பொருள் தந்தான்;அருள் புரிந்தான்!

வேண்டாம் மன்னா” என்று மறுத்தார் தாமாஜி.

“ஏன் மறுக்கிறீர்கள்? ‘மங்கள வடே’வின் அதிகாரியாக இருப்பதில் உங்களுக்கு என்ன ஆட்சேபணை? உங்கள் முன்னோரில் சிலர் கூட கிராம அதிகாரிகளாக இருந்ததுண்டே” என்றான் மன்னன்.

உண்மைதான். ஆனால், தாமாஜி பண்டிதரின் எண்ணம் வேறாக இருந்தது. வேதங்கள் ஓத வேண்டும். பண்டரீபுரநாதனான விட்டலன் குறித்த நாமசங்கீர்த் தனத்தில் ஈடுபட வேண்டும். இவைதான் அந்த இளம் வயதிலேயே தாமாஜியின் நோக்கங்களாக இருந்தன. அப்படியிருக்க, தனக்கு எதற்கு அதிகார பதவி என எண்ணினார் அவர்.

ஆனால், மன்னனுக்கு அந்த மறுப்பே உரமாக இருந்தது. ‘பதவி ஆசை இல்லாத இந்தப் பண்டிதர் தன் பொறுப்பை சரியாகவே செய்வார்.’ எனவே மீண்டும் மீண்டும் வற்புறுத்தினார். வேறு வழியின்றி மன்னனின் விருப்பத்துக்கு சம்மதித்தார். ‘பேதரி’ என்ற, தான் வசித்த ஊரிலிருந்து சற்றுத் தள்ளி அமைந்த மங்களவடே கிராமத்தின் அதிகாரி எனும் பதவியை ஏற்றார் தாமாஜி. வருடங்கள் சில ஓடின...

‘அந்த தாமாஜியா இன்று தனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்? அவரா அரசாங்கத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தினார்?’ நினைக்க நினைக்க மனம் ஆறவில்லை மன்னனுக்கு. வேறு வழியில்லை; விசாரணை செய்யத்தான் வேண்டும். இரு காவலர்களை மங்களவடேவுக்கு அனுப்பினான் மன்னன்.

“தாமாஜியை கைது செய்து அழைத்து வாருங்கள்” என்று ஆணையிட்டான்.

***

தாமாஜி கலக்கத்துடன் இருந்தார்.

சென்ற வருடம்கூட மங்களவடே அமைதியின் இலக்கணமாக இருந்ததே. தெய்வ பக்தியை மக்களிடம் வளர்ப்பதில் தான் காட்டிய முயற்சிகளுக்குப் பெரும் பலன் இருந்ததே. ஆனால், அத்தனை அமைதியும் ஆனந்தமும் தொலைந்து போனதே! பாழாய்ப் போன பஞ்சம் தலைகாட்டியது; தலைவிரித்தாடியது; வானம் பொய்த்தது; நிலங்கள் காய்ந்தன; விவசாயம் நிலைகுலைந்தது; பஞ்சம்; எங்கும் பஞ்சம்!

வெறும் பண்டிதராக இருந்தபோதே தாமாஜி வாடிய முகத்தைக் காணப் பொறுக்கமாட்டார். இப்போதோ கிராமத் தலைவர் வேறு! பஞ்சத்தால் பரிதவித்த மக்களை அவர், தன் வீட்டுக்கு வரவழைத்தார். தன் வீட்டில் இருந்த அத்தனை தானியங்களையும் வாரி வழங்கினார்.

ஆனால், அதெல்லாம் யானைப் பசிக்கு சோளப்பொறியாக இருந்தது.

போதாக்குறைக்கு பண்டரீபுரத்திலிருந்தும் தொடர்ந்து பக்தர் கூட்டம் தாமாஜியின் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தது. அவர்களுக்கும் விருந்தளித்தார் தாமாஜி. அவர் வீட்டிலிருந்த தானிய மூட்டைகள் வெகு சீக்கிரம் கரைந்தன.

இந்த நிலையில், மேலும் சில குடும்பங்கள் தாமாஜி வீட்டை அடைந்தனர். வாழ்ந்து கெட்டவர்கள். அதாவது பஞ்சத்தால் பட்டினி நிலையை அடைந்தவர்கள். பார்க்கவே பரிதாபமாகக் காட்சி அளித்தனர் அவர்கள்.

