கங்கை தீர்த்தத்தை வீட்டுக்கு எடுத்து வருவது போல், யமுனை நதியின் நீரை வீட்டுக்கு எடுத்து வரக் கூடாதாமே... அப்படியா?

சிவாலயங்களில், கடைசியாக நாம் தரிசிக்க வேண்டியது கால பைரவரையா? ஸ்ரீசண்டிகேஸ்வரரையா? இவர்களில், நமது சிவாலய தரிசன பலனை குறித்து வைப்பவர் யார்?
-

கோயிலின் பிரதான இறைவனை தரிசித்து, பிராகார வலம் வரும்போது, பரிவார தெய்வங்களை வணங்குவதே சிறப்பு. அதற்காக... 'கோயிலுக்குள் நுழையும்போதே கோபுரம், கொடிமரம் மற்றும் துவாரபாலர் சிலைகள் எல்லாம் கண்ணில்பட்டதே...' என்று அங்கலாய்க்கத் தேவையில்லை!

இன்னொரு விஷயம்... கோயிலுக்கு வருபவர்களைப் பதிவு செய்வதாகச் சொல்வதெல்லாம் செவிவழித் தகவல். நமது வருகையைப் பதிவு செய்ய இறைவன், தனியாக ஓர் ஆளை நியமிக்க வேண்டுமா என்ன?!

வணக்கத்துக்கு உரிய இறைவனை வணங்குவதை- வழிபடுவதை, பாமரர்கள் இடையே ஊக்குவிக்கும் விதமாக, 'பதிவு செய்பவர் உண்டு' என்பன போன்ற தகவல்கள் சொல்லப்பட்டிருக்கலாம்!

இப்போதெல்லாம் ஆகமத்தை அலட்சியப்படுத்தி சிறிய கோயிலில்கூட நிறைய இறை மூர்த்தங்களை பிரதிஷ்டை செய்கிறார்கள். சுவர்களின் மாடங்களில்கூட இறையுருவங்களை வைத்து நிரப்புகிறார்கள். காரணம் இடப் பற்றாக்குறை! கோயில்களின் பாரம்பரிய உருவமே மாறி, புதிய உருவம் தோன்றுகிறது. இந்தச் சூழலில் வரிசைகளைப் பார்க்காமல் மானசீகமாக இறைவனை வணங்கி வழிபடுங்கள்.


--------------------------------------------------------------------------------

குழந்தைகள் கல்வியில் சிறக்க மந்திரம், ஸ்லோகம் ஏதேனும் உண்டா?
கல்வியில் சிறக்க வேண்டும் எனில், படித்த விஷயங்கள் மனதில் பதிய வேண்டும். அப்படி பதிந்து விட்டால், தேவைப்படும் தருணத்தில் படித்தது நினைவுக்கு வந்து விடும். சரி... படித்தது மனதில் நன்கு பதிய என்ன செய்ய வேண்டும்? முழு ஈடுபாட்டுடன், தடுமாறாமல் கவனமாகப் படிக்க வேண்டும். இதற்கு மனதுக்கான பயிற்சி அவசியம்.

காலையில் ஐந்து மணிக்கு குழந்தைகளை எழுப்பி, கை-கால், முகம் கழுவச் சொல்லி, முடிந்தால் நீராடச் சொல்லலாம். பிறகு சம்மணமிட்டு அமர்ந்தபடி, கண்களை மூடிக் கொண்டு, 'நமசிவாய' என்றோ, 'நமோ நாராயணாய' என்றோ சுமார் முந்நூறு முறை மந்திரத்தை தியானிக்கச் சொல்ல வேண்டும். வாரத்துக்கு ஒரு முறை, எண்ணிக்கையை கொஞ்சம்

கொஞ்சமாக அதிகப்படுத்தி, சுமார் ஆயிரம் முறை மந்திரத்தைச் சொல்லும் வகையில் குழந்தைகளைப் பயில்விக்க வேண்டும். இந்தப் பயிற்சி, மனதை ஒருமுகப்படுத்த உதவும்.

மனதை ஒருமுகப்படுத்தப் பழகினால், கல்வியில் மட்டுமல்ல ஒட்டுமொத்த வாழ்விலும் வெற்றி பெறலாம். தடுமாறும் மனதுக்கு இதுவே உரம். மனம் திருந்துவதற்கான மார்க்கமும் இதுவே!

இந்த இரண்டு மந்திர வார்த்தைகளை விடவும் நம்பிக்கைக்கு உரிய வேறு வார்த்தைகள் வேண்டுமா என்ன?

ஸ்லோகங்களை உதட்டளவில் சொல்லாமல் ஆத்மார்த்தமாகச் சொல்ல வேண்டும். பயிற்சியை இறையருள் வழங்காது; ஆனால், பயிற்சிக்குப் பிறகான மாற்றங்களை இறையருள் உண்டு பண்ணும்!

இன்னொரு விஷயம்... இறையருள் இருப்பினும் முயற்சியும் முக்கியம். கண்ணபிரானின் அருளைப் பெற்ற அர்ஜுனன் தனது முயற்சியால்தான் போரில் வெற்றி பெற்றான். எனவே, குழந்தைகளுக்கு பயிற்சியையும் முயற்சியையும் சேர்த்து பழக்கப்படுத்துங்கள்!


