வண்டுக்கு தாமரைப் பாதம்!

வண்டுக்கு தாமரைப் பாதம் என்றார் ஸ்ரீசங்கரர். அதெப்படி சாத்தியம்? பிரம்மராம்பாள் (பிரமரம் - வண்டு), மல்லிகார்ஜுனரான பெருமானைச் சுற்றியல்லவா இருக்கிறாள். அம்பிகையின் பாதங்கள் தாமரை போன்று சிவந்தல்லவா இருக்கின்றன. அதனால்தான் வண்டுக்கு தாமரைப் பாதம் என்று போற்றுகிறார் ஆசார்யர். அப்படி அவர் துதிக்கும் திருத்தலம் ஸ்ரீசைலம்.
ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான ஸ்ரீசைலம். ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது 3 கி.மீ. தூரம் அடர்ந்த காட்டுப்பகுதியில் பிரயாணம் செய்தால் மலை மீதிருக்கும் கோயிலைச் சென்று அடையலாம்.
மலையில் அமைந்துள்ள கோயிலுக்கு நான்கு திசைகளிலும் வாயில்கள் உண்டு. கிழக்கு நோக்கி அமைந்துள்ளது பிரதான வாயில். ஆலய வாயிலில் இறைவனை நோக்கியபடி தனிச் சன்னிதியில் நந்தீஸ்வரர். நுழையும் போதே சித்தி விநாயகரைத் தரிசிக்கிறோம். பளிங்குக் கல்லால் ஆன அழகான சண்முகர் சன்னிதியும் உண்டு. மேற்குப் பிராகாரத்தில் பாண்டவர்கள் கட்டியதாகச் சொல்லப்படும் ஆறு ஆலயங்கள் உள்ளன. ராஜ ராஜேஸ்வரி, பஞ்ச நதீஸ்வரர், சகஸ்ர லிங்கேஸ்வரர், அன்னபூரணி என அனைவரும் தனிச் சன்னிதி கொண்டு உள்ளனர். தெற்கு வாயில் ரங்க மண்டபம் எனப்படுகிறது. கிழக்கு வாயிலில் கல்யாண மண்டபம் உள்ளது.
குழந்தை வரம் வேண்டி இறைவனை நோக்கித் தவமிருந்த சிலாத மகரிஷிக்கு வரமருளினார் இறைவன். தவப் பயனாக இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. நந்தி, பர்வதன் என்ற அந்த ஆண் குழந்தைகளைக் காணவந்த சனகாதி முனிவர்கள், நந்தி சில காலம் மட்டுமே உயிர் வாழ்வார் என்றனர். இதனால் மிகவும் வருத்தமுற்றார் சிலாதர். தந்தையின் வருத்தத்தைக் கண்ட நந்தி, ‘தந்தையே! கலங்க வேண்டாம். சிவனை நோக்கித் தவமிருந்து நீண்ட ஆயுளைப் பெறுவேன்’ என்று அவருக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறினார்.
தன்னை நினைந்து கடுந்தவம் இருந்த நந்தியின் தவத்தால் மகிழ்ந்த ஈசன், அவரைத் தன் வாகனமாக ஆக்கிக் கொண்டார். மேலும், நந்தியைக் காணாமல் தன்னை யாரும் வந்து பார்க்கக் கூடாது என்ற கட்டளையும் பிறப்பித்தார். நந்தி தவமிருந்ததால், மலைக்குக் கீழே உள்ள ஊர் ‘நந்தியால்’ஆனது. நந்தியின் தம்பி தவமிருந்து பர்வத மலையாக இருக்கும் பாக்கியம் பெற்றதாக ஐதீகம்.
மல்லிகார்ஜுனருக்கு பக்தர்களே அபிஷேகம் செய்து, தொட்டு வணங்கலாம். சிறிய சுயம்புத் திருமேனி. கருவறையில் எழுந்தருளியுள்ள இறைவன் மல்லிகார்ஜுனரைத் தரிசிக்கும்போது, அடிமுடி காண முடியாத ஜோதி ஸ்வரூபமாகத் தோன்றினார் என்கிற நினைவு மேலிடுகிறது. கருவறை விமானத்தின் மீது சூலம் அமைந்து இருப்பது வியப்பு. தவிர, ‘தூளி தரிசனம்’ இத்தலத்தின் இன்னொரு சிறப்பு. அது என்ன ‘தூளி தரிசனம்?’
சாதாரணமாகக் குளித்து முடித்து வெறும் வயிறோடுதான் இறைவனைத் தரிசிக்க வேண்டும் என்பது மரபு. இந்த ஸ்தலத்தில் இதுபோன்ற எந்தவித நித்ய கர்மங்கள் செய்யாமலும், எந்தவித பேதங்கள் இல்லாமலும் தூய்மையான மனதோடு இறைவனின் ஜோதிர்லிங்க திருமேனியைத் தொட்டு வணங்கலாம். இதைத்தான் ‘தூளி தரிசனம்’ என்கிறார்கள்.
அம்மன் பிரம்மராம்பிகை, தனிச் சன்னிதியில் எழுந்தருளியுள்ளார். 51 சக்தி பீடங்களில் இது மூன்றாவது தலம். மராட்டிய மன்னன் மாவீரன் சிவாஜி தவமிருந்து அன்னையைத் தரிசித்த தலம்! பிரம்மராம்பிகை தேவி பவானியாக மன்னன் சிவாஜிக்குக் காட்சி கொடுத்தருளியதுடன், பெரிய வாளையும் தந்து பகைவரை வென்று நாட்டை வழி நடத்திச்செல்ல வாழ்த்தி அருளினாள். மாவீரன் சிவாஜி, இக்கோயிலின் வடக்கு கோபுரத்தையும் தியான மண்டபத்தையும் அமைத்துள்ளார். ஸ்ரீசைலம் ஸ்தலத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில் சாட்சி கணபதியின் கோயில் உள்ளது. பக்தர்கள் இந்த சாட்சி கணபதியை வணங்கிய பின், மல்லிகார்ஜுனரைத் தரிசிக்கச் செல்கின்றனர்.
ஆலயச் சிறப்பு:
* ஸ்ரீசைல சிகரத்தைத் தரிசனம் செய்தால் மறுபிறவி கிடையாது.
* இத்தலத்து கல் நந்தி கத்தும்போது, கலியுகம் முடிவடைந்துவிடும் என்று நம்பிக்கை.
* ஆந்திராவில் உள்ள சிவ ஸ்தலங்களுள் தேவாரப் பாடல்பெற்ற ஒரே ஆலயம் இதுதான்.
* கோயிலுக்குச் சற்று தூரத்தில், பிரம்மாண்டமான நாகார்ஜுன சாகர் அணையும் கிருஷ்ணா நதி பிரவாகமும் பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சி. நிறைய பக்தர்கள் இந்த ஆற்றங்கரையில் நீராடிய பின் மல்லிகார் ஜுனரைத் தரிசிக்கின்றனர்.
மகா சிவராத்திரி, தெலுங்கு வருடப் பிறப்பு, பிரதோஷம், கார்த்திகை சோமவாரம், யுகாதி, ஆவணி சப்தமி போன்ற நாட்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகள், திருவிழாக்களில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பிரம்மராம்பிகை சமேத ஸ்ரீமல்லி கார்ஜுனரின் தரிசனம் பெறுகின்றனர்.
தரிசன நேரம்:
காலை 5 மணி - மாலை 3 மணி வரை. மீண்டும், மாலை 5.30 மணி - இரவு 10 மணி வரை

Comments