கீதையின் சாரம்

மதுரையில் ‘கந்தர்வகான,’ ‘இசை முரசு’ டி.எம். சௌந்தரராஜனின் 81வது பிறந்தநாள் விழா, டி.எம்.எஸ். முன்னிலையிலேயே நடந்திட, என் தலைமையில் இன்னிசைப் பட்டிமன்றம்:
டி.எம்.எஸ். பாடிய பாடல்களில் மக்கள் மனத்தைப் பெரிதும் கவர்வன - சுக ராகங்களே! சோக கீதங்களே! என்பது தலைப்பு. பட்டிமன்றம் நான்கு மணி நேரம் நடந்தது. என் தீர்ப்பு ‘சோக கீதங்களே!’ என்றதை மிகமிகப் பாராட்டினார் டி.எம்.எஸ். ‘எங்கே நிம்மதி?’‘போனால் போகட்டும் போடா’ பாடல்கள் நிரந்தரமானவை. மரணத்தைப் பற்றிய மரணமில்லாத பாடல் ‘போனால் போகட்டும் போடா’ என்றேன்.
‘தோற்றமுண்டேல் மரணமுண்டு துயரமனை வாழ்க்கை’ என்றார் சுந்தரர். ஆனாலும், மரணம் என்ற சொல்லைக் கேட்டாலே நடுங்குகிறோமே! இதுதான் உலகம்! ‘நெருநல்உளன் ஒருவன் இன்றில்லை’ என்ற பெருமைதானே உலக வாழ்க்கைக்கு உள்ளது. நின்றான், இருந்தான். கிடந்தான், சென்றான் என்பது தானே மனிதனின் உயிர்ப் பயணம்!
‘கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே!’ என்றது திருமந்திரம். இன்னாததுதான் உலகம். அதை இனியது ஆக்க, நிலையானதாக்க என்ன செய்ய வேண்டும்? உலகம் பூத உடலைப் போக்கிவிட்டாலும் புகழ் உடலை நிலைக்கச் செய்யுங்கள்!
வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்?
மாபெரும் வீரர், மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்" (அச்சம் என்பது மடமையடா)
சித்தர்கள், ஞானிகள், அருளாளர்கள், கவிஞர்கள், வீரர்கள், வள்ளல்கள், தியாகிகள், தலைவர்கள் உடலால் நம்மிடையே இல்லை; புகழால் நிலைத் துள்ளனர். ‘பூமியின் மேல் நான் சாகாதிருப்பேன்’ என்றார் பாரதி.
‘அஞ்சாமை பலம்; அச்சம் பலவீனம்! அச்சம் மரணம்; அஞ்சாமை வாழ்வு’ என்றார் வீரத் துறவி விவேகானந்தர். ‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை’ என்ற கவியரசர் கண்ணதாசனும் இறவாதவர், புகழால் வாழ்பவர்.
பகவத்கீதை சொன்னதென்ன? பகவத்கீதையை மொழியாக்கம் செய்தவர் பலர்! அதைக் கவிதையாக்கம் செய்தார் கண்ணதாசன்.
‘ஆண்டவர், பதின் மூன்றாண்டுகள் வனத்தில்
வாழ்ந்தவர் பாண்டவர் வந்தனர் களத்தில்
இருவிழி இழந்த திருதி ராட்டிரன்
களத்தினைக் காணக் கண்களற்றவனாய்
அமைச்சன் சஞ்சயன் தனையழைக்கின்றான்.
என்று தொடங்கி அத்தியாயம் அத்தியாயமாய் விரித்துரைக்கிறார். அர்ச்சுனன் மயங்குகிறான். கலங்குகிறான். வில்லெடுக்கத் தயங்குகிறான். எதிரே மாமன், தாத்தா, குரு, சகோதரர்கள்! யார் மீது அம்பு தொடுப்பேன்? இது பார்த்தனின் கலக்கம். அர்ச்சுன விஷாத யோகம் இது. ஏன் இந்தப் போர்? எதற்கு வெற்றி? யார் மீது கோபம்? தளர்கிறான்.
