பெருமாள் பிரசாதம்

சூழ்நிலை, இயலாமை என்று பல காரணங்களால் பக்தன் தடுமாறலாம். ஆனால், அவற்றையும் கடந்து, அந்தப் பக்தியை பகவான் ஏற்கிறான் என்பதற்கான உதாரணம் இந்தக் கட்டுரை!

பெருமாள் கருணைகாட்டவே இல்லையே என்று பதினேழு வருஷமாகக் கவலை.

மகனுக்கு இப்போது 42 வயது. இன்னும் கல்யாணம் ஆகவில்லையே என்ற ஆதங்கம்.

திருப்பதிக்கு நடந்தே மலையேறுவ தாக முதல் பிரார்த்தனை. அப்படியும் திருமணமாகவில்லை.

ஜாதகத்தில் குறையில்லை - மாப்பிள்ளைக்கும் ஒரு குறையும் இல்லை. ஆனாலும் பெருமாள் வழிகாட்டவில்லை.

ஐந்தாண்டுகள் ஓடியபின், திருப்பதியில் அங்க பிரதட்சணம் செய்வதாக இரண்டாம் பிரார்த்தனை. அப்போதும் பலனில்லை. மறுபடி, ஏழாண்டு கழித்து மூன்றாவது ஒரு வேண்டுகோள் - முடி காணிக்கை தருவதாக வேண்டுதல்.

இப்படி வேண்டியே பதினேழு வருடம் ஆகிவிட்டது.

நல்ல இடத்தில் திருமணம் நடந்தது.

வேண்டிக்கொண்டபடி பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கு உடம்பில் சக்தி இல்லை. பத்துப் பதினைந்து அடி தூரம் கூடம் நடக்க முடியாது - காமாட்சி உறுதியாக இருந்தாள்.

ஒருவழியாகத் திருப்பதிக்கு வந்தாகி விட்டது. சின்னத் திருப்பதியிலிருந்து மேலே மலையேறும்போது, முதல் ‘டோல்’கேட்டில் வலதுபக்கம் இரண்டு மலை அடுக்குக்கு நடுவே திருப்பதி கோயில் கோபுரம் தெரிந்தது.

“காமாட்சி கோபுர தரிசனம் செய்து கொள். இதுவே பெரிது” என்றார் கணவர்.

நடந்தே மலையேறும் பிரார்த்தனையையும் அங்கப்பிரதட்சிணம் செய்வதையும் புதுமாப்பிள்ளையும் பெண்ணும் தாங்கள் செய்வதாக முடிவு செய்துவிட்டனர்.

அது மார்கழி மாதம். மலையில் பெரிய கூட்டம் ஐயப்ப பக்தர்களும் சேர்ந்து கொண்டார்கள் அது ஞாயிற்றுக் கிழமையும் ஆகிவிட்டது.

சோதனையாகத் திருமலையில் திமுதிமு கூட்டம். இவ்வளவு மக்கள் கூடினாலும் ஒரு சருகோ, தாளோ இல்லாமல் மலையைப் பெண்கள் பெருக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

மந்திரங்களும் துதிப்பாடல்களும் காற்றைப் புனிதம் செய்து கொண்டிருந்தன.

அம்மா கஷ்டப்படாதே. ‘பூமுடி’ என்று சிறிது முடியை வெட்டி காணிக்கை செய்து விட்டு, உண்டியலில் நிறைய பணம் போட்டால் பெருமாள் ஏற்பார் என்று காமாட்சிக்குப் பலரும் சொன்னார்கள்.

மூன்று பிரார்த்தனையில் முடி இறக்குவதாகிய சிறிய பிரார்த்தனையையாவது செய்யாமல் போனால் அது தவறாகிவிடும் என்று, காமாட்சி முடி இறக்கும் இடம் சென்றார்.

சுமார் ஆயிரம் அடி தூரம்தான் நடக்க வேண்டும். அதன்பிறகு ‘கியூ’ வரிசை. ஆனால், பத்தடி கூட நடக்க முடியாமல் நின்றும் அமர்ந்தும் மெல்ல மெல்ல சென்றாள்.

