கூழாங்கல் தங்கம்!

சட்டி சித்தர்’ என்று அழைக்கப்பட்ட ஸ்ரீமௌனகுரு கண்ணப்ப சுவாமிகளின் ஜீவ சமாதியின் தரிசனம் பெற, சென்னை புழல் சிறைக்கு அடுத்துள்ள காவங்கரைக்கு செல்வது எளிது. கோயம்பேட்டிலிருந்து 114, C70யும் வள்ளலார் நகரிலிருந்து 57, 57Fம் பூந்த மல்லியிலிருந்து 62ம் இந்த வழியாக செல்கிறது. சாமியின் பெயரிலேயே ஊரின் பெயரும், ஊருக்குள் நுழையும்போது, பெரிய அலங்கார வளைவும் நம்மை வரவேற்கும்.

சட்டி சித்தரின் இயற்பெயர், ஊர் பற்றி எந்தத் தகவலும் இல்லை. தாங்கும் பாத்திரத்தின் வடிவத்தை ஏற்கும் தண்ணீரைப் போல, அந்த ரூப அடையாளங்கள் தற்காலிகமானது என்ற உண்மையை சுத்த ஆன்மாக்கள் சுவீகரித்துக் கொள்கின்றன. திருவொற்றியூர் கடற்கரையில் திசைகளையே ஆடையாகப் போர்த்திக்கொண்ட இந்த சித்தர், நிர்வாணமாகவே சென்னை முழுவதும் சுற்றியபடியே காவாங்கரை வந்திருக்கிறார். மௌனத்தை மொழியாக கொண்ட இவரைப் பார்த்துப் பதறிய ஓர் அம்மையார் தன் வீட்டிலிருந்த வேட்டியைக் கொண்டுவந்து அவர் இடுப்பில் சுற்றிய போதுதான், அவர் ‘அம்மா’ என்று அழைத்து அங்கேயே தங்கிவிட்டாராம். எப்போதும் அவர் கையில் ஒரு சட்டியை வைத்து இருப்பாராம், மணிமேகலையிடம் இருந்த அட்சய பாத்திரம்போல. அதில் தானம் வாங்கிய உணவை, தன்னை நாடி வந்தவர்களுக்கெல்லாம் எடுத்து கொடுத்தபடியே இருப்பாராம். வேட்டி உடுத்திய அந்த அம்மையாரின் கணவர் செல்லமாக ‘சட்டிசோறு கண்ணா’ என்றுதான் அழைப்பாராம். அந்த செல்லப் பெயரிலிருந்து தான் சட்டிசித்தர், கண்ணப்ப சுவாமி என்று அவரவர் விருப்பம்போல அழைக்கலாயினர். மௌன குரு என்றும் அழைக்கப்பட்டார் கண்ணப்ப சுவாமிகள்.

“சிறிய உண்மைகள், தெளிவான சொற்களைக் கொண்டுள்ளன. பேருண்மையோ சொற்களற்ற அமைதியைக் கொண்டிருக்கிறது” என்பார் தாகூர். அந்த பேருண்மையான மெய்யுணர்வு மௌனத்துக்கு, தமிழ் சித்தர்கள் வழங்கிய பெயர் தான் சும்மா. ‘சும்மாயிருப்பதே சுகம்.’ அப்படியே மௌனமாய் - சும்மாயிருந்த சுவாமிகள், பக்தர்கள் குறையென்று தன்னிடம் முறையிடும் போது மட்டும் பேசி வரம்போல வார்த்தைகளை வழங்கியிருக்கிறார்.

சித்தத் தன்மையில் இருப்போர் பேசும்போது, ஒருமையில் உரிமையோடு பேசுவார்கள். இவர் ஒருபடி மேலே போய், பக்தர்களை ‘நைனா’ என்றுதான் கூப்பிடுவாராம். சட்டி சித்தரின் சித்து லீலைகளின் பட்டியல் மிக நீண்டது. தன்னைக் காணவந்த பக்தர்களுக்கு மீன் குழம்பு பரிமாறும்போது, சாப்பிட தயங்கிய ஒரு பிராமணரிடம் “நைனா உனக்கு எதுவோ, அதுவே உண்ணக் கிடைக்கும். எதிலும் திணிப்பு எமக்காகாது நைனா” என்ற போதே கத்தரிக்காய், முருங்கைகாய் வாசம் வீசும்படி சாம்பார் அவர் சாதத்தின் மீது இருந்ததாம்.

