கிழவியும் குழவியும்!

முருகப் பெருமானின் ஆறு படை வீடுகளில் ஒருபடை வீடானது பழமுதிர்ச்சோலை. மலை வளத்திலும், மண் வளத்திலும், மர வளத்திலும் சிறந்த பசுமை பூமியில், ஒரு நாவல் மரக்கிளையின் மேல், மாடு மேய்க்கும் சிறுவன் கோலத்தில் அமர்ந்திருந்தான் ஞான பண்டிதனான முருகன்.

பசித்து வந்த தமிழ்ப்பாட்டி, மரத்தின் மேல் இருந்த சிறுவனைப் பார்த்து, “ஒரு கிளையை உலுக்கு. பழம் உதிரும்; அதை உண்டு பசி தீர்த்துக்கொள்வேன்” என்றாள். சிறுவனோ “பாட்டி உனக்குச் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? சொல்!” என்றான். பாட்டி சிரித்துக்கொண்டே, “மரத்தில் கனிந்த பழம் எப்படிச் சுடும்? பழம் பறித்துப் போடு” என்றாள். முருகனும் கிளையை உலுக்கினான். பழங்கள் உதிர்ந்து மண்ணில் விழ, பாட்டி அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து மண்ணைப் போக்க ஊதி ஊதிச் சாப்பிட்டாள். “பாட்டி! பழம் சுடுகிறதா?” என்று கேட்டான் சிறுவன். மரக்கொம்பில் சிரித்துக்கொண்டு அமர்ந்திருந்த சிறுவனின் மதிநுட்பத்தைக் கண்டு வியந்துபோனாள் பாட்டி. ‘இன்று இரவு முழுவதும் என் கண்கள் உறங்காது. பெரிய, பெரிய புலவர்களை எல்லாம் வாதில் வெல்லும் ஆற்றல் உடைய நான், காட்டில் மாடு மேய்க்கின்ற ஒரு சிறுவனிடம் தோற்றுவிட்டேனே’ என்று எண்ணி வருந்தினாள்.

கருங்காலிக் கட்டைக்கு நாணாத கோடாலி
இருங்கதலித் தண்டுக்கு நானும் - பெருங்கானில்
காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்றது
ஈரிரவு துஞ்சாதென் கண்

என்று பாடினாள்.

இந்த உலகில் தோன்றியுள்ள உயிர்கள் அனைத்தும் பாசம், பற்று என்ற மண்ணால் மாசுபட்டிருக்கிறது. இந்த மாசாகிய பற்றினை, வெறும் கல்வி அறிவைக் கொண்டு மட்டும், ஒருவன் போக்கிக்கொள்ள இயலாது. அதற்கு மெய்யறிவு மட்டுமே துணை செய்யும். அந்த மெய்யறிவையும் இறையருளால்தான் பெற முடியும். இதைத்தான், முருகன் ஔவையுடன் நடத்திய உரையாடல் எடுத்துரைக்கிறது.

மாடு மேய்க்கும் சிறுவன்போல் காட்சியளித்த முருகன், தன் சுய வடிவில் தரிசனம் தந்தான். ஔவை, தமிழ்க் கடவுளின் தாள் மலர்களைப் பணிந்தாள். ஔவையின் மூலமாக உலகோருக்கு அறங்களை எடுத்துச் செல்ல விழைந்தான் முருகன். “ஔவையே! இவ்வுலகில் கொடியது எது?” என்று வினவினான். “வறுமை என்ற துயர் ஒருவனைப் பிடித்துக் கொண்டால், அந்த வறுமையே பல இன்னல்களைக் கொண்டு வந்து சேர்க்கும். எனவே வறுமைதான் மிகவும் கொடியது” என்றாள் ஔவை. “அத்தகைய வறுமையைவிடக் கொடியது உண்டா?” என்று முருகன் வினவ, “வாழவேண்டிய இளம் வயதில், ஒருவன் வறுமைப்படுவது மிகவும் கொடியது” என்றாள்.

‘அதைவிட, அதைவிட’ என்று முருகன் அடுக்கிக்கொண்டே போவான் என்று தெரிந்து ஔவை, “தீராத நோயினால் துன்பப்படுவது வறுமையைவிடக் கொடுமையானது. அதைவிடவும் கொடியது மனத்தில் கொஞ்சமும் அன்பில்லாப் பெண்ணுடன் வாழ்க்கை நடத்துவது. அதை விடவும் கொடியது அன்பற்றவள் கையினால் உணவு அருந்துவது” என்று சொல்லி நிறுத்தினாள்.

கொடியது கேட்கின் நெடிய வெவ்வேலோய்!
கொடிது! கொடிது! வறுமை கொடிது!
அதனினும் கொடிது! இளமையில் வறுமை;
அதனினும் கொடிது ஆற்றொண்ணாக் கொடுநோய்
அதனினும் கொடிது அன்பில்லாப் பெண்டிர்
அதனினும் கொடிது இன்புற அவர் கையில் உண்பதுதானே!

அழுத்தந்திருத்தமாக ஔவை அறமுறைக்கும் திறம், நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

தகுதியான பதிலை ஔவை சொல்லக் கேட்ட முருகன், அதனை ஆமோதித்துவிட்டு, அடுத்த கேள்விக் கணையினைத் தொடுத்தான். “ஔவையே, இனியது எது? சொல்!” என்றான். ஔவை யாதொரு தயக்கமுமின்றி சொல்லத் தொடங்கினாள். “ஏகாந்தம் இனிமை தரவல்லது; அந்த ஏகாந்தத்திலும், இறைவனைத் தொழுவது, மேலும் இன்பம் பயக்கவல்லது. அதைவிடவும் இனியது அறிவாற்றல்மிக்க சான்றோர்களுடன் இணக்கமாய் இருத்தல். அதைவிட, பரமனைத் தொழும் மெய்யறிவாளரைக் கனவிலும், நனவி லும் காண்பது இனிமையானது.”

