பலன் தரும் திரிபுர பௌர்ணமி!

ஸர்வவிக்னஹரம் தேவம் ஸர்வ விக்ன விவர்ஜிதம்!

ஸர்வஸித்தி ப்ரதாதாரம் வந்தேஹம் கணநாயகம்!

- கணாஷ்டகம் (8)

(ஸர்வ விக்னங்களையும் (பக்தியற்ற வர்களுக்கு) செய்கிறவரும், தேவரும், பக்தர்களுக்கு ஏற்படும் எல்லா விக்னங்களையும் நிவர்த்திப்பவரும், ஸர்வ ஸித்திகளையும் கொடுப்பவரும், பூத கணங்களுக்குத் தலைவருமான ஸ்ரீமஹா கணபதியை நான் நமஸ்கரிக்கிறேன்.)

‘மஹத்’ தலத்தில் அமைந்துள்ள வரத விநாயகர் திருக்கோயிலை தோற்றுவித்த மாமுனிவர் கிருச்சமேதர், ஒரு முறை ஆழ்ந்த தவத்தில் இருந்து, திடீரென்று கண் விழித்தார். அவரது தீட்சண்யமான பார்வையிலிருந்து, இடியோசை போன்ற ஆரவாரத்தோடு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. சிவந்த நிறமும், அதியற்புத அழகும், பளபளக்கும் மகுடமும், நவரத்ன குண்டலமும், திடந்தோள் கவசமும் என்று அலங்காரங்களுடன் விளங்கிய அக்குழந்தையிடம், “நீ யார்? எங்கிருந்து வந்தாய்?” என்று பயந்தபடியே கேட்டார் முனிவர்.

இதைக்கேட்ட அப்பாலகன், “நான் உங்களது புத்திரன்... தங்களது தீட்சண்ய பார்வையின் விளைவால் எனக்கு பிறப்பு நேரிட்டது. தாங்களே எனக்குத் தாய் தந்தை. என்னைத் தாங்கள் சில காலம் வரையிலும் காப்பாற்றி வளர்த்துவர வேண்டும். அதன்பின் என் ஆற்றலால் சர்வலோகங்களையும் வென்று அரசாள்வேன். அப்போது என் பராக்கிரமத்தை தாங்கள் தெரிந்துகொள்வீர்கள்” என்றான். அதைக்கேட்ட கிருச்சமேத முனிவர் மிகவும் கவலையுற்றார். எனினும் அவனது எதிர்கால ரகசியங்களை வெளிப்படுத்தக்கூடாது என்று தீர்மானித்து, “மகனே! உனக்கு பலி என்று நாமகரணம் செய்கிறேன்” என்று கூறி, விநாயக மந்திரத்தை போதித்து, அதை அனுஷ்டிக்கும் முறையையும் விளக்கினார். நாட்கள் கடந்தன.

வளர்ந்த பலி, ஒற்றைக்காலில் நின்றபடியே ஐம்புலன்களையும் வென்றடக்கி, கடும் தவத்தில் ஈடுபட்டான். அதையேற்ற விநாயகர், அவனுக்கு தரிசனமளித்தார். அவரிடம், “மூவுலகங்களும் என் வசம் வரவேண்டும். இந்திராதி தேவர்கள் என் கட்டளைக்கு உட்பட வேண்டும். என்றும் தங்கள் திருவடிகள் என் மனத்தில் படியவேண்டும். நான் வாழ்வின் இறுதியில் முக்திபெற அருள் புரிய வேண்டும்” என்று விநயமாக பிரார்த்தித்தான் பலி.

அந்த வரங்களை வழங்கிய விநாயகர், அவனிடம், “கரும்பொன், வெண்பொன், பசும்பொன் என்கிற உலோகத்தால் ஆகிய மூன்று கோட்டைகளையும் உனக்கு அளிக்கிறேன். திரிபுரம் எனும் இக்கோட்டைகளுக்கு அதிபதியான உன்னை ‘திரிபுரன்’ என்றழைப்பர். சிவபெருமான் வில்லம்பினாலன்றி, உன்னை அழிக்க முடியாது. உன் விருப்பப்படியே முக்தியும் அடையாய்!” என்றருளினார்.

