அன்பு மலர்ந்தால் ஆண்டவன் ஏற்பான்!

வைணவம் சொல்லும் அடிப்படைத் தத்துவம்?சேதனம் (அறிவுள்ளவை) அசேதனம் (அறிவு இல்லாதது) ஈச்வரன், ஆக தத்வத் ரயமே வைணவத்தின் அடிப்படைத் தத்துவம். இதனை ச்வேதாச்வர உபநிஷத் ‘போக்தா, போக்யம், ப்ரேரிதா’ என்ற சொற்களால் குறிக்கிறது. மோக்ஷத்தில் இச்சையுடையவர்கள், மூன்று மஹா விரோதிகளை முதலில் அழிக்க வேண்டும். உடல் வேறு, உயிர் வேறு என்று அறியாமல் இருத்தல் (சரீராத்மப்ரமம்). இதுவே முதல் விரோதி. ஆத்மா சுதந்திரமானது என்ற மருள். இது இரண்டாம் விரோதி. பகவான் இல்லை என்று வாதம் செய்தல். இது மூன்றாம் விரோதி. இந்த, முப்பெரும் பகைவரை வெல்ல, தத்வ த்ரய சிந்தனம் செய்ய வேண்டும் என்பது சம்பிரதாயம்.

தென்னாட்டு வைணவம் - வடநாட்டு வைணவம். என்ன வித்தியாசம்?சிகையுடன் பன்னிரு நாமங்களை மேல்நோக்கி அணிந்து, பஞ்ச கச்சம் முதலான ஆடை தரித்து, ஸந்த்யாவந்தனம் முதலான தர்மங்களை கடைப்பிடித்தல் தென்னாட்டு ஆசாரம். குளிர் முதலான சீதோஷ்ணத்துக்கேற்ப ஆடை உடுத்தி, திருமண் அணிந்து திருவாராதனம் செய்தல் வடநாட்டு வழக்கம்.

வைணவத்தில் ஆசார்யர்களின் பங்களிப்பு என்ன?‘அன்றுநான் பிறந்திலேன்’ என்றபடி, ஆசார்ய சம்பந்தம் ஒன்றினால்தான் ஜீவன் ‘ஸத்’தை பெறுகிறான். ஜன்ம பரம்பரையிலிருந்து காத்து நாராயணனுக்கு சேஷ பூதன் (அடிமை) என்ற பொருளை உணர்கிறான். புண்டரீகன் பெரும் புண்யசாலி. க்ஷத்ரபந்து என்பவன் மிகவும் பாபி. ஆனால், ஆசார்ய சம்பந்தத்திலேயே இருவரும் முக்தி பெற்றனர்.

ஒரு நல்ல வைணவனுக்கு இருக்கவேண்டிய பண்புகள் என்ன?வைணவரைக் கண்டதும் சந்தோஷிக்க வேண்டும். தமக்கு சேஷி (எஜமானன்) என்று நினைக்க வேண்டும். இயன்றவரை அபசாரம் இன்றி இருத்தல் வேண்டும். தற்புகழ்ச்சி செய்யும்போது புண்யங்கள் யாவும் போய்விடும். அகந்தை ஏற்படும். எளிய தன்மையுடன் இருந்தால், பகவத் அபசாரம் குறையும்.

இதிகாசம் மற்றும் பாகவதத்தில் வைணவம் பற்றி என்ன சொல்லப்பட்டுள்ளது?
‘குகனொடும் ஐவரானோம். குன்று சூழ்வான் மகனுடன் அறுவரானோம்.’ என்று, சக்ரவர்த்தித் திருமகன் கலந்து பரிமாறினான். குரங்கினம் என்று நினைக்கவில்லை. ராக்ஷஸன் என்று நினைக்கவில்லை. அவனது எளிமைக்குக் காரணம் அந்தந்த இனத்திலும் அவன் கண்டது, கனிந்த உள்ளம். அன்பினால் (பக்தி) மலர்ந்த உள்ளத்தையே அவன் கண்டான்.

ஒரு யானை கதறியது. கையில் உள்ள தாமரை வாடிவிடுமே என்று அஞ்சியது. அவன் ஓடி வந்து துயர் களைந்தான். ஆக, அடியாரிடத்து அவன் கொண்ட அன்பையே ஸ்ரீமத் பாகவதம் பறைசாற்றுகிறது.

வைணவத்தின் சிறப்பம்சமான சரணாகதி பற்றி...உபாஸனம் அல்லது சரணாகதி இவை இரண்டில் ஒன்றினால் மட்டுமே பகவானை அடைய முடியும் என்பது வசனம். ஒருவனுக்கு இஷ்டமான பலன். தன்னாலும் பிறராலும் பெற முடியாதபோது, தேவைப்பட்ட பலனை சாதித்துத் தரவல்லவனிடம் வேண்டுதலும், தன் பொறுப்பை முழுவதுமாக ஒப்படைப்பதுமே ப்ரபத்தி அல்லது சரணாகதி எனப்படும்.

