நிலவுக்குப் பிறந்தநாள்!

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் அமிர்தலிங்கம் என்பவரின் மகனாகப் பிறந்தவர் சுப்பிரமணியம். இளம் வயதிலிருந்தே அபிராமியிடம் நீங்காத அன்பு. காணும் பெண்களை எல்லாம் அபிராமியாகவே பார்த்தார்.

ஒருநாள்... தஞ்சையை ஆண்ட சரபோஜி மகராஜா, பூம்புகார் சங்கமுகத்தில் நீராடிவிட்டு, திருக்கடையூர் வந்தார். அங்கேயிருந்த அனைவரும் மன்னனுக்கு மரியாதை காட்ட, அபிராமி சன்னிதியில் அமர்ந்து அன்னையின் வடிவழகில் ஆழ்ந்திருந்தார் சுப்ரமணியம் எனும் அபிராமி பட்டர். அபிராமி பட்டரிடம் மன்னன் வந்து, “இன்று என்ன திதி?” என வினவ, மனத்தில் அபிராமியின் முழுமதித் திருமுகம் தெரிய, ‘பௌர்ணமி’ என்று பதிலளித்தார் பட்டர். கோபமுற்ற மன்னன், ‘இன்று இரவு நிலவு வானில் உதிக்காவிட்டால், உமக்குத் தண்டனை’ என்று கூறிச் சென்றார். சூரியன் மறைந்தது. அமாவாசை ஆதலால் வானில் நிலவும் இல்லை.

பட்டர் அசரவில்லை. உடனே, ஒரு குழிவெட்டி, அதில் தீ மூட்டினார். அதன்மேல் ஒரு விட்டத்திலிருந்து 100 ஆரம் கொண்ட ஓர் உறியைக் கட்டித் தொங்கவிட்டு, அதன்மேல் ஏறி நின்று, அபிராமி அன்னையை வேண்டித் துதித்தார். ‘இன்று நிலவு வானில் வராவிடில் உயிர் துறப்பேன்’ என்று சபதம் செய்தார். ‘உதிக்கின்ற செங்கதிர்’ எனத் தொடங்கும் ‘அபிராமி அந்தாதி’யை பாடத் தொடங்கினார். ஒவ்வொரு பாடலும் முடியும்போது, உறியின் ஒவ்வொரு கயிற்றை அறுத்துக்கொண்டே வந்தார். 78 பாடல்கள் முடிந்துவிட்டன. கனல் பெருகுகிறது. கயிறு குறைகிறது. பாடல் நிற்காமல் தொடர்ந்தது. 79வது பாடலாக ‘விழிக்கே அருளுண்டு’ எனத் தொடங்கும் பாடலைப் பாடி முடித்தார். உடனே, பட்டருக்கு காட்சி கொடுத்த அபிராமி, தனது தாடங்கம் (தோடு) ஒன்றைக் கழற்றி வானில் வீச, அது பலகோடி நிலவின் ஒளியை வெளிச்சமிட்டது. அமாவாசை வானில் நிலவு வந்தது. ஆனந்தமாய் பாடலைத் தொடர்ந்தார் பட்டர். ‘ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை’ என நூற்பயன் வரை பாடி முடித்தார். மன்னரும், மக்களும் அவரைப் பணிந்தனர். மன்னன் அவருக்கு நிலபுலன்கள் பல அளித்து, உரிமைச் செப்பு பட்டயமும் தந்தான். பட்டர் சந்ததியினரிடம் இன்றும் அது இருக்கிறது. இச்சம்பவம் நடந்த நாள் தை அமாவாசை.


இதை நினைவூட்டுவதுபோல, இரவு 9 மணிக்கு தருமை ஆதினக் குரு மகா சன்னிதானம் முன்னிலையில், அபிராமி சன்னிதி முன் அபிராமி அந்தாதி பாடப் பெறுகிறது. ஒவ்வொரு பாடலையும் பாடி அபிராமிக்கு தீபாராதனை காட்டுகின்றனர். 79வது பாடல் பாடும்போது, வெளியே கொடிக்கம்பம் அருகில், மின் விளக்கினைப் பயன்படுத்தி நிலவு காட்டுகிறார்கள். பார்க்கும்போது மெய்சிலிர்த்துவிடும். தன்னை முழுவதும் நம்புபவர்களுக்கு அபிராமி எதுவும் செய்வாள் என்பதற்குச் சான்று, இந்த நிகழ்வு. திருக்கடையூரில் தங்கும் விடுதிகள் பல உள்ளன. தேவஸ்தான விடுதிகளும் உள்ளன. தை அமாவாசை அன்று நிலவு காட்டும் நிகழ்வு இரவு 9 மணிக்குத் தொடங்கி, இரவு சுமார் 11.30 வரை நடைபெறுகிறது. இந்த நன்னாளில், பூம்புகார் அல்லது வேதாரண்யம் கடலில் நீராடி, திருக்கடையூர் வந்து அபிராமி அன்னையை தரிசிப்பவர்கள், நினைத்ததெல்லாம் கைகூட பெறுவார்கள்

Comments