இனியது கேட்கின் தனி நெடு வேலோய்!
இனிது! இனிது! ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்;
அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்;
அதனினும் இனிது அறிவுள்ளாரைக்
கனவிலும், நனவிலும் காண்பதுதானே!

பெரியது எது?” தொடர்ந்து கேட்டான் முருகன். “இந்த புவனம்தான் பெரியது; புவனத்தைப் படைத்த நான்முகன், அதைவிடப் பெரியவன்; நான் முகன், திருமாலின் உந்திக் கமலத்தில் உதித்தான். எனவே, திருமால்தான் பெரியவர்; அந்தத் திருமால் அலைகடலில் பள்ளி கொண்டிருக்கிறார். அதனால், அலைகடல்தான் பெரியது; அந்தக் கடலையே குடித்த அகஸ்தியர் கடலைவிடப் பெரியவர்; அந்தக் குறு முனிவரோ கலசத்தில் இருந்து பிறந்தார்; கலசம் மண்ணால்தான் உருவானது. ஆக, மண், இந்த பூமி பெரியது. அந்த மண்ணும், ஆதிசேஷனாகிய நாகத்துக்கு ஒரு தலைபாரம் அல்லவா. அந்த ஆதிசேஷனோ, அம்பிகைக்கு ஒரு விரல் மோதிரமாக இருப்பவன். அந்த உமையவளோ சிவனாரின் ஒரு பாகத்தாள். அந்த உமையொரு பாகனான சிவனோ தொண்டர்களின் உள்ளத்தில் உறைபவன். எனவே, தொண்டர்கள்தாம் பெருமைக் குரியவர். அவர்தம் பெருமை சொல்லவும் பெரிது.

பெரியது கேட்கின் எரி தவழ் வேலோய்!
பெரிது! பெரிது! புவனம் பெரிது;
புவனமோ நான் முகன் படைப்பு:
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்;
கரியமாலோ அலைகடல் துயின்றோன்
அலைகடல் குறுமுனி அங்கையில் அடக்கம்
குருமுனியோ கலசத்தில் பிறந்தோன்
கலசமோ புவியில் சிறுமண்;
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்
அரவோ உமையவள் சிறு விரல் மோதிரம்
உமையோ இறைவன் பாகத்து ஒடுக்கம்
இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சாற்றவும் பெரிதே”

ஔவையிடமிருந்து இந்தத் தமிழ் அமுதத்தைத் தன் கேள்விக் கணைகளால் ஊற்றெடுக்கச் செய்து, நமக்கு வார்த்தவன் முருகன்.

தொடர்ந்து “அரியது எது?” என்று முருகன் கேட்க, ‘மானுடராய்ப் பிறத்தல் தான் அரியது’ என்றாள். ‘எண்ணரிய பிறவிதனில் மானுடப் பிறவிதான் யாதினும் அரிது அரிது காண்’ என்பார் தாயுமானவர். மானுடராய் பிறந்துவிட்டால் மட்டும் போதுமா? குறையின்றி பிறக்க வேண்டுமே! எனவே, குறையின்றிப் பிறத்தல் அரிது. காணக் கண்ணும், கேட்கச் செவியும், நுகர நாசியும், பேச வாயும், துய்க்க மெய்யும் தந்து, இறைவன் நம்மைக் காத்தல் வேண்டும். அவ்வாறு குறையொன்றுமின்றிப் பிறந்த காலையும், நல்ல கல்வி அறிவு பெற்று, கல்வியின் முதிர்ந்த நிலையான ஞானமும் பெற்று வாழ்தல் அரிதான ஒன்றாகும். அத்தகைய அரிதான வாழ்க்கையில் பொறி புலன்களைக் கட்டுக்குள் வைத்து, தவமும் தானமும் செய்து வாழ்தல் வேண்டும். அவ்வாறு வாழ்வாங்கு வாழ்வாருக்கு வானவர் நாடு வழி திறக்கும் என்கிறாள் ஔவை.

அரியது கேட்கின் வரி வடிவேலோய்!
அரிது! அரிது! மானிடர் ஆதல் அரிது!
மானுடரயினும் கூன், குருடு, செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது!
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்விநயத்தல் அரிது;
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செயல் அரிது;
தானமும் தவமும் தான் செய்வர் ஆயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே!


ஔவையின் தமிழைச் சுவைக்க ஞான பண்டித முருகன் பழமுதிர்ச் சோலைக்கு வந்தான். ஔவையின் தமிழோடு விளையாடி, நமக்கு நல்லறங்களை உணர்த்தினான். மயில் வாகனத்தில் உலகை வலம் வந்த முருகன், கோபித்துக்கொண்டு பழனிக்குச் செல்ல முற்பட்டபோது, “முருகா நீயே ஒரு அருள் ஞானப்பழம்; உனக்கு எதற்கு இன்னொரு பழம்” எனச் சொல்லி முருகனை மகிழச் செய்தவள் தமிழ் மூதாட்டி ஔவை.

முருகனருள் முன்னிற்க, நாடுதொறும் நடந்து, தமிழ்மணம் பரவச் செய்த நம் தமிழ் மூதாட்டியைப் போற்றுவோம்.

Comments