தேடி வந்து தரிசனம்!

பகவானின் தரிசனம் கிடைப்பது விசேஷம். அதிலும் கருட சேவையை தரிசிப்பது இன்னமும் விசேஷம். ஏன்? ‘ஆதிமூலமே’ என்று அலறிய கஜேந்திரனின் குரலைக் கேட்டமாத்திரத்தில் வந்த கோலம்; பாண்டிய மன்னனின் அவையில் பொற்கிழி அறுபடுமாறு வாதம் புரிந்த பெரியாழ்வார் பெற்ற பாராட்டைக் காணவந்த கோலம்; பக்தனைக் காணவும், பக்தனைக் காக்கவும் பெருவேகத்தில் வரும் பரம அனுக்ரக வடிவம். அதனால்தான், கருட சேவை அவ்வளவு விசேஷம். ஒரு கருட சேவையே இப்படி என்றால், பதினொரு கருட சேவை பற்றி என்ன சொல்ல? அதை நாம் காண்பது திருநாங்கூரில்!

ஏன் இந்த வைபவம்?

ஒரு சமயம் சிவபெருமான் ஏகாதச ருத்ர அச்வ மேதத்தை செய்தபோது, பகவான் வெளிப்பட்டாராம். அவரிடம் சிவபிரான் கேட்டவண்ணம், 11 வடிவங்களாகவும் காட்சி தந்தார். இந்தச் சம்பவம் நடந்தது திருமணிமாடக் கோயில் என்ற நல்லூரில். ஆகவே, 11 கருட சேவை இந்தக் கோயிலில் நடைபெறுகிறது.

திருமங்கையாழ்வார், இந்த 11 வைணவ திருத்தலங்களையும் தரிசித்து மங்களாசாசனம் செய்து விட்டு வரும்போது, வழியில் ஸ்ரீரங்கம் பள்ளி கொண்ட பெருமாளையும், நாச்சியார் கோயில் அருள் மிகு சீனிவாசனையும் சேவிக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டார். இந்த இருவரிடமும் திருமங்கை மன்னனுக்கு தனி விருப்பம் உண்டு. ‘நாச்சியார் கோயிலில் பெரிய திருமடல். சிறிய திருமடல் என்று பிரபந்தம் பாடினார்; அரங்கத்துக்கு மதில் எடுப்பித்தார் என்கிறது திருமங்கையாழ்வார் சரிதம். அவருடைய எல்லையற்ற பக்திக்குக் கட்டுப்பட்டவன் அல்லவா பெருமாள்! மஞ்சக்குடி என்ற இடத்தில் இந்த இரண்டு பெருமாள்களும் எழுந்தருளி ஆழ்வாருக்கு அருள் வழங்கினாராம்! இதைக் காண, 11 திவ்ய தேசத்து நாயகர்களும் கருட வாகனத்தில் எழுந்தருளினார்கள்! இதை உணர்த்தும் வண்ணம் இன்றும் ஸ்ரீரங்கத்திலிருந்தும், நாச்சியார் கோயிலிலிருந்தும் ஆழ்வாருக்கு மாலைப் பிரசாதம் எடுத்துக்கொண்டு, பட்டர்கள் செல்கின்றனர்!

கருட வாகனத்தில் எழுந்தருளும் பகவானை தரிசிப்பதால், காரியத் தடைகள், எதிர்ப்புகள், தவறே செய்யாமல் உண்டாகும் அபவாதங்கள் போன்றவை நீங்கும். திருநாங்கூர் போவோமா?

செல்லும் வழி:

சீர்காழியிலிருருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது திருநாங்கூர். பஸ்-ஆட்டோ வசதிகள் நிறைய உண்டு.

திவ்ய தேசங்களின் விவரம்:

திருக்காவளம்பாடி: கோபால கிருஷ்ணன் - செங்கமலநாயகி

திருஅரிமேயவிண்ணகரம்: குடமாடு கூத்தர் - அம்ருதகடவல்லி

திருவண்புருடோத்தமம்: புருஷோத்தமன் - புருஷோத்தம நாயகி

திருசெம்பொன் செய்கோயில்: செம்பொன்னரங்கர்-அல்லிமாமலர் நாச்சியார்

திருமணிமாடக்கோயில்: நாராயணப்பெருமாள் - புண்டரீகவல்லி

திருவைகுந்தவிண்ணகரம்: வைகுந்தநாதன் - வைகுந்தவள்ளி


திருத்தேவனார் தொகை: ஸ்ரீமாதவப் பெருமாள் - கடல்மகள் நாச்சியார்

திருத்தெற்றியம்பலம்: ரெங்கநாதன் - செங்கமலவல்லி

திருமணிக்கூடம்: வரதராஜப்பெருமாள் திருமாமகள்.

திருவெள்ளக்குளம்: அண்ணன் பெருமாள் - அலர்மேல் மங்கை

திருப்பார்த்தன்பள்ளி: ஸ்ரீபார்த்தசாரதி (தாமரையாள் கேள்வன்) - தாமரை நாயகி



Comments