வில் நழுவிக் கீழே விழுகிறது. கீதை எனும் சொல் எழுகிறது. ‘பார்த்தசாரதி அவன் பாதமே கதி’ என விழுகிறான் பார்த்தன்.
போர் முகத்தில் அர்ச்சுனர்க்குக் கீதை சொன்னான்- நாம்
புகழோங்க வாழ்ந்திருக்கும் பாதை சொன்னான்
தேர் நடத்திப் பாரதத்தில் நிலையாய் நின்றான்
இங்கு சிலையாய் நின்றான், அன்பு மலையாய் நின்றான்
என்று தனிப்பாடலில் பாடினார் கண்ணதாசன்.
‘எல்லாம் நான் - எல்லாப் பொருளிலும் நான் இருக்கிறேன்’ என்றான் சர்வ வியாபியான பரமாத்மா.
‘முள்ளெலாம் மலரெலாம் முளைவிடும் பயிரெலாம்
முகிழ்க்குமோர் கனிஎலாம் நான்
மூவுலகு தன்னிலே மோகம்நான் யோகம்நான்
முற்றும் நான் மற்றும் நானே
உள்ளெலாம் வெளிஎலாம் உலவிடும் காற்றெலாம்
ஊறிடும் உணர்ச்சி நானே
வேதத்தில் நானேதான் சாம வேதம்
விண்ணுலவும் தேவர்களில் இந்திரன் நானே
ஆதிக்கப் புலன்களிலே உணர்ச்சி நானே
அன்றாடும் கொண்டுசெலும் காற்றும் நானே
மன்றாடும் மாதத்தில் மார்கழி நானே!’
எனச் சிறந்ததெல்லாம் கண்ணன் என்ற கருத்தை ஒட்டித்தான் பாவ மன்னிப்புப் பாடல் பிறந்தது.
‘காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை’
‘உண்ணும் சோறும் பருகும் நீரும்
தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்’
என்றார் ஆழ்வார். தாரகம் - உயிர் வாழச் சோறு, போஷகம் - உடல் வளர்க்க நீர், போக்யம் - சுகத்துக்கு வெற்றிலை. எல்லாம் பகவான்தானே! பாரதி ஒருபடி மேலே போய்விட்டான்.
‘மழைக்குக் குடை, பசிநேரத்து உணவு.
என்றான் வாழ்வுக்கு எங்கள் கண்ணன்’
தேவைக்கு உதவுவதுதானே தெய்வத்தின் கருணை! பசி நேரத்தில் உணவே கடவுள்!
‘அன்னம் பிரம்மா’ - அன்னலட்சுமி என்கிறோம்.
‘பசித்தவனுக்கு ரொட்டித்துண்டே கடவுள்’ என சுவாமி விவேகானந்தர் சொன்னதும் இதனால்தான். கண்ணதாசன் இன்னும் எளிமைப் படுத்துகிறார்.
பொறுப்பெல்லாம் அவனென்று போய் விழுந்தால்
வழிஎல்லாம் போகும் போது
செருப்பாவான்; மழை வந்தால் குடையாவான்!"
அவன் காலில் நாம் விழுந்தால், நம் காலைத் தாங்க செருப்பாகக்கூட வருவானாம்.
‘மன்னனும் நானே, மக்களும் நானே
மரம் செடி கொடியும் நானே’ படப் பாடலில் பகவத் கீதை ஒலிக்கிறது. விஜயா! உடல் அழியும், ஆன்மா அழியாது.
‘பரிதி காயில் வாடாது
வடவை மூளில் வேகாது’ (ந ஜாயதே. நா ம்ரியதே!) என்ற படி, ‘உடலுக்கு அழுகிறாயா - உயிருக்கு அழுகிறாயா? தெளிந்து, உயர்ந்து, நிமிர்ந்து நில். போர்க்களத்தே வந்தபின் புலம்பல் ஏன்? கடமையைச் செய்!’
பகவத்கீதை அறியாத பட்டிக்காட்டான் கூட மகிழ்ந்து கேட்கப் பாடல் தருகிறார் பட்டினத்தார் வழிவந்த பாவலர்: படம் - கர்ணன்.
