இரும்புக் கண்ணன்

எம்பெருமானை பேசி அனுபவித்தவர்கள் இருப்பது போலவே, ஏசி அனுபவித்தவர்களும் உண்டு. தமது பிறப்பிலிருந்தே மற்றவர்களை சீண்டிக் கொண்டே இருந்த கண்ணன், குறும்புக் கண்ணன் மட்டுமல்ல; இரும்புக் கண்ணனும் அவனேதான்’ என்றார் ‘இரும்புக் கண்ணன்’ என்ற சொற்பொழிவில் ‘திருமால் கவிச்செல்வர்’ ரகுவீர பட்டாச்சாரியார்.
நான் ஏன், கண்ணனை இரும்புக் கண்ணன்னு சொல்றேன் தெரியுமா? கிருஷ்ணாஷ்டக ஸ்லோகத்தில்
வசுதேவ ஸுதம் தேவம்
கம்ஸ சாணூர மர்த்தனம்
அப்படீன்னு வரும். வசுதேவருக்கு குழந்தையாக, பிறந்தான் அப்படீங்கறது முதல் வரியின் அர்த்தம். அடுத்த வரி, அக்குழந்தை தன் மாமாவான கம்சனை மர்த்தனம் பண்ணினான்னு வரும். தன் மாமாவையே மர்த்தனம் (அழித்தான்) செய்தான். அப்படீன்னா அவன் இரும்புக் கண்ணன்தானே! தான் பிறக்கும் பொழுதே தன் தாயாரை அழ வைத்துக் கொண்டே பிறந்தான் கண்ணன். ஆமாம்! தேவகியை பயமுறுத்திக் கொண்டேதான் பிறந்தான் அவன்.
பெரியாழ்வார் தனது பாசுரங்களால், மாயக்கண்ணனை அனுபவிச்சார். ஆனால் பெற்ற தாயான தேவகியால் அக்குழந்தைக்குப் பாலூட்ட முடியல, சீராட்ட முடியல, தாலாட்டு பாட்டுக் கூட பாட முடியல.. அவனை வளர்த்த தாயான யசோதையாலயும் அக்குழந்தைக்குப் பாலூட்டி சீராட்ட முடியல. கடைசில ஒரு பேய் பெண்கிட்ட போய் பாலைக் குடித்தார் குட்டிக் கண்ணன்.
பெற்ற தாயான தேவகியை வணங்க வைத்தான். வளர்த்த தாயான யசோதைக்கு தன் வாயில் உலகத்தையே காட்டி அவளையும் வணங்க வைத்தான். கூற்றுத் தாயான பூதனையையும் வணங்க வைத்தான். சில நாட்களே ஆன குழந்தையாக இருந்த பொழுதே இத்தனையும் செஞ்ச பொல்லாத கண்ணன் அவன்!
கோகுலத்துல எல்லா பெண்கள்கிட்டேயும் தன் அன்பைக் காண்பித்தான். அற்புதமாய் குழல் வாசித்து அங்கிருப்பவர்கள் அனைவரையும் மயக்கினான். அத்தனை பேரையும் அப்படியே விட்டுவிட்டு டக்கென ஒரு நாள் துவாரகைக்குப் பறந்து விட்டான். கோகுலத்துல இருந்த எல்லாப் பெண்களும் அழுதார்கள். கண்ணன் இருந்த இடம்னு அவன் நின்று கொண்டிருந்த இடத்தையும், உட்கார்ந்து கொண்டு இருந்த இடத்தையும் தடவிப்பார்த்து அழுது கொண்டே இருந்தாள் ஒரு பெண்மணி. கண்ணன் போட்டுக் கொண்டிருந்த மாலையையே பார்த்து அழுது கொண்டிருந்தாள் ஒரு பெண்மணி.
கோகுலத்துலதான் இப்படீன்னு பார்த்தா, துவாரகைக்கு வந்த கண்ணன் அரசியல் கண்ணன். கடைசி வரைக்கும் எல்லாரையும் பயத்திலேயே வெச்சுண்டு இருந்தாரே! கொஞ்சம் கூட கருணையே இல்லாமல் குந்தியிடம் எப்படிப் பேசினான் தெரியுமா அவன்? அவளே வயசானவள். அவளிடம் நேராகச் சென்று, ‘உங்களுக்கு எத்தனை குழந்தைகள் பிறந்தன?’ என்று கேட்கிறான்.
‘ஐந்து’ என்று தயங்கியபடியே சொன்னாள் குந்தி. ‘நன்றாக யோசனை செய்து பாருங்கள்’ என கண்ணன் திருப்பி அழுத்தமாகச் சொல்ல, ‘சின்ன வயதில், அறியாப்பருவத்தில் பிறந்தது ஒரு குழந்தை. அந்தக் குழந்தை எங்கிருக்கிறது என்று தெரியுமா?’ என குந்தி கேட்க, கண்ணனே முடிச்சும் போட்டு, முடிச்சை அவிழ்த்தும் விடுகிறான். ‘உங்களுக்கு ஐந்து மகன்கள் வேணுமா, இல்ல ஒரு மகன் போதுமா?’ என conditional bail வேற அவளிடம் போட்டு, அவளை விட்டு கர்ணனிடம் சத்தியங்களையும் வாங்கச் செய்கிறானே!
கடைசியில் கர்ணன் இறந்த பிறகு அவன் கேட்டுக் கொண்டபடியே அவனை மடியில் வைத்துக் கொண்டு, ‘என் மகனே என் மகனே’ன்னு இவ்வுலகம் அறிய அழுது தீர்த்தாள் குந்தி.
கர்ணனிடமிருந்து கவச குண்டலத்தை எப்படியாவது எடுக்கணும்னே இந்திரனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். செய்து அவனை வரவழைத்து அதையும் எடுத்துக் கொடுக்க வைத்துவிடுகிறார் கண்ணன். எத்தனை விதமான கஷ்டங்களைத் தருகிறார் பாருங்கள். அவர் செய்த எந்த வதமுமே சரியான வதம் கிடையாதே!
துரியோதனனும் அர்ஜுனனும் போருக்கு உதவின்னு கேட்டு வரும்பொழுது, ஒரே ஒரு நாற்காலியை மட்டும் தன் கால் பக்கம் போட்டு வைத்துவிட்டு, தான் எழுந்த உடன் தன் கால் பக்கம் இருப்பவர்களை முதலில் பார்ப்பது போலப் பார்த்து விட்டு, பின்னால் துரியோதனன், ‘நான்தான் டோக்கன் நம்பர் 1’ என்று கனைப்பதைக் கண்டுகொள்ளாமல் அர்ஜுனனுக்கு முன்னுரிமை கொடுத்தது என எல்லாமே இரும்புக் கண்ணன் செய்த லீலைகள்தான்.
தான் மாறாமல் மற்றவர்களை மாற வைத்தவன் அவன். அவன் செய்தது எல்லாமே தர்மத்தை நிலைநாட்ட மட்டும்தான்! உலகில் தர்மம் குறைந்து அதர்மம் தலைதூக்கும் பொழுதெல்லாம் இறைவன் குறும்புக் கண்ணனாகவோ, கரும்புக் கண்ணனாகவோ அல்லது இரும்புக் கண்ணனாகவோ நிச்சயம் வருவார்.

Comments