ஆன்மீக கேள்வி -பதில்கள்

செவ்வாய், வெள்ளி ராகுகாலம் இரண்டும் ஏன் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது?

நவகிரங்களுக்குள் புதன் கிரகம் வலிமையானது. புதனைவிடச் செவ்வாயும், செவ்வாயைவிட சனியும், அதைவிட குருவும், குருவைவிட சுக்கிரனும், சுக்கிரனைவிட சூரியனும் பலம் பெற்றது. சூரியனைவிட ராகுவும் ராகுவைவிட கேதுவும் அதிக பலமுள்ள கிரகங்கள் என்கிறது ஜோதிஷ சாஸ்திரம். ஆகவே, ராகு கிரகமும் அதனால் ஏற்படும் நன்மைகளும் தீமைகளும் மற்ற கிரகங்களைக் காட்டிலும் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

பன்னிரண்டு ராசிகளில் சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களுக்குத்தான் சொந்தமாக வீடு என்று உண்டு. ராகு கேதுகளுக்கு தனியாக வீடு என்பது இல்லை (இதில் கருத்து வேறுபாடு உண்டு). இதேபோல் கிழமை விஷயமும். ஒவ்வொரு கிரகத்துக்கும் தலா ஒவ்வொரு கிழமை வீதம், மொத்தம் ஏழு கிழமைகள்தான். ராகு கேதுவுக்கு தனியே கிழமைகள் இல்லை. என்றாலும், ஒவ்வொரு நாளும் மூன்றே முக்கால் நாழிகை (ஒன்றரை மணி நேரம்) ராகுவுக்கு பலம் உண்டு. அதுதான் ராகு காலம்.

அதாவது ஒவ்வொரு நாளும் முப்பது நாழிகையுடைய பகலின் (12 மணி நேரத்தின்) எட்டில் ஒரு பகுதியான மூன்றே முக்கால் நாழிகை (1.30 மணி நேரம்) ராகு காலம் என்று அழைக்கப்படுகிறது. இது பகல் பொழுதின் அளவான 12 மணி நேரத்துக்கு கணக்கிடப்பட்டுள்ளது. பகல் பொழுதின் அளவில் நிகழும் ஏற்ற இறக்கங்களையொட்டி, ராகு காலத்தில் சிற்சில நிமிடங்கள் வேறுபடலாம்.

ராகு கிரகத்துக்கு அதிதேவதையாக துர்கை கூறப்பட்டுள்ளாள். மேலும் குஜவத் ராகு: சனிவத் கேது: (இதை மாற்றிச் சொல்வோரும் உண்டு) என்னும் வசனப்படி, செவ்வாயைப் போலவே ராகுவுக்கு பலனைச் சொல்ல வேண்டும் என்றும், சனியைப் போலவே கேதுவின் பலன் அமையும் என்றும் கூறுகிறது ஜோதிஷம். இதை கவனிக்கும்போது செவ்வாய் கிரகத்துக்கும் ராகு கிரகத்துக்கும் ஏதோ ஒருவிதத்தில் தொடர்பு இருப்பது நன்கு புலப்படும், ஆகவேதான் செவ்வாய்க்கிழமையன்று ராகு கிரகத்துக்கான ப்ரீதிகள் (துர்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றுதல், நாகத்துக்கு (பாம்பு புற்றுக்கு) பால் வார்த்தல், அம்மனுக்கு நெய்தீபம் போடுதல் போன்றவை நடத்தப்படுகின்றன.

ஸ்வர் பானு என்னும் அசுரன்தான் ராகு என்று பெயர்மாற்றமடைந்துள்ளான் என்கிறது புராணம். அனைத்து அசுரர்களுக்கும் தலைவராக குருவாக இருந்து அசுரர்களை வழி நடத்தியவர் சுக்கிரன் என்னும் கிரகம். ஆகவே, ராகுவும் சுக்கிரனும் ஒருவருக்கொருவர் நட்புடன் கூடியவர்கள். தனது நண்பரான - குருவான - சுக்கிரனின் ஆதிக்கத்துக்குட்பட்ட வெள்ளிக்கிழமையில் தனக்கான பரிகாரத்தை செய்தால், ராகு அதிகமான மகிழ்ச்சியடைகிறார். ஆகவே தான், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமையில் ராகு காலம், மற்ற நாட்களை விட அதிகமான பலம் வாய்ந்தவை.

பில்லி சூன்யம் என்று கூறுகிறார்கள். ஜாதகத்தைப் பார்த்து அவ்வாறு உள்ளது என்று கூற முடியுமா?

மந்திரங்கள் என்பவை கூர்மையான ஓர் ஆயுதம். இதைப் பயன்படுத்தி நன்மையையும் கெடுதலையும் கூட செய்ய முடியும். இருக்குமிடத்தைப் பொறுத்தே ஆயுதங்களின் பயன்பாடு அமையும். அதைப்போல்தான் மந்திரங்களும். ஆகவே ஒருவர் மந்திரங்களை ஜபம், ஹோமம் செய்து, ஸித்தி செய்து கொள்வதன் மூலம், தனக்கும் மற்றவருக்கும் நன்மையைச் செய்ய முடியும் என்பதைப் போலவே, மற்றவரைத் துன்புறுத்தும் செயல்களையும் செய்ய முடியும் என்பதே உண்மை.

ஒருவருக்கு செய்வினை செய்யப்பட்டிருக்கிறதா? என்பதை, ஜாதகத்தில் அவர் பிறந்த ராசியை (சந்திர லக்னத்தை) கொண்டும், அவ்வப்போது மாறும் (சனி- குரு) கிரகப் பெயர்ச்சிகளைக் கொண்டும், அந்தச் சமயத்தில் நடைபெறும் தசா புக்திகளைக் கொண்டும், கோசார பலன்கள் மூலமாக ஆராய்ந்து ஓரளவு கண்டுபிடித்துவிட முடியும். பிறந்த (ஜன்ம) லக்னம் மூலம் ஆராய்ந்தால் இதைத் துல்லியமாகக் கண்டுபிடிப்பது இயலாது.


ஆனால், இவ்வாறு மற்றவரால் ஏவப்படும் தீவினைகள் அனைத்தும், நேர் வழியில் தர்மத்தை மீறாமல் நியாயமாக சம்பாதித்து வாழ்க்கையை நடத்துபவரையும், தெய்வத்துடன் நெருக்கமாகத் தொடர்பு வைத்திருப்பவரையும், எவ்விதத்திலும் பாதிக்காது. அந்தத் தீவினை அதை ஏவிய நபரிடமே திரும்பச் சென்றுவிடும். ஒருவர் எப்போது தீய வழியில் செல்லத் தொடங்குகிறாரோ, அப்போது, சமயம் பார்த்து தீவினைகள் செய்வினைகள் அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அப்படி ஏவச் செய்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதா என்றால், செய்தவர்கள், செய்யச் சொன்னவர்கள் இருவருக்கும் பின்னாளில் பாதிப்பு உண்டு.



Comments