கல்வியில் சிறக்க...

அள்ளக் குறையாதது என்றும், கொடுக்கக் குறையாதது என்றும் சொல்லப்படுவது கல்விதான். கல்வியின் பெருமையை உணர்த்துவதாகவே தட்சிணாமூர்த்தி, ஹயக்ரீவர் ஆகிய மூர்த்திகள் கையில் ஏட்டுச் சுவடியுடன் தரிசனம் தருகிறார்கள். ‘கற்றார்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்கிறார் ஔவை. ‘எதையும் கற்றறியாமல், எல்லாம் என் ஊர், எல்லாம் என் நாடு என்று ஒருவன் சொன்னால், அது கேலிக்குரியதாகிவிடும்’ என்று எச்சரிக்கிறான் வள்ளுவன்.

ஆக, கல்வியின் சிறப்பு அளவிடற்கரியது. அந்தக் கல்வியையும், கூர்ந்த அறிவையும், கலைகளில் சிறந்த ஞானத்தையும் அருள்பவளாக விளங்குகிறாள் கலைமகள். ‘வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்’ என்று பாடுகிறான் பாரதி.

சரஸ்வதி அந்தாதி பாடிப் பரவினார் கவிச்சக்கரவர்த்தி கம்பர். இந்தக் கலைமகள் தோன்றிய நாள் எது?

தை மாதத்தில் வரும் வளர்பிறை பஞ்சமிக்கு ‘வசந்த பஞ்சமி’ என்று பெயர். ஸ்ரீசரஸ்வதி வெளிப்பட்ட தினம் இதுதான். கல்வி, இசை, நாட்டியம், நாடகம் மற்றும் அனைத்துக் கலைகளுமே ஸ்ரீசரஸ்வதியின் எழில் ரூபங்கள் என்று ஆகமங்கள் கூறுகின்றன.

சிறந்த பிரம்மஞானியாகத் திகழ்ந்தவர் யாக்ஞவல்கியர். அப்பேர்ப்பட்ட யாக்ஞவல்கியர் ஒரு சமயம் சாபத்தால் தான் கற்ற வித்தைகளை மறந்து தவித்தார். அந்த சமயத்தில் ஸ்ரீசரஸ்வதியைப் பூஜித்து, தான் கற்ற வித்தைகள் மீண்டும் நினைவுக்கு வரும் படியான வரத்தைப் பெற்றார். இது நடந்தது மகாபஞ்சமி என்னும் வசந்த பஞ்சமி நாளில். இந்நாளில் ஸ்ரீசரஸ்வதியை வழிபட்டால் - கல்வி, ஞானத்தில் சிறந்து விளங்கலாம். கற்றவை மறக்காமல் நினைவுக்கு வரும்.

ஸ்ரீசரஸ்வதிக்கு என்று தனிக்கோயில் கூத்தனூரில் உள்ளது. இங்கு கையில் வீணை இல்லாமல் ஞான சரஸ்வதியாகத் திகழ்கிறாள். திருவாரூர் தியாகராஜர் கோயிலிலும், கங்கை கொண்ட சோழபுரத்திலும் வீணை இல்லாத ஞான சரஸ்வதியைத் தரிசிக்கலாம்.

திருச்சிக்கு அருகில் உள்ள உத்தமர் கோயிலில் ஸ்ரீபிரம்மன் சன்னிதிக்குப் பக்கத்திலேயே ஸ்ரீசரஸ்வதிக்குத் தனிச் சன்னிதி உள்ளது.

திருவையாறுக்கு அருகில் உள்ள திருக்கண்டியூர் திருத்தலத்தில் உள்ள சிவன் கோயிலில் ஒரே சன்னிதியில் பிரம்மனுடன் ஸ்ரீசரஸ்வதி எழுந்தருளியுள்ளாள்.

‘சகலகலாவல்லி மாலை’ பாடி, சரஸ்வதியின் அருளால் இந்துஸ்தானியில் பேசும் ஆற்றலைப் பெற்றார் குமரகுருபரர் என்கிறது வரலாறு.

