கூடத்தாழ்வானின் குருபக்தி!

முன்னிரவின் ஊதல் காற்றில்... படபடத்தது மேல் வஸ்திரம். குளிருக்கு இதமாக வஸ்திரத்தை சரிசெய்து போர்த்திக் கொண்டவர், கம்பீரமாக நடைபோட்டு நகர் வலம் வந்தார். ஊர் மக்களால் மன்னருக்குச் சமமாக மதிக்கப்படுபவராயிற்றே!

அவர்களில் பெரும்பாலானோரின் வாழ்வும் வருமானமும் இவரைச் சார்ந்ததுதான். எல்லையில்லாமல் விரிந்து பரந்த இவரது விளை நிலத்தில் பாதிபேர் பணிபுரிந்தனர் எனில், மீதிபேருக்கு இவரது திருமாளிகையில் வேலை; யாத்ரீகர்களுக்கான உணவு தயாரிக்க வேண்டும். ஆமாம்... காசியில் இருந்து ராமேஸ்வரத்துக்கும் தென்னாட்டில் இருந்து காசிக்குமாக யாத்திரை செல்பவர்கள், காஞ்சி வழியாகத்தான் பயணிப்பார்கள். வழியில் இந்த ஊரில் தங்கி இளைப்பாறும் பயணிகளுக்கான உணவு திருமாளிகையில் தயாராகும். இந்தப் பணியில் பலநூறுபேர் ஈடுபடுவர்!

ஊர் மக்களின் வாழ்க்கை ஆதாரத்துக்கு மட்டுமல்ல, அவர்களது பாதுகாப்புக்கும் இவர்தானே பொறுப்பு? எனவேதான் இந்த நகர்வலம்.

சந்நிதித் தெரு தாண்டி ஒரு வீட்டில் விளக்கு வெளிச்சம்... நடுக் கூடத்தில் சிறுமி ஒருத்தி படுத்திருக்க, அருகே அமர்ந்து அழுது கொண்டிருந்தனர் பெற்றோர். 'ஏதேனும் அசம்பாவிதமா? இருக்காது... வேறு என்ன பிரச்னை. உள்ளே போய் கேட்டு விடலாமா? வேண்டாம்... இப்போது சென்றால் அது அவர்களது துக்கத்தை அதிகப்படுத்தி விடும். விடியட்டும் பார்க்கலாம்!' - என்று எண்ணியவர் நகர்வலத்தைத் தொடர்ந்தார்!



விடிந்தது. திருமாளிகையில் இருந்து அழைப்பு என்றதும் மகளுடன் விரைந்து வந்தனர் பெற்றோர். அவர்களிடம் துக்கத்துக்கான காரணம் கேட்கப்பட்டது. பிரச்னை எதுவாயினும், திருமாளிகையிலேயே தீர்த்து வைக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. எனினும், மௌனம் சாதித்தனர் அந்தப் பெற்றோர்; நீண்ட வற்புறுத்தலுக்குப் பிறகே, பிரச்னையை விவரிக்க ஆரம்பித்தனர்.

அது, பால்ய விவாகம் வழக்கத்தில் இருந்த காலம். திருமணத்துக்கு முன் ஒரு பெண் ருதுவாகிவிட்டால் பெரும் இழுக்காகக் கருதப்பட்டது. ஆனால்... ''எங்கள் பெண்ணுக்கு தோஷம்; இவளை மணம் முடிப்பவனுக்கு ஆயுள் அற்றுப் போகுமாம்... இப்படியிருக்க, இவளை மணக்க யார் முன்வருவர். திருமணம் தள்ளிப் போகிறது. அதற்குள் இவள் ருதுவாகி விட்டால், நாங்கள் வெளியே தலை காட்ட முடியாது!' அழுகையை அடக்கியவாறு பேசினார் தந்தை.

''இதுதான் உங்கள் பிரச்னையா? சரி... இவளை நான் மணந்து கொள்கி றேன்... உங்களுக்கு சம்மதம் எனில்!''

- திருமாளிகையின் தலைவர் இப்படிச் சொன்னதும் தூக்கிவாரிப் போட்டது அவர்களுக்கு.

