சங்கடம் தீர்த்த பிரார்த்தனை!

நான் ஷிர்டி பாபாவின் பக்தை. ஒவ்வொரு வியாழக்கிழமையும் விரதமிருந்து மைலாப்பூரில் இருக்கும் பாபாவின் கோயிலுக்குச் சென்ற சமயம். கோயிலுக்குள் ஒரு ஆன்மிக பேச்சாளர் பேசிக் கொண்டிருக்கிறார்.

பாபாவின் கோயிலில் ஒரு இடத்தில் ‘துனி’ எரிந்து கொண்டிருக்கும். அதை ‘துவாரகா மாயி’ என்று பாபா அவரது காலத்தில் சொன்னது. இன்றுவரை எல்லோரும் அப்படியேதான் அழைக்கிறார்கள். அந்த ‘துனி’ எப்போதும் எரிந்து கொண்டே இருக்கும். ஆனால், மைலாப்பூரில் அந்த ‘அணையாத நெருப்பு’ (துனி) இருக்கும் இடத்துக்கு ஒரு மகத்துவம் உண்டு. உறவினர் ஒருவர் ஆஸ்பத்திரியில் உடல்நிலை சரியில்லாமல், ‘கோமா’ ஸ்டேஜில் இருந்த சமயம். மயிலை கோயிலில் இருக்கும் ‘துவாரகா மாயி’ ‘துனி’யிடம் மட்டைத் தேங்காய் வைத்து ஒன்பது முறை பிரதட்சணம் செய்து பிரார்த்தனை செய்தாராம் ஒரு பக்தர். சிறிது நாட்களில் பாபாவின் அருளால் அவர் உயிர் பிழைத்து ஆஸ்பத்திரியில் இருந்து நேரே மைலாப்பூரில் இருக்கும் ஷிர்டி பாபாவின் கோயிலுக்குத் தான் வந்தாராம். இந்த அருமையான விஷயத்தை பக்தர் சொன்னதைக் கேட்டதும் எனக்கு மெய்சிலிர்த்துவிட்டது.

அன்றிலிருந்து நான் எந்தவொரு பிரச்னையாக இருந்தாலும், (அது எனக்காகவும் அல்லது மற்றவர்களுக்காகவும்) உடனே துவாரகாமாயினிடத்தில், மட்டைத் தேங்காயை கையில் வைத்துப் பிரார்த்தனை செய்து, அந்த ‘துனி’யை ஒன்பது முறை சுற்றி வந்து நமஸ்காரம் செய்து, பிறகு தேங்காயை அங்கே வைத்துவிட்டு துவாரகாமாயியிடம் சமர்ப்பித்துவிட்டு வந்து விடுவேன். பிரச்னை தீர்ந்துவிடும்.

என்னுடைய அனுபவங்களைக் கேட்டு, என்னுடைய தோழிகள் பலர் இதுபோல் செய்து பலன் பெற்றுள்ளனர்.

தம்முடைய பக்தர்கள் நலம் பெற வேண்டும் என்பதற்காக பாபா ஏற்படுத்திய கனல் அது. நம்மைத் தடை செய்யும் பிரச்னைகளை போக்கி, நாம் நலம் பெற வேண்டும் என்பதற்காகவே ஒளிர்ந்து கொண்டிருக்கிறது அந்த ‘துனி’. நம்பிக்கையுடன் ‘துனி’யை அணுகினால், நாளெல்லாம் நலம் உண்டு. இது என் அனுபவம்!


குழந்தைக் கடவுள்!

எனது மகன் பிறந்து ஒன்றரை வயது ஆன பின்பும் சரியாக நடக்க வரவில்லை. உட்கார்ந்துகொண்டே நகருவான். பேச்சும் சரிவர வரவில்லை. பாண்டி- ஜிப்மர் மருத்துவமனையில் டிரீட்மென்ட் எடுத்து வந்தேன். எனது மூத்த சகோதரி ‘குருவாயூரப்பன்’ தீவிர பக்தை. ஒரு வியாழக்கிழமை, ஊரிலிருந்து வந்திருந்த அவள், என் குடும்பத்தார் அனைவரும் பேசிக் கொண்டிருந்த வேளையில், திடீரென்று சொன்னாள்: “குருவாயூரப்பனிடம் நன்றாக வேண்டிக்கொள். எல்லாக் குறைகளும் உடனுக்குடன் விலகும். குழந்தைக் கடவுளான அவன், குழந்தையின் துயர் துடைப்பான்.”

அபரிமிதமான உறுதியுடன் சொன்னாள்.


சொன்ன சிறிது நேரத்திலேயே என் மகன், சரியாக நிற்கமுடியாத நிலையில் இருந்தவன், கட்டிலை பிடித்த வண்ணம் ஐந்தாறு அடி எடுத்து வைத்து நடக்க ஆரம்பித்தான். எங்களாலேயே அதை நம்ப முடியவில்லை. கனவா, நினைவா என்று புரியாத பிரமை; சிலிர்ப்பு; பரவசம் எல்லாமான உணர்வு. எங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் மட்டில்லா மகிழ்ச்சி. அன்று விலகியது தடை. பிறகு ஏற்றம்தான். இன்று 18 வயது முடிந்து காலேஜில் சேர்ந்துள்ள அவன் ‘குருவாயூரப்பனின் பிச்சை’ என்பதை நினைத்து நினைத்து உருகிப் போகிறேன். இறைவன் இருக்கிறான். பகவான் தன்னுடைய அருளைப் புலப்படுத்திக் கொண்டிருக்கிறான். நமக்குத்தான் பரிபூர்ண நம்பிக்கை அவசியம் என்பதை உணர்த்திக் கொண்டும் இருக்கிறான்.

Comments