கண்களையும் மனத்தையும் வசீகரிக்கிற மாதிரி, உயர்ந்து நிற்கிறது மேற்குத் தொடர்ச்சி மலை. கொடைக்கானல் செல்லும் வழிபோல, கொண்டை ஊசி வளைவுகள் சிலிர்க்க வைக்கின்றன. செல்லும் வழியெங்கும் தேயிலைத் தோட்டங்கள், தவழும் ஓடைகள், அணிவகுத்ததுபோல நிற்கும் மரங்கள்...
“அன்னபூரணின்னு சொன்னா, கையிலே பாத்திரமும் கரண்டியும் வைச்ச கோலம்தானா? வேற வடிவமும் இருக்கு. நான் காட்டறேன்” என்று, குருஜி சொன்னதன் விளைவு, இந்தப் பயணம். சூரியனின் உஷ்ணத்தை மீறி, காற்றில் குளிர்ச்சி!
“அன்னபூர்ணாஷ்டகம் சொல்றோமே, அதுல ஆசார்ய சங்கரர், ‘ஞானமும் வைராக்யமும் தா’ன்னு அன்னபூரணியை பிரார்த்தனை செய்யறார். ஏன்னு தெரியுமா?” குருஜியின் கேள்வி, எண்ணங்களை நிறுத்தியது. ‘தெரியாது’ என்பதுபோலத் தலையசைத்தேன். குருஜி பேச ஆரம்பித்தார்:
“நாம சாப்பிடற உணவைப் பொறுத்துத்தான் புத்தியும் மனசும் செயல்படறது. ருசி, வாசனை இதையெல்லாம் அனுபவிக்கறது அதுதான். ஆனா, இந்த ருசி, வாசனை இதெல்லாம் ஆசையைச் சேர்ந்தது. அதை ஜெயிக்கணும்னா, ஞானமும் வைராக்யமும் வேணும். அதனாலதான், அன்னபூரணிகிட்டயே இதைக் கேட்டார் ஆசார்யர்.”
“சாப்பாட்டுல கூடவா ஆசைப்படக் கூடாது?”
“சாப்பாட்டுலயும் ஆசைப்படக்கூடாது. எதுல உன் ஆசை மிச்சம் இருக்கோ, அது முடியற வரைக்கும் - தீரும் வரைக்கும், பிறவி உண்டு. ‘பூர்வ ஜன்ம வாசனை’னு சொல்றது இதைத்தான். அப்ப, ‘கோபம் இருக்கலாமா’ன்னா, அதுவும் கூடாது. ஆசை, ஏமாற்றம், கோபம், வெறுப்பு... இப்படி எதுவுமே இல்லாத சமநிலை மனசுல அனுபவமாகணும். அதான் விசேஷம். இந்த நிலையை, ஞானமும் வைராக்யமும்தான் தரும்.”
குருஜி சொல்லிக்கொண்டிருக்கும் போதே, நெடிதுயர்ந்த முகப்பு வளைவும் படிகளும் கூடிய அன்னபூர்ணேஸ்வரி ஆலயம் தென்பட்டது.
இது, ஹொரநாடு!
கர்நாடக மாநிலம், சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள தலம். அழகான தோரண வாயிலில் நுழைந்து, படிகளைக் கடந்து உள்ளே நுழைகிறோம். ஆண்கள் சட்டைகளைக் கழற்றிவிட்டுத்தான் செல்ல வேண்டும். உள்ளே நுழைந்ததும், வியப்பு தோன்றுகிறது. கேரள பாணியில், மரங்களைப் பயன்படுத்தி கர்ப்பகிரகத்தை அமைத்துள்ளனர். தரிசிக்க வந்தவர்களை, அன்னையின் சன்னிதி முன்பே அமர வைத்து, அர்ச்சனை செய்கிறார்கள். அர்ச்சனை முடிந்து தீபாராதனை ஆனதும், அடுத்த அணி சன்னிதிக்கு முன் அமர்ந்து தரிசிக்கிறது.
நிதானமான, ரம்மியமான தரிசனம் என்றாலும், மனம் எழுந்திருக்க விரும்பாமல் அடம்பிடிக்கிறது. காரணம், மூலஸ்தானத்தில் காட்சி தரும் அம்பிகையின் எழிற்கோலம் அப்படி. சுமார் ஆறடி உயரமுடன், மேலிரு கரங்களில் சங்கு சக்கரம் தாங்கி, மற்ற இரு கரங்களில் ஸ்ரீசக்ரமும், காயத்ரியும் விளங்க, நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள் அன்ன பூரணி. திருமேனியில் தங்கக்கவசம் தக தகக்கிறது. தலையில் படமுயர்த்திய நாகம். கண்களில் சாந்தமும், முகத்தில் இதமான முறுவலுமாய் காட்சியளிக்கிறாள் அம்பிகை. மனம், பறவையின் இறகைவிட எடையற்றதாகி ஆனந்தத்தில் மிதக்கிறது.
