மகிழ்ச்சியாக வாழ்வதே வாழ்க்கைக் கலை

இந்த வாழ்க்கை இனியது; தித்திக்கும் கரும்பைப் போன்றது. கணுக்களைப் போல சிற்சில தடைகள் உண்டு. எனினும், உள்ளே ரசம் பொங்குகிறது! ஆனால் இந்த வாழ்க்கையை, பலரும் நரகமாகவே உணர்கிறார்கள்.
''துக்கங்களைக் கவளம் கவளமாக உட்கொண்டு வளர்ந்த ஜீவன் நான்'' என்று என்னிடம் கூறினார் ஒருவர். மற்றொருவர், ''வேப்பெண்ணெயில் தாளித்த பாவக்காய் கூட்டு போல் உள்ளது!'' என்று தனது வாழ்க்கையைப் பற்றி அவர் குறிப்பிட்டார்.

பெரும்பாலோர், மகிழ்ச்சியைத் தொலைத்த வர்களாகவே இருக்கிறார்கள்; கழுத்துப் புண் மீது நுகத்தடி வைக்கப்பட்ட காளைகளாகவே தங்களை உணர்கிறார்கள்!

இப்படி, செல்லரித்த ஏடுகளாக... மனிதர்கள் கவலைக்குத் தீனியாவதைப் பார்த்தால், 'என்ன அறியாமை இது?!' என்றே எண்ண வேண்டியிருக்கிறது.

மனிதர்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடன் வாழ முடியும். ஆனால் அதற்கு, சுயம் பற்றிய அறிவும், சுயக் கட்டுப் பாடும் அவசியம். சுயக் கட்டுப்பாடு இல்லாமல், கட்டறுத்துக் கொண்டு அலைபவர்கள், மகிழ்ச்சியைக் கண்டதில்லை. சுயக் கட்டுப்பாடு இல்லாதவர்களே, எளிதில் கவலைக்குத் தீனி ஆகிறார்கள்.

'கவலை இல்லாமல் வாழ்வது சாத்தியமே இல்லை' என்றும் பலர் நினைக்கிறார்கள்.

'வீட்டில் ஆயிரம் பிரச்னைகள்! அதைப் பற்றி கொஞ்சமாவது கவலை இருக்கிறதா? கவலை இருந்தால்... இப்படி, கேலியும் கும்மாளமுமாக இருப்பாயா?' என்று... கவலைப்படுவது மிக அவசியமானது என்பது போல் பேசி, சக மனிதர்களை கவலைப்பட வைப்பவர்களும் இருக்கிறார்கள்!

பொறுப்பாக இருப்பது வேறு, கவலையுடன் இருப்பது வேறு. இந்த வேறுபாட்டை உணராதவர்களே, 'கவலைப்படு!' என்கிறார்கள்.

மகிழ்ச்சியாக வாழ்வதே வாழ்க்கைக் கலை. கவலைப்படுவது அறிவீனம். இதுகுறித்து, அற்புதமான சில கருத்துகளைக் கூறியிருக்கிறார் சுவாமி பரமார்த்தா நந்தா.

கவலைக்கு உரிய பிரச்னைகள் எல்லோரது வாழ்விலும் இருக்கும். அந்த பிரச்னைகள் குறித்து அலட்டிக் கொண்டும், அல்லும் பகலும் அவற்றையே சிந்தித்துக் கொண்டும்... பிரச்னைகளின் அடிமைகளாக மாறி, மகிழ்ச்சியையும் வாழ்க்கையையும் வீணடிப்பது குறித்து விரிவாகப் பேசி இருக்கிறார் அவர்.



ஒவ்வொருவரது வாழ்விலும் ஒவ்வொரு விதமான பிரச்னைகள் இருக்கும். தன் பிள்ளை, பள்ளியில் நல்ல மதிப்பெண் வாங்கவில்லை என்பது ஒருவரது பிரச்னை. மற்றொருவருக்கு, தன் பெண்ணின் கல்யாணம் குறித்த பிரச்னை. கட்டிய மனைவியால் கண்ணீர் வடிக்கிறார்கள் சிலர். 'குடிகாரக் கணவனே தனது கவலைகளுக்குக் காரணம்' என்று குற்றம் சாட்டுகிறார்கள் சிலர்.

சிலருக்கு வறுமையே பிரச்னை. இன்னும் சிலருக்கு வளமையே பிரச்னை! இது இயல்புதான்; இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு தேடுவதும் அவசியம்தான்.

ஆனால், அந்தத் தீர்வுகளை... நன்றாக ஆலோசித்து, நடை முறைப்படுத்தி பிரச்னைகளில் இருந்து வெளிவர வேண்டும். நம்மில் பலர் அப்படிச் செய்வதில்லை. அவர்களுக்கு, பிரச்னைகளை நேருக்கு நேர் நின்று கவனிக்கும் நிதானம்கூட இல்லை!

பிரச்னை என்றதும் நாம் என்ன செய்கிறோம்? அந்தப் பிரச்னையை நம் இதயத்தில் குடியேற்றி, அதற்கு அரியாசனமும் போட்டுக் கொடுத்து விடுகிறோம்! நம் மனம், நம்மிடம் இருப்பது போய்... பிரச்னைகளின் ஆளுகைக்கு உட்பட்டதாக மாறி விடுகிறது. நீர்ச்சுழலில் சிக்கிய துரும்பு போல், பிரச்னை களிலேயே சுழல ஆரம்பிக்கிறது மனம். குறிப்பிட்ட பிரச்னைகள் தீரும் வரை நம் மனதின் நிலை இதுதான்!

