எல்லாமாகி...எல்லோருமாகி!

இப்படியே எத்தனை பிறவிகளை நான் எடுக்க வேண்டும்? தங்கள் திருவுள்ளம்தான் என்ன?”

தேவியின் கேள்விக்கு எப்போதும் போல் புன்னகையையே மறுமொழியாய்த் தந்தான் எம்பெருமான்.

“இது பிறவி இல்லை தேவி! எந்த மானிடத் தாயின் கருவறையிலும் நீ சிறைப்பட்டிருக்க வேண்டாம். இது ஒரு தவம். உனக்கும் எனக்கும் மட்டுமே புரியக்கூடிய திருவிளையாடல்...” என்று அருளினான் பரந்தாமன்.

பள்ளியணைப் பாம்பு சற்றே சிலிர்த்துக்கொண்டது. எத்தனை முறை இவர்களின் உரையாடலைக் கேட்டு மகிழ்ந்தவன் இந்த ஆதி சேடன். இம்முறையும் நம்மை பூவுலகத்துக்கு அனுப்பாமலிருந்தால் சரி என்று நினைத்துக்கொண்டான்.

அவனுடைய மனமறிந்த எம்பெருமான், “ஆதிசேடா! இனி ஒருமுறை உன்னை நான் பூவுலத்துக்கு அழைப்பதாயில்லை. நாமும் அங்கே பிறப்பெடுக்கும் உத்தேசமில்லை. இது ஒரு நொடிப் பொழுதில் நிகழ்கிற அனுபவம்தான்” என்று உறுதியளித்தான்.

அடுத்த சில நொடிகளில் அந்த அற்புதம் நிகழ்ந்தது பூமியில். தென் தமிழ்நாட்டில், ஒரு சின்னஞ்சிறு பகுதியில் நந்தவனம் காத்துத் திருப்பணி செய்துகொண்டிருந்த பெரியவரின் பார்வை பேறுபெற்றதானது. கண்களையே நம்பமுடியமால் பார்த்தபடி நின்றார் அவர்.

துழாய்ச் செடியின் அருகே கிடந்தாள் அன்னை, ஒரு சின்னஞ்சிறு மலராக!

‘ஒரு மகள் தன்னை உடையேன், உலகம் நிறைந்த புகழால் திருமகள்போல் வளர்த்தேன்’ என்று பெருமிதத்தோடு இறைவன் திருப்பணியில் ஈடுபடும் விஷ்ணு சித்தர் தான் அந்தப் பேறு பெற்றவர்.

குழந்தை வளர்ந்தது. ஆடிப்பாடி மகிழ்ந்தது. பெரியவரையும் மகிழ்வித்தது. விஷ்ணு சித்தர், பெருமாளுக்கு மாலை கட்டும் விரல் நேர்த்தியைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தது. ‘அப்பா’ என்று வாயாற அழைத்து உறவாடியது.

எல்லாமே விளையாட்டாய் வளர்ந்த குழந்தைதான், திருப்பாவை பாடி சம வயதுக் குழந்தைகளோடு மார்கழிக் குளிரை அனுபவித்து மகிழ்ந்த ஆண்டாள்.

எல்லாக் குழந்தைகளுக்கும் ஏற்படக் கூடிய ஆசை அவளுக்கும் ஏற்பட்டது. வண்ணமயமான நறுமண மலர்கள் பொதிந்த மாலையை தினமும் பெரியவர் கட்டுவார். மலர் மணத்தை விடவும் பக்தி மணமே கூடுதலாக இருந்த அந்த வண்ண மலர் மாலைகளை தினமும் அரங்கனுக்கு அணிவிப்பார்.

அப்பா கட்டுகிற அந்த வண்ண மலர் மாலையை ஒருநாள் அறிந்தும் அறியாமலும், தானே சூடிக்கொண்டாள் சிறுமி. ஆடியில் அழகு பார்த்து மகிழவும் செய்தாள். அதன்பிறகு அலுங்காமல் அந்த மலர் மாலையைக் கழுத்திலிருந்து எடுத்து, கோயிலுக்கு அப்பா எடுத்துச் செல்லும் குடலையில் பத்திரமாக வைத்தும் விட்டாள்.

இறைவனுக்கு அர்ப்பணிக்கப் போகும் மலர் மாலையில் ஏதோ மாற்றம் இருப்பதாகத் தோன்றியது விஷ்ணு சித்தருக்கு. கேட்டார். ஆண்டாள் சூடிக் களைந்த மலர் மாலை அது என்பது தெரிய வந்தது.

சற்றே வெகுண்டார். இருப்பினும் செல்வ மகளாயிற்றே! அவளைக் கடிந்து கொள்ள முடியவில்லை அவரால்! இறைவனின் சன்னிதிக்குப் போக வேண்டிய நேரம் விரைந்து கொண்டிருந்தது.