--------------------------------------------------------------------------------

'ஆண் மூலம் அரசாளும்' என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஆனால், மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களில் ஒருசிலர் வசதியாக வாழ்வதும் வேறுசிலர் கஷ்டப்படுவதும் ஏன்?
-'ஆண் மூலம் அரசாளும்' என்று ஜோதிட சாஸ்திரம் சொல்லவே இல்லை. செவிவழி சொல்வழக்குகளில் இதுவும் ஒன்று. நெருப்பு இல்லாமல் புகையுமா என்று நீங்கள் கேட்கலாம். உண்மைதான்... நெருப்பு இல்லாமல் புகையாதுதான்! ஆனால், மூல நட்சத்திரத்துக்கும் அரச போகத்துக்கும் எந்த விதத் தொடர்பும் கிடையாது.

ஆனால், ஆண்டாண்டு காலமாக சொல்லப்படும் இந்த வார்த்தையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர் சிலர். அவ்வளவுதான்!


--------------------------------------------------------------------------------

பூஜை செய்யும்போது கொட்டாவி, ஏப்பம், விக்கல், இருமல், தும்மல், அபான வாயு பிரிதல்... என ஏதேனும் நேர்ந்தால் பூஜைக்கு பங்கம் ஏற்படுமா? நம்மையும் அறியாமல் நிகழும் இதுபோன்ற உபாதைகளால், இறை நிந்தனை செய்த பாவம் உண்டாகுமா?
மனதையும் வாயையும் கட்டுப்படுத்த இயலாதவர்கள், இந்த உபாதைகளைச் சந்திப்பார் கள். இவற்றைக் கட்டுப்படுத்திக் கொண்டுதான், பூஜை செய்ய வேண்டும் என்றால், பூஜையையே தவிர்த்து விடுபவர்களும் உண்டு!

பூஜைக்கு முன் அதிகமான உணவு உட்கொண்டால் கொட்டாவி, ஏப்பம் போன்றவை வரத்தான் செய்யும். உணவு செரிக்காத நிலையில், அபான வாயு பிரியத்தான் செய்யும். பூஜையில் பதட்டமும் பரபரப்பும் இருந்தால் சீரான சுவாசம் இருக்காது; இருமல் வரலாம். பிறகெப்படி மந்திரம் சொல்லும்போது மனம் ஒருமுகப்படும்?! கூடவே வேறு சிந்தனைகளும் தலைதூக்கினால், இதுபோன்ற உபாதைகள் வரத்தானே செய்யும்!

நிறைய தண்ணீர் குடித்து, நன்றாக நீராடினால் உடலும் தூய்மையாகும்; உள்ளமும் புத்துணர்ச்சி பெறும்.

'மருந்து சாப்பிடுமுன் ஏதேனும் ஆகாரம் எடுத்துக் கொள்ளுங்கள்' என்ற மருத்துவரின் அறிவுரையை ஏற்கிறோம். சில அறுவை சிகிச்சைகளின் போது உணவைக் கட்டுப்படுத்தச் சொல்வதையும் மதிக்கிறோம். ஆனால், இறை பணிகளில் மட்டும் உணவுக் கட்டுப்பாட்டை ஏன் மறுக்கிறோம்?!

உணவுக்கு முன்னதாக பூஜை; அடுத்து உணவு என செயல்படுங்கள். ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும் விரைவில் பழக்கமாகி விடும்.


--------------------------------------------------------------------------------

இறைவனுக்கு கற்பூர ஆரத்தி காட்டுவது ஏன்? -
கற்பூர ஆரத்தி- மிகச் சிறந்த வழிபாடு.

கற்பூர ஒளி இறைவனின் தனி உருவத்தை ஞாபகப்படுத்தும்; இறைவன் ஒளிமயமானவன் என்பதை உணர்த்தும். ஒளியானது அவயவங் கள் இல்லாதது. அதாவது நம்மைப் போல் கை, கால், மூக்கு, நாக்கு என்று உறுப்புகள் இல்லாதது. கடவுளும் இப்படித்தான்!

கற்பூர தீபம் ஒளிவீசி அணைந்த பிறகு பார்த்தால்... அதில் கற்பூரம் மிஞ்சியிருக்காது. இது, பூரண அர்ப்பணிப்பைக் குறிக்கும்.

வேத காலம் முதல், கற்பூர தீபாராதனை, வழிபாட்டில் செயல் படுத்தப்படுகிறது. நல்ல கற்பூரம் எரியும் போது, புகை தென்படாது. தவிர, கற்பூர ஜோதியில் கடவுளின் அழகை தரிசிப்பது அலாதியான அனுபவம்!


--------------------------------------------------------------------------------

மார்கழி, தை மற்றும் மாசி மாதங்களில் சுபமுகூர்த்தங்கள் இல்லை என்று சில பஞ்சாங்கங்களில் போட்டிருப்பது ஏன்?