''ஐயா, நீங்கள் ஊருக்கே படியளப்பவர். இவளை மணந்து உங்களுக்கு ஏதாவது ஒன்று என்றால், ஊர் மக்கள் என்ன ஆவார்கள்? வேண்டவே வேண்டாம்!'' - கரம் கூப்பி அரற்றினார் தந்தை.

அவரை கையமர்த்திய திருமாளிகைத் தலைவர், ''உமது பெண்ணை மணப்பதால் மட்டுமே ஆயுள் குறைந்து விடாது. நான் அறிந்த வரையில், ஒரு பெண்ணின் பாக்கியமோ தோஷமோ எதுவாயினும்... அவளுடன் தாம்பத்தியம் சுகிக்கும் ஆடவனையே அது பாதிக்கும். எனக்கு தாம்பத்திய நாட்டம் கிடையாது. உங்கள் பெண்ணை மணக்கப் போகிறேன், அவ்வளவுதான்... என்ன சொல்கிறீர்கள்..!'' என்று கேட்டார்.

மட்டற்ற மகிழ்ச்சி அந்தப் பெற்றோருக்கு; தங்களின் பெண்ணை அவருக்குத் தாரை வார்த்தனர். அந்தப்பெண்... கூரத்தாண்டாள். அவளின் திருக்கரம் பற்றியவர்... கூரத்தாழ் வான். அவர் அவதரித்த திருவிடம்... கூரம்!

காஞ்சிபுரம்- அரக்கோணம் பாதையில் சுமார் 10 கி.மீ. தொலைவில்... இடப்புறமாக ரயில்வே கிராஸிங்கைத் தாண்டி- பிரிந்து செல்லும் சாலையில் சிறிது தூரம் பயணித் தால் கூரம் கிராமத்தை அடையலாம்.

கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது ஆலயம். பரவசத்துடன் உள்ளே நுழைகிறோம். இடப்புறம் வாகன மண்டபம்; ஒட்டி னாற்போல கிழக்கு நோக்கி ஸ்ரீசக்கரத்தாழ்வார் சந்நிதி. வணங்கி வழிபட்டு, தாயாரின் சந்நிதியை அடைகிறோம்.

ஸ்ரீபங்கஜவல்லி தாயார்! அனந்தனுக்கே ஆனந்தம் தரும் அகிலநாயகியை கண்ணார தரிசிக்கிறோம். தாயாரின் திருநட்சத்திரம் பங்குனி உத்திரம். திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் இந்தத் தாயாரை வழிபட்டு, வரம் பெற்றுச் செல்கிறார்கள்.

அப்படியே வலம் வந்து கோதை ஆண்டாள், அனுமன் மற்றும் கருடாழ்வார் ஆகியோரை தரிசித்து, ஸ்ரீஆதிகேசவ பெருமாள் சந்நிதிக்குள் செல்கிறோம். அற்புத தரிசனம்! 'இதோ பார்... இவர்தான் நமக்கு எல்லாமும். துன்பமோ இன்பமோ நாங்கள் சரணடைவது இந்த ஆதிகேசவரிடம்தான். நீயும் இவரையே கெட்டியா பிடிச்சுக்கோ' என்று தந்தை கூரத்தாழ்வாரும், தாய் பெருந்தேவி நாயகியும் சுட்டிக் காட்ட... பால்ய பருவம் முதல் இவரைத்தானே வணங்கித் தொழுதிருப்பான் திருமறு மார்பன்!

ஆமாம்... 1000 ஆண்டுகளுக்கு முன் சௌம்ய வருஷம் தை மாதம் அஸ்த நட்சத்திரத்தில் அவதரித்த கூரத்தாழ்வானுக்கு பெற்றோர் சூட்டிய பெயர் இதுதான்!

ஆதிகேசவ பெருமாளுக்கு இடப் புறமாக தெற்கு நோக்கி தனிச் சந்நிதி கொண்டிருக்கிறார் கூரத்தாழ்வான்; தாடி- மீசையுடன் காட்சி தரும் ஒரே ஆச்சார்ய புருஷர். பேன்- ஈறு போன்றவற்றுக்கும் துன்பம் நேர்ந்து விடக் கூடாது என்ற கருணையே இதற்குக் காரணம். கூப்பிய கரங்களுடன் வீற்றிருக்கும் கூரத்தாழ்வானை தரிசித்த நொடியில்... அவரின் காலத்துக்கே பயணப்படுகிறது நம் மனம்!