அவசரம் அவசரமாக மீண்டும் நந்தவனம் புகுந்து வேண்டிய மலர்களைக் கொய்து எடுத்து வந்து புத்தம் புதிதாய் ஒரு மலர் மாலையைக் கட்டி எடுத்துக் கொண்டு அரங்கன் கோயிலுக்குப் போனார் விஷ்ணு சித்தர்.

தன் எதிரே பரபரப்போடும், பக்தி மேலிட்டவாறும் வருகிற விஷ்ணு சித்தரைக் கண்டு நெகிழ்ந்தார் ரங்கமன்னார். இந்த விஷ்ணு சித்தர் யார் என்பதையும் எம்பெருமானே அறிவார். முகுந்தன் - பத்மா தம்பதிகளுக்கு, தன்னைக் காலமெல்லாம் சுமந்து திருத்தொண்டாற்றும் பேறு பெற்றவனான கருடனையே ஐந்தாவது மகவாகப் பிறக்க அருளியவர் அல்லவா எம்பெருமான். அந்த கருடனுக்கே, மாமனாராகும் பேற்றையும் தரத் திருவுள்ளம் கொண்டார்.

மலர்த் தொண்டோடு, ஆலயத் தூய்மை என்ற திருப்பணிக்கும் தம்மை அர்ப்பணித்துக்கொண்டவர் விஷ்ணு சித்தர். ‘அலகிலா விளையாட்டுடைவர்’ தன் அடியாரிடம் விளையாடிப் பார்க்க விழைந்ததில் என்ன வியப்பு?

‘புதிய’ மலர் மாலையைக் கண்டு புன்முறுவல் மிளிர்கிறது. “எமக்கு இந்த மலர் மாலை வேண்டாம். உம்முடைய சுடர்க்கொடி சூடிக்களைந்த மலர் மாலை தான் வேண்டும். இன்று மட்டுமல்ல; என்றென்றும்...” என்று எம்பெருமான் திருவாய்ச் சொல் கேட்டு விதிர்ப்படைகிறார் விஷ்ணு சித்தர்.

‘அபசாரமில்லையா? சூடிக்களைந்த மலர் மாலை...’ என்றெல்லாம் சிந்திக்கக் கூட அவசரமில்லை. ஓடோடிச் சென்று செல்வத் திருமகள் சூடிக்களைந்த மலர் மாலையை எடுத்து வந்து எம்பெருமானுக்கு அர்ப்பணிக்கிறார்.

‘மானிடவர்க்கு என்று பேச்சுப் படின் வாழகில்லேன்’ என்ற விரதம் எடுத்த கோதையை - அரங்கத்துப் பிரான் ஆணைப்படி ‘மணமகளாக’ அழைத்துச் சென்றார். திருவரங்கத்துக்குச் சற்று தொலைவிலேயே பல்லக்கில் சுமந்து சென்ற மணமகள் ஆண்டாள் மாயமாகிப் போய் விடுகிறாள்.

‘ஒரு மகள் தன்னை உடையேன்

உலகம் நிறைந்த புகழால்

திருமகள் போல் வளர்த்தேன்

செங்கண்மால் தான் கொண்டு போனான்’

என்று பதறி என்ன செய்ய? திருவரங்கத்தில் அரங்கனோடு காட்சியருள்கிறாள் ஸ்ரீஆண்டாள்.

இந்தத் ‘தென்னரங்கத்து இன்னமுதன்’ சரியான மாயக்காரப் பேர்வழிதான். கிருஷ்ணாவதாரத்தின் மிச்சம்போல் எத்தனை எத்தனை காதல் அனுபவங்கள் இவனுக்கு?

திருவிழாக்காலங்களில்கூடக் கருவறைப் படியைத் தாண்டி வெளிவராத பெருமைபெற்ற அரங்கநாயகித் தாயாரைத் தவிர, உறையூரை அரசாண்ட நந்த சோழனின் திருமகள் கமலவல்லி, குல சேகரப்பெருமானின் செல்வ மகள் சேரகுலவல்லி - என்றெல்லாம் பிற்காலத்தில் இந்த அரங்கநாதனிடம் அடைக்கலப்படப் போகிறார்களே! மத எல்லைகளைக் கடந்தும் தில்லி பாதுஷாவின் மகள் ஒருத்தி இந்த அரங்கனிடம் பிரேமை கொள்ளப் போகிறாளே!


எல்லாமாகி, எல்லோருமாகி விளையாடுகிறவன் அவன். இதில் மண்ணிடை மலர்ந்த ஆண்டாள் அடைக்கலப்பட்டதும் புதுமையன்று.

சிவிகையிலிருந்த ஆண்டாளை மாயப்படுத்திக் கொண்டு வந்த எம்பெருமானிடம் கேட்டாள் தேவி. “இப்போது திருப்தியா?”

“திருப்தியும் உளநிறைவும் நமக்கெதற்கு தேவி? நம்மை அர்ச்சையில் கண்டு ஆனந்தப்படுகிறவர்களுக்காகத்தானே இவ்வளவும்?” என்றான் பரந்தாமன்.



Comments