நகை செய்ய தன்னிடம் கொடுத்த பணத்தை, வறுமையில் செலவு செய்து விட்ட ஒரு ஆசாரி, அதை திருப்பி தர முடியாமல் மானம் போய்விடுமே, என்று அஞ்சி தற்கொலைக்கு முடிவெடுத்து, கடைசியாக ஒருமுறை கண்ணப்ப சுவாமிகளை அழுதபடி பார்க்க வந்தபோது, “தப்புதான் நைனா... தப்புன்னு தெரிஞ்சி அழுதா, அது தப்பு இல்ல நைனா. இனி தப்பு இல்லாம பொழச்சுக்கோ நைனா” என்று சொல்லி கூழாங்கல் ஒன்றை அவரிடம் கொடுத்துள்ளார். அது தங்கமாக மாறியிருந்ததாம்.

இப்படி எண்ணற்ற லீலைகளைப் புரிந்த கண்ணப்ப சுவாமிகளுக்கு, சில மதவாதிகளின் தொல்லை இருந்ததாம். அவரை தீர்த்துக்கட்டப் பின்தொடர்ந்த போது, சட்டியில் தலையும் மற்ற தன் உடல் பாகங்கள் துண்டுதுண்டாக சிதறிக் கிடக்கும்படி மாற்றிக் கிடக்கும் நவ கண்ட யோகம் கண்டு அலறி ஓடினார்களாம்.

1961ஆம் ஆண்டு பிலவ வருடம், புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையன்று அஸ்த நட்சத்திரம் சோமவாரம் கூடிய நன்னாளில் எல்லோரையும் அழைத்து, தான் சமாதி அடையப் போவதை கூறி, அப்படியே ஜீவசமாதி அடைந்திருக்கிறார். அதற்கு முன், தான் ஜீவசமாதி அடையப்போகும் இடம் எந்த செட்டியாருக்கு சொந்தமானது; எந்த சர்வே எண்ணில்; ஆவணத்தில் எத்தனையாவது பக்கத்தில் எந்த குறியீடு போட்டிருக்கும் என்ற விவரங்களை எல்லாம் சொல்லி, அன்பளிப்பாக நிலதானம் வேண்டாம் என மறுத்து, தன் பக்தன் ஒருவன் பெயருக்கு நூறு ரூபாய்க்கு கிரயம் செய்துதரச் சொல்லி, பின்னரே இவ்விடத்தில் ஜீவ சமாதி அடைந்துள்ளார் சட்டி சித்தர்.

ஜீவ சமாதியின் மீது விநாயகர் சிலை வைத்திருந்ததாகவும், காஞ்சிப் பெரியவரின் ஆலோசனைப்படியே, அச்சிலையை நீக்கிவிட்டு, கண்ணப்ப சுவாமியின் திருவுருவ சிலையை கிழக்கு முகமாக மீண்டும் பிரதிஷ்டை செய்ததாக சொல்கிறார் கண்ணப்ப சுவாமிகளின் சமாதி ஆஸ்ரம அடியார்கள் சங்கத்தின் தலைவர் என். இராமமூர்த்தி.

“சட்டி சித்தர் உயிரோடு இருந்தபோதும், நான்தான் சாமியோட உடுப்புகளை துவைச்சு தந்தேன். இப்பவும் நான்தான் அந்த கைங்கரியத்தை செய்து வர்றேன். இப்போ எனக்கு வயது 81. ஒரு வியாதியும் வந்ததில்லை எனக்கு. இப்பவும் சிலநேரம் இந்த மடத்திலேயே, அவரை நான் இரவில் பார்த்து இருக்கேன் தம்பி” என்கிறார் பாலம்மா.


வேதன் செய்த சிருஷ்டிகள்போல் வேறு செய்குவோம்
வேதனையு மெங்கள் கீழே மேவச் செய்குவோம்
நாதனுடன் நாங்களும் சமமாக வாழ்குவோம்
நாங்கள் செய்கை யாம்இது வென் றாடு பாம்பே...

என்று பாம்பாட்டி சித்தர் பாடியது போல, நாதனுடன் (இறைவனுடன்) சமமாக நாளும் (இன்றும்கூட) வாழ்ந்துக் கொண்டிருக்கும் கண்ணப்ப சுவாமிகளின் ஜீவசமாதியில், நினைத்த காரியங்கள் வெற்றியோடு முடிய, அவரின் காந்த அதிர்வுகளை கைப்பற்ற இன்றே புறப்படுங்கள்...

Comments