கண்ணொளி தந்தவள்!

சோழ மன்னர்கள் தம் தலைநகர் தஞ்சையைச் சுற்றி எட்டுத் திக்குகளிலும், அஷ்டமாசக்திகளைக் காவல் தெய்வங்களாக நிறுவி ஆலயங்கள் அமைத்தனர். அவற்றில் ஒன்றுதான், புன்னைநல்லூர் அருள்மிகு முத்துமாரியம்மன். ஸ்ரீ சமயபுரம் மாரியம்மனின் தங்கைகளில் இவளும் ஒருத்தி.

வைஜயந்தி நுழைவுவாயில் வழியாக உள்ளே நுழைகிறோம். குறிப்பிட்ட முகப்பு வாயிலும், அதன் மீதான மிகச்சிறிய கோபுரமும் நடிகை வைஜயந்திமாலா, தனது பிரார்த்தனையின் பொருட்டு கட்டித் தந்ததாகச் சொல்லப்படுகிறது. முகப்பு மண்டபம் கடந்து சென்றால், ஏழு நிலை ராஜகோபுரம். முகப்பு மண்டபச் சுவர்களில் மாரியின் திருவுருவங்கள் ஓவியங்களாகத் துலங்குகின்றன. அடுத்து வாத்திய மண்டபம். வாத்திய மண்டப முகப்பில், பக்தர்களுக்கு அனுமதியளிக்கும் அனுக்ஞை விநாயகர்; மறுபுறம் சுப்பிரமணியர். அனுக்ஞை விநாயகரை அடுத்து, பூர்ணா புஷ்கலா சகித சாஸ்தா (அய்யனார்) சன்னிதி. அதன் தென்புற பிரகாரம் எதிரே காளியம்மன் சன்னிதி.

பொதுவாக, ஆலயங்களில், துவஜஸ்தம்பம் எனப்படும் கொடிமரம், அடுத்து நந்தி அல்லது ஏதேனும் ஒரு பறவை, தொடர்ந்து பலிபீடம் என அமையப் பெற்றிருக்கும். இங்கு துவ ஜஸ்தம்பம் என்கிற கொடிமரம்.அதனையடுத்து பீடத்துடன் கூடிய கம்பத்தடியான். அடுத்து பலிபீடம். இந்த ஆலயத்தின் அனைத்து உற்சவங்களுக்கும் இந்தக் கம்பத்தடியானே முதன்மையானவர் எனச் சொல்லப்படுகிறது.

கொடிமர மண்டபம் எட்டு தூண்களைக் கொண்டது. அந்தத் தூண்களில் அஷ்டலெட்சுமிகளின் திருவுருவங்கள் சுதை வடிவங்களாக அமைந்துள்ளன. இதனாலேயே இம்மண்டபத்துக்கு அஷ்டலெட்சுமி மண்டபம் என்கிற பெயரும் வழக்கத்தில் உள்ளது. கொடிமர உச்சிக்கு மேலெதிரே மண்டபச் சுவரில் கருவறையை எதிர் நோக்கியபடியாக, தவயோகி சதாசிவ பிரம்மேந்திரரின் திரு உருவச் சிலை. நெடி துயர்ந்த புற்றாகக் காட்சி தந்த அம்மனை, சஹாஜி மன்னரின் வேண்டுகோளுக்கிணங்க, முத்துமாரியம்மன் திருவுருவமாக அமைத்துத் தந்தவர் இந்த சதாசிவ பிரம்மேந்திரர்தான்.

கொடிமர மண்டபத்தையும் வாத்திய மண்டபத்தையும் இணைக்குமிடத்தில், ஐந்து நிலை ராஜகோபுரம். ஆக, புன்னைநல்லூர் முத்துமாரியம்மன் ஆலயத்துக்கு இரண்டு ராஜகோபுரங்கள்! இவற்றைக் கடந்து உள்ளே சென்றால், மணிமண்டபம். எதிரே பக்தர்கள் நிறைந்திருக்கும் வசந்த மண்டபம். இங்கு ஏன் இத்தனைக் கூட்டம்?

இந்த வசந்த மண்டபத்தில்தான் உற்சவ அம்பாளாக, ஐம்பொன் விக்கிரகமாக காட்சித் தருகிறாள் முத்துமாரி. உற்சவ அம்மனுக்குத்தான் அபிஷேகம், ஆராதனை, அர்ச்சனை எல்லாமே. நான்கு திருக்கரங்களுடன் காட்சி தரும் உற்சவ அம்மனைத் தரிசித்து நகர்ந்தால், எதிரே விசாலமான வாயில்கொண்ட கருவறை.