வைணவத்தில் பெண் ஆசார்யர்கள் வருவார்களா?வைணவத்தில் ஆசார்ய பரம்பரையில் பெரிய பிராட்டியார் அலங்கரிக்கிறாள். த்வய மந்திரத்தை பகவான் பெரிய பிராட்டியாருக்கு உபதேசிக்கிறான். பெரிய பிராட்டியார் ஸ்ரீவிஷ்வக்ஸேனருக்கு உபதேசம் செய்வதாகக் கொண்டு சம்ப்ரதாயம் வளர்கிறது. இதனால், ‘முக்த சம்ப்ரதாயம்’ என்றே குறிக்கப்படுகிறது. ஸ்ரீப்ரச்னஸம் ஹிதை, நம்மாழ்வார் வைபவம், சிஷ்டா சார ப்ரமாணம் முதலானவற்றில் இதை அறியலாம். கோதா தேவியாக அவதரித்த ஆண்டாள், ‘கோதோபநிஷத்’ என்று சொல்கிற மாதிரி, வேதத்தின் தாத்பர்யத்தை, எளிய இனிய நடையில் போதிக்கிறார்.

108 திவ்யதேச தரிசனம் வைணவருக்கு கட்டாயமா?இல்லை. மனத்தை ஒருநிலைப்படுத்தி, பகவானைத் தியானித்தால், எந்த ரூபத்திலும் காட்சியளிப்பார் பகவான்.

சுயமாச்சார்யார் கடைப்பிடிக்க வேண்டிய அனுஷ்டானம் என்ன?

அவர்களுக்கு வழிவழியாகவே பெரியவர்கள் நியமித்த அனுஷ்டானங்கள் போதுமானவை. அதைக் கடைபிடித்தாலே போதும்.

வரதட்சணை கொடுமை ஒழியாதா?அந்தக் காலத்தில், கன்னிகளுக்கு செல்வம் கொடுத்து விவாகம் செய்தார்கள். வரன் - தட்சணைதான் அது. பெண்ணுக்கு, வரன், கொடுக்க வேண்டிய தட்சணை. திருப்பதி பெருமாளே குபேரனிடம் கடன் வாங்கித்தான், ஆகாச ராஜன் மகளான பிராட்டியை மணந்தார். காலப்போக்கில், பெண் வீட்டில் கொடுப்பதாக மாறிவிட்டது அவலம். விவாகம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் உண்டான ஆயுள்பந்தம். இதை சந்தையில் ஆடு, மாடு வாங்குவதுபோல செய்யக் கூடாது.

பரகால மடம் ஏதாவது சமூக சேவை செய்கிறதா?பட்டப்படிப்பு வரை உள்ள கல்லூரியை மடம் நடத்துகிறது. எந்தச் சமூகத்தைச் சேர்ந்த ஏழையானாலும், அங்கு கல்வி, உணவு, தங்குமிடம் இலவசம். தவிர, ஆயுர்வேத மருத்துவமனை ஒன்றும் நடத்துகிறோம்.

பரகால ஜீயர் மடம்!

தொன்மையான வைணவ மடங்களுள், பரகால மடமும் ஒன்று. இந்த மடத்தை கி.பி. 1360ல் காஞ்சிபுரத்தில் ஸ்தாபித்தவர் ஸ்ரீப்ரஹ்ம தந்த்ர ஸ்வதந்திர ஜீயர். இவர் ஸ்ரீ வேதாந்த தேசிகரின் சீடர் பரம்பரை. அது தவிர ஸ்ரீ ராமானுஜரால், வைணவ சம்பிரதாயத்தை போதித்து வளர்க்க நியமிக்கப்பட்ட 74 ஸிம்ஹாசனாதிபதிகளில் ஒருவரான ஸ்ரீஈசாண்டான் என்பவரின் வம்சத்தில் தோன்றியவர்.


இந்த மடம் பல்வேறு கால கட்டங்களில், திருப்பதி, ஸ்ரீரங்கப்பட்டிணம், மேல் கோட்டை என்று மாறிமாறி, இப்போது மைசூரிலிருந்து செயல் பட்டுக்கொண்டு வருகிறது. ஸ்ரீராமானுஜரால் ஆராதிக்கப்பட்ட ஸ்ரீஹயக்ரீவர் விக்ரஹம், ஸ்ரீ வேதாந்த தேசிகர் வழியாக பரகால மடத்தில் சேர்ப்பிக்கப்பட்டு, இப்போதும் மடத்தில் ஆராதிக்கப்பட்டு வருகிறது. சிலகாலம், திருப்பதியில் கோயில் காரியங்களையும் இந்த மடம்தான் கவனித்துக் கொண்டது. மைசூர் சமஸ்தானத்தின் ராஜகுரு பரகால ஜீயர் ஸ்வாமிகள்தான். இப்போது 36 பட்டமாக மடத்தை அலங்கரிப்பவர் ஸ்ரீமத் அபிநவ வாகீஸ பிரஹ்ம தந்த்ர ஸ்வதந்திர பரகால ஜீயர் ஸ்வாமிகள்.



Comments