முகூர்த்த நாளைத் தேர்ந்தெடுக்கும் போது, அதில் விலக்க வேண்டியவையும் ஏராளம் உண்டு. மரண யோகம், ராகு காலம், எமகண்டம், அஷ்டமி, நவமி ஆகியவை குறுகிய காலத்தில் முடிவுறும். எனவே, இவற்றை விலக்குவது எளிது. ஆனால் குரு மௌட்சம், சுக்கிர மௌட்சம் ஆகியவை மாதக் கணக்கில் நீடிக்கும். சுத்தமான முகூர்த்த நாளை விரும்புவோர், இவற்றை தவிர்க்க வேண்டும்.

சில பஞ்சாங்கங்கள் சூழலைக் கருத்தில் கொண்டு, தவிர்க்க வேண்டியவற்றைப் பற்றிக் குறிப்பிடாமல் விலக்கி வைத்து விடும். ஆனால் சில பஞ்சாங்கங்கள், விலக்க வேண்டியவை குறித்து ஆராய்ந்தே தெளிவுற எழுதும்.

முன்பெல்லாம் நல்ல முகூர்த்த நாளைத் தேடி திருமணத்தை நடத்துவர். ஆனால் இப்போதோ, தங்களின் வசதியை கணக்கில் எடுத்துக் கொண்டே முகூர்த்த நாளைத் தேர்வு செய்கின்றனர். இதனால் நல்ல நாளை அறியாத நிலை ஏற்படுகிறது. முகூர்த்தம் குறித்த முழு அறிவும் நம்மிடம் இல்லை என்பதும் வேதனையான உண்மை!


--------------------------------------------------------------------------------



ஒரே நாளில் இரண்டு மூன்று புண்ணியத் தலங்களை தரிசிக்கும் நிலையில், ஒவ்வொரு தலத்திலும் உள்ள தீர்த்தங்களிலும் நீராடலாமா? அடுத்தடுத்து தரிசிக்கும் ஆலயத் தீர்த்தங்களில் நீராடுவதால், முன்னதாக சென்று வந்த திருத்தல தரிசனத்தின் பலன் இல்லாமல் போய் விடுமா?-
நேரமும் வசதியும் இருந்தால் ஒரே நாளில் பல புண்ணியத் தலங்களுக்குச் செல்லலாம்; வழிபடலாம்!

புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது என்பது, உங்களின் உடல்நிலையைப் பொறுத்தது. உடல் நிலைக்குத் தக்கபடி எத்தனை தீர்த்தங்களில் வேண்டுமானாலும் நீராடலாம்; எல்லாவற்றுக்கும் பலன் உண்டு. அத்துடன், நீங்கள் தரிசித்த அனைத்து தலங்களுக்கான பலனும் நிச்சயம் கிடைக்கும்.


கங்கை தீர்த்தத்தை வீட்டுக்கு எடுத்து வருவது போல், யமுனை நதியின் நீரை வீட்டுக்கு எடுத்து வரக் கூடாதாமே... அப்படியா?
தவறான தகவல்!

எந்த நதியின் நீரை வேண்டுமானாலும் வீட்டுக்கு எடுத்து வரலாம். வடக்கே கங்கையைப் போல் தென்னகத்தில் காவிரியைப் புனிதமாகப் போற்றுவார்கள். இதன் கரையோர ஊர்களில் வசிப்பவர்கள் காவிரி நீரை வீடுகளுக்கு எடுத்துச் செல்வது உண்டு.

இதேபோல், அனைத்து நதிகளின் நீரையும் தாராளமாகப் பயன்படுத்தலாம்; இதில் எந்தத் தவறும் இல்லை!



சிவலிங்கத்தின் ஆவுடையார், சில தலங்களில் இடப் புறமாகவும்; சில தலங்களில் வலப் புறமாகவும் அமைந்திருக்கிறது. இது ஏன்? இதற்கான தாத்பரியம் என்ன?சிவலிங்கத்தின் ஆவுடையார் பெரும்பாலும் இடப் புறமாகவே அமைந்திருக்கும். அபிஷேக தீர்த்தம் இடப் புறமாக வெளியேறுவது சிறப்பு. தீர்த்தத்தின் வடிகால் இடது புறமாகச் செல்வதற்கு முட்டுக்கட்டை இருப்பின் வலப் புறமாக ஆவுடையார் இருக்கலாம்.

போதிய நிலப்பரப்பில், கட்டடக் கலை வடிவமைப்புக்கு முன்னுரிமை அளித்து, ஆகமத்தின் பரிந்துரைப்படி ஆலயம் அமைத்தால் ஒரு தொந்தரவும் இல்லை. நமது விருப்பத்துக்கு ஏற்ப கோயிலை அமைக்கும் போதுதான் இதுபோன்ற மாற்றங்கள் நிகழ்கின்றன. வில்லங்கம் விலக சாஸ்திரத்தை நம்ப வேண்டும். சோமசூக்தப் பிரதட்சிணத்தை சிரமேற்கொண்டு செய்தால், இடது புறம் ஆவுடையார் இருப்பதே பொருத்தமாகத் தோன்றும்!

Comments