கருத்து வேறுபாடு கொண்ட தம்பதிக்கு விவாகரத்து தீர்வாகுமா? புராணங்களும் தர்மசாஸ்திரமும் சொல்லும் அறிவுரை என்ன?

தனிமை மகிழ்ச்சியளிக்காது என்கிறது சாஸ்திரம் (ஏகாகீ ந ரமதே). தனியாக இருந்த பரம்பொருள் தன்னை ஆணாகவும் பெண்ணாகவும் இரு பகுதியாகப் பிரித்துக்கொண்டு படைப்பை நிறைவேற்றியது என்கிறது உபநிடதம். முழுமையின் இரு பகுதிகள் - ஆணும் பெண்ணும் இணையும்போதுதான் முழுமை பெறுகிறது என்று அது சொல் லாமல் சொல்லும் (ப்ரஜயாணி மனுஷ்ய: பூர்ண:). சேர்ந்து வாழ திருமணம் வேண்டும்; பிரிந்தால் அரைகுறையாகி விடும். இருவருக்கும் இன்பம் சூன்யமாகி விடும். அற்ப விஷயங்களைப் பெரிதாக்கி, மனக் கசப்பை எட்டி, பிரிய முற்படுவது அறிவீனம்.

புராணங்களில் தம்பதிகள் பிரிந்து மறுமணத்தில் இணைந்ததாக தகவல்கள் இல்லை. மும்மூர்த்திகளும் தங்கள் மனைவியருடன் சொற்போரில் ஈடுபடுவது உண்டு. ஆனால், அவர்கள் பிரிந்துசெல்ல வில்லை. அகல்யை குறித்து அவதூறு தோன்றியும், கௌதமர் விவாகரத்தை ஏற்கவில்லை. நளாயினி, நோய்வாய்ப் பட்ட தன் கணவனைத் துறக்கவில்லை. பிறர் மனைவியை ஆசைப்பட்ட அக்னியை, அவருடைய மனைவியான ஸ்வாஹா தேவி துறக்கவில்லை. கணவனை இழந்த மாத்ரியும் குந்தியும் மறுமணத்தை ஏற்கவில்லை. வேலையில் நிரந்தரத்தை விரும்பும் மனித இனம் மனைவியிலும் நிரந்தரத்தைப் பாது காக்கவேண்டும். புராணங்கள் அனைத்தும் கதாபாத்திரங்களின் வாயிலாக, 'இணைப்பைத் துண்டிக்கக்கூடாது’ என்றே அறிவுறுத்துகின்றன.

பண்பும் பெருமையும் நிலைத்திருக்க, பிரியாமல் இருப்பது சிறப்பு. துன்பங்கள் துரத்தினாலும் அவற்றை அலட்சியப்படுத்தி, இணைந்து வாழும் வாழ்க்கையை உறுதியுடன் ஏற்று மகிழ வேண்டும். அது, தனி மனிதனுக்கும் சமுதாயத்துக்கும் உயர்வு அளிக்கும்.சீர்திருத்தம் விவாகரத்தை அறிமுகம் செய்தது. சிந்தனை வளம் பெற்ற சிலரிடம் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெற்றி தென்பட்டாலும், பாமர மக்களைப் பாடாய்ப் படுத்துகிறது. நீதிமன்றத்தில் குவிந்திருக் கும் விவாகரத்துகளின் எண்ணிக்கை பெருகுவது சமுதாயத்துக்கு ஊனமாகும். பக்க விளைவுகள் இல்லாத சீர்திருத்தம் இன்றுவரை தோன்றவில்லை.

குடும்பக் கட்டுப்பாடு ஆண்- பெண்ணின் தகாத சந்திப்புக்கு ஏதுவாக திரைமறைவாக- மறைமுக மாகச் செயல்படுகிறது. விந்து வங்கி வாயிலாக வாடகைத் தாயின் உதவியுடன் குழந்தை பெறுவது வளர்ந்து வருகிறது. நேரடிச் சந்திப்பு இல்லை என்றா லும், மறைமுக சந்திப்பின் பலனை ஏற்க வைக்கிறது. இதுவும் சமுதாய சீர்கேட்டில் அடங்கும். சட்டம் இருப்ப தால், விவாகரத்தை ஏற்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நமது பண்பு, கலாசார பெருமை ஆகியவற்றை எண்ணி, விவாகரத்தை வரவேற்காமல் இருப்பது சிறப்பு.

- இப்படி, விவாகரத்துக்கு எதிரான கோணமும் வாதமும் சிலரிடம் உண்டு. இவர்களுக்கு நேர்மாறானவர்களின் கருத்து என்னவாக இருக்கும், தெரியுமா?



