ஸத்யம் பரம்பரம்..

உண்மை அழிவற்றது; மாறுபாடு இல்லாதது; அனைத்திலும் உயர்ந்தது. இதையே 'சத்தியம்' என்கிறது சனாதனம். 'இதுவே உயர்வானது' என்கிறது உபநிடதம் (ஸத்யம் பரம்பரம்...). 'சத்தியத்தின் பொருள் பரம் பொருள்' (ஸத்யம் ஞானமனந்தம் ப்ரம்ம) எனக் கூறும் வேதம், 'உண்மையே பேசு' என்று அறிவுறுத்துகிறது.
புராணங்கள், 'சத்தியத்தைத் தேடு; அதைத் தெரிந்து கொள்; எங்கே சத்தியம் உள்ளதோ அங்கேயே நிலைத்து நின்று விடு' என்று வலியுறுத்துகின்றன.



சத்தியத்தைக் கடைப்பிடிப்பவன் வாழ்வில் நிறைவைக் காண்பான். ஆனால், அசத்தியம்... அல்லல்பட வைத்து விடும். 'சத்தியம் வெல்லும்; அசத்தியம் தோல்வியைத் தழுவும்' என்பது சான்றோர் கருத்து. ஆக... வேதம், சாஸ்திரம், புராண- இதிகாசங்கள் அனைத்தும் சத்தியத்தின் உயர்வையே நமக்கு விளக்குகின்றன.

'அறத்தில் ஆழ்ந்து விடு' என்ற அறிவுறுத்துகிறது வேதம். இதையே... கர்ம வ்யாதன் மற்றும் அரிச்சந்திரன் கதை களின் மூலம் விவரிக்கின்றன, புராணங்களும் இதிகாசங்களும். சத்தியத்தைக் கையாண்டு வென்றார் ஸ்ரீராமன் என்கிறது ராமாயணம். அறத்தை நம்பிய தருமர் ஆனந்தத்தை எட்டினார் என்கிறது மகாபாரதம்.

சொல்லில் உண்மையும், செயலில் அறமும் வெளிப் பட வேண்டும். எனவேதான் அறம் சார்ந்த உண்மையை ஆதரித்தான் அரிச்சந்திரன். இவனின் செயல்பாடு, இளைய சமுதாயத்துக்கான முக்கிய பாடம்!



'மறைந்திருக்கும் அசத்தியம் அறிவுக்கு எட்டாததால், அசத்தியத்தையும் சத்தியமாகவே பார்க்கிறது உலகம்' என்கிறது வேதம் (ஸத்யம் சாநிருதம் சஸத்யமபவத்). சத்தியம்- அசத்தியம் இரண்டையும் பிரித்து அறிவதே பகுத்தறிவு. இந்த பகுத்தறியும் திறன் இருந்து விட்டால், இளமை இனிமையாகும்; இளைஞர்களின் வாழ்வு வளமாகும். இதற்கு, புராணக் கல்வி மிக முக்கியம்.

இக்ஷ்வாகு வம்சத்தின் குலவிளக்காகத் தோன்றியவன் அரிச்சந்திரன். இவனது ஆட்சியில் மக்கள் நிம்மதியுடன் வாழ்ந்தனர். ஏழ்மை இல்லை; நோய்- நொடிகள் கிடையாது. அகால மரணங்களும் இல்லை. அனைவரும் இறை பக்தியுடன், அறம் சார்ந்து நிம்மதியாக வாழ்ந்தனர். இதற்குக் காரணம் அரிச்சந்திரனது உண்மையும் அறமும்!

அரிச்சந்திரனின் இந்த நற்குணங்களுக்குக் காரணம்... அவனின் குலகுரு- வசிஷ்டர். இவரது அறிவுரையால், அரசியல், தனிவாழ்க்கை இரண்டிலும் புகழுடன் திகழ்ந்தான் அரிச்சந்திரன்.

'நீருண்ட மேகங்கள் சூரியனை மறைக்கும். எனினும் காற்றின் வேகத்தில் சடுதியில் மேகங்கள் கலைந்து விட சூரியன் மீண்டும் ஒளி வீசுவான். அது போல், உண்மையை பொய் விழுங்கினாலும் உண்மை ஒரு நாள் வெளிப்படும்!' எனும் வசிஷ்டரது போதனைகள், அரிச்சந்திரனின் மனதில், சத்தியத்தின் மீது பிடிப்பை ஏற்படுத்தியது.

