நள்ளிரவில் கோலம் போடுவது சரியா?
நமது சாஸ்திரங்களில் மாலை சூரியன் மறையும் நேரம் முதல் அடுத்த நாள் காலை சூரியன் உதிக்கும் நேரம் வரையுள்ள இரவு நேரம் - 1.முன் இரவு, 2.நடு இரவு, 3.பின் இரவு, 4.அதிகாலை என நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளது. சுமார் 12 மணி நேரமுள்ள இரவு ஒவ்வொன்றுக்கும் மூன்று மணி நேரம் வீதம் சமமாக, அதாவது மாலை ஆறு முதல் ஒன்பது மணி வரை முன்னிரவு என்றும், இரவு ஒன்பது மணி முதல் நள்ளிரவு பன்னிரண்டு மணி வரை நடு இரவு என்றும், நள்ளிரவு பன்னிரண்டு முதல் காலை மூன்று மணி வரை பின் இரவு என்றும், காலை மூன்று மணி முதல் சூரிய உதயம் வரை அதிகாலை என்றும் நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக தேவர்கள், பித்ருக்கள், மனிதர்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு செயல்களை நடு இரவிலும், பின்னிரவிலும் செய்யக் கூடாது. குறிப்பாக - குளிப்பது, பல் தேய்ப்பது, காபி, டீ குடிப்பது, சாப்பிடுவது, உரக்கப் படிப்பது, கோலம் போடுவது, பூஜை செய்வது, ஹோமம் செய்வது போன்ற பல்வேறு செயல்களையும் நடு இரவு, பின் இரவு நேரங்களான இரவு ஒன்பது மணி முதல் அதிகாலை மூன்று மணிவரையுள்ள காலங்களில் செய்யக் கூடாது.
எனவே, முதல் நாள் இரவே கோலம் போடாமல், அதிகாலை சுமார் 3.30 மணிக்குப் பிறகு வீட்டு வாசலில் ஜலம் தெளித்து சுத்தம் செய்து, சுமங்கலிப் பெண்கள் கோலம் போடலாம், விளக்கேற்றலாம். லட்சுமி கடாட்சம் ஏற்படும்.
கோயிலுக்குச் சென்று திரும்பும்போது, ஆலயத்தில் சற்று உட்கார்ந்துவிட்டு வர வேண்டும் என்பது ஏன்?
தேவாலயங்களுக்குச் செல்லும்போது, சிவதரிசனம் முடித்து வெளியேறும் சமயம் ஆலயத்தின் நுழைவாயில் அருகில் வெளிப்புறமோ அல்லது உட்புறமோ சிறிது நேரம் அமர்ந்துவிட்டு வெளியேற வேண்டும் என்று ஆகம சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது. (வைஷ்ணவ ஆலயங்களில் இந்த விதிமுறை இல்லை) இதற்கு என்ன காரணம்?
பரமசிவனைத் தரிசனம் செய்வதற்காக நாம் கோயிலுக்குள் நுழையும் சமயத்தில் அங்கே நுழைவாயில் அருகில் காவல் காக்கும் (நம் ஊனக் கண்களுக்குப் புலப்படாத) சிவ கணங்கள் என்னும் சிவ தூதர்கள் சிலர், நம்மை வரவேற்று நமக்குப் பாதுகாவலாக இருந்து நம்மை ஆலயத்திற்குள் அழைத்துச் செல்கிறார்களாம்! இவர்கள் அனுமதியும் சிவ கணங்களின் தலைவரான நந்திகேஸ்வரரின் அனுமதியும் இல்லாமல், நம்மால் சிவனைத் தரிசிக்க இயலாது.
ஆகவே, சிவகணங்கள் நம்மை கூட இருந்து அழைத்துச்சென்று சிவதரிசனம் செய்து வைப்பதுடன், நாம் தரிசனம் முடித்து வெளியேறும் வரை நம் கூடவே இருக்கிறார்கள். தவிர, நாம் ஆலயத்தை விட்டு வெளியேறிச் செல்லும்போதும் அவர்களும் (கோயில் வாசல் வரை) நம்மைப் பின்தொடருகிறார்கள்.
வெளியேறும்போது, நமக்கு உதவி செய்த சிவ கணங்களுக்கு நன்றி செலுத்திவிட்டு விடைபெற வேண்டுமல்லவா! ஆகவே, விடை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் ஆலய நுழைவாயிலின் அருகில் சிறிது நேரம் அமர்ந்து (கீழ்க்கண்ட சுலோகத்தைச் சொல்லி) விடைபெற்றுக் கொண்டு, ஆலயத்தை விட்டு வெளியேற வேண்டும்.
மஹாபலி முகா: ஸர்வே சிவாக்ஞா பரிபாலகா:
மயா ஸம்ப்ரார்த்திதா: யூயம் வர்தத்வம் சிவ சன்னிதௌ
‘என்னைத் தரிசிக்க வருபவர்களுக்கு உதவி செய்’
என்னும் சிவபிரானின் கட்டளையை நிறைவேற்றுவதற்காகக் காத்திருக்கும் மகாபலி முதலான சிவபக்தர்களே! நீங்கள் அனைவரும் எனது வேண்டுகோளை ஏற்று, இங்கேயே (சிவ சன்னிதியிலேயே) இருங்கள். நாங்கள் விடைபெற்றுக் கொள்கிறோம்’ என்று பொருள். சிவ கணங்கள் குழந்தைகளைப் போல் இருப்பவர்கள். சிறிது நேரத்துக்குப் பிறகே நம் வேண்டுதலைப் புரிந்து கொள்வார்கள் என்பதால், அவர்கள் விடைபெற்றுச் செல்ல சிறிது நேரம் அவகாசம் தர வேண்டும். ஆகவேதான், அங்கேயே சிறிது நேரம் அமருகிறோம். ஆனாலும், அங்கே சிவாலயத்தின் வாசற்படியின் மீது எக்காரணம் கொண்டும் அமரக் கூடாது. ஆலயத்திலிருந்து வெளியேறும் நுழைவாசலுக்கருகில் ஆலய பிராகாரத்திலோ ஆலயத்தின் வெளிப்புறத்திலோ அமர வேண்டும்.