மூலஸ்தானத்தில், மூலவராக சுமார் ஐந்தரை அடி உயரம் கொண்ட அம்பிகை. வலது திருக்கரங்களில் கத்தி, உடுக்கை. இடது திருக்கரங்களில் பாசம், கபாலம். நாம் சென்றிருந்த நேரம், அம்பாளின் திருமேனியில் தங்கக் கவசம் சாத்தப்பட்டிருந்தது. தகதகவென மின்னும் பொன்னிற ஒளிச்சிதறலுக்குள்ளே, நம் கவலைகள் எல்லாம் காணாமல் போகின்றன. ஒரு கணம் மெய்சிலிர்க்கிறது. கருவறை மூலவரான முத்துமாரிக்கு ஏன் அபிஷேகம் இல்லை? எதற்காக முத்துமாரி ஆனாள்? மாரியின் கருணை வெளிப்பட்டது எவ்விதம்? வினாக்கள் நம்மைத் தொடர்கின்றன.

***

தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் வெங்கோஜி ராவ். இவர் புதல்வியின் கண்களில் ரத்தம் வடிந்தது. அரண்மனை மருத்துவர் சிகிச்சையளித்தும் பலன் இல்லை. அமைச்சரின் யோசனையை ஏற்று, குடும்ப சகிதமாக சமயபுரம் வருகின்றனர் அரச தம்பதியினர். மாரியம்மனிடம் முறையிடுகின்றனர். அன்று நள்ளிரவில், அரசரின் கனவில் தோன்றிய மாரியம்மன், “தஞ்சை நகரின் கிழக்கே ஒரு புன்னைவனக்காடு. அங்கு நான் புற்றுருக் கொண்டுள்ளேன். என்னை அங்கே சென்று வழிபடு. எல்லாம் சரியாகிவிடும்!” என்று அன்பு கட்டளையிடுகிறாள்.

வெங்கோஜி மன்னரின் வேதனைத் தீர, இதைவிட வேறென்ன வேண்டும்? உடனே கிளம்பி வருகிறார். புன்னை மரங்கள் அடர்ந்த அந்த வனத்தில் தேடுகிறார். வனத்தின் மத்தியில் பிரம்மாண்ட புற்று. அவ்விடத்தில் மகமாயியின் திருவுருவம் காட்சியளிக்கவே, உடல் சிலிர்த்துப் போகிறார்கள் அனைவரும். மன்னன் மகளின் விழிகளிலிருந்து வடிந்து கொண்டிருந்த ரத்தம் நின்றுபோகிறது. மன்னருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அந்தப் புன்னை வனத்தைச் சுற்றியிருக்கும் நிலப்பரப்பை அம்மனுக்குக் காணிக்கையாக்குகிறார். அதுவே புன்னைநல்லூர்.

***

காலம் ஓடியது. துளஜா ராஜா ஆட்சி புரிந்த காலம். அவர் மகளுக்கு, கண்களில் பூ விழுந்து பார்வை மறைந்துபோனது. புன்னைநல்லூர் வந்து, புற்றுருவில் காட்சி தந்த அம்மனை வேண்டிக் கொண்டார். பூ தானாகவே உதிர்ந்து, பார்வை தெளிவாக முன்போல தெரியலாயிற்று. மனம் குளிர்ந்த மன்னர், கோயிலும் திருச்சுற்றும் அமைத்துத் தந்தார். துளஜா ராஜாவின் தம்பியான சஹாஜி மன்னர், சதாசிவ பிரம்மேந்திரரிடம் வேண்டுகோள் விடுக்க, அதனையேற்று புற்று மண்ணைப் பிசைந்து தைலங்கள், புனுகு, ஜவ்வாது சேர்த்துக் கலந்தரைத்து, முத்து மாரியம்மன் திருவுருவினை வடித்து, அதன் கீழே ஸ்ரீசக்கர யந்திரத்தை பிரதிஷ்டை செய்தார் சதாசிவ பிரம்மேந்திரர்.

கண்ணொளி வழங்கிய முத்துமாரியம்மனின் திருவுரு, புற்று மண்ணால் ஆனதால், அதற்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. கருவறை முன்பாக எழுந்தருளியிருக்கும் உற்சவமூர்த்திக்கே அபிஷேகம்.

கருவறை மூலவர் திருமேனியிலும் முகத்திலும் வெயில் காலத்தில் வெப்பம் தாளாது, வியர்வைத் துளிகள் முத்துக்களாக தோன்றுவது உண்டு. பின்னர், அவை தாமாகவே மறைந்துவிடும். அதனால் முத்துமாரி என்ற பெயர் கொண்டாள் இந்த புன்னை நல்லூர் தேவி.

அம்மை நோய் கண்டவர்கள் கண் பார்வை பாதித்தவர்கள் ஆகியோர் தங்கிச் செல்வதற்கென்று இங்கு தனி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அம்மனின் அபிஷேக தீர்த்தமும், அபிஷேகப் பாலும் அவர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அதுவே அருமருந்தாகவும் அமைந்துபோகிறது.

கோயிலின் உட்பிரகாரத்தில் சிறிய குளம். என்னவென்று கேட்டால், வெல்லக்குளம் என்கின்றனர். தஞ்சை மேல வாசலிலிருந்து வந்திருந்த ரத்னாவதி என்கிற பெண்மணி, அக்குளத்தில் வெல்லக் கட்டியினைப் போட்டுக்கொண்டிருந்தார். “என் பேரனுக்கு முதுகிலே கட்டி வந்துள்ளது. இங்கு வேண்டிக்கொண்டு, இக்குளத்தின் வெல்லக்கட்டியைப் போட்டால், வெல்லக் கட்டி கரைந்துபோவது போல, உடலில் ஏற்பட்டுள்ள கட்டியும் கரைந்து போகும்!” என்கிறார்.

