ஆலயங்கள் அமைப்பதில் நான்கு முறைகள் உள்ளன. அவை தைவிகம், ஆருஷம், ஆசுரம் மற்றும் மானுஷம் ஆகும். தேவர்கள் அமைத்த கோயில்கள் - தைவிகம், ரிஷிகள் அமைத்தவை - ஆருஷம், அசுரர்கள் எழுப்பியவை - ஆசுரம், மனிதர்கள் நிர்மாணித்தவை - மானுஷம்.
அளேபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஆலயம் தைவிகம் வகையைச் சேர்ந்தது. ஒகேனக்கலில் தவமியற்றித் திரும்பிய படைப்புக்கடவுள் ஸ்ரீபிரம்மதேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் இவர். பெயரில் லட்சுமி இருந்தாலும், சாட்சாத் உக்கிர நரசிம்மர்தான்! தாயாருக்கு, தனிச் சன்னிதி எதுவும் இல்லை; நரசிம்மர் மடிமேல் லட்சுமி அமர்ந்த கோலமும் இல்லை. நரசிம்மருள் தாயாரும் அடக்கம். எனவேதான், லட்சுமி நரசிம்மர் என அழைக்கப்படுகிறார். தாயாருக்குச் செய்யப்படும் மஞ்சள் மற்றும் குங்கும அபிஷேகமும் பெருமாளுக்கே செய்யப்படுகிறது.
நரசிம்மர் அஷ்டபுஜங்களுடன் காட்சியளிக்கிறார். மடியில் இரண்யனைக் கிடத்தி ஒரு கையால் அரக்கனது தலையையும் ஒரு கையால் கால்களையும் அழுத்திப் பிடித்துள்ளார். இரு கைகளால் அவன் வயிற்றைக் கிழிக்கிறார். இரு கைகளால் குடலை உருவி மாலையாகப் போட்டுக் கொள்கிறார். இரு கைகளில் சங்கும் சக்கரமும் துலங்குகின்றன. அருகே பாலகன் பிரகலாதன் நிற்கிறார். திருமஞ்சனம் நடக்கும்போது அர்ச்சகர் தெளிவாக விளக்கமளிக்கிறார்.
‘பக்த ரட்சகரான நரசிம்மரிடம் நாளை என்பதே இல்லை’ என்பர் பெரியோர். இன்றும் பல்லாயிரம் குடும்பத்தினருக்கு இவரே குலதெய்வம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல; கர்நாடக மாநிலத்தில் இருந்தும் பலர் இங்கு வந்து குலதெய்வ நேர்ச்சையும், திருமஞ்சனமும் நடத்துகின்றனர்.
நரசிம்ம ஜயந்தி, வைகுண்ட ஏகாதசி ஆகியவை இக்கோயிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
வருடந்தோறும் 10 நாட்கள் பிரம்மோற்சவம் உண்டு. ஆனால், கடந்த 30 வருடங்களாக இது நடப்பதில்லை. தற்போது பல லட்சம் மதிப்பில் தேர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவை முடிந்து கும்பாபிஷேகம் நடந்தபின், தடைபட்ட பிரம்மோற்சவம் மீண்டும் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
செல்லும் வழி: தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் இருந்து சுமார் 5 கி.மீ.. ஷேர் ஆட்டோ வசதி உண்டு. தொடர்புக்கு: 9942960352.
Comments
Post a Comment