வேதம் கூறும் வழிபாடு!

மற்றவர்களிடமிருந்து தன்னைப் பிரித்துக்கொள்ளும் உணர்வு தான் - ‘நான்’ என்பது.

தாய் அண்ணனுக்கு ஒரு தின்பண்டம் கொடுத்தால், கடைக் குட்டிப் பிள்ளை ‘எனக்கு’ என்று கையை நீட்டும் - இதுவும் ‘நான்’தானே?

நாய்க்குச் சோறு போட்டால், சட்டியையே பார்க்கும் மிச்சம் மீதியையும் தனக்குப் போடுவார்களா? இல்லையா? என்று ஏக்கத்தில் பார்க்கும் பார்வை இது இதுவும் ‘நான்’ என்பதுதானே.

மனம் உள்ள எல்லா உயிர்களுக்கும் நான் என்ற உணர்ச்சி உண்டு. நிழலிலே இருக்கும் ஒரு செடி வெயிலில் கை நீட்டுவதும் ‘நான்’ என்ற உணர்வுதான். படைக்கப்பட்ட எல்லா உயிர்களுக்கும் ‘நான்’ என்ற உணர்ச்சி உண்டு.

நான் தூங்கப் போகிறேன் - நான் விழித்துக்கொண்டேன் - நான் குளிக்கிறேன் - நான் சாப்பிடுகிறேன் - நான் உயிரோடு இருக்கிறேன் - என்றெல்லாம் உணராவிட்டால், எதையும் அனுபவிக்கவும் முடியாது.

அனுபவம் இல்லாமல் இன்ப துன்பம் இல்லை. ஏன்? உயிர் வாழ்வே இல்லை.

இதை ஆங்கிலத்தில் cognition அதாவது தன்னை உணர்தல் என்று சொல்வார்கள். Recognition என்ற ஆங்கில வார்த்தையை உணரும்போது இது தெளிவாகும்.

இதைச் சமஸ்கிருதத்தில் ‘அஹம்’ என்று சொல்வார்கள். நான் என்ற தத்துவம் அது.

உயிர்கள் எல்லாவற்றிலும் இந்த உணர்வு தவறாமல் இருக்கிறது. அப்படியானால் இந்த உணர்வு உயிர்களுக்கு இயற்கையாக உண்டான ஒன்றாகத்தான் இருக்க முடியும். அதாவது, கடவுளே இந்த உணர்வை உயிர்களுக்கு அருளியதாகவே நினைக்க வேண்டியுள்ளது. இதுவே, கொஞ்சம் தடித்த உணர்வாகி விட்டால் அதை ‘அகந்தை’ என்கிறார்கள்.

எல்லா உயிர்களிலும் இப்படி ஓர் உணர்வு இருப்பதை நாம் பாவித்துப் பார்த்தால், அது ‘அகம்பாவம்’ என்று சொல்லப்படும்.

சிவத்திலிருந்து பராசக்தி பிரியும்போது -அல்லது சக்தியிலிருந்து சிவம் பிரியும் போது ‘அஹம்’ (நான்) என்ற உணர்வு தோன்றியதாக நூல்கள் கூறுகின்றன.

தெய்வத்தால் உணரப்பட்ட ஒன்று எல்லா உயிர்களுக்கும் பதிவாகிவிட்டது.

‘எல்லா உயிர்களிலும் உள்ள நான் என்ற உணர்வே எனக்கும் உள்ளது’ என்று பாவித்தால் - அந்தப் பாவனை தெய்விகமாகிவிடுகிறது.

இதைத்தான் ‘அஹம் ப்ரஹ்மாஸ்மி’ என்று வேதம் கூறுகிறது. (நான் ப்ரஹமமாய் இருக்கிறேன்) என்பது இதன் பொருள்.

எல்லா உயிர்களையும் ஒரே நேரத்தில் கடவுளால் மட்டும்தான் நினைக்க முடியும்.

ஒரு மனிதனும் இப்படி நினைத்துப் பாவித்தால், அவன் தெய்வமனிதன் என ஆகிறான். அதுவே ‘அஹம் ப்ரஹ்மாஸ்மி என்று ஆகிறது.

படைக்கப்பெற்ற எல்லா உயிர்களின் ‘நான்’ என்ற உணர்வை, நான் என்னுடையதாகப் பாவிக்கிறேன் என்று நினைத்ததுமே அந்த நினைவு எல்லா உயிர்களிலும் பரவும்.

கடவுளை நாமாகப் பாவிப்பதாலோ - நமக்குள் கடவுளைப் பதிய வைப்பதாலோகூட இந்தப் பாவனை உண்டாகும். நமக்கு மட்டுமான ‘நான்’ என்ற உணர்ச்சியை அஹம் என்றும் அஹந்தை என்றும் கூறுகிறோம்.

எல்லா உயிர்களின் உணர்வையும் ஒன்றாக்கினால் ‘பரஹந்தா’ (பர்+அஹந்தை) என்று ஆகும். லலிதா மஹாத்ரிபுரஸுந்தரியின் தியான சுலோகத்தில், ‘அஹமித்யேவ விபாவயே பவானீம்’ என்று வருகிறது.

(பவானியை) ‘லலிதாவை உயிர்களின் நான் என்ற உணர்வாக நான் பாவிக்கிறேன்’ என்று இதற்குப் பொருள்.

தியானம் செய்யும்போது இரண்டு நிலைகள் உண்டு. ஒன்று எதையுமே சிந்திக்காமல் இருப்பது இதைச் ‘சும்மா’ இருத்தல் என்று கூறுகிறார்கள். இரண்டாவது முறை - கடவுளும் நானும் ‘வேறு வேறல்ல’ ஒன்றே என்று நினைப்பது ஆகும்.

அப்படி நினைப்பதைத்தான் இந்தத் தியான சுலோகம் சொல்கிறது. இதையே நினைத்துக் கொண்டிருந்தால் சமாதி நிலை உண்டாகலாம்.

எல்லாப் பற்றுக்களையும் நீக்கிவிட்டு இப்படி நினைப்பவர் சமாதி நிலைக்குப் போவது உறுதி.


அதிலிருந்து மீள வேண்டும் என்ற உள் உணர்வும் நமக்கு உண்டாகாது. இந்த நிலையை அடைந்தவர்கள் கடவுள் அருள்பெற்ற மனிதர்களே ஆவார்கள்.

மனம் வேலை செய்யாவிட்டால் மூளையும் வேலை செய்யாது. மூளை அமைதியானால் மூச்சு இழுத்து வெளியிடுவதும் - இதயத்துடிப்பும் குறையும். அப்படி இருந்தும் உயிர் போகாமல் இருப்பதிலிருந்து கடவுள் அருளே இதற்குக் காரணம் என்றும் உணரலாம்.கடவுளை வழிபடுவதிலேயே மிகச் சிறந்தது கடவுளும் நானும் ஒன்றுதான் என்று உணர்வதே ஆகும்.

‘ஏகாக்ரசித்தம்’ என்று இதைச் சொல்வார்கள்.

வேதமகா வாக்கியப்படி இதுவே சிறந்த வழிபாடாகக் கருதப்படுகிறது.

Comments