இதனால் மமதை கொண்ட பலியின் ஏகாதிபத்திய போராட்டம் தொடங்கலாயிற்று. விரைவில் மூவுல கங்களையும் தன் புஜ பலத்தினால் வென்று, அங்குள்ள யாவரையும் அதம் செய்தான்.

விநாயகர் தந்த வரப்படி, மூன்று கோட்டைகளும் தோன்றின. ஒவ்வொன்றும் முறையே நூறு யோசனை உயரமும், நூறு யோசனை அகலமும் கொண்டிருந்தன. அக்கோட்டைகளில் கற்பக விருட்சம், காமதேனு, சங்க நிதி, பதுமநிதி இவைகளுக்கு இணையான அற்புத பொருள்களோடு அளவற்ற ஐஸ்வர்யங்களும் நிரம்பி இருந்தன. இரும்புக் கோட்டைக்கு சுக்கிலம் என்றும், வெள்ளிக் கோட்டைக்கு கபிலம் என்றும், பொற்கோட்டைக்கு சுவர்த்தி என்றும் பெயர்களைச் சூட்டி மகிழ்ந்த பலி, திரிபுராசுரன் எனும் பெயரடைந்தான். இந்தக் கோட்டைகள் வானில் பறக்கும் சக்தி கொண்டவை.

அடிக்கடி அக்கோட்டைகளின் இடத்தை மாற்றி விண்ணிலிருந்து நிலத்தில் இறக்கி அவைகளின் அடியில் மாட்டிக்கொண்ட மாந்தர்களையும், நகரங்களையும் அழியச் செய்தான். இதனால் நூற்றுக்கணக்கான ஊர்கள் அழிந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்தனர். இந்த நிலையில் இமயமலை குகைகளில் பதுங்கி வாழ்ந்த தேவர்களிடம், நாரத முனிவர் வந்தார். அவர்கள் எல்லோரும் திரிபுராசுரன் அட்டூழியங்களை விவரித்து, அதிலிருந்து மீள வழி கூற வேண்டினர். அவர் சொன்னபடியே, கணபதியை வழிபட்டனர்; சிவபிரானைச் சரணடைந்தனர்.

சிவபிரான் வழிகாட்டியவண்ணம், அதிசயமான ரதத்தை உருவாக்கினார்கள் தேவர்கள். அதில் ஆரோகணித்த ஈஸ்வரன், திரிபுராசுரன் இருக்கும் இடம் அடைந்து அவனுடன் போர் தொடங்கினார். இந்தப் போர் தொடங்குமுன், முறைப்படி கணபதியை துதித்துவிட்டே ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால், இதைச் செய்ய பரமேஸ்வரன் தவறி விட்டதால், ரதத்தின் அச்சு முறிந்ததோடு, அவருக்கு துணையாக வந்து போரிட்ட தேவர்களும் பரிதாபமாகப் பின்வாங்கினர்.

பிறகு, நாரதரின் ஆலோசனைப்படி, சிவபெருமான் விநாயகரின் மந்திரத்தை மனமாறத் துதிக்கலானார். இதன் பயனாக மூஷிக வாகனர் தோன்றினார். “இனியும் என்னை மறக்காமல் ஞாபகத்தில் நிறுத்தி, எந்த புனித காரியத்தைத் தொடங்கினாலும் அப்பணி தடைபெறாமல் நான் பார்த்துக்கொள்வேன். என் பீஜ மந்திரத்தை உச்சாடனம் செய்து, அசுரனை நோக்கி ஒரே ஒரு பாணத்தை எய்தாலே போதும். திரிபுரங்களும் எரிந்து சாம்பலாகிவிடும். இதன்பின் திரிபுராசுரனைத் தாங்கள் சுலபமாக வதம் செய்துவிடலாம்” என்று வழிகாட்டி மறைந்துவிட்டார்.