பௌத்தர்கள் சரஸ்வதியை வாக்தேவி என்ற பெயரில் வழிபடுகிறார்கள். ஜைனர்கள் ‘ருதுதேவி’ என்ற பெயரில் சிங்கம் அல்லது மயில் வாகனத்தில் அமர்ந்துள்ளதாகப் போற்றுவர். தமிழகத்தில் ஸ்ரீசரஸ்வதியின் வாகனம் அன்னம்.

நாகர்கோயில் பார்வதிபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயில் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ வனமாலீஸ்வரர் கோயிலில் பிரம்மா உருவாக்கித் தந்ததாகக் கூறப்படும் 108 கிலோ எடையுள்ள சரஸ்வதி விக்கிரகம் உள்ளது.

பிரமிப்பைத் தரும் விதத்தில் தங்க சரஸ்வதி இக்கோயிலில் எழுந்தருளியுள்ளாள். இந்த சரஸ்வதியை வழிபடும் பக்தர்களுக்கு சிவப்பு நிறத்தினால் ஆன ‘ரக்த சந்தனம்’ பொடி, பிரசாதமாக வழங்கப்படுகிறது.

வசந்த பஞ்சமி அன்று, ஸ்ரீசரஸ்வதி தேவிக்கு பால், தயிர், வெண்ணெய், வெள்ளை எள் உருண்டை, கோதுமை தானியம், வெண் பொங்கல் , வெற்றிலை பாக்கு, பழங்கள் ஆகியவற்றையும் சமர்ப்பித்து வழிபட்டால், ஸ்ரீசரஸ்வதி தேவியின் அருட்கடாட்சம் கிட்டும்.

குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில், வெண்தாமரை மலர்களால் - வெண்ணிறப் பூக்களால் சரஸ்வதியை அர்ச்சித்து வழிபடுவது சிறப்பு.

சரஸ்வதி தியான ஸ்லோகம்

ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே

காமரூபிணி

வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவதுமே ஸதா

ஸரஸ்வதீம் சுக்லவாஸாம் ஸீதாம்சு ஸமவிக்ரஹாம்

ஸ்படிகாக்ஷஸ்ரஜம் பத்மம் புஸ்தகம் ச சுகம் கரை

சதுர்பிர்த்த ததீம் தேவீம் சந்த்ரபிம்ப ஸமானனாம்

வல்லபாம் அகிலார்த்தானாம் வல்லகீ வாதனப்ரியாம்

பாரதீம் பாவயே தேவீம் பாஷாணாம் அதிதேவதாம்

பாவிதாம் ஹ்ருதயே ஸத்பி பாமினீம் பரமேஷ்புன

சதுர்புஜம் சந்த்ரவர்ணாம் சதுரானன வல்லபாம்

நமாமி தேவி வாணீத்வாம் ஆச்ரிதார்த்த ப்ரதாயினீம்

பாஹி பாஹி ஜகத்வந்த்யே நமஸ்தே பக்தவத்ஸலே

நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம:

பாசாங்குச தரா வாணீ வீணாபுஸ்தக தாரிணீ

மம வக்த்ரே வஸேந் நித்யம் ஸந்துஷ்டா ஸர்வதா சிவா

சதுர்தசஸூ வித்யாஸூ நமதே யா ஸரஸ்வதீ

ஸாதேவி க்ருபயாயுக்தா ஜிஹ்வாஸித்திம் கரோதுமே

பாஹிமாம் பாவனே தேவி ரக்ஷ ராக்ஷஸநாசினி

அவ மாம் அம்புஜாவாஸே த்ராஹிமாம் துஹினப்ரபே

தேஹி தேவி கலாதாஷ்யம் வாணி வாக்படுதாம் திச

ஸரஸ்வதி ஸூதான் ரக்ஷ கலே பாலயமே குலம்.

Comments