காலில் முள் தைத்துவிட்டால், உடனடியாக அந்த முள்ளை அகற்றி விடுவோம். ஆனால், மனதை உறுத்தும் பிரச்னைகளை உடனடியாக வெளியேற்றுகிறோமா? இல்லை! எனில், பிரச்னைகள் எப்போதுதான் நம் மனதை விட்டு வெளியேறும்? இது, அந்தப் பிரச்னைகளைப் பொறுத்ததாக மாறி விடுகிறது. இதுதான் விபரீதம்!

பிரச்னைகளின் வேதனை தாளாமல், பலபேர் சிந்திக்கும் திறனையே இழந்து விடுகிறார்கள். பிறகு எப்படி பிரச்னைக்குத் தீர்வு தேட முடியும்? இப்படித்தான் மனிதர்கள், துன்பங்களையும் கவலைகளையும் தமக்குள் நுழைய அனுமதித்து, அவற்றுக்கு அடிமையாகி, சிந்திக்கும் திறனையும் இழந்து,மீள முடியாமல் தவிக்கிறார்கள்.

இதுகுறித்து, கீதையில் ஒரு சுலோகம் உண்டு. 'பொருள் களை நினைப்பதால் பற்று உண்டாகிறது. பற்று, ஆசையாக பரிணமிக்கிறது. ஆசை, சினமாக வடிவெடுக்கும். சினத் தால் மனக் குழப்பம் உண்டாகிறது. குழப்பத்தால் நினைவின்மை ஏற்படுகிறது. இதன் விளைவு,
புத்தி நாசம் அடைகிறது. புத்தி நாசத்தால் மனிதன் அழிகிறான்!' என்கிறது கீதை.

பிரச்னைகளை மனதில் பூட்டி வைக்கும் விஷயத்தி லும் இதுதான் நடக்கிறது! துன்பம் துன்பம் என்று புலம்புகிறவன் துன்பத்திலேயே உழன்று, வாழ்க்கையை வீணடிக்கிறான். எனவே, நமது பிரச்னைகள் என்னவோ... அவற்றை, வெளியில் வைத்துப் பார்க்க வேண்டும்.

இது, கேட்பதற்கு சுலபமாக இருந்தாலும் கடைப் பிடிப்பது கடினமே. ஆனாலும் இதை முதலில் நாம் பழக வேண்டும்.

மிகச் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர், விபத்தில் சிக்கிய தன் மகன் சிகிச்சைக்கு வந்தபோது, சர்ஜரி கத்தியைப் பிடிப்பதற்குக்கூட தெம்பற்றுப் போனார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

நாமும் அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

முதலில்... நமது வாழ்வில் குறுக்கிடும் பிரச்னைகள், நம் இதயத்தில் புகுந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பிரச்னைகளுக்கு நாம் அடிமையாகாமல், அவற்றை நமது ஆளுகைக்குள் வைத்தி ருக்கப் பழக வேண்டும். பிரச் னைகள் குறித்து யோசிப்பது அல்லது முடிவெடுப்பது நம் கையில் இருக்க வேண்டும்.

இரண்டாவது... நம் முன் நிற்கும் பிரச்னைகள் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவரது நோயைப் பற்றித் தெளிவாகத் தெரிந்தால் தான் அவருக்கு என்ன மருந்து கொடுக்கலாம் என்பது குறித்து யோசிக்க முடியும். ஆகவே, பிரச்னையைத் தெளிவாக வரையறுத்து உணர்ந்து கொள்ள வேண்டும்.

அடுத்த நிலை... தீர்வு! ஒரு பிரச்னையைத் தீர்க்க பல வகையான வழிமுறைகள் இருக்கலாம். அந்த வழிமுறைகள் குறித்து நன்றாக யோசிக்க வேண்டும். சிறந்த- சுலபமான- நடைமுறைக்கு உகந்த வழி எது என்பதை ஆராய வேண்டும். இதுகுறித்து, வயதில் மூத்த பெரியவர்களிடமும் நம்பிக்கைக்கு உரியவர்களிடமும் ஆலோசிப்பது அவசியம்.

அடுத்தது... பிரச்னைகளைத் தீர்க்க அல்லது அவற்றில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டுமோ... அதற்கான காரியங்களை நிதானமாகச் செயல்படுத்த வேண்டும். இதனால் பிரச்னைகளை வென்று நாம் மகிழ்ச்சியாக வாழ முடியும்.

சில வகை பிரச்னைகளுக்குத் தீர்வே கிடைக்காது. 'பெருவெடிப்புக் கொள்கை' பற்றி விளக்கிய, ஸ்டீபன் ஹக்கின்ஸ் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். அவரின் கழுத்துக்குக் கீழ் எந்த உறுப்பும் செயல்படாது. இது தீர்க்க முடியாத பிரச்னைதான்.

எனினும், தன் ஊனத்தை ஒரு பொருட்டாகக் கருதாத ஸ்டீபன் ஹக்கின்ஸ், பெரும் சாதனை புரிந்தார்.

நாமும் இதுபோல், தீர்க்க முடியாத பிரச்னைகளையும் ஏற்றுக் கொண்டு, மகிழ்ச்சியாக வாழ முடியும்!

பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் வாழ்க்கையைப் பாருங்கள். அவர், செயற்கரிய காரியங்கள் எத்தனையோ செய்திருக்கிறார். ஆனாலும் அலட்டல் இல்லை.

சுண்டு விரலில் மலையைச் சுமக்கும் அவரின் முகத்தில் சுமையின் கடுமை இல்லை. போர்க் களத்தில், தத்துவ ஆழம் கொண்ட கீதையை உபதேசித்தார் அவர். காரணம்? போர்க்களத்தின் பதட்டம், அவருக்குள் நுழையவில்லை. நாமும் அப்படி வாழ முடியும்.

Comments