மேற்சொன்ன கோட்பாடுகள் இன்றைய சூழலில் ஏற்கத் தக்கது அல்ல. திருமண உறவை முறித்துக்கொள்ள இரு வருக்கும் உரிமை இருக்கவேண்டும். அவர்கள் தனித்தனி யாகப் பிறந்தவர்கள். நல்ல எண்ணத்தில் இணைந்தார்கள். ஆனால், அவர்களின் இணைப்பு கசப்பானால், முறித்துக்கொள்வதுதான் துயரத்தில் இருந்து விடுபட ஒரே வழி!

'பெண்மை எங்கு பெருமைப்படுத்தப்படுகிறதோ, அங்கே தேவதைகள் மகிழ்ச்சி அடைகிறார்கள்’ என்கிறார் மனு (யத்ர நார்யஸ்துபூஜ்யந்தேரமந்தேதத்ர தேவதா:). ஆணின் மறுபாதி பெண் என்கிறது வேதம் (அர்த்தோவா ஏஷ ஆத்மன: யத்பத்னீ). அறமானது பெண்மையை முன்னிலைப்படுத்திச் செயல்படும் (ஸ்த்ரீமூலம் ஹிதர்ம:). பெண் இல்லா மல் அறம் நிறைவு பெறாது. இது வேதத்தின் கணிப்பு.

ஆனால், சமுதாய மாற்றமானது பெண்மையை அடிமையாக்கி அலைக்கழிக்க வழிவகுத்தது. அவளின் உரிமைகள் பறிக்கப்பட்டன. கணவனுட னும் குடும்பத்தாருடனும் இணைந்து வாழவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. குழந்தைகளை ஈன்றெடுக்கும் யந்திரமாக மாற்றப்பட்டாள். வீட்டு வேலையின் சுமை அவளைத் தள்ளாட வைத்தது. கணவனின் விருப்பத்துக்கு அவள் கட்டாயமாக இணைய வேண்டும். அவளது ஆசாபாசங்கள் நிறைவேறா மலேயே மறைந்துவிடும். பெண்ணானவள் உயிர் பெற்ற ரோபோ போன்று வளைய வரவேண்டிய சூழல் உருவானது.

காலம் மாறியது. சீர்திருத்தவாதிகளின் செயல்பாடு அவளுக்கு விடுதலை அளித்தது. விரும்பிய கணவனை ஏற்கவும், துயரத்தில் சிக்கிய கணவனிடம் இருந்து விடுபடவும் வழி கிடைத்தது. அத்துடன், பறிபோன சமத்துவமும் சுதந்திரமும் கிடைத்தது. விருப்பமுள்ள கண வனை அவள் தேர்ந்தெடுக்கலாம். ஒத்துவரா விட்டால் அவனைத் துறந்து மற்றொருவனை ஏற்கலாம். கணவனுக்காக அவளது பிறப்புரி மையை இழக்கக்கூடாது. நளாயினியாகவோ, அனுசூயையாகவோ அவள் மாற இயலாது. பிறப்பில் சமம் என்கிற கோட்பாட்டை இழக்க முடியாது. அவள் வாழப் பிறந்தவள். இன்பத் தைச் சுவைத்து மகிழ அவளுக்கு உரிமை உண்டு. அது வெற்றி பெற, மறுமணத்தை ஏற்பதில் எந்தத் தவறும் இல்லை.

கணவனுக்கு இருக்கும் உரிமை மனைவிக்கும் இருக்கவேண்டும். தனது ஆசாபாசங்களை அடக்கிக் கொண்டு, கணவனுக்கு அடிமையாகச் செயல்பட வேண்டிய அவலம் அவளுக்கு இல்லை. இன்று தகப்பன் சொத்தில் பங்கும், விவாகரத்தும் பொருளா தார ரீதியிலும் மனோரீதியிலும் அவர்களை பிரகாச மான வாழ்க்கையைச் சுவைக்க வைத்திருக்கிறது. ஆக, விவாகரத்து அவர்களுக்கு வரப் பிரசாதம்.

இது தவறான கணிப்பு. ஆராயாமல் சொன்ன தகவல். இதை ஏற்றுக்கொள்ள மனம் தயங்குகிறது.