உலக நன்மைக்காக வேள்வி நடத்திய அரிச்சந்திரன், குலகுருவுக்கு 'அக்ராசனம்' அளித்து மகிழ்ந்தான். அரிச்சந்திரனின் குலகுரு என்பதால், விண்ணுலகிலும் வசிஷ்டருக்கு மரியாதை கிடைத்தது. இந்திர சபையிலும் இடம் பிடித்தார் அவர்!

ஒரு நாள்... இந்திர சபையில் தேவதைகள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், பித்ருக்கள் மற்றும் நாரதர், வசிஷ்டர், விஸ்வாமித்திரர் ஆகிய ரிஷிகள் வீற்றிருக்க, 'மண்ணுலகில் சிறந்த வள்ளல் யார்? அறத்தை முறையாகக் கடைப்பிடிப்பவர் யார்?' என்ற சர்ச்சை கிளம்பியது.

அப்போது, அரிச்சந்திரனது பெருமையை எடுத்துரைத்தார் வசிஷ்டர். அவரது கருத்தை... அரிச்சந்திரனிடம் இருந்து அவிர்பாகம் பெற்ற தேவர்கள் உட்பட, அவையில் இருந்த அனைவரும் ஆமோதித்தனர்.

ஆனால், இறைவனின் சிந்தனையை யார் அறிவார்? அவர், 'இந்திரசபையில் ஒலித்த அரிச்சந்திரனின் பெருமை உலகம் முழுவதும் எதிரொலிக்க வேண்டும்' என விரும்பினார் போலும்!

'அரிச்சந்திரனின் பெருமையைக் கொண்டு வசிஷ்டர் தன்னை உயர்த்திக் கொள்கிறார்!' என்று கருதிய விஸ்வாமித்திரர், ''வசிஷ்டர், தன்னை உயர்த்திக் கொள்ள அவையோரை சிறுமைப்படுத்துகிறார். அவர் கூறுவது போல், அரிச்சந்திரன் சத்தியத்தைக் கடைப்பிடிப்பவன் அல்ல. சிறு துயரம் வந்தாலும் சத்தியத்தைக் கை கழுவுபவன்!'' என்றார். ஆனாலும், வசிஷ்டர் பக்கமே தேவர்கள் நின்றனர்.

இதனால் கோபம் கொண்ட விஸ்வாமித்திரர், ''வசிஷ்டர் கூறுவது பொய் என்பதை நிரூபிக்கிறேன். இதில் நான் வெற்றி பெற்றால், வசிஷ்டர் தனது தவப்பலனை தாரை வார்க்க வேண்டும். ஒருவேளை, அவர் வெற்றி பெற்றால், எனது தவப் பலனை நான் தாரை வார்க்கிறேன்'' என்று கூறிவிட்டு வெளியேறினார்.

வசிஷ்டர் மீதான விஸ்வாமித்திரரின் பகை உணர்வு அரிச்சந்திரனை பாதித்தது. அந்தணராகச் சென்று அவனைச் சந்தித்த விஸ்வாமித்திரர், 'வேள்விக்காக செல்வம் வேண்டும்' என்று கேட்டார். அவனும் அள்ளி அள்ளிக் கொடுத்தான். இப்படி, பல பொய்களைச் சொல்லி, சிறுகச் சிறுக அரிச்சந்திரனது தேசத்தையே தனதாக்கிக் கொண்டார் விஸ்வாமித்திரர்.

அது மட்டுமா? 'கொடை அளித்த இடத்தில் குடியிருக்க உரிமை இல்லை' என்று, குடும்பத்துடன் அவனை தேசத்தை விட்டே வெளியேற்றினார். இதையடுத்து காசியை அடைந்த அரிச்சந்திரன், மனைவி- மகனை இழந்து, மயானக் காப்பாளனாகப் பணி புரிய நேரிட்டது! இப்படி, இன்னல்கள் பல வந்தபோதும் சத்தியம் தவறாமல் இறைவனையே நினைத்து வாழ்ந்தான் அரிச்சந்திரன். எவ்வளவு முயன்றும், அவனை பொய் சொல்ல வைக்க விஸ்வாமித்திரரால் முடியவில்லை. இறுதியில் தோல்வியை ஒப்புக் கொண்டார் விஸ்வாமித்திரர்.

தேவர்கள் சூழ மும்மூர்த்தியரும் அரிச்சந்திரனுக்கு தரிசனம் தந்தனர். ''எவ்வளவு துன்பம் நேர்ந்த போதும் சத்தியத்தை விடாமல் கடைப்பிடித்த உனது புகழ் என்றென்றும் நிலைக்கும்' என்று வாழ்த்தி, குடும்பத்துடன் அவனுக்குப் பரம பதம் அளித்தார் இறைவன்.