முடி இறக்கும் தொழிலாளர்கள் முப்பது பேர் மட்டும் இருப்பதால் முப்பது முப்பதாகக் கூட்டத்தைப் பிரித்து அனுப்பினார்கள். இதுவே மதியம் ஒன்றரை மணி ஆகிவிட்டது.

பிறகு கதவையே அடைத்துவிட்டார்கள். இனி மாலை நான்கு மணிக்குத்தான் என்று சொல்லிவிட்டார்கள்.

காமாட்சிக்கு மேலும் சோதனை. மாலை 6 மணிக்குத்தான் முடியிறக்க முடியுமானால், மலையில் இரவுக் குளிரில் எப்படி குளிப்பது?

‘திரும்பிவிடுவது’ என்று முடிவு. மீண்டும் கோபுர தரிசனம் மட்டும் நடந்தது.

திருப்பதியைத் தவிர்த்து ஒரு மூன்று பெருமாள் கோயில் பெயர்களை எழுதிப் போட்டு எடுத்ததில், குணசீலம் என்ற கோயில் பெயர் கிடைத்தது.

இதுவும் பெருமாள் சம்மதம் என்று கருதி ஊர் திரும்பினர். பெண்ணும் மாப்பிள்ளையும் பிரார்த்தனையை முடித்தார்கள். ‘பிரார்த்தனை தவறிவிட்டதே’ என்று காமாட்சியின் மனத்தில் ஒரு குறுகுறுப்பு இருந்தது. 500 ரூபாயை உண்டியலில் செலுத்தி, ஊர் வந்தார்கள்.

திருச்சிக்கு 35 கி.மீ. தூரத்தில் காவிரிக் கரையில் இருக்கிறது குணசீலம். மன நிலை பாதித்தவர்களுக்குக் குணம் தரும் கோயில்; ஆகையால் குணசீலம் என்று பெயர்.

இது சின்ன திருப்பதி - தென் திருப்பதி என்று பெயர் வழங்குவதால் காமாட்சியின் மனத்தில் பாரம் குறைந்தது.

பிரசன்ன வெங்கடாசலபதி என்றுதான் பெருமாளுக்குத் திருநாமம் என்று கேட்டதும், காமாட்சிக்கு மேல் திருப்பதிக்கே சென்றமாதிரி மனம் மகிழ்ந்தது.

முடிகாணிக்கை தந்துவிட்டு - கங்கையில் புனிதமான காவிரித் தீர்த்தத்தில் நீராடியதும், பெருமாள் அனுக்கிரகம் தானோ என்று காமாட்சி நினைத்தாள்.

பட்டாசாரியார், இவர்கள் திருமலையில் இருந்து திரும்பி வருவதைக் கேள்விப்பட்டு, “திருமலையில் இருப்பதுபோலவே இங்கும் பெருமாள் காட்சி தருகிறார் - அங்கே ஓதும் வேதமந்திரங்களையே இங்கும் நாங்கள் ஓதுகிறோம். ஆகவே, திருமலையில் செய்யும் பிரார்த்தனையாகவே கருதலாம்” என்றார்.


குணசீலத்தில் பெருமாளைச் சேவித்து விட்டு வீடு திரும்பினார்கள். வீட்டு வாசலில் ஒரு கார் நின்றது.

காமாட்சியின் அண்ணன் திருப்பதி சென்று திரும்பி வந்திருந்தார். திருப்பதி லட்டும் பிரசாதமும் தன் தங்கையின் கையில் கொடுத்தார்.

காமாட்சியின் கண்களில் நீர் தாரையாக வழிந்தது. பிரசாதத்தைக் கையில் ஏற்றுத் தலைமேல் வைத்து பெருமாளை நினைத்து வணங்கினாள்.

“உன் பிரார்த்தனையைப் பெருமாள் ஏற்றுக்கொண்டதற்குச் சாட்சியாகப் பெருமாள் பிரசாதமே வந்துவிட்டது.”



Comments