சன்னிதிக்கு எதிரே, இரண்டு கால்களை ஊன்றியபடி நிமிர்ந்து நிற்கிறது சிங்கம். உயர்த்திய கால்களில் அட்சய பாத்திரம்! சிங்கமும் தங்க நிறத்தில் பளபளக்கிறது.
‘அன்னபூர்ணேஸ்வரி, சிம்மவாஹினி’ என்று சன்னிதி முகப்பில் எழுதியுள்ளனர். ‘தெய்வ சன்னிதியை அடையும்போது, விலங்காய் இருந்தாலும் கொடை தரும் குணம் வரும்’ என்கிற தத்துவார்த்தமாகத் தோன்றியது.
“பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னால, ரோடு சரியா இருக்காது. இங்கே வந்து சேர்றதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடும். இப்ப ஈஸியா வந்துட்டோம்” என்றபடியே நடந்தார் குருஜி.
பிற்காலக் கட்டுமானம்தான். ஆனால், அமைதி, அழகு, தூய்மை, தெய்விகம் ததும்புகிற சூழல். அர்ச்சனை சீட்டு வாங்கினால், இங்கே தருகிற முக்கியமான பிரசாதம் ‘அரிசி’தான்! அந்த அரிசியைக் கொண்டுவந்து, நமது வீட்டின் அரிசி வைக்கும் டப்பாவில் போட்டு வைத்தால், என்றும் உணவுத் தட்டுப்பாடு வராது என்பது பலரின் அனுபவம். சிலர் வரும்போதே தேங்காய், வெல்லம், அரிசி போன்றவற்றைக் கொண்டுவந்து பூஜிக்கிறார்கள்.
உச்சிகால பூஜை முடிந்ததும், அனைவருக்கும் சாப்பாடு. பசியோடு யாரும் திரும்ப முடியாது. தட்டுகள், பாத்திரங்களை வெந்நீரில் தூய்மைப்படுத்துகிறார்கள். உணவும் ‘கை படாத’ தயாரிப்பு! சின்னக் குழந்தைகளுக்கு பசும் பால்! தங்குவதற்கு, கோயிலைச் சுற்றி இலவச தங்குமிடங்கள். இடமில்லையா? இருக்கவே இருக்கின்றன கோயில் திண்ணைகள். விரிப்புகள், தலையணை, கம்பளம் எல்லாம் தருகிறார்கள்.
பகலில் ஒரு மணிக்கு ஆரம்பிக்கும் மதிய உணவு, மூன்று மணிவரை நடக்கிறது. இரவு ஏழு மணிக்கு ஆரம்பித்தால் ஒன்பது மணி வரை நீள்கிறது. சாம்பார், ரசம், பாயசம், மோர் என்று விருந்துச் சாப்பாடுதான்.
“காலை, மாலை காபி; நடுவுல பானகம் எல்லாம் உண்டு இங்கே” என்ற படி நடந்த குருஜியிடம், “நீங்க எதுவுமே சாப்பிடலையே, ஏன்?” என்றேன். சிறிய மௌனத்தை அடுத்துச் சொன்னார் குருஜி.
“இன்னிக்கு சம்பா சஷ்டி. உபவாசம் இருக்கிறது ரொம்ப விசேஷம். வேற எங்கேயும்னா நீ சாப்பிட கஷ்டப்படுவே. இங்கேன்னா, சாப்பாடு உனக்கு சிரமமா இருக்காது. எனக்கு ஜபத்துக்கும் சிரமம் இருக்காது.”
தன் உபவாசத்தைவிட, என் பசியைப் பற்றிய கவலையும் அக்கறையும் கொண்ட குருவை எண்ணி மனம் கசிந்தது. வண்டியில் வரும்போது, ‘ஞானமும் வைராக்யமும் தா’ என்பது பற்றி, குருஜி சொன்ன விளக்கம் லேசாகப் புரிய ஆரம்பித்தது.
செல்லும் வழி:
பெங்களூரில் இருந்து 330 கி.மீ;
சிக்மகளுரில் இருந்து 100 கி.மீ. பேருந்து வசதிகள் உண்டு.
அருகிலுள்ள விமான நிலையம்: மங்களூர்; அருகிலுள்ள ரயில் நிலையம்: ஷிமோகா.
தொடர்புக்கு: 08263-274614/ 269714.

Comments
Post a Comment