தொடர்ந்து, திரிபுராசுரனை தாக்க முற்பட்டார் சிவபிரான். இதற்காக மற்றொரு ரதம் தயாரானது. புவனம் தேர்; சூரிய சந்திரர்கள் அத்தேரின் சக்கரங்கள்; பிரம்மா தேர் ஓட்டும் சாரதி. மேரு மலைவில்; விஷ்ணு அதன் அம்பு. கணபதி சகஸ்ரநாமத்தை உச்சரித்தபடி அத்தேரில் சங்கரர் அரோகணித்தார். ஓம்காரத்தைக் கூறிவிட்டு, வில் எடுத்த விரிசடையோன், ஷடாட்சர மந்திரத்தைக் கூறி, அம்பை நாணில் ஏற்றி அசுரனை நோக்கி விடுத்தார்! வானமெங்கும் மின்னல்; அசுரன் நொடியில் மயக்கமடைந்து கீழே விழுந்தான். முப்புரங்களும் எரிந்து சாம்பலாயின! அசுரன் உடலிலிருந்து பிராணன் ஜோதி வடிவமாக வெளிவந்து ஈசனோடு ஐக்கியமாகிவிட்டது. இதனால், திரிபுராசுரனுக்கு மோட்சம் கிட்டியது.

திரிபுர தகனமும், திரிபுராசுரனின் வதமும் கார்த்திகை பௌர்ணமி அன்று நிகழ்ந்ததால், அந்நன்னாளை ‘திரிபுர பௌர்ணமி’ என்று கூறுகிறார்கள்.

பரமேஸ்வரனுக்கும், தேவாதி தேவர்களுக்கும் எந்த உருவில், எந்த இடத்தில் கணநாதர் காட்சி அளித்தாரோ, அவ்வடிவத்திலேயே, அவ்விடத்திலேயே சிலா ரூபம் கொண்ட மகா கணபதி ஆலயத்தை இன்றும் காணலாம். மணிபுரம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட அத்தலத்தின் தற்கால பெயர் ரஞ்சன் காவுங்.

பெரிய அழகான நுழைவுவாயில் கொண்ட கிழக்கு நோக்கிய கோயில். ஜய, விஜய எனும் பெயர்கள் கொண்ட வாயிற்காப்போர். கருவறையிலுள்ள மகா கணபதியின் மீது சூரிய கிரணங்கள் படும்படியாக கோயில் அமைந்துள்ளது. ரஞ்சன்காவுங் மகா கணபதிக்கு மராட்டிய மன்னர்களும், பல பெரும் தனவந்தர்களும் அரிய திருப்பணிகளை செய்துள்ளனர். இடம்புரி மகாகணபதி அமர்ந்த கோலத்தில் அருங்காட்சி அளிக்கிறார். இதுவரை நாம் தரிசித்த விநாயகர் உருவங்களிலேயே, மிகவும் அழகான திருவுருவம் கொண்டவர் இம்மகாகணபதி; வெள்ளி கிரீடம் அணிந்து தரிசனம் தருகிறார். இவரின் இருபுறங்களிலும் சித்தி புத்தி தேவியர்களைக் காண்கிறோம். பத்து துதிக்கைகளும், இருபது கரங்களும் கொண்டு மஹோத்கதர் என்ற நாமத்தில் பெருஞ்சிலை ஒன்று இக்கோயிலின் பாதாள அறையில் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறதாம்.





இந்திர பதவியை முறையாகப் பெற விரும்பிய மன்னன் விகுதி. தொண்ணூற்று ஒன்பது யாகங்களைச் செய்து முடித்தவன்; நூறாவது யாகத்தையும் தொடங்கி இருந்தான். அதை அவன் முடித்துவிட்டால், தான் பதவி இழக்க நேரிடும் என்று அஞ்சிய இந்திரன், நாரதரின் உதவியை நாடினார்.