‘மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா!
மரணத்தின் தன்மை சொல்வேன்!
மானிடர் ஆன்மா மரணம் எய்தாது
மறுபடி பிறந்திருக்கும்’
ஒருமுறை கவிஞர் வைரமுத்து சொன்னார்:
என் தந்தையார் இறந்தார். அங்கு கிராமங்களில் இழவு வீட்டில் பொழுது போகப் பாடல்கள், படங்கள் போடுவார்கள். சோகப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள், சாமி படங்கள் என்று போடுவர். அங்கெல்லாம் கவியரசர் பாடல்கள் தான் ஒலிக்கும். என் வீட்டிலே கூட என் பாடல் போடப்பட வில்லை!" என்றார்.
மேனியைக் கொல்வாய்
மேனியைக் கொல்வாய். வீரத்தில்
அதுவும் ஒன்று
நீ-விட்டு விட்டாலும்
அவர்களின் மேனி
வெந்துதான் தீரும் ஒருநாள்...
‘பார்த்தா! என்னைப் பார்த்தாயா? என் விஸ்வரூபம் தெரிகிறதா! எங்கணும் வதனங்கள், எங்கணும் திருக்கரங்கள், எண்ணிலடங்காக் கண்கள், முகங்கள், கனிந்த வயிறுகள். எனக்குள் எல்லாம் அடக்கம். புரிந்ததா? சகாதேவனுக்கு,‘என்னைக் கட்ட முடியுமா?’ என சவால் விட்டு, விஸ்வரூபம் காட்டினேன். துரியோதனை, அவனது கூட்டத்தை அச்சுறுத்த விஸ்வரூபம் காட்டினேன்! இன்று உன் அச்சம், அஞ்ஞானம், மாயை, பாசம் அகல இந்த விஸ்வரூபம் பார்!’
பாடல் தொடர்கிறது:
என்னை யறிந்தாய்! எல்லா உயிரும்
எனதென்றும் அறிந்து கொண்டாய்!
கண்ணன் மனது கல்மனதென்றோ
காண்டீபம் நழுவ விட்டாய்!
மன்னனும் நானே! மக்களும் நானே!
மரம் செடி கொடியும் நானே!
சொன்னவன் கண்ணன்
சொல்பவன் கண்ணன்
துணிந்துநில் தர்மம் வாழ!"
கண்ணன் மேலும் தொடர்கிறான்: அர்ச்சுனா! ‘இது புண்ணியமா பாவமா? வெற்றியில் மகிழ்ச்சியா கலக்கமா என்றெல்லாம் யோசிக்காதே! கடமையை நீ செய்துவிடு. பலனை, கண்ணனான என்னிடம் விட்டுவிடு’ என்கிறான். இது கர்ம சன்யாச யோகம்.
‘புண்ணியம் இது என்று எவரும் சொன்னால் அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே.
போற்றுவார் போற்றலும்
தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே.
கண்ணனே காட்டினான், கண்ணனே வாட்டினான்
கண்ணனே கொலை செய்கின்றான்.
காண்டீபம் எழுக! உன் கைவன்மை எழுக
இக்களமெல்லாம் சிவக்க! வாழ்க!’
கடவுள்தான் அறிவானும், அறிவிப்பானும், அறிவில் அறிவாய் நிற்பானும்! அவன்தான் கொலைஞன், கொலைக்கருவி, கொல்லப்படுபவன்! புகழோ இகழோ அவனைப் பாதிக்காது. புரிந்து கொண்டால் இன்பத்தில் இறுமாந்து போகமாட்டோம், துன்பத்தில் துவள மாட்டோம்.
‘போற்றுவார் போற்றட்டும் - புழுதிவாரித்
தூற்றுவார் தூற்றட்டும்
போகட்டும் கண்ணனுக்கே.
ஏற்றதொரு கருத்தை
எனதுள்ளம் என்றால்
எடுத்துரைப்பேன் எவர்வரினும்
நில்லேன் அஞ்சேன்’ என்ற துணிவு, கீதை போட்ட பாதையில் செல்பவர்க்கே வரும்.

Comments