(அடுத்த இதழில் நார்த்தாமலை)

இருப்பிடம்:

தஞ்சை - நாகை தேசிய நெடுஞ்சாலையில், தஞ்சையிலிருந்து ஏழு கி.மீ. தொலைவில் உள்ளது புன்னைநல்லூர். தஞ்சை பழைய பேருந்து நிலையத் திலிருந்து நீடாமங்கலம் மற்றும் அம்மாப்பேட்டை செல்லும் நகரப் பேருந்துகளில் வந்து சேரலாம். பத்து நிமிடங்களுக்கு ஒரு நகரப் பேருந்து வசதி உள்ளது.

தரிசன நேரம்: காலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணிவரை. ஞாயிறு மட்டும் அதிகாலை ஐந்து மணிக்கே நடை திறக்கப்படுகிறது. இடைப்பட்ட நேரங்களில் நடை சாத்தப்படுவது இல்லை.

பிரசாதம்!

காலை சந்தி பூஜா காலத்தில் தயிர்பள்ளயம் நைவேத்யம் இங்கு பிரசித்தம். சாதம் வடித்து சுத்தமான பசுந்தயிர் விட்டு உப்பு சேர்க்காமல், சிறிய வெங்காயத் துண்டுகள் மற்றும் குளிர்ச்சி தரும் பழத் துண்டுகள் சேர்த்துப் பிசைந்து தயாரிப்பதே தயிர் பள்ளயம். அம்மை நோய் கண்டவர்களுக்கு தயிர் பள்ளய பிரசாதம் தகுந்த மருந்துணவு.

உற்சவங்கள்!

“ஆலயத்தில் முன்று பட்சங்கள் கொண்ட உற்சவம், இங்கு மிகச்சிறப்பு. இதனை, த்ரயி பக்ஷ உற்சவம் என்று சொல்வார்கள். ஆடி மாதம் கடைசி வெள்ளி, கிருஷ்ண பட்சத்தில் கொடியேற்றம். ஆவணி மாத ஞாயிறுகளில், சுக்கில பட்சத்தில் ஞாயிறு உற்சவம். புரட்டாசி முதல் செவ்வாய், கிருஷ்ண பட்சத்தில் கொடியிறக்கம். மேற்கண்ட நாற்பதைந்து நாட்களும் ஆலய பிரமோற்சவம். ஆவணி மாதம் கடைசி பத்து நாட்களில் காலை, மாலை சுவாமி புறப்பாடு. ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமை திருத்தேர் திருவிழா. ஆவணி ஞாயிறுகளில் சராசரி ஒரு லட்சம் பக்தர்கள் வந்து செல்வார்கள். தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்குட்பட்ட 88 கோயில்களில் இதுவும் ஒன்று. அதிக வருவாய் உள்ள கோயில்களில் முதலிடம்!” என்கிறார் கோயில் அர்ச்சகர் சங்கர் சிவாச்சாரியார்.

தெப்போற்சவம்!

பங்குனி மாதம் முதல் ஆடி மாதம் வரை செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் கூட்டம் கூட்டமாக பால் குடம் எடுத்து வருவார்கள். ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை பூச்சொரிதல். புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழாவின்போது வரும் ஞாயிற்றுக்கிழமையன்று, தெப்போற்சவம். கோயிலுக்கு தென்புறத்தில் உள்ள திருக்குளத்தில் தெப்பத்திருவிழா நடைபெறும்.

தண்ணீர் நிரப்புதல்:

கோடையில், அக்னி நட்சத்திர சமயத்தில், வெப்பம் தணிக்க வேண்டி, கருவறையை ஒட்டிய உள் தொட்டியிலும் வெளித் தொட்டியிலும் தினசரி தண்ணீர் நிரப்புவதுண்டு. பக்தர்களும் வேண்டிக் கொண்டு அதன் இரு தொட்டிகளிலும் நீர் நிரப்பி நேர்த்திக்கடன் செலுத்துவர்.

தைலக்காப்பு!


புற்று மண் திருவுவான முத்துமாரியம்மனுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தைலக்காப்பு அபிஷேகம் செய்விக்கப்படுகிறது. சாம்பிராணி தைலம், புனுகு, ஜவ்வாது, அரகஜா ஆகியவைகள் அம்மனின் திருமேனி மீது சாத்தப்பட்டிருக்கும். அந்த நாற்பத்தியெட்டு நாட்களிலும், அம்மனின் திருமுகம் மட்டுமே பக்தர்களுக்கு தரிசனம்!

வெள்ளைத் திரையில், அம்மனின் திருவுருவம் வரையப்பட்டு, கருவறை வாசலில் அப்போது பொருத்தப்பட்டிருக்கும். கடந்த 2009, ஏப்ரல் மாதம் தைலாபிஷேகம் நடந்துள்ளது.



Comments