அதற்காக, நாரதர் கிழ அந்தணராக உருகொண்டு, விகுதி அரசனின் யாக சாலையை அடைந்தார். தன்னை உபசரித்த மன்னனிடம், அவர் கேட்டார்:

“அரசனே! உன் மனைவியை எனக்கு தானமாகக் கொடுத்துவிடு! இதனால் நான் கிருஹஸ்தனாக மாறி அவளுடன் இல்லற இன்பம் துய்க்க இச்சை கொண்டுள்ளேன்!” அதைக்கேட்ட மன்னன் திடுக்கிட்டான்; நிராகரித்துவிட்டான். அந்த மறுப்பைக் கேட்ட நாரதர், “எனக்கு தானம் கொடுக்க மறுத்த நீ ஒரு அசுரனாக பிறக்கக்கடவாய்!” என்று சபித்தார்.

அந்த சாபத்தின் விளைவுதான் தூமாசுரன். அசுர குலத்துக்கு ஏற்றபடி, அனைவருக்கும் தொந்தரவு கொடுத்து வந்தான். ஒருமுறை, “மாதவராஜன் மனைவி குமுதையிடம் தோன்றும் குமரனால் நீ உயிர் இழப்பாய்!” என்ற அசரீரி வாக்கை கேட்டான். அதையறிந்த அசுரன், தன் தளபதியை ஏவினான். தளபதியோ, ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அரச தம்பதியர்களை தாக்க மனமின்றி, அவ்விருவரையும் மஞ்சத்தோடு தூக்கி, அடுத்துள்ள பெருங்காட்டில் வைத்து விட்டான்!

மறுநாள் கண்விழித்த மாதவராஜனும், குமுதையும் வழிதெரியாமல் வருந்தினர். அப்போது, விநாயகமூர்த்தி, குழந்தை உருவில் தோன்றி, இரவில் நடந்தவற்றை விவரித்தார். விரைவில் தூமாசுரனை சம்ஹரிக்கப்போவதாகக் கூறி அவர்களிடையே வளர்ந்து வரலானார்.

மாதவராஜனிடம் ஒரு குழந்தை வளர்ந்து வருவதாகக் கேட்ட தூமாசுரன், பெரும் படைகளோடு அக்காட்டில் பிரவேசித்தான். பாலவிநாயகரோ, தன் வாயிலிருந்து பந்துபோல் புகைப்படலங்களை வெளியே விட்டார்! அவை எங்கும் சுற்றி சுழன்று பரவி, கனத்த இருளை ஏற்படுத்தின. இதனால், தூமாசுரனும் அவனது படைவீரர்கள் அனைவரும் பார்வை இழந்து மயங்கிப்போய் பாதாளலோகத்தில் இடறி விழுந்து மடிந்தார்கள்!

தூமாசுரனையும், அவனது சேனைகளையும் ஒரு நொடிப்பொழுதில் தூமத்தினால் (புகையினால்) அழித்ததால், அவர் தூம்ரவர்ணர் எனும் பெயர் பெற்றார். தமிழில் தூமகேது மூர்த்தி என்று இவரை அழைப்பர்.

செல்லும் வழி:

‘ரஞ்சன்- காவுங்,’ மகாராஷ்டிர மாநிலம், புனே - அகமத் நகர் நெடுஞ்சாலையில், புனேயிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது. புனேயிலிருந்து பேருந்து வசதி உண்டு.


“புனேயைச் சுற்றியுள்ள அஷ்ட விநாயகத் தல உலா நிறைவு பெறுகிறது. மானசீகமாக அப்பெருமானை கண்ணார கண்டு, வாயாற வாழ்த்தி, செவியாற அவன் புகழ் கேட்டு, மனதார வணங்கிய யாவருக்கும், பிரம்மதேவன் நூறு ஆண்டுகள் கொண்ட பூரண ஆயுளும், ஸ்ரீமகாலக்ஷ்மி ஐஸ்வர்யங்களும், ஸ்ரீமகா விஷ்ணு பெரும் கீர்த்தியையும், மகா தேவர் கோதானத்தையும், தேவர்கள் அம்ருதத்தையும் அருளி, நலமாக வாழ வேண்டும் என்று அந்த வேழமுகத்தோனை மனமொழி மெய்யால் பன் முறை வேண்டுகிறேன்.”



Comments