காஞ்சி வரதருடன் உரையாடிக் கொண்டிருந்தார் திருக்கச்சி நம்பிகள். அப்போது எங்கோ மணிகள் ஒலிக் கும் சத்தம். 'என்ன?' என்பது போல் நம்பிகளை ஏறிட்டார் ஸ்ரீவரதர்.

''ஸ்வாமி, இங்கிருந்து பத்து கல் தொலைவில் உள்ள கூரத்தில் பெரும் தனவானான ஓர் அடியவர் இருக்கிறார். யாத்ரீகர்களுக்கு அன்னம் அளிக்க, அவரது மாளிகையில் தொடர்ந்து சமையல் நடக்கும். இப்போது அடுத்த வேளை சமையலுக்கு தயார் ஆகின்றனர் போலும். இடத்தை சுத்தம் செய்ய மாளிகைக் கதவுகள் சாத்தப்படுகின்றன. அதில் பொருத்தப் பட்டிருக்கும் மணிகளின் சத்தம்தான் இது!'' என்றார் நம்பிகள்.

''அடேயப்பா... நம்மைவிட பெரும் பணக்காரர்தான் அவர்!'' வியப்புடன் சொன்னாராம் வரதர்.

காஞ்சி வரதரின் வியப்பை ஞானத்தால் அறிந்த கூரத்தாழ்வான் பதைபதைத்தார். 'நாமே அவரின் சொத்து! அப்படியிருக்க... எனது உடைமைகள் அனைத்தும் அந்த வரதருக்கே சொந்தம்' என்று முடிவு செய்தவர், தனது சொத்துகளை ஸ்ரீவரதரின் திருவடிகளில் சமர்ப்பித் தார். கூரத்தாண்டாளை அழைத்துக் கொண்டு ஸ்ரீரங்கம் புறப்பட்டார்... ஸ்ரீராமானுஜரை குருவாகக் கொண்டு ஞான வாழ்வைத் தேடி!

வழியில் ஓரிடத்தில், ''இரவு இங்கே தங்கிச் செல்லலாமே'' என்றாள் கூரத்தாண்டாள்.

''மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயம்? நம்மிடம் என்ன இருக்கிறது? வா, பயணத்தைத் தொடரலாம்...'' என்றார் ஆழ்வான்.

உடனே, தயக்கத்துடன் தன் மடியில் இருந்த பொன் வட்டிலை வெளியே எடுத்தாள் கூரத்தாண்டாள். ''தாங்கள் உணவருந்த பயன்படுமே என்று இதை மட்டும் எடுத்து வந்தேன்'' என்றாள். துணுக்குற்ற கூரத்தாழ்வான் பொன் வட்டிலைப் பிடுங்கி தூர வீசியெறிந்தார்!

'பொன் வட்டில்தனை எறிந்தோன் வாழியே...'

- வாழிநாமம் கூறி ஆராதித்த அர்ச்சகரின் குரல், நமக்கு நிகழ்காலத்தை உணர்த்தியது! ஆஹா... கற்பூர தீப ஒளியில்... கூரத்தாழ்வானின் ஞான விழிகளை தரிசிக்கிறோம்!



ஸ்ரீரங்கத்தில்- ஸ்ரீராமானுஜரின் சீடராக கூரத்தாழ்வான் வைணவத் தொண்டாற்றிய காலம். வைணவத்துக்கு எதிரான நிலைப்பாடு கொண்டிருந்த மன்னன் கிருமிகண்ட சோழனிடம் இருந்து ராமானுஜருக்கு அழைப்பு வந்தது. 'ஏதோ விபரீதம்?' என்று உணர்ந்த கூரத்தாழ்வான், காஷாயம் தரித்து... தனக்கு பதில் பெரிய நம்பிகளை அழைத்துக் கொண்டு, தானே ராமானுஜராக அரண் மனைக்கு வந்து சேர்ந்தார். 'பரம்பொருள் விஷ்ணுவே' என்று வாதிட்டார். கோபத்தில், இவரது கண்களை பிடுங்க ஆணையிட்டான் மன்னன். ''உன்னைப் போன்ற பாவிகளைக் கண்ட இந்தக் கண் தேவையில்லை!'' என்று தனது கண்களை, தானே பிடுங்கி எறிந்தார் கூரத்தாழ்வான்.