முதல் மனைவி மூலம் வாரிசு இல்லை. வாரிசுக்காக இரண்டாவது மனைவியை ஏற்க, சாஸ்திரம் அனுமதிக்கும். ஆனால், முதல் மனைவி யின் தரம் குறையாமல், வாழ்க்கை முழுக்க அவளை அன்போடும் அரவணைப்போடும், முகம் சுளிக்காமல் பராமரிக்கவேண்டும். மனைவி நோய் வாய்ப்பட்டுப் படுக்கையில் இருக்கிறார் என்றால், 2-வது திருமணத்துக்கு இடமுண்டு. ஆனால், உயிருள்ள வரை முதல் மனைவிக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். மனைவி இறந்துவிட்டாள்; வேள்வியில் ஈடுபட மனம் விரும்புகிறது. அப்போது, 2-வது திருமணத்தை சாஸ்திரம் ஏற்கும்.

குடிப்பழக்கம், கெட்ட சகவாசம், கணவனைப் பிரிந்து வாழும் இயல்பு, விருப்பப்படி ஊர் சுற்றுவது, எப்போதும் உறக்கத்தில் ஆழ்ந்து கடமையைக் கைவிடுவது, பிறர் வீட்டில் குடியிருப்பது ஆகியன, மனைவி என்ற தகுதியை இழக்கச்செய்யும் என்கிறார் மனு (பானம் துஜனஸம்ஸர்க:...). இப்படியான சூழலில் மறுமணத்தை சாஸ்திரம் ஏற்கும். ஆனால், முதல் மனைவியைப் பாதுகாக்கும் நிபந்தனையோடுதான் திருமணம் செய்யலாம்.

போதைப் பொருளுக்கு அடிமையாவது, குடிப்பழக் கத்தைத் தொடருவது, மாற்றான் மனைவியுடன் தொடர்பு, மனைவியைத் துன்புறுத்துவது, வீட்டை யும் குழந்தைகளையும் கவனிக்காமல் இருப்பது, சூதாட்டம், பொய்- பித்தலாட்டம், திருட்டு, புனை சுருட்டு ஆகியவற்றில் ஒருவன் மாட்டிக்கொண்டாலும், ஒரு பெண் தன் கணவனை விட்டு வேறு மணத் தில் இறங்கக்கூடாது. கணவன் கைவிட்ட பொறுப்பு களை ஏற்று, துயரத்தைத் தாங்கும் மனவலிமையை வரவழைத்துக்கொண்டு, கெட்ட கணவனுக்கும் பாதுகாப்பு அளிக்கவேண்டும்.

சுயநலம், பிறப்புரிமை, ஆசைகளைச் சுவைக்கும் ஆர்வம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி புதுக் கணவனை ஏற்க சாஸ்திரம் அனுமதிக்காது. திருமணம் ஆசைக்காக அல்ல; அறத்துக்காக. கணவன் பயனற்றவன் ஆனாலும், அவனைக் கணவனாக மதித்தால் பிறவிப்பயன் கிட்டும் என்கிறது சாஸ்திரம். நிலை இல்லாத சிற்றின்பம் கைக்கு எட்டாமல் போனாலும் பேரின்பம் எட்டி விடும் என்பதை உறுதி செய்கிறது சாஸ்திரம். பிறவிப்பயனை அடைவது திருமணத்தின் இலக்கு. லோகாயத சுகத்துக்காகத் திருமணம் இல்லை.

வீடு, வாகனம் போன்று ஒரு நுகர்பொருளாக பாவித்து மனைவியையும் கணவனையும் மாற்றிக் கொள்வதை சாஸ்திரம் ஏற்காது. சிறு வயதில் தகாத உறவைச் சந்தித்த பெண்மணிகளைச் சீர்திருத்தப் பள்ளியில் சேர்ப்பது உண்டு. தனிமனிதனின் குடும்பப் பொறுப்பை அரசாங்கம் ஏற்காது. சண்டை சச்சரவு ஆனாலும், மகிழ்ச்சியானாலும் கணவன்- மனைவி இருவரும் பங்குபோட்டு ஏற்றுக்கொள்ள வேண்டும். திருமணம் அறப்பின்னணியில் உருவா னது. ஒருத்தி ஒருவனோடு மட்டும்தான் இணைந்து இன்பத்தைச் சுவைக்கலாம். பல புருஷர்களின் தொடர்பு கலப்படத்தை உருவாக்கும். கலப்படம் நரகத்தின் அடித்தளம். அது சமுதாயத்தைச் சீர்குலைக்கும் என்று கண்ணன் சொல்வான் (ஸங்கரோ நரகாயைவ..).