தாமாஜியிடம் அவர்கள் வாய் திறந்து எதுவும் கேட்கவில்லை. தன்மானம்! ஆனால், தாமாஜிக்கு அவர்கள் தேவை புரிந்திருந்தது. கூடவே தன் வீட்டில் அரிசி, கோதுமை ஆகிய தானியங்கள் சிறிதும் இல்லை என்பதும் விளங்கியிருந்தது. தன்னை நம்பி வந்திருக்கும் இந்த எளிய மக்களுக்கு எப்படி உணவு படைப்பது அல்லது தானியங்கள் அளிப்பது? யோசித்த தாமாஜிக்கு வருத்தம் பொங்கியது. கூடவே வேறொரு எண்ணமும் எழுந்தது. ‘அரசாங்கத்துக்குச் சேர வேண்டிய நெல்லும் கோதுமையும் கிடங்கில் எக்கச்சக்கமாக இருக்கிறது. அந்தக் கிடங்கின் சாவியோ நம்மிடம் தான். கிடங்கைத் திறந்து அரசாங்க தானியங்களை எடுத்து இந்த மக்களுக்குக் கொடுத்தால் என்ன?’ எண்ணம் எட்டிப் பார்த்தது.

கூடவே, தன்னை நம்பி பொறுப்பை ஒப்படைத்திருக்கும் மன்னனுக்குத் துரோகம் செய்யலாமா என்ற கேள்வியையும் எழுப்பியது அவரது மனசாட்சி.

‘பரவாயில்லை. பசிக்குச் சோறிடுவதும் மன்னனுக்குக் கடமைதானே’ என்று சமாதானம் கூறியது மனிதாபிமானம். இறுதியில் மனிதாபிமானமே வென்றது.

அரசாங்க கிடங்கில் இருந்த தானியங்களை ஏழைகளுக்குக் கொடுத்தார். ‘சீக்கிரமே மழை பொழியும். தானியங்கள் விளையும். இப்போது நாம் வினியோகிக்கும் தானியங்களை அப்போது திருப்பித் தந்துவிடப் போகிறார்கள். அப்போது அரசுக்கு உரிய தானியங்கள் தானாகவே திரும்ப வந்துவிடும்’ இப்படி எண்ணிய தாமாஜி, தான் அளித்த தானியங்களைக் கணக்கு வைத்துக்கொள்ளவும் தவறவில்லை. கடமை உணர்வு!

செய்தி மன்னனை எட்டியது. அதன் விளைவுதான் கோபம்; தாமாஜியைக் கைது செய்ய உத்தரவு!

காவலர்கள் மன்னரின் ஆணையைக் கூறினர். பரிதவித்தார் தாமாஜி. பிறகு மனத்தைத் தேற்றிக்கொண்டு காவலர்களுடன் கிளம்பினார்.

பயண வழியில் தென்பட்டது பண்டரீபுரம். ‘விட்டலனைத் தரிசித்துவிட்டு வந்து விடுகிறேன்’ என்று கெஞ்சினார் தாமாஜி. மனம் இரங்கிய காவலர்கள் ஒத்துக் கொண்டனர்.

ஆலயத்துக்குள் நுழைந்த தாமாஜி, விட்டலனின் திரு உருவத்துக்கு முன் கதறினார். ‘பசியால் வாடிய மக்களும் உன் குழந்தைகள்தானே? அவர்களுக்குத் தானியம் அளித்தது தப்பா? சொல் விட்டலா சொல்’ என்று அழுதார் தாமாஜி.

ஆலயத்துக்கு வெளியே காவலர்கள் காத்திருந்தனர். அதே சமயம், அரண்மனை வளாகத்தில் ஓர் அற்புதம் நடந்தேறத் தொடங்கியது.

***

இளைஞன் ஒருவன் அரண்மனையை நோக்கி நடந்துகொண்டிருந்தான். பலம் பொருந்திய தேகம், இடுப்பில் வேட்டி, அடர்த்தியான மீசை இவற்றுடன் காட்சியளித்தான். அவன் கையில் ஒரு தடி. தலையில் சிறு மூட்டை.

வேகமாக அரண்மனைக்குள் நுழைய அவன் முயற்சிக்க, காவலாளிகள் தடுத்தனர். வெகு அலட்சியமாக அவர்களைத் தள்ளிவிட்டு, அந்த இளைஞன் அரசவைக்குள் நுழைந்தான்.

மன்னன் அந்த இளைஞனைப் பார்த்தான். ‘கருப்பான தேகம் என்றாலும் களையுடன் காணப்பட்ட அந்த இளைஞனை நாம் இதற்குமுன் பார்த்ததில்லையே! ஏதாவது தானம் கேட்டு வந்திருக்கிறானோ? அல்லது யார் மீதாவது புகார் கூறி முறையிட வந்திருக்கிறானோ?’

“என்னை தாமாஜி அனுப்பினார். அரசாங்கத்துக்குச் சேரவேண்டிய தானியங்களை நல்ல விலைக்கு விற்றிருக்கிறார். அதன்மூலம் பெற்ற தங்கக்காசுகளை என்னிடம் கொடுத்து அனுப்பியிருக்கிறார். வாங்கிக் கொண்டு ரசீதைக் கொடுங்கள்” என்றான்.