இதற்கிடையில் அடியவர்கள், ராமானுஜரை பாது காப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றிருந்தனர். ராமானுஜர் இல்லாத ஸ்ரீரங்கத்தில் இருக்கப் பிடிக்காமல் திருமாலிருஞ்சோலையை அடைந்தார் கூரத்தாழ்வான். வழியில் அவர் பாடியருளியவையே ஸ்ரீவைகுண்ட ஸ்தவம், அதிமானுஷ ஸ்தவம் ஆகிய அருள் நூல்கள்.

வருடங்கள் கடந்தன... பெருமாளின் அருளால் மீண்டும் ஸ்ரீரங்கத்தில், ஸ்ரீராமானுஜரை வந்தடைந்தார் கூரத்தாழ்வான். சீடரைக் கண்டு உருகிய ஸ்ரீராமானுஜர், கூரத்தாழ்வானை அழைத்துக் கொண்டு காஞ்சி- ஸ்ரீவரதர் சந்நிதியை அடைந்தார். கண்ணொளி கிடைக்க வரதரை பிரார்த்திக்கும்படி கூரத்தாழ்வானைப் பணித்தார்.

''ஸ்வாமி... தங்களையும் எம்பெருமானையும் தரிசிக்க அகக் கண்கள் போதும்! இப்போதே என் ஞானக் கண்களால் வரதரின் அழகை தரிசிக்க முடிகிறது. அதுவே நான் செய்த பாக்கியம்!'' என்றார் கூரத்தாழ்வான்.

ஸ்ரீராமானுஜருக்கு வியப்பு. ''எங்கே... திருவடி முதல் திருமுடி வரை பெருமாளின் அலங்காரம் என்னென்ன சொல் பார்க்கலாம்!'' என்றார். வரதரை வர்ணித்துப் பாடினார் கூரத்தாழ்வான்; மகிமை மிக்க ஸ்ரீவரதராஜ ஸ்தவம் எனும் ஸ்தோத்திர நூல் நமக்குக் கிடைத்தது!

இன்றும் கூரம் கோயிலில்... தேடி வரும் அடியவருக்கு கல்வி ஞானமும், பார்வைக் குறைபாடுள்ள பக்தர்களுக்கு கண்ணொளி யும் அருள்கிறார்.

கூரத்தாழ்வான் அவதரித்து 1000-வது ஆண்டு பூர்த்தியாகும் இந்த வேளையில், கூரம் சென்று அவரையும் ஸ்ரீஆதிகேசவரையும் வழிபடுவோம்; வரம் பெறுவோம்!



பிரம்ம சூத்திர பாஷ்யம் எழுதுவதற்காக, அதன் போதாயன விருத்தி கிரந்தத்தைத் தேடி கூரத்தாழ்வானுடன் காஷ்மீரம் சென்றார் ஸ்ரீராமானுஜர். காஷ்மீர அரசனிடம் இருந்த அந்த ஒரேயரு நூலை வாங்கிப் படிக்க முயன்றார். ஆனால், பொறாமை கொண்ட காஷ்மீர பண்டிதர்கள் சிலர், அவரிடமிருந்து வலுக்கட்டாயமாக அந்த கிரந்தத்தைப் பிடுங்கிச் சென்றனர். ஸ்ரீராமானுஜர் மிகவும் வருந்தினார்.

ஆனால், கிடைத்த அந்த குறுகிய அவகாசத்துக்குள் அனைத்தையும் மனனம் செய்திருந்தார் கூரத்தாழ்வான். பிறகென்ன..? சீடனின் உதவியுடன் பிரம்ம சூத்திரத்துக்கு பாஷ்யம் (வியாக்யானம்) படைத்தார் ராமானுஜர். ஆம்! புத்திக் கூர்மையும் ஞாபக சக்தியும் மிக அதிகம் கூரத்தாழ்வானுக்கு. அஸ்த நட்சத்திர நாட்களில் இவரை வழிபட்டுப் பிரார்த்திக்க, குழந்தைகளுக்கு ஞாபக சக்தி கூடும்; கல்வி& கேள்விகளில் சிறந்து விளங்குவர். சரி... பிரார்த்தனை காணிக்கையாக ஆழ்வானுக்கு என்ன சமர்ப்பிக்கலாம்?

