தும் முதல் யுகத்தில் நடந்தவை. அடுத்துப் பரசுராம, ராமாவதாரங்கள் த்ரே தாயுகத்தில் நடந்தவை. பலராம கிருஷ்ணாவதாரங்கள் த்வாபர யுகத்தில் நடந்தவை. கடைசியாகக் கலியுகத்தில் கல்கி அவதாரம் இனிமேல் நடக்கப் போகிறது. அப்படியானால், முதல் யுகத்துக்கானப் பெருமை, ஐந்து அவதாரங்களும் அந்த யுகத்தில் நடந்தன என்பதுதான்.


அதிலும் ஸ்ரீ நரசிம்மாவதாரத்துக்குத் தனிச்சிறப்பு உண்டு. யாதெனில், நரசிம்மப் பெருமானுக்கு முன்னே இருந்தவர்களெல்லாம் மிருகமாக மட்டும் அவதரித்தவர்கள். நரசிம்மருக்குப் பின்னே இருந்தவர்கள் எல்லாம் மனுஷ்யர்களாகவோ தேவர்களாகவோ அவதரித்தவர்கள். ஆனால் நரசிம்மாவதாரம்தான் மிருகத்வம் நரத்வம் மிருகமான தன்மை, மனிதனான தன்மை இந்த இரண்டும் சேர்ந்திருக்கிற அவதாரம். இதை ‘சிதாக்ஷீர நியாயம்’ என்று சொல்வார்கள்

Comments