ஆச்சரியப்பட்டான் மன்னன். அதிர்ச்சி அடைந்தான் என்று கூறினாலும் தவறில்லை.

“தங்கக் காசுகளை தாமாஜி கொடுத்திருக்கிறாரா?” என்று உறுதி செய்து கொள்ள, கேட்டான் மன்னன்.

“ஆமாம். நான்கு லட்சம் வராகன் கொடுத்தனுப்பியிருக்கிறார்” என்று வந்த பதிலைக் கேட்டதும் மன்னன் சிரித்து விட்டான். காரணம் அந்த இளைஞன் கொண்டு வந்திருந்த சிறு மூட்டையில் நூறு வராகன்களைக்கூட நிரப்ப முடியாதே. ஒருவேளை இந்த இளைஞன் சித்த சுவாதீனம் இல்லாதவனோ?

தன் தலையிலிருந்து மூட்டையை எடுத்து சாவகாசமாகப் பிரித்தான் அந்த இளைஞன். உள்ளே பொற்காசுகள் தென்பட்டன. ‘சரி; இந்த விளையாட்டில் நாமும் பங்கேற்கலாம்’ என்று தீர்மானித்ததுபோல், தன் அதிகாரிகளைக் கூப்பிட்டு மூட்டையில் உள்ள வராகன் களை எண்ணிப் பார்க்கச் சொன்னான் மன்னன்.

ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியம்! எடுக்க எடுக்க அந்த சின்ன மூட்டையில் தங்கக் காசுகள் வந்துகொண்டேயிருந்தன. “மன்னா, மொத்தம் நான்கு லட்சம் வராகன்கள்” என்று வியர்வையைத் துடைத்தபடி களைப்புடன் அறிவித்தனர் அதிகாரிகள்.

இளைஞனின் முகத்தில் புன்னகை. பின் சட்டென்று அவன் முகத்தில் ஒரு பரபரப்பு தோன்றியது. “மன்னா, எனக்கு நேரமாகிறது. வாங்கிய தொகைக்கு ரசீது கொடுங்கள்” என்றான்.

மன்னனுக்கு குழப்பமும் குறையவில்லை. என்றாலும் வாங்கிய தொகைக்கு ரசீது கொடுப்பதுதானே முறை? கொடுத்தான். அந்த இளைஞனிடம் கேட்பதற்கு மன்னனிடம் பல கேள்விகள் இருந்தன. ஆனால், ரசீது கைக்கு வந்தவுடனேயே அந்த இளைஞன் அங்கிருந்து வேகமாகக் கிளம்பிச் சென்றுவிட்டான்.

***

சற்று நேரத்தில் தாமாஜியைக் கையில் விலங்கிட்டு அரண்மனைக்குள் அழைத்து வந்தனர் காவலர்கள்.

“மன்னா, உங்கள் முன் அனுமதியைப் பெறாமல் செயல்பட்டது தவறுதான். பசியால் வாடிய மக்களின் நிலையைப் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. எனது சொந்த தானியங்கள் எல்லாம் தீர்ந்துவிட்ட காரணத்தால் அரசு தானியங்களை அளித்துவிட்டேன். மழைபெய்து விளைச்சல் கண்டவுடன் தானியங்களை திருப்பிக் கொடுத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று தாமாஜி கூறினார். அப்போது அவர் கண்கள் கலங்கியிருந்தன. தலை குனிந்திருந்தது. கைதாகிவிட்டோமே என்ற வேதனை.

மன்னன் வியந்தான், திகைத்தான், பின் தெளிவு பெற்றான். தாமாஜியின் கால்களில் விழுந்தான். நடந்ததைக் கூறினான். அரசவையில் உள்ள எல்லோரும் மெய்சிலிர்த்தனர்.


‘விட்டலா, எனக்காக நீ வந்து தங்கக் காசுகளை அளித்தாயா? என்மீது சுமத்தப்பட்ட பழியை நீக்க நீயே நேரடியாக வந்தாயா? உன் கருணையை நான் என்னென்று புகழ்வேன்.’ இப்படிக் கதறிய தாமாஜி, ஏதோ ஒரு வேகத்தில் உடனடியாக அங்கேயே அமர்ந்து தன்னிடமிருந்து பகவக் கீதை நூலைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினார். அந்த நூலுக்குள் பத்திரமாகக் காட்சி அளித்தது மன்னன் அளித்த ரசீது!

தொடர்ந்த நாட்களில் தாமாஜி மங்கள வடே கிராமத்துக்கும் திரும்பவில்லை. தனது சொந்த கிராமமான பேதரிக்கும் செல்லவில்லை. தன் ஆயுளை அவர் பண்டரீபுரத்தில் கழிக்கத் தொடங்கினார்.

Comments