வசிஷ்டர் அளவுக்குத் தன்னால் உயர முடிய வில்லையே எனும் எண்ணமே விஸ்வாமித்திரருக்குள் பொறாமையாக மாறியது. அவர் மூலமாகவே அரிச்சந்திரனின் பெருமையை உலகுக்கு எடுத்துரைத்தார் இறைவன்.

பரமேஸ்வரனது முடியைக் காண முடியாத பிரம்மன்... ஈசனின் தலையில் இருந்து விழுந்ததாக தாழம்பூவை சாட்சியாக்கி, பொய் சொன்னார். வேதத்தை சொல்லும் வாய், பொய் சொல்லக்கூடாது என எண்ணிய இறைவன், பிரம்மனின் தலையையே கிள்ளி எறிந்தார் என்று விளக்கும் புராணம் பொய், அழிவையே தரும் என்று வலியுறுத்துகிறது.

தந்தையின் சத்தியத்தைக் காப்பாற்ற வனவாசம் மேற்கொண்டார் ஸ்ரீராமன். கூனியின் பொய் கைகேயியை அலைக்கழித்தது.

'மனமும் வாக்கும் பொய் சொல்லும்; ஆனால் கண்கள் பொய் சொல்லாது. அது உள்ளதை உள்ளபடி பதிய வைக்கும்' என்கிறது வேதம் (அநிருதம்வை வாசாவததி... சசுர்வை ஸத்யம்). நீதித் துறை கூட கண்ணால் பார்த்ததை சாட்சியாக எடுத்துக் கொள்கிறது.

சத்தியத்தைக் கடைப்பிடிப்பது, ஒரு கட்டத்தில் இறை வழிபாடாகவே மாறிவிடும். சத்தியத்தைக் கடைபிடித்து சாதனை புரிந்தார் மகாத்மா காந்தி. 'சத்யமேவ ஜயதே' எனும் உயரிய வாக்கியத்தைச் சொல்லி நாம் பெருமைப்படுகிறோம். அனைவராலும் கடைப்பிடிக்க வேண்டிய பொது அறம்... சத்தியம்.

சத்தியம், ஆன்மாவின் இயல்பு. பொய்யானது வெளியில் இருந்து வந்து ஆன்மாவில் ஒட்டிக் கொள்வது. ஆனால், வெளியே இருந்து வருவதை புறம் தள்ளுவது சுலபம். கடவுளிடம் அசையாத நம்பிக்கை கொண்டால், பொய் தானாகவே வெளியேறி விடும்.

விளையாட்டுக்காகக் கூட பொய் சொல்லக் கூடாது. அப்படிச் சொல்கிறபோது, அதுவே இயல் பாகி விடும். இது, ஒருவரின் மன அமைதியையே அழித்து விடும். வாழ்க்கையில் பொய்யைக் கலப்பது, ஆறாத் துயரத்துக்கு வழிவகுத்து விடும்.

இல்லாதது பொய். அது, தோற்றம் அளிப்பதோடு நின்று விடும். 'கானல் நீர் வெறும் தோற்றம்; அது உண்மை இல்லை' என்றார் ஆதிசங்கரர். சத்தியத்தைக் காப்பாற்ற அளவுடன் உரையாடுபவர் முன்னோர்கள் என்றான் காளிதாசன் (ஸத்யாய மித பாஷிணாம்).

'பேச்சு உண்மையாகவும் பிரியமாகவும் இருக்க வேண்டும். அதேநேரம், பிறருக்குத் துன்பத்தை விளைவிக்கும் உண்மையைத் தவிர்க்க வேண்டும். ஆனால், பிறருக்கு இன்பம் தரும் என்ற நோக்கில் பொய்யை உதிர்க்கக் கூடாது' என்கிறார் பர்த்ருஹரி (ஸத்யம் ப்ரூயாத்...).

காற்று இயங்குவதும் சூரியன் ஒளிர்வதும் சத்தியத்தின் கட்டுப்பாட்டில் நிகழ்வது! அதுபோல் வாக்கும் சத்தியத்திலேயே நிலை கொள்கிறது. இந்த நிலையே ஒருவனை உயர்த்தும் என்கிறது வேதம்.

இப்போதைய சூழலில், காரியம் சாதிக்க பொய்யைக் கையாளுவது அதிக அளவில் உள்ளது. வியாபார நோக்கத்துடன் செயல்படும் பொய்யின் கலப்பு அனைத்து இடங்களிலும் தென்படுகிறது. உலகின் பல்வேறு இன்னல்களுக்கு மூலகாரணம் பொய்தான்! உண்மையைக் கடைப் பிடிக்கும் மனப்பக்குவம் இளைஞர்களுக்கு வளர வேண்டும். இதுவே வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது!

Comments