''எதுவும் தேவையில்லை. காஞ்சி வரதருக்காக அனைத்தையும் துறந்தவராயிற்றே கூரத்தாழ்வான். அவரை தியானித்து அன்னதானம் செய்யுங்கள்; குறைந்தபட்சம் நாலைந்து பேருக்காவது உணவு கொடுங்கள் அதுபோதும்!'' என்கிறார் ஆலய அத்யாபதர் கிருஷ்ணமாச்சார்யர். ஆனாலும் பக்தர்கள் வேண்டுதல் நிமித்தம் கண்மலர் சமர்ப்பித்தும் வழிபட்டு செல்கிறார்கள்.

அரங்கன் அனுப்பிய பிரசாதம்!


கூரத்தாழ்வான் திருவரங்கத்தில் வசித்த காலம். பெருமழை காரணமாக உஞ்சவிருத்திக்கு செல்லவில்லை. அரங்கனுக்கு இரவு ஆராதனை வேளை; ஆலய மணி ஒலித்தது!

கூரத்தாண்டாள்... 'அரங்கா... அடியவன் பசியோடு இருக்க, உமக்கு மட்டும் குதூகல விருந்தோ?!' என்று மனதுக்குள் குறைப்பட்டுக் கொண்டாள். இதை உணர்ந்த அரங்கன், தமது பிரசாதத்தை கூரத்தாழ்வானுக்கு சமர்ப்பிக்க ஆணையிட்டார். சற்று நேரத்தில், கூரத்தாழ்வானைத் தேடி வந்தது அரவணைப் பிரசாதம். இரண்டு கவளம் மட்டும் எடுத்துக் கொண்ட கூரத்தாழ்வான், தானும் உண்டு மனைவிக்கும் தந்தார். பிரசாத மகிமையால் கருவுற்ற கூரத்தாண்டாள், பராசர பட்டர், வேதவியாச பட்டர் என்று இரண்டு மகன்களைப் பெற்றெடுத்தாள். இருவரும் அரங்கனின் குழந்தையாகவே வளர்ந்தனர். இன்றும் இவர்களின் வம்சத்தினருக்கு கோயிலில் முக்கியத்துவம் உண்டு.

''ஸ்ரீரங்கத்தில் அவர் வாழ்ந்த ஆழ்வான் திருமாளிகை, கோயில் போல் பராமரிக்கப்படுகிறது. அவரிடம் ஸ்ரீராமானுஜரால் ஒப்படைக்கப்பட்ட ஸ்ரீரங்கேச புரோகித திருப்பணியைத் தொடரும் பாக்கியம் எங்களுக்கு!''- சிலிர்ப்புடன் சொல்கிறார் பராசர பத்ரிநாராயண பட்டர் (கூரத்தாழ்வானின் 31-வது தலைமுறை). ''ஆழ்வானின் வம்சத்தைச் சார்ந்த 7 குடும்பங்கள் இங்கே உண்டு; திருமஞ்சன

கட்டியம் முதலான திருப்பணிகள் எங்களுடையது. பெருமாள் உற்ஸவத்துக்கு புறப்படும்போது... ஜீயர், கோயிலண்ணன், கூரத்தாழ்வான் வம்சத்தவருக்கு முதல் மரியாதை அளிக்கப்படும். ஸ்வாமி சந்நிதிக்குத் திரும்பியதும், கூரத்தாழ்வான் வம்சத்தில் ஒருவருக்கு சடாரி சாதிப்பது வழக்கம். இது நாங்கள் செய்த புண்ணியம்!'' என்கிறார்.

தவிர, கைசிக ஏகாதசியன்று கூரத்தாழ்வான் வம்சத்தவர் கைசீக புராணம் படிப்பது வழக்கம். படித்து முடித்ததும் அவரை பல்லக்கில் சுமந்து சென்று இல்லத்தில் சேர்ப்பார்களாம். வைகுண்ட ஏகாதசி இராப் பத்து காலம் முடியும்போதும் பல்லக்கு மரியாதை உண்டாம்!

Comments