உயர்வான நாட்டு நலனுக்காக தனி மனித உரிமையை அழிப்பது தவறாகாது. பாம்பு தீண்டிய விரலை வெட்டி விடுவதுண்டு. சக்கரை வியாதி யானது காலை விழுங்கும்போது, காலை அகற்று வது உண்டு. போக்குவரத்தைச் சீர்செய்ய குடிசை களை அகற்றுவது உண்டு. எதிரியை வென்று நாட்டைப் பாதுகாக்க, பல உயிர்கள் மாய்வதை ஏற்பது உண்டு. களை எடுப்பவன், பயிரின் பாது காப்பை உறுதி செய்யவேண்டும். சீர்திருத்தம் என்பது பூதாகரமான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடாது.

கலப்படம் ஆண்மையைப் பாதிக்காது. உடல் ரீதியான மாற்றம் பெண்களை பாதிக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. அதேபோன்று ஆண்களுக்கும்... தாய், தங்கையிடத்தில் பெண்மையை உயர்வாகப் பார்க்கும் மனம், மனைவியிடமும் பார்க்கவேண் டும். விதை பாதிப்புக்கு உள்ளாகாது; விளைநிலமே பாதிப்புக்கு உள்ளாகும். விளைச்சலைப் பெருக்கு வதற்காகப் பயன்படுத்தப்படும் தகாத உரமானது, நிலத்தின் செழிப்பை உறிஞ்சிவிடும். விந்துவை ஏற்றுக் கருவறையில் மழலையை உருவாக்கித் தருவது பெண்மை. பலதரப்பட்ட விந்துவின் சேர்க்கை, பெண்மையை உருக்குலைய வைப்பது உண்டு. இலை முள்ளில் விழுந்தாலும், முள் இலையில் விழுந்தாலும், இலைக்கு மட்டுமே பாதிப்பு!

பெண் தனது விருப்பப்படி பல திருமணங்களில் இணையும் உரிமை வேண்டும் என்று வாதாடுவது புத்திசாலித்தனமாகாது. ஆணும் பெண்ணும் சமம் என்பதை நிலைநாட்ட மறுமணத்தைப் புகுத்துவது அறியாமையின் வெளிப்பாடு. விவாகரத்தை ஏற்று மறுமணத்தில் நுழைந்தவர்கள் மலர்ந்த முகத்தோடு காட்சியளித்தாலும், அவர்களின் அந்தரங்கம்கேள்விக் குறியாக இருக்கும். எனவே, பொறுமையை ஏற்று மறுமணத்தில் ஆசையை அடக்கினால், உடல்ரீதியா கவும் உள்ளரீதியாகவும் ஏற்படும் பாதிப்பில் இருந்து விடுபடலாம். விவாகரத்து இனிப்பான நஞ்சு.

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை:

இந்தக் காலகட்டத்தில் 30 வயது முதல் 60 வயது வரை இளமை என்று சொல்லலாம். 50-க்குப் பிறகு இளமை குன்றினாலும், வேகம் தணிந்திருக்காது. 20-க்குப் பிறகு காதல் முளைத்தாலும் 30-ல் முழு வளர்ச்சி தென்படும். புதுப்பெண்ணை ஒதுக்கி, விவாகரத்தான வேறொரு பெண்ணைத் தேர்ந்தெடுப்பது, இனிமையான இளமையைக் கொச்சைப்படுத்துவது ஆகும்.

இரண்டு மூன்று விவாகரத்தைச் சந்திப்பவன், தனது குறுகிய கால இளமையைச் சுவைத்து மகிழாமலே முதுமையைத் தழுவிக் கொள்வான். விவாகரத்தான பெண்மணியை மணந்தவனுக்கு அவள் மாற்றான் மனைவியாக இருந்தவள் என்ற நெருடல் உள்ளூர இருக்கும். விவாகரத்தான ஆணைச் சந்திக்கும் பெண்ணுக்கும் அதே அனுபவம்தான். கொஞ்சல், குழையல் இல்லாத சந்திப்பில் சுரத்து இருக்காது. பயணச்சீட்டு கிடைக் காத நிலையில் 'தக்கால்’ பயணச் சீட்டு போன்று, அவசரத்துக்குப் பயன்படுபவர்களாக இருவரும் மாறிவிடுவார்கள்.

உடலுறவைத் தெரிந்திராத இளமையே உண்மையான இன்பத்தை உணரும். முதல் சந்திப்பு முடிந்ததும் பெண்மையின் புதுப்பொலிவு மறைந்துவிடும் என்கிறது காமசாஸ்திரம். மனைவியோடு இணைந்து சிற்றின்பத்தைத் தவிர பேரின்பத்தையும் அடையவேண்டும் என்கிற விருப்பம் வலுத்தால், ஒரு திருமணத்தோடு முற்றுப் புள்ளி வைக்க மனம் துணிந்துவிடும்.

- பதில்கள் தொடரும்...

Comments