மீதமாகும் மஞ்சள் அட்சதைகள், சிராத்தத்துக்குத் தரப்படும் அட்சதைகளை சமைக்கும் அரிசியுடன் கலந்து சமைக்கலாமா?
ஒரு கர்மாவுக்கு, ஒரு நிகழ்ச்சிக்கு என சேமித்து வைக்கப்பட்ட / தயார் செய்யப்பட்ட பொருட்களை, அந்த கர்மாவில், அந்த நிகழ்ச்சிகளில் முழுமையாகச் செலவழித்து விடுவதே சிறப்பான வழி. ஒரு சில சமயங்களில் அந்தப் பொருள்கள் செலவாகாமல் போனால், மிகுந்த அந்தப் பொருட்களை மற்ற நிகழ்ச்சிக்குப் பயன்படுத்தக் கூடாது. ஒருவருக்கென்று, ஒரு தெய்வத்துக்கு எனத் தீர்மானிக்கப்பட்ட பொருளை, வேறொருவருக்கு, வேறொரு தெய்வத்துக்குச் செலவழிப்பது என்பது சரியாகாது.
குறிப்பாக, தெய்வ நிகழ்ச்சிகளுக்கு மஞ்சள் கலந்த அட்சதையையும், பித்ரு காரியங்களில் வெண்மையான அட்சதையையும் நாம் உபயோகிக்க வேண்டும். மாறாக - மஞ்சள் கலந்த அட்சதையை சிராத்தம் போன்ற பித்ரு காரியங்களுக்கும், மஞ்சள் கலக்காத சுத்த வெண்மையான அட்சதையை மங்கள நிகழ்ச்சிக்கும் உபயோகிக்கக் கூடாது. எனவே, ஒரு நிகழ்ச்சியில் உபயோகப்படுத்தப்பட்ட அட்சதை போன்றவற்றை (சேஷத்தை), மற்ற நிகழ்ச்சிகளுக்கு உபயோகப்படுத்துவதை தவிர்ப்பதே நல்லது.
சில சமயங்களில் கோயிலுக்குக் கிளம்பிச் செல்லும்போது, ஏதோ சில காரணங்களினால் இறை தரிசனம் செய்யாமலே திரும்பிவர நேர்கிறது. இதற்குப் பரிகாரம் என்ன?
ஆலயத்தில் தெய்வ தரிசனம் செய்வதற்காக நாம் நமது வீட்டிலிருந்து புறப்படுவது முதல் ஆலய தரிசனம் முடிந்து வீட்டுக்குத் திரும்பி வரும் வரை - நாம் நடக்கும் நடை, பேசும் பேச்சு, நினைக்கும் எண்ணங்கள் போன்ற அனைத்தும் ஆலய தரிசனத்துக்குள் அடங்கும். மேற்கூறிய அனைத்துமே புண்ணியத்தையோ பாவத்தையோ ஏற்படுத்தித் தரும். எனவே, ஆலய தரிசனத்திற்காகச் செல்லும்போது நமது எண்ணம், செயல், பேச்சு ஆகிய மூன்றும் தெய்வ சம்பந்தப்பட்டதாகவே அமைய வேண்டும்.
தினமுமே காலையில் பெருமாள் கோயிலுக்கும் மாலையில் சிவன் கோயிலுக்கும் சென்று வழிபட வேண்டும் என்கிறது சாஸ்திரம். தினம் செல்ல இயலாவிட்டாலும் கூட ஏகாதசி, பிரதோஷம், பௌர்ணமி, கிருத்திகை போன்ற விசேஷ நாட்களிலாவது ஆலயத்துக்குச் சென்று தெய்வ தரிசனம் செய்ய வேண்டும். நாமோ, ஆலயம் சென்று தெய்வ தரிசனம் செவதை நமக்கு ஒழிந்த நேரத்தில் செய்கிறோம். தெய்வமும் அந்த சமயத்தில் கருணையுடன் நமக்குக் காட்சி தருகிறது.
மேற்கூறியவாறு அடிக்கடி ஆலயம் செல்வோருக்கு தெய்வ அருள் நிச்சயம் கிட்டும். ஆனால், பல மாதங்களாக (வருஷங்களாக) ஆலயத்திற்கே செல்லாமல், அந்த தெய்வத்தின் நினைவே இல்லாமல் இருந்துவிட்டு, திடீரென ஒருநாள் ஆலயத்துக்குச் செல்பவருக்கு, ஆலயத்தில் தெய்வ தரிசனம் தாமதமாகலாம் அல்லது கிடைக்காமல்கூட போகலாம். அப்போது நாம் பொறுமையுடன் காத்திருந்து தெய்வ தரிசனம் செய்வதே சிறந்தது. காத்திருக்க இயலா விட்டாலும் மறுபடியும் வேறு ஒரு சமயம் ஆலய தரிசனம் செய்ய முயற்சிக்க வேண்டும். அப்போது நிச்சயம் தெய்வ தரிசனம் கிட்டும். தெய்வ தரிசனம் செய்யாததற்குப் பரிகாரம், பொறுமையுடன்மறுபடியும் காத்திருந்து தெய்வ தரிசனம் செய்வதுதான்.
Comments
Post a Comment